கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆந்திராவில் உள்ள நிஜாம் கல்லூரி அரங்கில், "மாதிகா' சாதியினர் (பட்டியலின மக்களில் ஒரு பிரிவு) தலித் மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டில் தங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, சூன் 2005 இல் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆந்திராவில் தற்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் "தெலுங்கு தேசக் கட்சி'தான் தலித் மக்களைத் தூண்டிவிட்டு, தலித் வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வதாக ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆந்திராவில், தலித் மக்கள் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கருத்தை நாம் முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது. இருப்பினும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்றவர்கள் ஒட்டுமொத்தமாக தலித் இயக்கங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

Budda இதுவரை இருந்ததெல்லாம் தலித் இயக்கங்களா? அல்லது தங்களின் சாதி அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தனித்தனி இயக்கங்களா? தலித் இயக்கங்கள், பகுத்தறிவு மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. உண்மையில், வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரான புத்தரின் போராட்டத்திலிருந்துதான் நமது வரலாறு தொடங்குகிறது. புத்தர், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மட்டும் மறுக்கவில்லை; சாஸ்திரங்களின் ஆதிக்கத்தையும் அவர் மறுத்தார். இத்தகைய போராட்ட மரபு, பிற்காலங்களிலும் தொடரவே செய்தது. இங்கு தோன்றிய அனைத்து சீர்திருத்த இயக்கங்களும், மதங்களும் பார்ப்பனிய சமூக அமைப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன.

ஏனெனில், பார்ப்பனிய சமூக அமைப்பு, சாதி அமைப்புக்கும் தீண்டாமைக்கும் ஒரு தெய்வீகத் தன்மையை வழங்கியுள்ளது. புத்தருக்குப் பிறகு, மகாவீரரும் பார்ப்பனிய சமூகக் கட்டமைப்புடன் தொடர்புடைய சாதி மற்றும் வன்முறையை மறுத்தார். சீக்கியம் தோன்றியதற்குக்கூட, வர்ணாசிரம அமைப்பின் சாதி ஏற்றத் தாழ்வுகளே காரணமாக அமைந்தன. 15 ஆம் நூற்றாண்டில் கபீர், சாதி அமைப்பை நிராகரித்து, சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கடும் தாக்குதலுக்குள்ளாக்கி சமத்துவ சமூகத்திற்கானப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இருப்பினும், பார்ப்பனிய சமூக அமைப்பு, ஏதோ ஒரு வகையில் நிலைத்து நிற்கிறது. பார்ப்பனிய இலக்கியங்கள், தலித் மக்களை இழிவுபடுத்தி மிகவும் லாவகமாக அவர்களின் இழிவுக்கு, அவர்களின் முற்பிறவியே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறது. பார்ப்பனர்கள் பகவத் கீதையை பரப்புகிறார்கள். அது, வன்முறையை மட்டும் தூண்டவில்லை; சாதி அமைப்பையும் நியாயப்படுத்தி வெளிப் படையாகவே ஆதரிக்கிறது. பார்ப்பன அறிவுஜீவிகள், மிகக் கவனமாக தலித் மக்களையே பயன்படுத்தி தங்கள் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி பழமை பேணக்கூடியதாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி, தாழ்த்தப்பட்ட மக்களிடையே பல்வேறு மாற்றங்களை உருவாக்கியது. ஒதுக்கப்பட்ட சமூகங்களிடையே ஒருவித தன்னுரிமை உணர்வை அது உருவாக்கியது. ஜோதிபா புலே, மகாராட்டிராவில் உள்ள "மாலி' எனப்படும் மீனவ சமூகத்தைச் சார்ந்தவர். பூனாவில் உள்ள சித்பவன் பார்ப்பனர்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகளை பள்ளிக்கூடங்களில் அனுமதிக்க மாட்டார்கள். பெண்கள் அதிலும் குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பள்ளிக்குச் செல்வது குறித்து கனவுகூட காண முடியாது. தலித் மக்கள் கல்வி கற்காமல் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற முடியாது என்று புலே உணர்ந்தார். எனவே தான், அவர் கல்வியைப் பெருமளவு பரப்ப, பூனாவில் பல்வேறு பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். பார்ப்பனர்கள் இத்தகைய கல்வி இயக்கத்தைப் பல்லாண்டுகளாகத் தடை செய்திருந்தனர். புலே, பார்ப்பனிய இலக்கியத்தை அம்பலப்படுத்தினார்.விவசாயிகள் சுரண்டப்படுவது குறித்து நாடகங்களை எழுதினார். கிறித்துவ மிஷினரிகள் கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்ட உயரிய தன்மையைப் பாராட்டினார்.

