“பஸ் கட்டணம் ஏற்கனவே 50 சதவீதம் உயர்ந்து விட்டது. பஸ் புறக்கணிப்பை நீங்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்தால் போக்குவரத்து நிறுவனத்திற்கு உண்டாகும் இழப்பை ஈடுகட்ட நீங்கள் மேலும் 18 மாதங்களுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்தவேண்டும். அதுமட்டுமல்ல.. வாழ்நாள் முழுவதுமே நீங்கள் கூடுதலாக பஸ்கட்டணம் செலுத்தவேண்டி வரும்..

உங்களுடைய கடமை உணர்ச்சி எங்கே போனது? ஒரு நிமிடம் உங்களுடைய வீட்டைப் பாருங்கள். உங்களுக்கு நாகரிகமாக சமைக்கக் கற்றுக் கொடுத்தது யார்? மருந்துகளும் மின்சாரமும் துணிமணிகளும் வீடும் காரும் எப்படி வந்தது?

நீங்கள் வாழ்வதற்கே மாண்ட்கோமரி நகரத்து வெள்ளையர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்களில் பலரையும் வெள்ளை இன டாக்டர்தான் இந்த பூமிக்கு கொண்டுவந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்.

உங்களுக்கு கல்வி கொடுக்கவும் வேலை கொடுக்கவும் வீடு கொடுக்கவும் ஆகும் செலவில் 95 சதவீதம் வெள்ளையர்களாகிய நாங்கள் கொடுக்கும் பணத்தில்தான் என்பதை மறந்துவிட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு வேலை கொடுக்கவில்லையென்றாலும் இருக்க இடம் கொடுக்கவில்லையென்றாலும் நீங்கள் எங்கே போவீர்கள்?”

மாண்ட்கோமரி அட்வர்டைஸர் இதழில் 1956 ஜனவரி 13 தேதியன்று அந்த நகரத்தின் நீக்ரோக்களை எச்சரிக்கை செய்து ஹில் லிண்ட்சே என்ற வெள்ளையர் வெளியிட்ட அறிக்கைதான் நாம் மேலே படித்தது.

அமெரிக்க நாட்டின் அலபாமா மாகாணத்தின் மாண்ட்கோமரி நகரத்து கறுப்பின மக்களான நீக்ரோக்களை வெள்ளையர்கள் எச்சரிக்க வேண்டிய அவசியம் என்ன?

கிட்டத்தட்ட நம்முடைய ஊரில் இருக்கும் பிரச்சினை போன்றதுதான். இன அடிப்படையிலான தீண்டாமைதான்.

மாண்ட்கோமரி நகரம் ஆயிரக்கணக்கான நீக்ரோக்களின் பிறப்பிடம். அடிமைத்தனத்தை ஆதரிக்கும் பழமைவாதிகளின் கோட்டை. கறுப்பர்களை வெளிப்படையாகவே எதிர்க்கும் வெள்ளையர்களின் இருப்பிடம்.

1955 டிசம்பர் 1ஆம் தேதி ரோஸா பார்க்ஸ் என்ற தையல் தொழில் செய்யும் நீக்ரோ பெண்மணி மாண்ட்கோமரி புறநகரில் க்ளீவ்லாண்ட் அவென்யூ பஸ்ஸில் ஏறினாள். கறுப்பர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகொண்டாள்.

வெள்ளையர்கள் அதிகமாக ஏறினால் கறுப்பர்கள் எழுந்து இடம் கொடுக்கவேண்டும் என்பது அந்த நகரத்தின் சட்டம். டிரைவரின் கட்டளையை ஏற்று அவளுடைய வரிசையில் அமர்ந்திருந்த எல்லோரும் எழுந்துகொண்டனர். ரோஸா பார்க்ஸ் மட்டும் எழுந்திருக்க மறுத்துவிட்டாள்.

சில நிமிடங்களுக்குள் ரோஸா பார்க்ஸ் கைதுசெய்யப்பட்டு மாண்ட்கோமரி சிறையில் அடைக்கப்பட்டாள். மாண்ட்கோமரி நகரத்து சட்டப்படி நகர பஸ்களில் முன்பகுதி வெள்ளையர்களுக்கும் பின்பகுதி கறுப்பர்களுக்கும் ஒதுக்கப்பட்டு இடையில் ஒரு தடுப்பு வைக்கப்பட்டிருக்கும்.

வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கறுப்பர்கள் அமர முடியாது. வெள்ளையர்கள் அதிகம்பேர் ஏறினால் தடுப்பு பின்னோக்கி நகர்த்தப்படும். உட்கார்ந்திருந்த கறுப்பர்கள் எழுந்து கொள்ளவேண்டும். கறுப்பர்கள் அதிகம் பேர் ஏறினால் தடுப்பு முன்னோக்கி நகர்த்தப்பட மாட்டாது. வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தாலும் கூட அதில் கறுப்பர்கள் அமர முடியாது. நின்றுகொண்டுதான் பயணம் செய்ய வேண்டும்.

இத்தனைக்கும் அந்த நகரத்தின் பஸ் பயணிகளில் 60% பேர் கறுப்பர்கள். கறுப்பர்கள் முன்வாசலில் ஏறிச்சென்று டிக்கெட் வாங்கியபிறகு இறங்கி வந்து பின்வாசல் வழியாக மீண்டும் பஸ்ஸில் ஏறிக் கொள்ளவேண்டும். அதற்குள் பஸ் நகரத் தொடங்கிவிட்டாலும் கேள்வியில்லை.

நீக்ரோ பணிப்பெண்கள் வெள்ளையர்களின் குழந்தைகளை சுமந்து செல்லும்போதும், இயலாத வெள்ளையர்களுக்கு துணையாக செல்லும் போதும் மட்டும் வெள்ளையர்களின் இடங்களில் உட்காரலாம். பஸ் டிரைவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு போலீஸ் அதிகாரிக்கு நிகரான அதிகாரத்தை பஸ் டிரைவர்களுக்கு இந்த சட்டம் வழங்கியிருந்தது.

நிறப்பாகுபாடு பஸ்களில் மட்டுமல்லாமல் பூங்காக்கள், பள்ளிகள், ஒய்வுவிடுதிகள், திரையரங்குகளிலும் நிலவியகாலம் அது. கறுப்பர்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை. நீதிமன்றங்கள் கூட கறுப்பர்களுக்கு சாதகமாக இல்லை. ரோஸா பார்க்ஸ் கைதுசெய்யப்பட்ட பிறகு என்ன நடந்தது? அடுத்த நாள் கறுப்பின மக்களில் முக்கியமானவர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.

மாண்ட்கோமரி முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக உரிமைகளுக்கான ஒரு போராட்ட வீரர் உலகிற்கு அன்றுதான் அறிமுகமானார். அன்றையதினம் அவர் நிகழ்த்திய போராட்ட உரை மக்களைக் கவர்ந்தது.

“ஒரு முக்கியமான முடிவெடுக்க இங்கே கூடியிருக்கிறோம். நாமெல்லோரும் அமெரிக்க குடிமக்களாக இருப்பதினால் நமது குடியுரிமையை முழுமையாக பயன்படுத்த இங்கே கூடியிருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிருப்பதால் இங்கே கூடியிருக்கிறோம்.

வலிமையற்ற காகிதத்திலிருந்துதான் வலிமையான செயல்வடிவம் பெற முடியும் என்ற நம்முடைய ஆழமான நம்பிக்கையினால் இங்கே கூடியிருக்கிறோம். ஆனால் ஒரு நோக்கத்திற்காக கூடியிருக்கிறோம். மாண்ட்கோமரி நகரத்தின் பஸ்களில் நமக்கு இழைக்கப்படும் அநீதியை களைவதற்காக இங்கே கூடியிருக்கிறோம்.”

அன்று முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டிசம்பர் 5ஆம் தேதியில் இருந்து போராட்டம் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது. பஸ் டிரைவர்கள் கனிவாக நடந்து கொள்வார்கள் என்ற உறுதி ஏற்படும்வரையில் நீக்ரோக்கள் பஸ்களில் பயணம் செய்ய மாட்டர்கள்.

பஸ்களில் இனப்பாகுபாடு நீக்கப்படவேண்டும். முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படவேண்டும். நீக்ரோக்களையும் டிரைவர்களாக நியமிக்க வேண்டும்.

