கருணாமிர்த சாகரம், யாழ்நூல்:

            நவீனகாலத் தமிழிசை வளர்வதற்குப் பெருந்தொண்டு புரிந்தவர்கள் பலர் இருப்பினும் கருணாமிர்த சாகரம் செய்த ஆபிரகாம் பண்டிதர்(கி.பி. 1859-1919), யாழ்நூல் செய்த விபுலானந்தர் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் தங்கள் காலத்தில் தமிழிசைக்கு மிகப்பெரிய தொண்டு புரிந்துள்ளார்கள். கருணாமிர்த சாகரம் 1340 பக்கங்கள் கொண்ட ஒரு பெருநூல் ஆகும். இதில் 19ஆம் நூற்றாண்டுக்கு முன் பிராமணர்களோடு இசைக்கும், நாட்டியத்துக்கும் தொடர்பு இல்லை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். இதில் 72 மேளகர்த்தா இராகங்கள் குறித்தும், 103 பண்கள் குறித்துமான தரவுகளைத் தெரிவித்துள்ளார். இறுதியில் சங்கீத இரத்னாகரம் என்ற நூலைச் செய்த சாரங்கதேவர் குறித்தும் அவரது நூல் குறித்தும் 240 பக்கங்களில் ஆய்வு செய்துள்ளார்.

            mu arunachalamசுவாமி விபுலானந்த அடிகள்(கி.பி. 1892-1947) ஈழத்தின் மட்டக்கிளப்பில் உள்ள காரைத்தீவு என்ற ஊரில் பிறந்தவர். இவர் வடமொழி, இலத்தீன், வங்காளி ஆகிய மொழிகளை அறிந்தவர். யாழ்நூல் எழுதுவதற்காக சிலப்பதிகாரம் முதலிய நூல்களை 14 ஆண்டுகள் ஆய்வு செய்தார். யாழ்நூல் என்பது பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் ஆகிய ஏழு பகுதிகளை உடையது. இந்நூல் தமிழின் பெருமைகளைக்காட்டுவது. இந்நூலில் 100 தேவாரப் பாடல்களை பண்ணுக்கு ஏற்றவாறு பிரித்து அச்சிட்டுள்ளார். இதுபோன்ற சிறப்பு விடயங்கள் பல இந்நூலில் உண்டு. தமிழிசைக்கு இவர்கள் இருவரும் ஆற்றிய சேவையை தமிழகம் மறந்துவிடக் கூடாது-(15).

இரங்க இராமானுச அய்யங்கார்:

            இவர் தென்னிந்திய சங்கீதத்தின் வரலாறு என்ற ஒரு பெரிய ஆங்கில நூலை எழுதியுள்ளார். 1972இல் வெளியிடப்பட்ட இந்நூல் 564 பக்கங்கள் கொண்டது. “உலகத்திலேயே தென்னிந்தியாவில்தான் இசையானது வாழ்க்கையோடும் இலக்கியத்தோடும் பிரிக்கமுடியாதபடி பிணைக்கப் பட்டிருக்கிறது. சென்ற 40 ஆண்டுகளில் கருநாடக சங்கீதமானது தனது பழம்பெருமையைப் பொசுக்கிவிட்டு தடமே காணாத ஒரு பாலைவனத்தில் வந்து சிக்கிக் கொண்டிருக்கிறது” என இவர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்துக்கு உரிய இடம் தந்து பாராட்டியநூல் இதுமட்டுமே ஆகும்-(16). கர்நாடக சங்கீதம் தனது 2000 ஆண்டுகால தமிழிசை மரபை மறந்து செயல்பட்டு ‘பாவம்’ இல்லாத பொருள் இல்லாத வெற்றுச் சுரங்களைப்பாடும் பாலைவனமாக ஆகிவிட்டதையும் அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளதையும் அவர் இதன்மூலம் சுட்டுகிறார்.