Mahaveer புலேவின் கருத்துகளால் உந்தப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர், கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். ஆனால், கல்வி பொருள் பொதிந்ததாகவும், பகுத்தறிவின் பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்றார். கல்வி நம் சிந்தனையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது. நல்லது எது, கெட்டது எது என்பதை கல்வி நமக்கு உணர்த்துகிறது. எனவே, கல்வியே அனைத்து இயக்கங்களின் வேராகும். போராட்டம், பல முக்கிய பிரச்சினைகளில் நம்மை ஒன்றுபடுத்தும் காரணியாக இருக்கிறது. இதுவே அம்பேத்கரின் புகழ் பெற்ற முழக்கமாக மாறியது "கற்பி, போராடு, ஒன்று சேர்'. இந்நாட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் அம்பேத்கர். சாஸ்திரங்களின் சூழ்ச்சியை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்.

காந்திக்கு எழுதிய கடிதமொன்றில், “சாஸ்திரங்கள் சாதி அமைப்பைக் கட்டிக் காப்பதால், அதைத் திருத்த வேண்டும்'' என்று அம்பேத்கர் சுட்டிக் காட்டினார். ஆனால், “நாம் நம்மை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் சாஸ்திரங்களை நம்பித்தான் ஆக வேண்டும்; சாஸ்திரங்கள்தான் இந்து மதத்தின் அடிக்கட்டுமானம். அதை நாம் கேள்விக்குள்ளாக்கினால், நாம் நம்மை இந்து என்று சொல்லிக் கொள்வதில் எந்தப் பொருளும் இருக்க முடியாது'' என்று காந்தி பதிலிறுத்தார். அம்பேத்கர் மிகத் தெளிவாகக் கூறினார்: “நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன்; ஆனால், ஒரு இந்துவாக சாக மாட்டேன்.''

அம்பேத்கர் பகவத் கீதையையும், ராமாயணத்தையும் படித்து அதனைக் கேள்விக்குள்ளாக்கினார். ராமனையும், கிருஷ்ணனையும் இந்தியர்களுக்கான உருவ வழிபாட்டுச் சின்னங்களாக ஏற்க மறுத்த மிக அரிய சிந்தனையாளர்களில் அம்பேத்கரும் ஒருவர். தலித் மக்களின் மாண்பு காக்கவே அம்பேத்கர் போராடினார். இந்து வர்ணதர்மம், தலித் மக்களின் மாண்பைப் பறித்தது. அது அவர்கள் செய்யும் தொழிலையும் இழிவுபடுத்தியது. உழைத்து வாழும் மனிதனைக் கீழானவன் என்றும், குறுகிய மனப்பான்மை கொண்ட பார்ப்பனர்களை "பூவுலகின் தேவர்'கள் என்றும் வர்ணதர்மம் கூறுகிறது. இந்து சட்டத் தொகுப்பின் மீது அம்பேத்கர் அனலைக் கக்கினார். ஏனெனில், இந்தியாவில் உள்ள தலித் மக்கள் மீதான பாகுபாட்டுக்கு சாதி அமைப்பே காரணம் என்பதால்தான் அம்பேத்கர் அதற்கெதிரான இயக்கத்தை நடத்தினார்.

டிசம்பர் 25, 1927 அன்று மகாராட்டிராவின் மகத் குளத்தில் தலித் மக்களுக்கு தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று கோரியும், மநு தர்மத்திற்கு எதிராகவும் அம்பேத்கர் கலகம் செய்தார். தன்னுடைய எண்ணற்ற ஆதரவாளர்களுடன் அவர் மநுஸ்மிருதியை கொளுத்தினார். காரணம், மநுஸ்மிருதி பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆவணத் தொகுப்பே என்றார் அம்பேத்கர். மகாராட்டிராவில் வன்மம் மிகுந்த சித்பவன் பார்ப்பனர்களின் கோட்டையிலேயே அவர் மநுதர்மத்தை எரித்தது அவருடைய ஆற்றலை உணர்த்துகிறது.

தலித் மக்களின் உரிமைக்காக, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் அம்பேத்கர் போராடினார். ஆனால், இம்மக்களுக்கு ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வடிவமைக்கும் நேரத்தில் எவருமே எதிர்பாராத வகையில், 1955 ஆம் ஆண்டு அண்ணல் மறைந்தார். அந்த இறுதிக் காலகட்டத்தில்தான் அவர் பவுத்தத்தைத் தழுவி, தலித் மக்களுக்கென ஓர் அடையாளத்தை வழங்கினார். அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவியதைக் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அம்பேத்கர் தமக்கே உரிய வகையில் பவுத்தத்தை வரையறுத்தார். அவர், தம்மக்கள் வர்ணாசிரம அமைப்பை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காகவே ஓர் அடையாளத்தை வழங்க எண்ணினார். நாம் வேறு என்ன காரணங்களைச் சொன்னாலும், வர்ணாசிரமத்தின் ஒரு பகுதியாக இருக்கும்வரை நாம் என்ன செய்தாலும் அது நமது சாதி அடையாளங்களையே எதிரொலிப்பதாக அமைந்து விடும். அம்பேத்கர், புலே, பெரியார் ஆகிய அனைவருமே தமது வழித்தோன்றல்கள் எதிர்ப்புக்குணம் கொண்டவர்களாகவும், எதிர்வினையாற்றுகின்றவர்களாகவுமே இருக்க வேண்டும் என்று விரும்பினர். நம் மக்கள் சாதி அமைப்பை முற்றாக நிராகரித்து விட வேண்டும். அதற்கு, இந்து சமூக அமைப்பிலிருந்து வெளியேறி, வேறொரு சமத்துவ சமூக அமைப்பைத் தழுவிக் கொள்ள வேண்டும்.

