முன்னர் கூறிய தீர்மானங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மூன்று வகைகாளகப் பிரிக்கலாம்;

1) அரசியல் (2) கல்வி (3) பொருளாதாரம் மற்றும் சமூகம்

ambedkar 237 copyஅவை மூன்று பாதுகாப்புகளைக் கோருவது புலனாகும்; 1. சட்டமன்றம் என்பது பொதுவாக மக்கள் அனைவரின் பிரதிநிதித்துவ அமைப்பாக மட்டும் இல்லாமல், இந்துக்களையும், தீண்டப்படாதவர்களையும் தனித்தனியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகவும் அது இருக்க வேண்டும்.

2. ஆட்சித்துறை சட்டமன்றத்துக்கு மட்டும் பொறுப்பு கூறக் கடமைப்பட்டதாக இல்லாமல், இந்துக்களுக்கும் அதேபோன்று தீண்டப்படாதவர்களுக்கும் பொறுப்பு கூறக் கடமைப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

3. நிர்வாகம் திறமையாக நடப்பது மட்டும் போதாது; அனைத்து மக்களதும் அதேபோன்று தீண்டப்படாதவர்களதும் நம்பிக்கையைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும்; தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகள் போதிய எண்ணிக்கையில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டப்படாதவர்களுக்கு நிர்வாகத்தினிடம் நம்பிக்கை ஏற்பட முடியும்.

தீண்டப்படாதோரின் இந்த அரசியல் கோரிக்கைகள் தீண்டப்படாதோருக்கும், இந்துக்களுக்கும் இடையே மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகின்றன. தீண்டப்படாதோரின் நண்பரான திரு.காந்தி இந்தக் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதற்குப் பதிலாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முன்வந்தார். பின்னர் அவர் இறங்கி வந்த போதிலும் இந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்க அவர் தயாராக இல்லை.

இந்துக்கள் அல்லது காங்கிரஸ்

திட்டத்தின்படி பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது எவ்வாறு இருக்கும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது உசிதமானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும். அது வருமாறு;

1. முற்றிலும் பிரதேச வாரியாக தொகுதிகள் மூலமே சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்படும்.

2. சட்டமன்றத்தில் பெரும்பான்மையினராக உள்ள கட்சியினரே ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படுவர்.

3. முற்றிலும் திறமையின் அடிப்படையிலேயே அரசுப் பணித் துறைக்கு ஆட்கள் நியமிக்கப்படுவர்.

காங்கிரசிலுள்ள இந்துக்கள் தங்களது திட்டத்தை தேசியத் திட்டம் என்று போற்றிப் புகழ்கின்றனர்; ஆனால் அதேசமயம் தீண்டப்படாதோர் முன்வைத்துள்ள திட்டத்தை வகுப்புவாரித் திட்டம் என்று கூறுகின்றனர். இதில் உண்மையில் வேறுபாடு ஏதுமில்லை என்பதை என்னால் காட்ட முடியும். பிடிக்காத ஒரு விஷயத்தைப் பழிப்பதற்கு அதற்கு இழிவான ஒரு பெயரைத் தந்து அவமதிக்கும் உபாயம் கைக்கொள்ளப்படுவது உண்டு. இதைத் தான் காங்கிரஸ் இந்துக்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் இயல்பாகவே பலவீனமாக உள்ள ஒரு விஷயத்துக்கு இத்தகைய உபாயத்தின்மூலம் வலுவூட்ட முடியும்.

தேசியத் திட்டம் எனப்படுவதன் பலவீனத்தைத் தோலுத்துரித்துக் காட்டுவதற்கு அதன் பல்வேறு அம்சங்களை இங்கு பரிசீலிப்போம். இது சம்பந்தமாக மேற்கொண்டு ஆராய்வதற்கு முன்னர் இவ்விரு திட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது உகந்ததாக இருக்கும். பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தைப் பொருத்தவரையில் இவ்விரு திட்டங்களுமே ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றத்தை உண்மையிலேயே பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டமன்றமாக உருவாக்கும் வழிமுறைகள் விஷயத்தில்தான் இவ்விரு திட்டங்களும் வேறுபடுகின்றன.