திரு எருக்கத்தம்புலியூர் நங்கை:

            இராசராச சோழமன்னன் நம்பியாண்டார் நம்பி என்பவரைக்கொண்டு தேவாரத் திருப்பதிகங்களை வெளிப்படுத்தி அவைகளையெல்லாம் திருமுறைகளாக வகுத்தமைத்தான். அதன்பின் அப்பதிகங்களுக்கு இசையாகிய பண்முறைகளை குறிப்பிட்டு, பாடும் முறைமைகளை வகுத்தளிக்க வேண்டியிருந்தது. திரு எருக்கத்தம்புலியூரில் வாழ்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்ணுக்கு திருமுறைகளுக்குரிய பண்முறைகளும் பாட்டு முறைமைகளும் தெரியும் என்பதை அறிந்து இராசராசன் அப்பெண்ணைக் கண்டறிந்து அப்பெண் மூலம் திருமுறைகளுக்குரிய பண்களையும், அவற்றுக்குரிய கட்டளைகளையும் வகுத்தளிக்க ஏற்பாடு செய்தான். தேவாரப் பண்களுக்கு அவள் வகுத்தளித்த கட்டளை அமைப்பை 10 செய்யுள்களில் உமாபதி சிவாசாரியார் திருமுறைகண்ட புராணத்துள் சொல்லியுள்ளார். சம்பந்தர் காலத்துக்குப்பின் பண்ணறிவு மறைந்து போயிற்று. ஆனால் பாணர்குலப் பெண் ஒருத்தி அவ்வறிவைப் பெற்றிருந்தாள். ஆகவே அவள் மூலம் பண்களும் பாடும் முறைமையும் வகுத்தளிக்கப்பட்டது-(17). திருநீலகண்ட யாழ்ப்பாணர் 63 சைவ நாயன்மாரில் ஒருவர் ஆவார்.

தமிழிசை மாளிகை:

            தமிழிசை என்ற பெரு மாளிகையின் நான்கு தூண்களில் சிலப்பதிகாரம் முதல்தூண் ஆகும். இந்நூல் தமிழ் நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டின் அனைத்து இசைக்கும் ஆணிவேராகவும், தமிழிசை மாளிகையைத் தாங்கும் முதல்பெருந்தூண் ஆகவும் உள்ளது. இந்நூல் தோன்றியபோது இந்தியாவில் வேறு இசை எதுவும் இல்லை. சிலப்பதிகார இசை மறைந்துபோக, ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின்(கிபி. 7ஆம் நூற்றாண்டு) திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வருகிறார். அவருடைய இசை தெய்வ இசையாக ஆகிறது. இவருக்குத் தாளமும் பக்கவாத்தியமும் நன்முறையில் அமைந்து ஊர்தோறும், வீதிதோறும், இல்லந்தோறும் அவ்விசை முழங்குமாறு அமைகிறது. இவ்விசை இரண்டாவது பெரியதூண் ஆகும்.

            அவருக்குப்பின் ஏழு நூற்றாண்டுகள் கழித்து வந்த அருணகிரி நாதர் அவ்விசையில் தாளத்தை முதன்மையானதாக ஆக்கி நாடெங்கும் தாளத்தோடு தெய்வ இசையை ஒலிக்கச்செய்கிறார். தமிழிசை மாளிகையின் மூன்றாவது தூணாக இவர் இருந்துள்ளார். அருணகிரி நாதருக்கு இரு நூற்றாண்டுகள் கழித்து வந்த முத்துத்தாண்டவர் தெய்வ இசையைக் கீர்த்தன வடிவமாக்கி இசை மாளிகையின் நான்காவது தூணாகிறார். இவ்விதமாக நான்கு பெருந்தூண்களால் அமைந்ததுதான் தமிழிசை மாளிகையாகும். பிறர் அனைவரும் இந்த மண்டபத்தை அழகு படுத்த வந்தவர்களே ஆவர். தமிழிசைக்கு இலக்கணம் அமைத்தவர்கள் தூணாக ஆக மாட்டார்கள். அவர்கள் அலங்காரம் செய்தவர்களே ஆவர். தியாகராசசுவாமி போன்றவர்கள் இந்த மண்டபத்தில் அமர்ந்து சிறப்பாக இசை வினிகை நடத்தியவர்கள். அதனால் மண்டபம் புகழ்பெற்றது உண்மை. ஆனால் மண்டபத்தை உருவாக்குவதில் அவர் பங்கு எதுவும் இல்லை-(18).