Guru Nanak முப்பது ஆண்டுகளில், அம்பேத்கர் எண்ணற்ற சிந்தனைகளை வெளிப்படுத்தினார். பல்வேறு நிலைகளில் அவர் பணிபுரிந்தார். அரசுடன் இணைந்தும், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தும், இறுதியில் பவுத்தராகவும் மாறினார். இந்நாட்டின் அரசியல் அரங்கில் தலித்துகள் பங்கேற்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். அதற்காகவே, தனி வாக்காளர் தொகுதியைக் கேட்டுப் போராடி, இறுதியில் 1932 இல் காந்தியார் உயிரைக் காப்பாற்ற பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இப்போராட்டத்தை அவர் கைவிட வேண்டியதாயிற்று. அதன்பிறகு அவர் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்து, இந்து சட்ட வரைவில் பெண்களின் உரிமைக்காக அயராது பாடுபட்டார். தமது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், பாபாசாகேப் பவுத்தத்தைத் தழுவியபோது, தலித் மக்களுக்கு ஒரு மாற்று அரசியலை வழங்கிட வேண்டும் என்பதே அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஒரு பழுத்த மனிதநேயவாதி என்பதை நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது. அவருடைய வழித்தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், அவரை ஒரு சாதியவாதியாக தோற்றம் கொள்ளச் செய்தாலும், அல்லது அவருடைய கொள்கைகளையும், நோக்கத்தையும் திரிபுவாதத்திற்கு உட்படுத்தினாலும் அம்பேத்கர் உலகம் தழுவிய மனிதநேய மிக்கவராகவே போற்றப்படுகிறார். உலகெங்குமுள்ள நசுக்கப்பட்ட மக்கள், இன்று அவருடைய கொள்கைகளால் உந்தப்படுகின்றனர்.

தலித் என்ற போர்வையில் உள்ள குறுகிய கண்ணோட்டமுடைய அரசியல்வாதிகள், அம்பேத்கர் "இந்திய சுதந்திர தொழிலாளர் கட்சி'யை உருவாக்கியதையும், பிறகு இந்திய குடியரசுக் கட்சி உருவாகக் காரணமாக இருந்ததையும் எந்த காலகட்டத்திலும் ஒரு சாதியக் கண்ணோட்டத்துடன் இவற்றை உருவாக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய "பாகிஸ்தான் குறித்த சிந்தனை'யிலும், ஏழை இந்துக்களையும், ஏழை முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி வேண்டும் என்றே அம்பேத்கர் பரிந்துரை செய்தார். அது முழுவதுமாக மதச்சார்பற்றுத் திகழ்ந்து, இந்தியாவை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில், முஸ்லிம் மதவாதம், இந்து மதவாதத்திற்கே வழிவகுக்கும்.

ஆனால், டாக்டர் அம்பேத்கரின் எதிர்பாராத மரணம் தலித் இயக்கத்தை முற்றிலுமாக செயலிழக்கச் செய்துவிட்டது. அவருடைய வழித்தோன்றல்கள், பலவழிகளில் சென்றனர். பல்வேறு இந்தியக் குடியரசுக் கட்சிகள் தோன்றிவிட்டதால், எது உண்மையான கட்சி என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இடஒதுக்கீடு மற்றும் வர்ணாசிரமத்தைக் கடந்து அம்பேத்கர் எதுவுமே பேசவில்லை என்றொரு கருத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இது, இவ்வியக்கத்தைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. தலித் மக்களிடையே அம்பேத்கர் புகழ் பெற்றிருப்பதற்கு, ஏழை தலித்துகள் அவரைத் தங்களின் விடுதலை வீரராகக் கருதுவதுதான் காரணம். ஆனால், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு தவறுகள் நடைபெறுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

Narayana guru தலித்துகளை ஒன்றிணைப்பவராக அம்பேத்கர் இருக்கிறார். வடக்கு முதல் தெற்குவரை, இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தெற்கில் தமிழகம் வரை, அம்பேத்கர்தான் இம்மக்களின் விடுதலைச் சின்னமாகத் திகழ்கிறார் என்பதில் எந்த சந்தேகம் இருக்க வேண்டியதில்லை. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் எனில், அம்பேத்கரைப் பற்றி தெரியாத இடங்களில் அம்பேத்கரின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக, மேலடுக்கில் உள்ள தலித்துகள் தங்களுக்கென்று தனித்த அரசியல் நிலையைப் பெற, ஒரு நுழைவுப் புள்ளியாக மட்டுமே அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மகாராட்டிராவில் பெரும் எண்ணிக்கையில் உள்ள மகர்கள், சமார்கள் மற்றும் வடஇந்தியாவின் ஜாதவ்கள், மேற்கு வங்கத்தில் உள்ள நாமசூத்திரர்கள், ஆந்திராவில் உள்ள மாலாக்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சில பிரிவினரிடையே மட்டும்தான் அம்பேத்கர் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மகாராட்டிராவில் மகர்கள் பெருமளவில் உள்ளனர்; ஜாதவ்களும் சமார்களும் பிற சமூகங்களைக் காட்டிலும் வடக்கில் அதிகமாக உள்ளனர். இவர்கள்தான் அம்பேத்கரிய சிந்தனை பரவக் காரணமானவர்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் பிரச்சாரத்திற்கு இம்மக்கள்தான் பயன்பட்டனர்.

உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மாயாவதி வந்தபோது, உத்திரப் பிரதேசத்தில் தலித்துகளின் மாபெரும் புரட்சி ஏற்பட்டதாக கருத்துக் கணிப்பாளர்கள் தவறாகக் கணித்துவிட்டனர். ஒரு தலித் பெண் உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக வந்துவிட்டார் என்று பெருமையாக சொல்லப்பட்டாலும் லக்னோவில் அவர் ஆட்சியைப் பிடித்ததற்கான காரணங்கள் வேறு. இவ்வெற்றியில் அம்பேத்கர் இயக்கத்தின் பங்களிப்பை விட, மாயாவதி சார்ந்திருக்கும் சமார் சாதியின் பங்குதான் அதிகமானது. மாயாவதியின் வெற்றிக்குப் பின்னால் சமார் சாதியின் திரட்சி, உத்திரப் பிரதேசத்தில் அவர் முக்கிய பொறுப்பேற்க உறுதுணையாக அமைந்தது. அது அவருக்கு அதிக இடங்களைக் கைப்பற்ற உதவியதோடு, அவருடைய கோரிக்கை வலுப்பெறவும் உதவியது. ஆனால், அதுவே அவருக்கான பலவீனமாகவும் ஆகிவிட்டது.

கடந்த இருபது ஆண்டுகளாக, உத்திரப்பிரதேசத்தில் எந்த அரசும் முழுமையாக 5 ஆண்டுகள் நீடித்திருக்கவில்லை. உத்திரப் பிரதேசத்தின் மொத்த சட்டமன்ற இடங்களில் மாயாவதி பெற்ற இடங்கள் 25 சதவிகிதத்தை தாண்டவில்லை. முலாயம்சிங்கும் இதே நிலையில்தான் இருந்தார். இருவரும் தங்கள் வாக்குவங்கிகள் தம்மைக் கவிழ்த்து விடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இருப்பினும், தற்பொழுது தங்கள் வாக்குவங்கிகளையும் மீறி பார்ப்பனர்களுடனும், தாகூர்களுடனும் உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். குறுகிய அரசியலில், சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் பார்ப்பனர்களையும், தாகூர்களையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. இந்த எதிர்பாராத அணுகுறை, இப்பொழுது எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது.

மாயாவதி, சமார்களை அதிகளவு சார்ந்திருப்பதால், தலித்துகளிடையே உள்ள பிற சமூகங்கள் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டத் தொடங்கின. முலாயம்சிங், யாதவர்களையும் தாகூர்களையும் சார்ந்திருப்பதும், பிற பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளன. உத்திரப் பிரதேசத்தின் இந்தப் பரிசோதனையை பிற இடங்களிலும் செய்வதற்காகவே சில அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரைக் குற்றம் சுமத்தத் தொடங்கி இருக்கின்றனர். திராவிடக் கட்சிகள் தலித்துகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, பெரியாரை தலித் எதிர்ப்பாளராகச் சித்தரிக்க வேண்டிய தேவையில்லை. எனவே, ஒடுக்கப்படும் அனைத்து தலித்துகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

Jothiba Poole தலித் இயக்கங்களின் முரண்பாடு என்ன? அது தன்னுடைய சொந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணவில்லை. ஏனெனில், பிறரைத் தாக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அம்பேத்கர் பயன்படுத்தப்படுகிறார்; நம்முடைய உள்முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அல்ல. மாற்றுத் தொலைநோக்குப் பார்வைக்காக அம்பேத்கருடைய ஆக்கப்பூர்வமான எழுத்துகளை வெளிக்கொணர வேண்டும். எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி சமூகங்களை ஒன்றிணைப்பது எளிது. ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றும் போதோ, அதிகாரத்தில் பங்கு கேட்கும்போதோ இத்தகைய உணர்வுகளுடன் பிரச்சினையை சமாளிப்பது கடினம். தலித் மக்கள் தற்பொழுது இப்பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டால் பயன்பெற்று, அவர்களிடமிருந்து உருவாகிய மேட்டுக்குடிப்பிரிவினர் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலமற்ற தலித்துகள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

இன்று, தலித் குழுக்களிடையே உள்ள இடைவெளியை வெறும் ஆதிக்க சாதியினரின் சூழ்ச்சி என்று சொல்லிவிட முடியாது. இதை தலித்துகளிடையே உள்ள முரண்பாடாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியலில் உள்ள ஒவ்வொரு எதிரியும் நீங்கள் நலிவுற்று இருந்தால், உங்களைத் தாக்கத் தயாராக இருக்கிறான். தலித் இயக்கம் பல்வேறு முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதால், இன்று பல இடங்களிலிருந்தும் அவை பிரச்சினையை சந்திக்கின்றன.

