நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கும், அழிவுத் தன்மைக்கும் நமது ஒற்றுமைக் குறைவுதான் காரணமாயிருப்பதென்பதை எல்லோரும் அறிந்த விஷயம். அரசாங்கத்தாரால் நமக்குக் கொடுக்கப்படும் கல்வியும் அக்கல்வி கற்றதற்காக நமக்குக் கொடுக்கப்படும் உத்தியோகமும், பதவியும், அரசாங்கத் தாரால் நமக்கு வழங்கப்பட்டதெனச் சொல்லும் இத்தேர்தல் முறைகளும் ஆகிய இம்மூன்றும் நமது ஒற்றுமையின்மைக்குப் பிறப்பிடமாயிருக்கிறது.

முதலிரண்டு காரியமும் படித்தவர்களைப் பற்றிக்கொண்டு ஒற்றுமைக் குறைவும் அடிமைத் தன்மையும் அவர்களால் உண்டாக்கப்பட்டு வந்தாலும் மூன்றாவதான தேர்தல் முறைகளான (எலக்ஷன்கள்) படித்தவர்களோடு அல்லாமல் சாது ஜனங்களையும், வியாபாரிகளையும், பொது மக்களையும் ஒற்றுமையோடு வாழ்வதற்கில்லாமல் பிரித்து வைக்கவும், துவேஷங்களை யும், குரோதங்களையும் உண்டாக்கி கட்சிப் பிரதிகட்சிகளை ஏற்படுத்தவும் சாத்தியமாயிருக்கிறது. இக்காரணங்களால்தான் பொதுநலத்திற்கு உண்மை யாய் உழைக்கிறவர்கள் இத்தேர்தல்களை காங்கிரஸின் வேலைத் திட்டங் களில் புகவிடாமல் தள்ளிவைத்துக் கொண்டே வந்தார்கள்.

இப்பொழுது நியாயமாகவோ, அநியாயமாகவோ எப்படியோ காங்கிரஸிற்குள்ளாக தேர்தல் கள் வந்து புகுந்துவிட்டதாய் காங்கிரஸ்காரர்களும், பொது ஜனங் களும் எண்ணும் படியாய் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாய்ப் பொது ஜனங்கள் காங்கிரஸையும், காங்கிரஸ்காரரையும் எதிர்க்கத் துணிந்து விட்டார் கள். காங்கிரஸிற்கே குறைவுண்டாகும்படியான எதிர்ப்புகள் பலமாக உண்டா வதைக் காங்கிரஸ்காரர்கள் நன்கு அறிந்திருந்துங்கூட காங்கிரஸ்காரர்கள் என்போரில் சிலர் காங்கிரஸின் முக்கிய கொள்கைகளைக் கூட லட்சியம் செய் யாமல், தேர்தல்களில் பிரவேசித்து காங்கிரஸின் பெயரால் அவற்றை நடத்தி மக்கள் ஒருவருக்கொருவர் துவேஷத்தையும், மாச்சரியத்தையும் அடை வதற்கு ஆதாரமாய் நிற்கிறார்கள்.

சென்னை, மதுரை முதலிய அனேக இடங் களில் இவ்விதமாக நடைபெற்று வந்தாலும் தமிழ்நாட்டுக் காங்கிரஸிற்குப் பேராதரவாயும் வழிகாட்டியாயுமிருந்து தமிழ் நாட்டிற்கே பெருமை உண்டாக் கியதென்று சொல்லப்பட்ட இக்கோயம்புத்தூர் ஜில்லாவும், இதிலுள்ள காங்கிரஸ் பிரமுகர்களும் இத்தேர்தல் சேற்றில் உலவும்படியான காலம் ஏற்பட்டுப் போய்விட்டதென்றால் என்போன்றவர் துக்கப்படாமலிருக்க முடியவில்லை. காங்கிரஸில் எனக்குள்ள பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நான் இதில் பிரவேசிக்க வேண்டியதை அலட்சியம் செய்து விட்டாலும், ஒரு சாதாரண மனிதன் என்கிற முறை யிலாவது இதைக் கவனிக்காமலிருக்க முடியவில்லை.

இம்மாதம் 18-ந் தேதி எனது சொந்த வேலையாய்க் கோயம்புத்தூரிற்குப் போயிருந்தேன். அங்கு நடத்தப்படும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் என் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டின. காதுகளுக்கு எட்டியவைகளையெல்லாம் விட்டுவிட்டு நேரில் கண்டவற் றையும் காங்கிரஸ் நண்பர்கள் மூலமாய் நேரில் அறிந்தவற்றையும் மாத்திரம் குறிப்பிடுகிறேன். காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் பெயரால் கோயம்புத்தூர் நகரசபைத் தேர்தலுக்கு எட்டுக் கனவான்களை நிறுத்தி உள்ளார்கள். இவர் களில் சிலரை நான் சந்திக்க நேர்ந்தது.