மேளக்காரரும், ஓதுவாரும்:

            பிற்காலச்சோழர்காலத்தில் கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இராசராசன் பெரியகோயிலைக்கட்டியபோது அக்கோயிலில் திருப்பதியம் ஓதுதல், பண்ணுக்கு நாட்டியமாடுதல், இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய பணிகளுக்காக சோழ நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பெண்களும் ஆண்களும் குடும்பம், குடும்பமாக கோயிலுக்கு அருகே குடியேற்றப் பட்டார்கள். இதில் திருப்பதியம் ஓதுவோர் முதலில் சோழர் காலத்தில் பிடாரர் எனப்பட்டனர், பின்னர் இராசராசன் காலத்தில் அவர்கள் ஓதுவார் ஆனார்கள். தென்னிந்தியக் கல்வெட்டுகள் இரண்டாம் தொகுதியின் எண் 65ஆம் கல்வெட்டில் திருப்பதியம் விண்ணப்பம் செய்பவர்(பிடாரர்) 48 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன் 66ஆம் கல்வெட்டில் நாட்டியம் ஆடுகிற தளிச்சேரிப்பெண்டுகள் 400 பேர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருடைய ஊர்ப்பெயரும், இயற்பெயரும் கல்வெட்டில் உள்ளது. அவர்களின் ஆடவர்கள் இசைக்கருவிகளைக்கொண்டு இசை வாசித்தார்கள். நாயனக்காரர், நாகசுரக்காரர் எனப்பட்ட அவர்களே மேளக்காரர் எனப்பட்டனர். மேளக்காரக் குடும்பங்களில் இருந்த பெண்டிர் தளிப்பெண்டுகள் என்ற பெயரில் நாட்டியம் ஆட, அவர்களுடைய கணவன்மார் அதே கோயிலில் நாகசுரம் போன்ற இசைக்கருவிகளை வாசித்தனர். இந்த மேளக்காரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் இசை மாளிகையின் நான்காவது தூணாக விளங்கிய முத்துத்தாண்டவர் ஆவார். ஆகவே இந்த மேளக்காரர்கள் தமிழிசையை பாதுகாத்து வந்தவர்கள் ஆவர்.

            இரண்டாம் இராசராசன்(கி.பி. 1150-1163) தான் கட்டிய தாராசுரம் என்ற பெருங்கோயிலில் பெரியபுராண நாயன்மார் 63 பேருக்கும், ஓதுவார் 108 பேருக்கும் சிலை அமைத்து அதில் அவர்களின் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் பொறித்து வைத்துள்ளான். அன்று திருப்பதியம் விண்ணப்பித்தல் எனப்படும் ஓதும் பணி மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்(கி.பி. 825-850) காலத்தில் திருப்பதிகம் விண்ணப்பித்தலுக்கு திருவல்லம் என்ற தலத்தில் நிபந்தம் விதித்த செய்தி கல்வெட்டில் உள்ளது. சம்பந்தர் தனது தேவாரப்பாடலில்(3:49:1), தேவாரம் விண்ணப்பிப்பவர்கள் காதாலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுபவர்கள் என்கிறார். ஆக சம்பந்தர் காலத்திலிருந்து தனிப்பட்ட ஓதுபவர்கள் இருந்துள்ளார்கள். ஆகவே இந்த மேளக்காரர், ஓதுவார் ஆகியவர்கள் 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டவர்கள். இவர்களே தமிழிசையை அன்றுமுதல் 19ஆம் நூற்றாண்டு வரை பாதுகாத்து வந்தவர்கள் ஆவர்-(19).