அடையாள அரசியல் ஒருபோதும் உதவாது. ஆதிக்கங்களைத் தகர்ப்பதுதான் தலித்துகளின் நோக்கம். ஆனால், நாளடைவில் ஆதிக்கத்தைத் தகர்க்கும் வேளையில், நம்முடைய ஆதிக்கங்களும் உருவெடுப்பதால்தான் இயக்கங்கள் உடைகின்றன. பார்ப்பன ஆதிக்கத்தை உடைக்க நாம் முயற்சி மேற்கொள்ளும் வேளையில், நாமே ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு, "வால்மிகி'களாக / "மாதிகா'க்களாக / "கும்சர்ஸ்'களாக / பள்ளர் / பறையர்களாக / "மாங்கு'களாக நூற்றுக்கணக்கான உட்சாதிகளாக மாறி, அனைவருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோருகின்றோம். உண்மை என்னவெனில், எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தலித்துகளுக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் தலித்துகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒட்டுமொத்த இயக்கத்திலுள்ள முரண் என்னவெனில், கூட்டுவிவேகத்துடன் செயலாற்றுவதற்குப் பதில், இவ்வியக்கம் அனைத்து சமூகங்களுக்கு உழைப்பதாகச் சொன்னாலும் பெருமளவில் தங்களின் சமூகத்தைப் பயன்படுத்தி, அரசியல் லாபமடைய நினைக்கும் குறுகிய வட்டத்திற்குள்ளேயே இயங்குகிறது. அம்பேத்கரிய இயக்கங்கள் வன்முறை குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் அரிதாகவே பேசுகின்றன. இந்துக் கடவுளர் மீது அவர்களுக்கு இருக்கும் மோகம், சாதி இந்துக்களிடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும் என்ற வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பான்மை தலித்துகள், பார்ப்பனர்களின் கோயில்களுக்குச் சென்று, அவர்களுடைய சடங்குகளையே பின்பற்றுகின்றனர். ஆனால், இத்தகைய முக்கிய சீரழிவுகள், பிரச்சினைகள் குறித்து எப்போதாவது ஒருமுறைதான் தலித் இயக்கங்கள் பேசுகின்றன.

நாம் முழு மனது வைத்தால் தவிர, பார்ப்பனிய சமூக அமைப்பு அழிவதற்கு வாய்ப்பில்லை. பார்ப்பன சமூக அமைப்பைப் பாதுகாக்கும் கையாட்ளாகவே தலித்துகள் பல நேரங்களில் பயன்படுத்தப்படுகிறார்கள். தலித்துகளின் இத்தகைய போக்கு குறித்து பல "அறிவுஜீவிகளும்' பேசுவதற்கு "சங்கடப்படுகின்றனர். காரணம், இவர்களுடைய அடையாளங்கள் மூலம்தான் அவர்கள் மக்கள் தொடர்பு ஊடகங்களில் நுழைந்து "தத்துவம்' குறித்துப் பேசமுடிகிறது. இன்று, இதே அறிவுஜீவிகள்தான், பார்ப்பனிய அமைப்பைத் தாக்குவதைத் தவிர்த்து விட்டு பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். பார்ப்பனிய எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கைவிட்டு, பிற்படுத்தப்பட்டோர் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தலித் இயக்கங்கள் மாறியது ஏன்?

நான் முன்பே குறிப்பிட்டதுபோல, தலித் இயக்கம் ஒரு சமூக இயக்கமாக மாறத் தவறிவிட்டது. நாம்தான் நமது சமூகங்களை மதச்சார்பற்ற ஜனநாயக சமூகங்களாக மாற்றியாக வேண்டும் என்ற தேவை இருக்கிறது. ஏனெனில், ஒட்டுமொத்த பிரச்சாரமே அதிகாரத்திற்கானப் போட்டியாக மாறிவிட்டது. இந்த அதிகாரப் போட்டியில், யாருமே பிறருக்கு என விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இத்தகைய அதிகாரப் போட்டியில் எவரும் தத்துவங்களைப் பேசுவதில்லை. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்கள், தீவிர இந்துத்துவவாதிகளாக மாறி தலித்துகளைத் தாக்குகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Ayothidasar எனவே, இதற்கிடையே ஒரு எல்லை வரையறுக்கப்பட வேண்டும். சில தலித் அதிகாரக் குழுக்கள் இருப்பது போலவே, சில பிற்படுத்தப்பட்ட அதிகாரக் குழுக்களும் இருக்கின்றன. பலம் வாய்ந்த தலித் குழுக்களுக்கும் பலம் வாய்ந்த பிற்படுத்தப்பட்ட குழுக்களுக்கும் இடையே ஏற்படும் மோதல், இரு சமூகங்களிடையே நிரந்தர பகை உணர்வை ஏற்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. அம்பேத்கரிய சிந்தனையற்ற சில குழுக்கள், குறிப்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அதாவது, குடிமைச் சமுதாயத்தின் பிரதிநிதிகள் எனச்சொல்லிக் கொள்வோர், தத்துவம் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் சில தனித்த பிரச்சினைகளை மட்டுமே முன்வைத்து, எந்த நேரம் தலித்துகள் தாக்கப்படுகின்றனர் என ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