போராட்டத்தின் முதல்நாளன்று ஏறத்தாழ 100 சதவீதம் நீக்ரோக்கள் நகரத்து பஸ்களை புறக்கணித்தனர். நடந்தும், வாடகைக்கார் மூலமாகவும், நண்பர்களின் கார்களின் மூலமாகவும் வேலைக்குச்சென்றனர். சிலர் கழுதைகளைப் பயன்படுத்தியும் பயணம் செய்தனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நான்காம் நாளன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத் தலைவர்கள் விட்டுக் கொடுப்பதாயில்லை.

நீக்ரோக்கள் நடத்திவந்த வாடகை டாக்ஸிகளுக்கு சவாரி ஒன்றுக்கு பஸ் கட்டணத்திற்கு இணையாக இதுவரை 10 செண்ட் வசூலிக்கப்பட்டு வந்தது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக டாக்ஸி கட்டணம் நபர் ஒன்றுக்கு 45 செண்ட் ஆக உயர்த்தி நகர நிர்வாகம் உத்தரவு போட்டது.

17,500 நீக்ரோக்கள் பஸ் பயணத்தை நம்பி வேலைக்குச் சென்றுவந்த நிலையில் இந்த உத்தரவு கறுப்பின மக்களுக்கு பேரிடியாக இருந்தது. வேலைக்குச்செல்வோரும், கடைகளுக்கு பொருட்கள் வாங்கச்செல்வோரும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோரும் நடந்தே சென்றனர்.

கறுப்பின மக்களில் கார் வைத்திருந்தவர்கள் பிரைவேட் டாக்ஸி என்ற முறையில் கறுப்பினத்தவரை வேலைக்குச்செல்ல உதவி செய்ததால் போராட்டம் தொய்வின்றி நடந்தது.

போராட்டத்தை இதே வழியில் நீண்ட நாட்களுக்கு நடத்தமுடியாது என்பதை உணர்ந்த கறுப்பினத் தலைவர்கள் மாண்ட்கோமரி நகர நிர்வாகத்தை எதிர்த்து பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

1956 ஜூன் 4ம் தேதி பஸ்களில் இனப்பாகுபாடு சட்டவிரோதம் என்ற தீர்ப்பை இரண்டு நீதிபதிகளில் ஒருவர் மட்டும் வழங்கினார். எனினும் மாண்ட்கோமரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. எனவே போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. ஓராண்டு முடிவில் 1956 டிசம்பர் 20ல் பஸ்களில் இனப்பாகுபாடு சட்டவிரோதம் என்பதை சுப்ரீம்கோர்ட் உறுதி செய்தது.

மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்புப் போராட்டத்தின் முக்கியத்துவம் அதனுடைய வன்முறையற்ற போராட்ட நடைமுறையாகும். வன்முறையற்ற போராட்ட நடைமுறை வெள்ளையர்களைக்கூட கவர்ந்தது.

மேலும் அரசியல் தீர்வு காண்பதற்காக வன்முறையற்ற போராட்ட நடைமுறை பல உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு போராட்டத்தின் வெற்றி இனஒதுக்கல் கொள்கையர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண அடியாக கருதப்படுகிறது.

போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர்கள் கிறித்துவ மத கோட்பாடுகளில் ஊறியவர்களாகவும் கடவுள், அன்பு, நீதி ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். சாத்வீகமான முறையில் இனப்பாகுபாட்டை எதிர்த்தொழிக்க முடியும் என்ற நம்பிக்கையை நீக்ரோக்களிடையே இந்தப் போராட்டம் விதைத்தது.

நாட்டின் நீதிமன்றங்களின் மேலிருந்த நம்பிக்கை தகர்ந்து விடாதிருக்கவும் இந்த போராட்டம் காரணமாக இருந்தது. மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்புப் போராட்டம் அமெரிக்க வரலாற்றின் பக்கங்களில் அடிக்கோடிட்ட பகுதியாக விளங்குகிறது.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வன்முறையற்ற போராட்டமாக உருவெடுத்தது. இயேசு கிறிஸ்துவின் அன்பு, சமாதானம், பகைவனுக்கும் அன்பு பாராட்டுதல் என்ற கொள்கைகளோடு மகாத்மா காந்தியின் அகிம்சை கோட்பாட்டையும் ஆதார சுருதியாக இணைத்துக் கொண்டதால் உலக நாடுகளின் கவனத்தை இந்த போராட்டம் ஈர்த்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

- மு.குருமூர்த்தி

Pin It