தமிழும் பிற மொழி சாகித்தியங்களும்:

            தியாகையருக்குப் பின்னரே தமிழகத்தில் பிற மொழி சாகித்தியங்கள் பெருகின. அதில் பாவமும், பொருளும் இல்லாது வெற்றுச்சுரம் பாடும் பழக்கம் உருவானது. மேலும் பொருளுணர்வும் பாவவுணர்வும் இல்லாது தங்களுக்குத் தெரியாத தெலுங்கைப் பாடியும் கேட்டும் வந்த பாகவதர்களுக்கும், அவையோருக்கும் நாளடைவில் இசையுணர்வும் இல்லாது போனது. முத்துத்தாண்டவர், பாபநாச முதலியார், சீகாழி அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை ஆகிய நால்வரும் தியாகையருக்கு முற்பட்ட மிகச்சிறந்த சாகித்திய கர்த்தாக்கள். நந்தனார் சரித்திரக் கீர்த்தனம் பாடிய கோபாலகிருட்டிண பாரதியார் தியாகையருக்குச் சம காலத்தவர். இவரும் ஒப்பற்ற சாகித்திய கர்த்தரும், இசைவாணரும் ஆவார். இந்த ஐவரோடு சேர்த்துச்சொல்லத்தக்கவர் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர். இவர்கள் ஆறுபேருடைய சாகித்தியங்கள் தமிழில்தான் உள்ளன.

            இவையாவும் நெஞ்சை உருக்குவன. ஆனால் இவர்களின் பாடல்களைப் பாடும் இசைவாணர்கள் ஒரேதர வடிவத்தோடும், ஒரு அர்ப்பணிப்பு உள்ளத்தோடும் பாடுவதில்லை. தியாகையர் பாடல்களுக்கு ஒரு நிரந்தரத் தரவடிவம் தரப்பட்டு ஒரே நிலையோடு அவை பாடப்படுவதால் அது மனதை நெகிழ்விக்கிறது. தியாகையர் கீர்த்தனங்களுக்கு பிற்காலத்தார் அளித்துள்ள பெருஞ்சிறப்பு அதுவாகும். அதே போன்ற சிறப்பை மேலே குறிப்பிட்ட ஆறுபேரின் பாடல்களுக்கும் அளித்து, அவைகளுக்கு ஒரு நிரந்தரத் தரவடிவம் கொடுத்து ஒரு அர்ப்பணிப்பு உள்ளத்தோடு இசைவாணர்கள் அவைகளைப் பாடும்பொழுது அவை நெஞ்சை உருக்கும். அப்பொழுதான் தமிழ்மொழியில் உள்ள கர்நாடக இசை தலையெடுக்கும்.

            ஆங்கிலேயருக்கு பிந்தைய கல்விமுறையும், இன்றைய ஆங்கில வழிக்கல்வியும் கல்வியில் இசையை இல்லாது செய்துவிட்டது. பியானோ இசையே உயர்ந்தது என்ற பொய்யான உணர்வை உருவாக்கியுள்ளது. இரண்டாவதாக தியாகராய சுவாமிகளுக்குப்பின் வந்த பிராமணர்கள் தங்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறிதும் தெரியாத தெலுங்குமொழிப் பாடல்களையே பாடவேண்டும் என்று செயல்பட்டு தமிழ்ப்பாட்டுகளை நிர்மூலம் செய்தார்கள். கோயில்களில் பொதுச்சொத்தாக இருந்த பக்திமிகுந்த தமிழ்ப்பாட்டுகள் பாமரமக்களுக்கு பெரு விருந்தாக இருந்தன. இவர்கள் சங்கீத சபைகளை உருவாக்கி பணம்கொடுத்து சீட்டு வாங்கி சங்கீதம் கேட்கிற நிலையை உருவாக்கினார்கள். பணம் என்றால் உயர்வு, அது இல்லை என்றால் தாழ்வு என்கிற சமூகநிலை கோயில்களில் பாடப்படும் பக்திப் பாடல்களை தரம் குறைவானதாக ஆக்கியது.