எந்தவொரு இயக்கம், தத்துவமின்றி ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தத்துவம் மக்களிடையே பிரபலப்படுத்தப்படாதவரை, அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, பரந்துபட்ட மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மை பொருந்திய தலித் இயக்கங்களைக் கட்டுதல் தலித் மக்கள் சந்திக்கும் வன்கொடுமைப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொள்ளுதல் ஆகிய இரண்டும் சம அளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைக் குறுக்கி, அதை ஒரு சில சாதிகளுக்கு மட்டுமானதாக மாற்றும் போக்கு ஒட்டுமொத்த தலித் இயக்கத்தையே சிதைத்துவிடும். தலித் இயக்கம் நடுச்சந்தியில் நிற்கிறது. இதற்குப் பல்வேறு வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.

அனைத்து வழிகாட்டுதலுக்கும், அம்பேத்கரையே ஓர் உயரிய சிந்தனையாளராக, மனித உரிமைக் காவலராக, மனிதநேயவாதியாக நான் முன்னிறுத்துகிறேன். அவர் தமது வாழ்நாள் முழுவதும் மதத் தீர்வை முடிவானதொரு தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. அதை அவர் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். அவர் ஓர் உண்மையான ஜனநாயகவாதியாக மிளிர்ந்திருக்கிறார். அம்பேத்கர் சாதி உணர்வாளர் அல்ல. தொழிலாளர் நலனுக்காகவும் பெண்களின் நலன்களுக்காகவும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். சுயநலக் குழுக்கள் அம்பேத்கரை தவறாக மேற்கோள் காட்டுகின்றன. ஆதிக்க சாதியினர், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் நலன்களுக்கேற்ப அம்பேத்கரை மேற்கோள் காட்டுகின்றனர். அவர் தமது சொந்த கருத்தின் அடிப்படையில், கொள்கையின் அடிப்படையில்தான் பவுத்தத்தைத் தழுவினார்; எந்த மதகுருமார்களின் வழிகாட்டுதலின்படியும் அல்ல. அவர் பவுத்தத்தை மறுவரையறை செய்தார். அவர் இன்னும் சில ஆண்டுகாலம் வாழ்ந்திருந்தால் பவுத்தத்திற்கு ஒரு புதுப் பொலிவையும், புதிய சிந்தனையையும் ஏற்படுத்தி இருப்பார்.

அம்பேத்கர், அதிசயிக்கத்தக்க அளவில், தலித்துகளிடையே இருந்த மத மாயைகளை அம்பலப்படுத்தினார். புனித நூல்களின் மூலம் பார்ப்பனர்களால் போற்றப்பட்ட மத அடிப்படைவாதங்களை அவர் கடும் தாக்குதலுக்கு உட்படுத்தினார். ஆனால், அதே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களுடன் அவர் பவுத்தத்தைத் தழுவியதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கருடைய மிக நேர்மையான பார்ப்பன எதிர்ப்பு அல்லது வர்ணாசிரம எதிர்ப்பு சில மதக் குழுக்களால் திரிபுவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது. ஒரு மரபைத் தழுவுவதோ அல்லது மதத்தைத் தழுவுவதோ ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமை. ஆனால், உண்மை என்னவெனில், அது எந்த வகையில் தலித்துகள் ஒரு நிறுவனமாக உதவுகிறது?

Periyar இந்துக்களின் புனித நூல்களை நாம் எதிர்த்து, அதனை நிர்மூலமாக்கப் பிரச்சாரங்களை ஒருபுறம் மேற்கொள்ளும் நிலையில் மற்ற மதங்களுக்கும் எதிராக இத்தகைய அணுகுறையைக் கடைப்பிடிக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தலித்துகள் இந்து வர்ணதர்மத்தை அழித்தொழிப்பதற்கு, எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால், பிற மதங்களும் இதைப் பின்பற்றும்போது, நாம் அமைதியாக இருக்க வேண்டுமா? "நான் ஏன் இந்து அல்ல?' என்பதை நாம் ஆதரிக்கும் போது, பெர்ட்ரண்ட் ரசல் எழுதிய "நான் ஏன் கிறித்துவன் அல்ல?' என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. "நான் ஏன் முஸ்லிம் அல்ல?' என்பதையும் நாம் மதிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கைகள் அப்படித்தான் இருந்திருக்கின்றன. அவை அதிசயங்களாலும், அநீதிகளாலுமே உயிர் வாழ்கின்றன.

