Ambedkar

மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, ஒருவரின் பெயரை மாற்றிக் கொள்வது போலத்தான். மதத்தை மாற்றிக் கொண்ட பிறகு பெயரையும் மாற்றிக் கொள்வது, உங்களுக்குக் கூடுதல் பயனளிக்கும். ஒருவர் தன்னை முஸ்லிம், கிறித்துவர், பவுத்தர், சீக்கியர் என்று அழைத்துக் கொள்வது, வெறும் மதமாற்றம் மட்டும் அல்ல; பெயர் மாற்றமும்கூட. மதமாற்றத்திற்கான இந்த இயக்கத்தைத் தொடங்கும்போதுகூட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறதா என்று இனி பார்ப்போம்.

நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, மூன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.

இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்லவே அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்திரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்திரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்? நம்முடைய இயக்கத்தின் நோக்கம், இந்துமத சீர்திருத்தம் என்று ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நம்முடைய இயக்கத்தின் நோக்கம், தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.

தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.

இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.

இதற்கு ‘சதுர்வர்ணம்' (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.

மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், öவஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய பேருரை

Pin It