ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது மக்களுக்கான ஆயுதம் எனப்படுகிறது. அதே தேர்தல்தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஊழலின் தொடக்கமாக அமைந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நேரம். இந்த தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு மிகுந்திருக்கிறது. தீவிரவாதிகளின் மும்பை தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு இன்னும் கூடுதலாக.

தேர்தலில் எதிர்த்து நிற்கும் கட்சிகளை எதிர்கொள்வது ஒருபுறமென்றால், சொந்தக் கட்சியிலேயே எழும் கலகக் குரல்களை எப்படி சமாளிப்பது என்று குழம்பிப் போகின்றன தேசியக் கட்சிகள் எனச் சொல்லிக் கொள்ளும் பெரியகட்சிகள். இம்முறை, இந்தகலகக் குரல் முதன்மையாகவும், வலிமையாகவும் வெளிப்பட்டது காங்கிரஸ் கட்சியிலிருந்து. அதைத் தொடர்ந்து பா. ஜ. க. விலிருந்தும் கேட்கத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்களில் ஒருவர் மார்க்ரெட் ஆல்வா. முன்னாள் மத்திய அமைச்சர். அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அரசியல் நட்பாளர். அவரிடமிருந்துதான் முதல் கலகக் குரல் வெளிப்பட்டது. தனது மகன் நிவேதித்துக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது சீட்டு தரவில்லை என்பதுதான் இவரிடமிருந்து கலகக் குரல் வெளிப்படுவதற்கான காரணம்.

தன் மகனை மட்டும் முன்னிறுத்தினால் அது சுத்தமான சுயநலமாகிவிடும் என்பதால், பக்கத்து இலைக்கு பாயசம் என்பதுபோல, தன்னைப் போலவே மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான ஜாபர் ஷெரீப்பின் பேரனுக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டது என்றும் சொன்ன ஆல்வா, தேர்தல் சீட்டுகளை கட்சி நிர்வாகிகள் விற்பனை செய்கின்றனர் எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதுபோல சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தனது விலகல் கடிதத்தை அனுப்பினார் மார்க்ரெட் ஆல்வா. இவர்தான் மகராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைக் கவனித்து மேலிடத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய பொறுப்பாளர் பதவியில் இருந்தவர்.

தனது பொறுப்பில் உள்ள எந்த மாநிலத்திலும் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக இதுவரை மேலிடத்திற்கு எந்த அறிக்கையும் தந்திராத ஆல்வாதான், தனது சொந்த மாநிலமான கர்நாடகத்தில் 6 மாதத்திற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனால்தான் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றும் ‘நியாயக்’ குரல் எழுப்பினார். அண்மையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ள மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஜம்மு&காஷ்மீர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இரண்டு டஜன் வாரிசுகளுக்கு சீட்டுகள் கொடுக்கப்பட்ட நிலையில்தான், ஆல்வாவின் இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. அவர் பா. ஜ. க. வுக்குப் போக முடிவு செய்து விட்டார் என்றும் அதனால்தான் 6 மாதத்திற்கு முந்தைய கர்நாடக சட்டமன்றத் தேர்தல் குறித்து இப்போது பிரச்னையை உண்டாக்கி, தற்போது தேர்தலை சந்தித்த மாநிலங்களில் பா. ஜ. க. வுக்கு பலன் கிடைக்கும் வகையில் இப்படியரு குற்றச்சாட்டை சுமத்துகிறார் என்றும் காங்கிரஸ் கட்சியின் விசுவாசத் தலைவர்களிடமிருந்து எதிர்க்குற்றச்சாட்டு வெளிப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் தேர்தல் சீட்டுகள் விற்பனையாவதேயில்லையா? இலவசத் திட்டங்கள் போல சீட்டுகளும் இலவசமாகத்தான் தரப்படுகிறதா? காங்கிரசில் மட்டுமல்ல, பழம்பெரும் தேசியக் கட்சியிலிருந்து புதிதாக முளைத்துள்ள மாநிலக் கட்சிவரை, தேர்தல் சீட்டுகள் என்பவை ஏதோ ஒரு வகையில் விற்பனைக்குரியவைதான். தேர்தல் நேரத்தில் கட்சிகளின் சார்பில் சீட்டு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் கட்சித்தலைமை நேர்காணல் செய்கிறதே, அதில் என்ன வேட்பாளரின் தொலைநோக்குப்பார்வை, மக்கள் நலனுக்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் ஆகியவை பற்றியா கேள்விகள் கேட்கப்படுகின்றன? எவ்வளவு செலவு செய்யப்போகிறாய் என்பதுதான் அந்த நேர்காணலின் முக்கிய கேள்வி. சாதிபலம் பற்றியது இரண்டாவது கேள்வி. கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கு&ஒத்துழைப்பு இவையெல்லாம் கூட அடுத்தடுத்த கட்டங்கள்தான்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் செலவு செய்ய தகுதியுடையவர்களைத்தான் பெரிய கட்சிகள் தங்களின் வேட்பாளராக நிறுத்தும். ஆக, சட்டமன்றத் தேர்தல் சீட்டு விற்பனைக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 1 கோடி ரூபாய். இதைவிட கூடுதலாக செலவு செய்யத் தயாராக இருப்பவர்களில் ஒருவர் சீட் பெறுவதற்கு தகுதியுடையவராவார். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இதைப்போல் 5 மடங்கு அல்லது 6 மடங்கு செலவு செய்தாக வேண்டும். இந்த வலிமை உள்ளவர்களுக்குத்தான் தேர்தல் சீட்டு. மார்க்ரெட் ஆல்வாவின் மகனுக்கு இந்த வலிமை இருந்திருக்கலாம். ஆனால், அவரை ஓரங்கட்டி சீட்டு வாங்கியவர் இன்னும் வலிமை உள்ளவராக இருந்திருக்கக்கூடும்.