இன்று எல்லோருக்கும் பிடித்தது மற்றவர்களை குற்றம் சொல்வது. ஒரு முற்போக்கு தலித் இயக்கம், ஒரு சில விஷயத்தை மட்டும் விமர்சனப்படுத்தி, சில நூல்களை மட்டுமே கேள்விக்குட்படுத்தி மற்றதில் அமைதி காக்கக்கூடாது. எதிர்மறையான விஷயங்களால் ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது. இயக்கம் தமது மக்களுக்கு ஒரு மாற்றைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. தலித்துகளுக்கு என செழுமையான அடையாளம், பண்பாடும் இருக்கின்றன. ஆனால், ஒரு மாற்றுக் கடவுளை தலித் மக்களுக்கு வழங்க நினைப்பவர்கள் உண்மையில் அம்பேத்கரை தவறாக மேற்கோள் காட்டுகிறார்கள். தலித் ஆர்வலர்களின் புரட்சிகர உணர்வையே இது கொன்று விடுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள தலித்துகளிடையே அரசியல் அதிகாரம் அதிகளவு இருப்பதற்குக் காரணம், அங்கு அது அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மதமாற்றம் அவர்களை அரசியலற்றவர்களாக்கி இருக்கிறது. இந்தியாவில் உள்ள பழங்குடியினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மதக் குழுக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அரசியலற்ற பாதைக்குச் சென்று, அதனால் கடுமையாகப் பாதிப்பிற்குள்ளாயினர். இதன் விளைவு, பழங்குடியினர் தனிமைப்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு ஆட்பட்டனர். தென்னிந்தியாவில் தலித்துகளிடையே உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வடஇந்தியாவில் இருப்பதைவிட அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், வடஇந்தியாவில் இருக்கும் அரசியல் அதிகாரத்தைவிட தெற்கில் குறைவான அரசியல் அதிகாரத்தையே காணமுடிகிறது. இத்தகைய போக்குதான் அவர்களை அரசியலற்றவர்களாக்கி, அதிகளவு மத உணர்வைத் தூண்டி, அது சுரண்டுவதில் முடிந்திருக்கிறது.

Karl Marx உத்திரப்பிரதேசத்தில் சமார்களும் ஜாதவ்களும் அரிதாகவே மதம் மாறியுள்ளனர். தாங்கள் எப்போதுமே பவுத்தர்களாகவே இருந்து வந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். மகாராட்டிராவில், மகர்கள் நவீன பவுத்தர்களாகி இருக்கிறார்கள். அவர்களிடையே அபரிமிதமான அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அம்பேத்கர், மக்களை அரசியல்படுத்தியதை பவுத்தம் தடுக்கவில்லை. ஆனால், பிற மதங்களுக்குச் செல்லுவதால், உள்ளபடியே அவர்கள் அரசியல்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. இது, அதிகளவு சுரண்டலுக்கு வழிவகுக்கிறது.

அம்பேத்கருடைய பாரம்பரியம் செழுமையானது; நம்மால் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று. தலித் இயக்கம் வெறுக்கத்தகுந்த பார்ப்பனியக் கருத்தியலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஓர் இயக்கமாகும். ஆனால், அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடனும் தோழமையை நாம் வெளிப்படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும். தலித் இயக்கம் ஒத்த கருத்துடைய குழுக்களுடனும் மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களுடனும் நல்லுறவை வளர்த்தெடுக்க வேண்டும். இன்னொரு வழிபாட்டுக் குழுவாக அது மாறிவிடக் கூடாது. அது தனது கருத்துகளையும், பார்வைகளையும் குறுக்கிக் கொள்ளாமல் விரிவுபடுத்த வேண்டும். மக்களைச் சென்றடையாத இடங்களில் எல்லாம் அது சென்று சேர வேண்டும். அடையாள அரசியல் ஒருபோதும் பயன்படாது. யாரும் பிறருக்காகப் பேசுவதில்லை. நாம் எல்லோருமே நம்டைய கருத்தை மட்டுமே பேசுகிறவர்களாக இருக்கிறோம். இதைத் தவிர்த்துவிட்டு, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் குரல் கொடுக்கின்றவர்களாக நாம் மாற வேண்டும்.

அடையாளங்களை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருந்தால், கண்டிப்பாக நாம் ஒரு செய்தியை நினைவில் கொள்ள வேண்டும். தலித்துகள் அனைவரும் ஒரே சமூகமாக இல்லை. உண்மையில், எந்த சமூகம் ஒரே குழுவாக இல்லை. இவை பிற குழுக்களைப் போல பரந்தும் விரிந்தும் இருக்கின்றன. தலித்துகளுக்காக தலித் மட்டும்தான் பேச வேண்டும் என்றால், மேற்கத்திய வெள்ளைக்காரர்கள் நம்மைப் பற்றி பேச நாம் ஏன் அனுமதிக்கிறோம்? கிறித்துவர்களும், முஸ்லிம்களும் ஏன் தலித்துகளுக்காகப் பேச வேண்டும்?