            19ஆம் நூற்றாண்டுவரை இசை குறித்து அறியாத பிராமணர்களில் சிலர், இசைக்கு நாங்கள்தான் மூலவர்கள், அதன் பிதாகமர்கள் நாங்கள்தான் எனவும், இசை என்பது தெலுங்கு மொழியிலும் சமற்கிருத மொழியிலும் தான் இருக்கிறது எனவும் தமிழ் மொழி இசைக்கு ஏற்றமொழி இல்லை எனவும் பல்வேறு பொய்க்கதைகளைக் கூறிவந்தார்கள். இன்றும்கூட அவைகளைக்கூறும் முட்டாள்களும் சுயநலமிகளும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைமை இன்று மாறிவிட்டது. தமிழ் நாட்டில் வாழ்ந்த தியாகையர் அவர்கள் தமிழ் மேளக்காரரிடமிருந்து தமிழ் இசையைக் கற்றுக்கொண்டு அதனைத் தன் தாய்மொழியாம் தெலுங்கில் பாடினார் என்பதும் அது ஒரு தெய்வீக சங்கீதமாக ஆகியது என்பதும் வரலாறு. அதுபோன்றே சங்ககாலத்தில் இருந்து தமிழ் மொழி இசையின் உருவாக்கத்தில், அதன் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளது என்பதும் இந்திய இசை என்பதே இசைத்தமிழ்தான் என்பதும் வரலாறு.

            2000 ஆண்டுகளுக்கும் மேலாக இசையின் மூலஊற்றாகவும், அதன் பல்வேறு வகைபட்ட பரிணாம வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருந்த தமிழ் மொழியை, இசைக்கு ஏற்ற மொழி இல்லை என்று சொல்லும் அளவு இன்று இசையில் நுழைந்த சிலர் துணிந்தார்கள் எனில் அவர்கள் சிறிதுகூட மனட்சாட்சியோ, நேர்மையோ இல்லாதவர்கள் என்பதில் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. கீர்த்தனங்கள், பாடுவதற்கும் சுவைத்துக் கேட்பதற்கும் உருகி நெஞ்சைப்பறி கொடுப்பதற்கும் உருவானவை. அவை சுரவரிசையைக் காட்டுவதற்காகவும், சொந்தத் திறமையை கேட்போர் மெச்சும்படி காட்டுவதற்காகவும் உருவாக்கப்படவில்லை. ஆரம்ப வகுப்புகளில் கணக்குப்போட கணக்கு வாய்ப்பாட்டை சிறுவன் படிப்பான். அவன் வளர்ந்து, மேல்வகுப்புக்கு வந்து கணக்கு போடும்போது கணக்கு வாய்ப்பாட்டை ஆரம்பத்தில் இருந்து சொல்லிக்கொண்டிருப்பதில்லை. நமது சங்கீத வித்துவான்கள் அவையோர் முன் சுரம் பாடுவது என்பது வளர்ந்த பின்னும் கணக்கு வாய்ப்பாட்டை ஒப்பித்துக்கொண்டிருப்பது போலத்தான் ஆகும். சுரம் பாடுவது என்பது பாடகர் தனித்துத் தன் பயிற்சிக்காகச் செய்வது. அதனை மேடையில் செய்வது என்பது சுயவிளம்பரம் என்பதோடு அது மக்களுக்கும், சங்கீதத்துக்கும் செய்யும் துரோகம் ஆகும்-(20).