1996 சட்டமன்றத் தேர்தலில் வைகோ போட்டியிட்டு தோல்வியடைந்த விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தி. மு. க. வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர், கட்சியினருக்கு அதிக அறிமுகமில்லாத தொழிலதிபர் ரவிசங்கர். அவரது வலிமை பணம்தான். தேர்தல் செலவுக்காக, நிரப்பப்படாத காசோலையை கட்சித் தலைமையிடம் நீட்டி இதில் எவ்வளவு வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம் என்று இவர் சொன்னதாக அப்போது பெருமையாகப் பேசப்பட்டது. பின்னர் அந்த தொழிலதிபர் அ. தி. மு. க. வுக்குத் தாவி, அதன்பின் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார் என்பது இணைப்புச் செய்திகள்.

2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் செலவுக்காக இத்தனை இலட்சம் பணத்தை தலைமையிடம் செலுத்தவேண்டும் என தி. மு. க. வெளிப்படையாகவே அறிவித்தது. அ. தி. மு. க. அதை அறிவிக்கவில்லையே தவிர, தி. மு. க. வேட்பாளரை விட கூடுதலாகச் செலவு செய்யக் கூடியவர்களுக்கு சீட்டுகளை விற்றது. தோட்டத்து அப்பாயிண்ட்மென்ட்டுக்காக சூட்கேஸ்களுடன் சென்னை ஓட்டல்களில் அறை எடுத்து பல நாட்கள் தங்கியிருந்தவர்கள், என்ன விலைக்கு சீட்டுகள் விற்பனையாகின்றன என்பதை அறிந்து கொள்வதிலும் தங்களால் அந்த விலை கொடுக்க முடியுமா என்று கணக்கிட்டும் காத்திருந்தார்கள்.

ஊழலை ஒழிக்கப் போகிறேன் என மேடையில் டயலாக் பேசும் விஜயகாந்த், தனது கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களைக் களமிறக்க ஒவ்வொரு தொகுதியிலும் தொழிலதிபர்களைத் தேர்வு செய்து கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்குள்தான் சீட்டு விற்பனை நடக்கும்என்பதும் இத்தனை காலமாக கொடி, தோரணம் கட்டிக் கொண்டிருக்கும் ரசிகசிகாமணிகளுக்கு அதே வேலைதான் தொடர்ந்து கிடைக்கும் என்பதும் ஊரறிந்த ரகசியம்தான். பல கோடிகளை செலவுசெய்து எம். பி. யாக நினைக்கும் தொழிலதிபர்கள் அந்தச் செலவையெல்லாம் தர்ம கணக்கிலா எழுதுவார்கள்? தங்களின் புதிய தொழிலுக்கான முதலீடு இது என்பதே அவர்களின் கணக்கு. இந்த முதலீட்டுக்கான இலாபத்தை தேர்தல் வெற்றி மூலமாகவும் ஆட்சியில் பங்கேற்பதன் மூலமாகவும் பெறுகிறார்கள்.

வேறெந்த தொழிலிலும் கிடைக்காத அளவுக்கு பல மடங்கு இலாபத்தை கொட்டுகின்ற தொழிலாக ஆட்சியதிகாரமிக்க அரசியல் தொழில் இருக்கிறது. முதலீடு கையில் இருந்தும் அந்த இலாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு தன் மகனுக்கு கிடைக்கவில்லையே என்பதுதான் மார்க்ரெட் ஆல்வாவிடமிருந்து வெளிப்பட்ட குற்றச்சாட்டுக்கும் அவரது வெளியேற்றத்திற்கும் காரணமாக இருக்கும். தேர்தலில் சீட்டுகள் விற்பனை என்பது, கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால். . அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

Pin It