Martin Luther King ஒரு "சமார்' ஏன் "வால்மிகி'க்காகப் பேச வேண்டும்? "மாதிகா'வுக்காக ஏன் ஒரு "மாலா' பேசவேண்டும்? பறையர்களுக்காக ஏன் ஒரு பள்ளர் பேச வேண்டும்? அருந்ததியர்களுக்காக ஏன் ஒரு பறையர் பேச வேண்டும்? அனைத்திற்கும் மேலாக, ஒரு தலித் ஆண் ஏன் ஒரு தலித் பெண்ணுக்காகப் பேச வேண்டும்?

ஒரு சமூகத்தை அரசியல்படுத்தாததால் என்ன விதமான ஆபத்தான போக்குகள் நிகழ்ந்தன என்பதை சுனாமி வந்தபோது, அத்தகைய இயற்கைப் பேரழிவிலும் தலித்துகள் பாகுபாட்டுக்கு ஆளான கொடுமையைப் பார்த்தோம். நம் அரசியல் தலைவர்கள் அரசியல்மயமாகாமல் இருக்கவே விரும்புகின்றனர். இவர்களைப் போலவே, சில மதக் குழுக்களும் நமக்களித்த செயல்திட்டங்களால், எந்த மாற்றம் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு வெளியே அய்க்கிய நாடுகளின் அவையிலும், தேவாலயங்களிலும் இந்த தலைவர்கள் முறையிட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே உள்ள மேட்டுக்குடிப் பிரிவினர், இவர்களுக்கு எதிராகவே செயலாற்றுகின்றனர்.

உண்மையில், கிறித்துவர்களாக இருக்கக்கூடிய மீனவர்கள் கிறித்துவ தலித்துகளுடன் ஒன்றாக அமர்ந்து உண்ண மறுக்கிறார்கள். இப்பிரச்சினை ஏன் மிகப் பெரிய பிரச்சினையாக தலைப்புச் செய்தியாக மாற்றப்படவில்லை? ஒரு மதக்குழு, ஒரு ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. நாம் வரலாற்று ரீதியாக சில வலுவான இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அமெரிக்காவில் உள்ள கறுப்பர்களின் சிவில் உரிமை இயக்கம், கறுப்பர்களை அரசியல்படுத்தியதை நாம் ஆய்வு செய்தாக வேண்டும். அந்த இயக்கத்தின் வீச்சும், கருத்தியல் கண்ணோட்டம் மிகத் தெளிவானவையாக இருந்தன. அவர்களுடைய பரந்துபட்ட தன்மையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மனித உரிமைப் பிரச்சினைகளில் அதிகளவு கவனம் எடுத்துக் கொண்டனர். சிவில் உரிமைகளிலும் அக்கறை எடுத்துக் கொண்டனர். அமெரிக்கா முழுவதும் செயல்படும் பலவகைப்பட்ட ஆர்வலர்களை ஈர்த்தனர்.

Ambedkar தலித் இயக்கங்களிலுள்ள முரண் என்னவெனில், அது பெருமளவில் புத்தகங்களையும், தலித்துகளில் உள்ள மேட்டுக்குடிப்பிரிவினரையும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களையும் மட்டுமே சார்ந்திருக்கிறது. விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு, கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த இயக்கங்களால் மிகக் குறைந்த அளவே பயன் விளைந்துள்ளது. இவை எல்லாம் ஆபத்தான, மேம்போக்கான, வெறும் எதிர்ப்பு மனப்பான்மையை மட்டுமே கொண்டுள்ளன. இது ஒருபோதும் பயன்படாது. அடையாள அரசியல், அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுடைய அறிவுஜீவி நிண்பர்களுக்கு பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்பட்டுள்ளது. அவர்கள் ஒருபோதும் ஒதுக்கப்பட்ட மக்களில் இருக்கக்கூடிய சிறுபான்மை சமூகங்களுக்காக எதையும் செய்ய முன்வர மாட்டார்கள். இவர்களது இயக்கம், ஜனநாயகத்தையும் வெகுமக்களின் பங்கேற்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடிப் பிரிவினரின் கூட்டு அகந்தையைத்தான் இவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.

தனிமனிதர்கள் மீது மதிப்பு வைக்காத, குறைகளைத் திருத்தும் தத்துவம் இல்லாத எந்த ஒரு இயக்கம் விளங்காது. தலித்துகளுக்கென சொந்த பண்பாட்டு மதிப்பீடுகளும், நெறிமுறைகளும் உண்டு. இவை கண்டெடுக்கப்பட்டு, அவற்றுடன் புதிய மதிப்பீடுகளும் சேர்க்கப்பட வேண்டும். எப்போதுமே நாம் ஒரு கிளர்ச்சி எதிர்ப்புணர்வுடனேயே இயங்க முடியாது. நாம் ஆழமாக ஆய்வு செய்து, கடைகோடி மனிதனையும் மய்ய நீரோட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும். இல்லை எனில், இத்தகைய உள் முரண்பாடுகள் மிகப் பெரும் பாரம்பரியமிக்க அம்பேத்கரின் சாதனைகளையே சிதைப்பதாக ஆகிவிடும். நாம் அவருக்கு நன்றியுடன் இருக்க விரும்பினால், தலித் இயக்கத்தை மறுவரையறை செய்ய இதுவே சரியான தருணமாகும்.