அவர்களில் ஒருவர் தமக்குத் தீண்டாமை விலக்கு என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை யென்றும், தாம் அதற்குக் கட்டுப்படமுடியாதென்றும், காங்கிரஸ்காரர்களிடம் இதைத் தெரிவித்ததாகவும், அவர்கள் அதை ஒப்புக் கொண்டுதான் தம்மை நிறுத்தி யிருக்கிறார்களென்றும், மற்றொருவர் கொள்கைகளைப்பற்றி தமக்கு அபிப் பிராயபேதம் இருப்பதைத் தெரிவித்தும் தமக்கு எப்படியும் ஜெயம் கிடைக் கும் என்கிற காரணத்தால் தம்மிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித் தார். வேறொருவர் இதுவரையில் கதரே கட்டவில்லையென்றும் மேடைமீது இருக்கும்போது கூட கதர் கட்டவில்லையென்றும் ஜில்லா காங்கிரஸ் காரியதரிசியின் முன்னரே சொல்லப்பட்டது. அதைக் காரியதரிசி அவர்கள் ஒப்புக்கொண்டு, நவம்பர் மாதம் முதல் கட்டிக்கொள்ளுவதாய்ச் சொன்னா ரென்றும் அவ்வளவாவது அவர் ஒப்புக்கொண்டதைப் பெரிதாக நினைத்து தாம் அவரிடம் கையெழுத்து வாங்கியதாகவும், அதற்கும் வேறு ஆட்கள் கிடைப்பதில்லையென்றும் என்னிடம் சொல்லிக் கையெழுத்தையும் காட்டினார்.

இன்னுமிரண்டொரு விஷயங்களை இதில் எழுதுவதற்கு எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இவையெல்லாம் முனிசிபல் நிர்வாகத்தை நடத்த யோக்கியதை அற்றதென்றாவது இந்தக் கனவான்கள் முனிசிபல் நிர்வா கத்தை நடத்தத் தகுதியற்றவர்கள் என்றாவது நான் கூறவில்லை. ஆனால் இதே மாதிரி குணமுள்ளவர்களும் எந்தவிதத்திலும் இவர்களுக்குக் குறை வில்லாதவர்களுமான பல கனவான்களுக்கு விரோதமாய்ச் சில கனவான் களை மாத்திரம் தங்கள் கட்சியார் என்று சொல்லிக்கொண்டு வீண் மனக் கசப்புக்கும், மாச்சரியத்திற்கும் இடந்தரும்படியாயும், கோயம்புத்தூர் ஜில்லா வின் பிற்கால காங்கிரஸின் வாழ்விற்கும் விரோதமாய் இதுவரை எவ்வித புகாருக்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காத சில காங்கிரஸ் பக்தர்கள் ஏன் இப்படி செய்யவேண்டுமென்பது தான் நமது கவலை; அல்லாமல் இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேரில் எவ்வித உள் எண்ணத் தைக் கற்பிக்க நான் துணியாவிட்டாலும் நான் நேரில் அறிந்த மேற்படி காரியங்களைப் பொறுத்தவரையிலாவது இவை பிற்போக்கான காரிய மென்று சொல்லாமலிருக்க முடியவில்லை.

இந்த நிலைமையிலும் இந்தச் சந்தர்ப்பத்திலும் கோயம்புத்தூர் காங்கிரஸ்காரர்களான என்னுடைய நண்பர் களிடமும் என்னுடன் காங்கிரஸ் வேலை செய்த எனதாப்த நண்பர்களிடமும் யான் செய்யும் வேண்டுகோள் பயனை அளிக்குமோ, அளிக்காதோ என்ற பயமிருப்பினும் பொதுஜனங்களாகிய உங்களிடம் யான் செய்து கொள்ளும் விண்ணப்பம் பிரயோஜன மற்றதென்றும், உசிதமற்றதென்றும் யான் நினைக்கவில்லை. ஆதலால் இவ் விண்ணப்பம் மூலமாய் எனது வேண்டு கோளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அதாவது, நீங்கள் ஒவ்வொரு தேர்தல் அபேட்சகர்களையும் கட்சிப் பலத்தையோ, பிரசாரப் பலத்தையோ, செல்வாக்குப் பலத்தையோ சேர்த்துப் பார்க்காமல் தனித்தனி யாய் அவர்களுக்குள்ள ஆற்றலையும், பரோபகார சிந்தையையும் கவனித்து யாரைத் தெரிந்தெடுத்தால் முனிசிபல் நிர்வாகத்தை ஒழுங்காய் நடத்தவும், பொது நன்மைக்கு உழைக்கவும் உதவுவார் என்பதை நன்கு தெரிந்து தக்க ஞானமுள்ளவர்களாகவே பார்த்து உங்களது ஓட்டைக் கொடுங்கள். மற்ற எந்தக் காரணங்களுக்காகவும், எவரையும் விலக்காதீர்கள்.

காங்கிரஸின் பெயரால் நிற்பவர்கள் எல்லோரும் உண்மையான காங்கிரஸின் கொள்கைக் குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை நான் ஒரு நாளும் நம்ப மாட்டேன். உங்க ளையும் நம்பும்படி சொல்லமாட்டேன். காங்கிரஸின் பெயரால் நிற்காதவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்றோ, காங்கிரஸ் விரோதிகள் என்றோ நினைத்து விடாதீர்கள். இந்தக் காரணங்களால் மாத்திரம் எவரும் முனிசிபல் கவுன்சிலுக்குத் தகுதியுள்ளவர்கள் அல்லர் என்று நினைத்து விடாதீர்கள். இரண்டு பாகத்திலும் நல்லவர்களும், நல்லவர் அல்லாதவர்களும் இருக்கி றார்கள். பிறர் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு உங்களது ஓட்டை தப்பான வழியில் உபயோகப்படுத்தி விடாதீர்கள். எனது அபிப்பிராயத்தை இதற்கு முன்னர் அனேக காங்கிரஸ் மேடைகளிலும் கூறியிருக்கிறேன். இனிமேலும் இதையே மற்ற காங்கிரஸ் தேர்தல்களின் தகரார் உள்ள ஊர்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறேன்.

(குடி அரசு - வேண்டுகோள் - 23.08.1925)

Pin It