டி.எம். கிருஷ்ணா, பார்ப்பனராகப் பிறந்தாலும் பார்ப்பனர்களை எதிர்க்கும் அதிசயமான கருநாடக இசைப் போராளி. கருநாடக இசையை குடிசைப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர். கானா பாடல்களையும், இஸ்லாமிய கிறிஸ்துவ மதப் பாடல்களையும் கருநாடக இசையில் அவர் இணைத்துப் பாடுகிறார். பார்ப்பனர்கள் பதறு கிறார்கள். ‘கருநாடக இசையில் ஜாதி’ என்ற நூலை அவர் ஏற்கனவே எழுதினார். பார்ப்பனர்கள் கொந்தளித்தார்கள். இப்போது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் மிருதங்கம் குறித்து ஒரு ஆங்கில நூலை எழுதியிருக்கிறார். ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ், மிருதங்கம் தயாரிப்போரின் சுருக்கமான வரலாறு’ என்பது நூலின் பெயர். இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கலாnக்ஷத்திராவில் உள்ள அரங்கம் தேர்வு செய்யப்பட்டது. நிர்வாகமும் அனுமதி வழங்கியது.
மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் கலாnக்ஷத்திரா, சென்னை அடையாறு பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறது. நாட்டியக் கலை-இசைக் கலையை வளர்ப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். பார்ப்பனர் ஆதிக்கப் பிடியில் செயல்படும் இந்த நிறுவனம், டி.எம்.கிருஷ்ணா நூல் வெளியிட கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து விட்டது. காரணம், இந்த நூல் பார்ப்பனர்களின் ஜாதி வகுப்பு வெறியை அம்பலப்படுத்துகிறது என்பதுதான். நூலிலிருந்து சில பகுதிகளை ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஜன. 30, 2020) வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள கருத்துகளின் சுருக்கம்:
இந்துக்கள் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உலகம் முழுதும் இருக்கிறது. பல இந்தியர்களும் இப்படி நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வேதகாலத்தில் ‘பிராமணர்கள்’ உள்ளிட்ட அனைவரும் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்ப தற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. இப்போதும் உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலயில் உள்ள ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பசுவைக் கொல்லக் கூடாது; அது புனிதமானது என்று பார்ப்பனர்கள் கூறுவது, பிற்காலத்தில் உருவான கருத்து தான். பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி சாப்பிட் டவர்கள்தான். ‘பிராமணர்கள்’ எண்ணிக்கையில் சிறுபான்மைதான். ஆனால் அவர்கள்தான் எது பண்பாடு என்பதைக் கட்டமைத்து பெரும்பான்மை மக்களின் பண்பாடாக மாற்றிக் காட்டுகிறார்கள். அரசியல் சட்டத்தின் நோக்கங்களை விளக்கும் வழிகாட்டும் நெறிகளில் பசுவைப் பற்றிய தங்களது கருத்தைத் திணித்து விட்டார்கள். வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றாலும் பல மாநில அரசுகள் பசுவைக் கொல்லுவதை மாட்டுக்கறியை உண்பதை தடை செய்து சட்டம் இயற்றியிருக்கின்றன.
பாலக்காடு மணி அய்யர் ஒரு பிரபல மிருதங்க கலைஞர். ஆச்சாரம் மிக்க பார்ப்பன குடும்பத்தில் பிறந்த அவருக்கு நீண்டகாலமாக ஒரு மனப் போராட்டம் இருந்தது. கருநாடக இசைக் கச்சேரியின் தாள வாத்தியமான மிருதங்கம் - பசுமாடு, எருமை மாடு, ஆடு ஆகியவற்றின் தோல்களால் செய்யப்படுவதால் புனிதப் பசுவின் தோலைக் கொண்டு செய்த ஒரு தாள வாத்தியத்தை கச்சேரிகளில் பயன்படுத்தலாமா? அது ‘பாவம்’ அல்லவா என்பதே அவரது மனப் போராட்டம்.