இந்தியாவில் பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டமன்றங்களை உருவாக்குவதற்கு பிரதேச வாரியான வாக்காளர் தொகுதிகளே உகந்தவை, சிறந்தவை என்று தேசியத் திட்டம் வலியுறுத்துகிறது. இந்திய சமுதாயத்தின் இன்றைய பிரத்தியேக சமூக கட்டமைப்புச் சூழ்நிலையில், பிரதேச வாரியான வாக்காளர் தொகுதிகள் மூலம் உண்மையான பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டமன்றங்களை உருவாக்க முடியாது என்று வகுப்புவாரித் திட்டம் சுட்டிக் காட்டுகிறது. வெறும் பிரதேச வாரியான வாக்காளர் தொகுதிகளால் இந்தியாவில் உண்மையாகவே பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டமன்றங்களைத் தோற்றுவிக்க முடியுமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. இந்தப் பிரச்சினையை மையமாகக் கொண்டு தான் சர்ச்சையே உருவாகியுள்ளது.

இந்துக்களின் தேசியத் திட்டம் பொதுவாக மேலைய நாட்டவனைக் கவர்கிறது; வகுப்புவாரித் திட்டத்தைவிட இத்திட்டத்தையே அவன் ஆதரிக்கிறான். பிரதேசவாரி வாக்காளர் தொகுதிகளைப் பற்றியே அவன் அறிந்திருப்பதும், அவற்றிற்கு அவன் பழக்கப்பட்டிருப்பதுமே இதற்குப் பெரும்பாலும் காரனம். ஆனால் தேசியத் திட்டம் எனப்படும் இத்திட்டம் தவறானது என்பதிலும், அதன் குறிக்கோள்கள் வகுப்புவாரித் திட்டத்தை விட மிகவும் மோசமானவை என்பதிலும் ஐயமில்லை.

பிரதேசவாரி வாக்காளர் தொகுதிகளின் பயனிறைத் தன்மையையும், நிறைவுடைமையையும் பற்றிய அனுமானங்களைப் பரிசீலித்துப் பார்க்கும் எவருக்கும் இத்திட்டத்தின் பெரும் குறைபாடுகள் தெளிவாகப் புலனாகும். இத்தகைய அனுமானங்கள், ஊகங்கள் யாவை? இவற்றில் முக்கியமானவற்றைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.

1. ஒரு தொகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒட்டுமொத்தத்தில் தொகுதி முழுவதன் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது.

2. ஒரு தொகுதியில் பெரும்பான்மையினர் பிரதிபலிக்கும் விருப்பத்தை அத்தொகுதியின் பொதுவான விருப்பமாக அங்கீகரிப்பது போதுமானது, எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் விருப்பம் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு எவ்வளவுதான் வேறுபட்டதாக, மாறுபட்டதாக இருப்பினும் அதனை கழிவிரக்கமின்றி, நேர்மையற்று நடந்து கொள்கிறோம் என்ற குற்ற உணர்வின்றி நிராகரிக்கலாம், அதில் தவறேதும் இல்லை.

3. வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதிநிதி அந்த வாக்காளர்களின் விருப்பங்களையும் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவன் தன்னைத் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு வாக்காளரின் நலன்களையும் விருப்பங்களையும் புறக்கணித்துவிட்டு தனது சொந்த விருப்பின் நலன்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் அபாயம் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

இந்த ஊகங்கள் அனைத்துமே தவறானவை, சித்தாந்தரீதியில் நியாயமற்றவை, அனுபவ உண்மைக்கும் புறம்பானவை. நாடாளுமன்ற அரசுமுறை வரலாற்றில் இந்தக் கருத்துக்கு ஆதரவாக எத்தனை, எத்தனையோ சான்றுகள் காணக் கிடக்கின்றன; இங்கிலாந்தின் வரலாறும் இந்த உண்மையையே கூறுகிறது. பெரும்பான்மையினர் ஒரு தொகுதியிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பங்களையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிரதிபலிப்பார்கள் என்று எண்ணுவது தவறு. உண்மையில் அவர்கள் எவ்விதத்திலும் திருப்திகரமான முறையில் ஒருபோதும் இதனைச் செய்யமுடியாது. அவ்வாறு ஒருக்கால் செய்வதாயினும் பொது ஆர்வ விருப்பத்தை அவர்கள் மிகக்குறைந்த அளவே பிரதிபலிக்க முடியும்; அதிலும் இவ்வாறு மிகமிகக் குறைந்த அளவில் அவர்கள் பிரதிபலிப்பதுகூட தொகுதியிலுள்ள பல்வேறு மக்கள் பகுதியினரின் பலதரப்பட்ட நலன்களையும், அந்த நலன்கள் பரஸ்பரம் ஒன் றுடன் ஒன்று எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் முழுமையாகவும் செயல்படுகின்றன என்பதையும் பொருத்தே இருக்கும்.

இந்தியாவில் பொதுவாகப் பகிர்ந்துகொள்ளப்படும் நலன்கள் இல்லை; அவை ஒன்றுடன் ஒன்று சுதந்திரமாகவும் முழுமையாகவும் செயல்படுவதுமில்லை; வெவ்வேறு பகுதியினரும் பொதுபங்கேற்புக்கான வாய்ப்புகளும் இல்லை; எந்தப் பகுதியினரும் அவர்கள் பெரிய பகுதியினரோ சிறிய பகுதியினரோ மற்றொரு பகுதியினரின் விருப்பங்களைப் பிரதிபலிக்க முடியாது. பெரும்பான்மையினரின் விருப்பம் அந்தப் பெரும்பான்மையினரின் விருப்பமேயன்றி வேறன்று. எத்தகைய தர்க்கரீதியான சாமர்த்தியமான வாதமும் இந்த உண்மையை மூடி மறைத்துவிட முடியாது; பெரும்பான்மையினர் தங்கள் கொடுமையை எப்போதும்போல் நிலைநாட்டவே செய்வர்.

மேலும், சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதிநிதி தன்னைத் தேர்ந்தெடுத்த வாக்களர்களின் ஆர்வ விருப்பங்களைப் பிரதிபலிப்பார் என்றோ, தனது வகுப்பினர் நலன்களை மறந்துவிடுவார் அல்லது உதாசீனம் செய்துவிடுவார் என்றோ நினைப்பதும் தவறாகும். ஒரு பிரதிநிதி வேறுபட்ட கடமைகளைச் செய்ய வேண்டியவராக இருக்கிறார். அவரை முரண்பட்ட இரண்டு அல்லது இன்னும் சொல்லப்போனால் மூன்று கடமைகள் எதிர் நோக்குகின்றன;

1. தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமை.

2. அவர் சார்ந்த வகுப்புக்குச் செய்ய வேண்டிய கடமை.

3. தன்னைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை.

நமது பரிசீலனையில் முதல் கடமையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தனது வாக்காளர்களின் நலன்களைவிடவும், தான் சார்ந்துள்ள வகுப்பின் நலன்களுக்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். வேறு விதமாக அவர் செயல்படுவார் என்று ஒருவர் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? தனது தொகுதியைவிட தனது சொந்த நலனுக்கு ஒருவர் பிரதானம் கொடுப்பது என்பது பொதுவான அனுபவம். மனிதனின் சருமம் அவனது சட்டையைவிட அவனுக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது என்பது முதுமொழி. சட்டமன்ற உறுப்பினர்கள் விஷயத்திலும் இது பொருந்தும். ஒரு சட்டமன்ற உறுப்பினனுக்கு அவனது வர்க்கம் அல்லது வகுப்புதான் அவனுடைய சருமம்; அவனது தொகுதி அவனது சட்டை; அந்த சட்டை அவனது சருமத்திலிருந்து ஒரு டிகிரி விலகியிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