மிருதங்கம் ஒரு ‘வேத வாத்தியம்’ என்று பார்ப்பனர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். இது குறித்து காஞ்சி சங்கராச்சாரியிடம் கருத்து கேட்க முடிவு செய்தார் மணி அய்யர். சங்கராச்சாரியுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித் தருமாறு இராஜகோபாலாச்சாரியைக் (இராஜாஜி) கேட்டார். இராஜாஜியே மணிஅய்யரிடம் இதற்கு விளக்கம் கூறிவிட்டார். “நதி மூலம் ரிஷி மூலம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பது நமது முன்னோர்கள் வகுத்த விதி. அதையே பின்பற்றுங்கள்” என்று கூறினார். (அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றால் மட்டும் ‘பழக்க வழக்க’ங்களை மீற முடியாது என்று தடை போட்டு விடுவதும் இதே பார்ப்பனர்கள்தான். நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்ற கருத்தை இதற்கு மட்டும் பொருத்திப் பார்க்க மாட்டார்கள் - மொழி பெயர்ப்பாளர்)
ஒரு பழமொழி அய்யருக்கு ஏதுவாக அமைந்து விட்டது. மணி அய்யரும் இந்தக் கருத்தில் திருப்தி அடைந்து விட்டார். மாட்டுத் தோலைப் பயன்படுத்தி மிருதங்கத்தை உருவாக்கும் வேலையில் பார்ப்பனர்கள் ஈடுபடுவது இல்லை என்பதோடு, அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைக் கண் கொண்டு பார்க்கவும் அவசியம் இல்லாதவர்கள் பார்ப்பனர்கள். எனவே தேவை என்று வரும்போது மனத்திரையி லிருந்து ‘புனிதப் பசுவை’ வசதியாக மறந்து விடு கிறார்கள். மிருதங்கத்தைத் தயாரிக்கும் தொழி லாளர்கள் எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை மறந்து, பார்ப்பனர்களின் புனிதக் கோட்பாட்டுக்கு உதவி வருகிறார்கள்.
மிருதங்கத்தை தயாரிக்கும் ‘தொழிலாளர்களை’ புனிதமற்றவர்களாகவும் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள். மாட்டின் இரத்தத்தை வெளியே எடுத்து தோலை உரித்து பதப்படுத்தி மிருதங்கமாகத் தயாரிக்கும் தொழிலாளிகளை தங்களுக்கு ‘சமமாக’ மதிப்பதற்கு பார்ப்பனர்கள் தயாராக இல்லை.
“நாங்கள் செத்த மாட்டின் தோலுக்கு வாழ்க்கையைத் தருகிறோம்; மிருதங்கம் வாசிக்கப்படும்போது இந்தப் பதப்படுத்தப்பட்ட பசுவின் தோல்தான் சுருதியைத் தருகிறது. எனவே இந்தத் தொழிலை நாங்கள் விரும்பியே செய்கிறோம்” என்கிறார், மிருதங்க தயாரிப்பாளர் ரவிக்குமார். ஆனாலும், இவர்கள் உள்ளம் திறந்து பேசத் தயங்குகிறார்கள். துருவி துருவி கேட்கும்போது தான் பேசுகிறார்கள்.
ஒரு தயாரிப்பாளர், “நாங்கள் எப்போதும் பசு, ஆடுகளின் தோல்களுடன் தான் வாழ்கிறோம். மிருதங்கத்தை வாசிப்பவர்களில் பெரும்பாலோர் ‘பிராமணர்கள்’ அவர்களுக்கு இந்தத் தோல் வாடைப் பிடிக்காது; எப்படி தயாரிக்கிறோம் என்பதும் தெரியாது. ஆனால் நாங்கள் தயாரித்த இந்த தாள வாத்தியம் அவர்கள் பூஜை அறையில் இருக்கிறது. ஆனாலும் அதைத் தயாரித்து தரும் எங்களுக்கு மரியாதை இல்லை” என்றார். மற்றொரு மிருதங்கம் தயாரிக்கும் தொழிலாளி, “நான் எனது கால்களுக்கிடையே வைத்துதான் கருவியை தயாரிக்கிறேன். அதே கருவியைத்தான் அறைக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டு ‘பிராமணர்கள்’ தெய்வமாக வணங்குகிறார்கள்” என்றார் (கால், பாதம் இரண்டுமே சடங்கு ரீதியாக தீட்டானது என்பதே பார்ப்பனிய கருத்தியல்).
மிருதங்க தயாரிப்புக்கான பசு மாட்டுத் தோலை தேர்வு செய்வதில் மிகவும் திறன் கொண்ட ‘அங்கத்தான்’ என்ற தொழிலாளியிடம் பாலக்காடு மணி அய்யர் மிருதங்கம் தயாரிக்கச் சொல்லி ரூ.100 முன் பணமாகக் கொடுத்தார். அந்தத் தொழிலாளி சிறந்த பசுமாட்டுத் தோலைத் தேர்வு செய்தபோது விலை கூடுதலாக இருந்தது. எனவே அய்யரிடம் காட்டி ஒப்புதல் பெற அவர் வீட்டு வாசலில் பசு மாட்டுத் தோலுடன் நின்றபோது அய்யர் ஆவேசமடைந்து, கேவலமான வார்த்தைகளால் திட்டி விரட்டினார். பார்ப்பனர்கள் மிருதங்கத்துக்கான மாட்டுத் தோல் தேவலோகத்திலிருந்து நேரே குதித்து வருவதாகக் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். மிருதங்கம் தயாரிக்கும் (தலித்) தொழிலாளர்கள் ஒவ்வொருவருமே இப்படி பார்ப்பனர்களிடம் அவமானப்படுத்தப் படுபவர்களாகவே இருக்கிறார்கள் - என்று நூலில் எழுதியிருக்கிறார் டி.எம். கிருஷ்ணா.