எனவே, எல்லா அரசியல் வல்லுநர்களும் வலுவற்றவை என்று அறிவித்துள்ள அடித்தளங்கள் மீது இந்தியாவின் அரசியல் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு பிரதேச வாக்காளர் தொகுதிகள் மீது இந்துக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெள்ள தெளிவு. பிரதேச வாக்காளர் தொகுதிஎன்பது அரசியல்கட்டமைப் பில் ஒரு பலவீனமான பகுதி என்று ஐரோப்பிய நாடுகளில் கூட நீண்டகாலமாகவே கருதப்பட்டு வருகிறது. மிகப்பல ஐரோப்பிய நாடுகளில் பிரதேச வாக்காளர் தொகுதி அடிப்படையில் அமைந்த பிரதிநிதித்துவ முறை ஒழித்துக்கட்டப்பட்டு இதர முறைகள் கைக் கொள்ளப்பட்டு வருகின்றன; பிட்தேசப் பிரதிநிதித்துவ்ச முறையால் நல்ல அரசாங்கத்தையோ அல்லது திறமையான அரசாங்கத்தையோ வழங்க முடியாது என்பதே இதற்குப் பிரதான காரணம். பிரதேசவாரி வாக்காளர் தொகுதிகள் முறையின் அடிப்படையில் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் இருந்து வந்த நாடுகளில் அதிருப்தி அதிகரித் திருப்பதைத்தான் காண்கிறோம். விவரமும் விவேகமுமிக்கவர்கள் பிரதேசவாரித் தொகுதிகள் முறையைத் திட்டவட்டமாகவும் கடுமையாகவும் எதிர்க்கிறார்கள் என்பதற்கு எவ்வளவோ சான்றுகள், நிரூபணங்கள் உள்ளன; தொழில்வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும், பொதுமக்கள் வாக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் இதைத்தான் மெய்ப்பிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலைமையில், எங்கெங்கும் மதிப்பிழந்து போன ஓர் அரசியல் செயல்முறைமையை இந்துக்கள் உடும்புப் பிடிவாதமாக ஏன் ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி வியப்பளிப்பதாகத்தான் இருக்கிறது. இந்த செயல்முறைமை ஒன்றுதான் தேசியத்துக்கு இசைவானது, இணக்கமானது என்று இக்கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கின்றனர். இது உண்மையான காரணமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. இதற்கு உண்மையான காரணம் முற்றிலும் வேறானது என எனக்குத் தோன்றுகிறது. இந்துக்கள் பிரதேசவாரி வாக்காளர் தொகுதி முறையை விரும்புகிறார்கள் என்றால், எல்லா அரசியல் அதிகாரத்தையும் இந்துக்கள் கைகளில் குவிக்க அது துணைபுரியும் என்பதே இதற்குக் காரணம்.

அவர்களுடைய இந்தக் கணிப்பு தவறானது என்று யார் கூற முடியும்? முற்றிலும் பிரதேசவாரியாக அமைந்த ஒரு தொகுதியில் மிகப் பெரும்பான்மையினரான இந்து வாக்காளர்களுக்கும் மிகச் சிறுமான்மையினரான தீண்டப்படாதோருக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்பதை இந்துக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு பிரதேசவாரித் தொகுதிகள் அடிப்படையில் தேர்தல் நடைபெறுமானால் அனைத்துத் தொகுதிகளிலும் இந்துக்களே வெற்றி பெறுவார்கள். மேலும் இந்துக்கள் தங்களுடைய பெரும்பான்மை பலத்தை நம்பியிருப்பது மட்டுமல்ல, வேறு சில காரணக் கூறுகளும் அவர்களுக்குத் துணை புரியும், அவர்களது பெரும்பான்மை பலத்தை வலுப்படுத்தும் இந்தக் காரணக் கூறுகள் இந்து சமுதாயத்தின் பிரத்தியேகத் தன்மையை ஆணிவேராக, அடித்தளமாகக் கொண்டுள்ளன. இந்து சமுதாய அமைப்பானது வகுப்புகளை ஒன்றாக அடுக்கி வைத்துள்ளது; வாக்கெடுப்பின் மீது இது பெரும் தாக்கத்தை உண்டு பண்ணவே செய்யும். இந்து சமுதாய அமைப்பில் சில வகுப்புகள் கெளரவிக்கப்பட்டு ஏறுகதியிலும் வேறு சில வகுப்புகள் அவமதிக்கப்பட்டு இறங்கு கதியிலும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சமூகப் போக்குகள் வாக்கெடுப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கூறுவதற்கு ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என்பதில்லை.

தீண்டப்படாதோர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு எந்த சாதி இந்துவும் வாக்களிக்க மாட்டான். ஏனென்றால் ஓர் இந்துவின் நோக்கில் ஒரு தீண்டப்படாதவன் சட்டமன்றத்திற்குச் செல்லுவதற்கு அருகதையற்றவன், வெறுக்கத்தக்கவன். ஆனால் அதேசமயம் ஒரு தீண்டப்படாத வேட்பாளனுக்கு வாக்களிக்காமல் ஓர் இந்து வேட்பாளனுக்கு விரும்பி வாக்களிக்கும் தீண்டப்படாதோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஏனென்றால் தன்னை விடவும் அல்லது தன் இனத்தைச் சேர்ந்த ஒரு தீண்டப்படாதவனை விடவும் ஓர் இந்துவை உயர்வாக மதிக்க தீண்டப்படாதவன் கற்றுத் தரப்பட்டிருக்கிறான்.

இல்லாமையிலும், கல்லாமையிலும் உழலும், விவரம் தெரியாத, ஸ்தாபன ரீதியில் அணி திரளாத தீண்டப்படாதோர் வாக்காளர்களைக் கவர்வதற்கு இந்துக்கள் இன்னும் எத்தனை எத்தனையோ உபாயங்களை, சூழ்ச்சிகளைக் கையாள்கிறார்கள். அவற்றை எல்லாம் இங்கு விவரித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் இந்துக்களின் பிரதிநிதித்துவத்தை மேன்மேலும் அதிகப்படுத்துகின்றன. முற்றிலும் பிரதேசவாரி வாக்காளர் தொகுதிகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் முறையில் இந்துக்கள் பெரும்பான்மை பெறுவது உறுதி. அதேசமயம் தீண்டப்படாதவர்கள் அனைத்து இடங்களை இழப்பதும் நிச்சயம்.

ஏனென்றால் முதலாவதாக அவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்; இரண்டாவதாக, தீண்டப்படாதோரின் பலவீனத்தை இந்துக்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்; இதனால் தீண்டப்படாதவர்கள் தேவர்களுக்கு நைவேத்தியம் செய்வதுபோல் தங்கள் வாக்குகளை இந்துக்களுக்குத் தானம் செய்து விடுவார்கள்.

இந்த அம்சங்கள் யாவம் பிரதேசவாரி வாக்காளர் தொகுதிகளை இந்துக்களுக்குச் சாதமாக்கி விடும் என்பதில் ஐயமில்லை; வகுப்புவாரித் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தீண்டப்படாதவர்கள் பெறக்கூடிய அரசியல் அதிகாரத்தை பிரதேசவாரித் திட்டம் இந்துக்களுக்குத் தாரை வார்த்துவிடும்; எனவே, விளைவுகளைக் கொண்டு நோக்கும்போது பிரதேசவாரித் திட்டம் வகுப்புவாரித் திட்டத்தை விட மிக மோசமானது என்பதில் ஐயமில்லை.

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 4)

Pin It