            தமிழ் இசை இலக்கியம், தமிழ் இசை இலக்கணம் ஆகியன குறித்து இதுவரை நாம் பார்த்த செய்திகளில் இருந்து கீழ்கண்ட முடிவுகளை அடைகிறோம். தமிழிசை என்பது 2000 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற மரபை உடையது; சங்க காலத்திலேயே இசைத்தமிழும், நாட்டியமும் உன்னதமான சாத்திர நெறிகளாக வளர்ந்து பல புகழ்பெற்ற நூல்களைப் பெற்றிருந்தன; தமிழில் இருந்த சங்ககால இசை, நாட்டிய நூல்கள் அனைத்தும் அழிந்துபோயின; இந்தியாவின் ஆதி இசை என்பது தமிழிசையே; சிலப்பதிகாரகால இசையும், திருஞானசம்பந்தர் இசையும், அருணகிரிநாதர் இசையும், முத்துத்தாண்டவரின்கீர்த்தன இசையும் தமிழிசை மாளிகையின் நான்கு தூண்கள்; கர்நாடக சங்கீதம் என்பதும் தமிழிசையே; பரத நாட்டிய சாத்திரம் முதலான வடமொழி நூல்கள் தமிழ் நூலின் மொழிபெயர்ப்பே; வடமொழி இசை இலக்கண நூல்கள் பெரும்பாலும் தமிழ் சாகித்தியங்களைக்கொண்டு கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப்பின் உருவானவை; இசை முழுமை பெற பாவமும், பொருளும் வேண்டும்; தமிழகமக்களுக்குத் தாய்மொழியான தமிழ்ப் பாடல்களில்தான் அது சாத்தியம்.

பண்டைய தமிழகத்தில் மெய்யியலும் இசையும்:

            பண்டையத்தமிழக மெய்யியல் குறித்து மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு என்ற எனது கட்டுரை கீற்று இணையதளத்தில் முன்பே வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபின் வெளிப்பாடான பழந்தமிழக பொருள்முதல்வாத மெய்யியல்தான் இந்திய பொருள்முதல்வாத மெய்யியலின் அடிப்படையாக இருந்தது என்பதை அக்கட்டுரை உறுதிப்படுத்தியுள்ளது. அதுபோன்றே பண்டைய இசைத்தமிழ் குறித்து இங்கு தரப்பட்ட தரவுகள், பண்டைய இசைத்தமிழ்தான் ஆதி இந்திய இசையாக இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறது. சாங்கியம், பூதவாதம் என்கிற உலகாயதம், சிறப்பியம் என்கிற வைசேடிகம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல்கள் அனைத்தும் தமிழகத்தில் உருவானவைகளாகும். அதற்கேற்ற ஒரு சமூகச்சூழல் தமிழகத்தில் மிக நீண்ட நெடிய காலம் இருந்து வந்தது. அதுபோன்ற ஒரு சமூகச்சூழல் வட இந்தியாவில் இருக்கவில்லை.

            தமிழகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் ஒரு உன்னத நிலையை அடைந்திருந்தது. இந்திய மெய்யியலில் மிகப்பெருந் தாக்கத்தைத் தந்த சாங்கியம் என்கிற எண்ணியம் தமிழகத்தின் தொல்கபிலரால் கி.மு. 750 வாக்கில் உருவாக்கப்பட்டதாகும். இயக்கம், வெளி, காலம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் என அன்றே தொல்கபிலர் கூறியுள்ளார். இக்கருத்து மூலச்சிறப்புடைய ஒரு கருத்தாகும். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்கால உலகப்புகழ்பெற்ற ஸ்டீவன் ஆக்கிங்சு(STEPHEN HANKINGS) போன்றவர்கள் கூறுகிற வெளி-காலம், அண்டவியல் பற்றிய கருத்துக்களைத் தொல்காப்பியரால் சொல்ல முடிந்துள்ளது. மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு தனது அடிப்படையாகத் தூய, கலப்பற்ற பொருள்முதல்வாதச் சிந்தனையைக் கொண்டு, மிக நீண்ட நெடும் காலமாக பல்வேறு தத்துவார்த்த அறிவியல் ஆய்விலும், வெளி-காலம் பற்றிய ஆய்விலும் ஈடுபட்டு வந்ததே அவர்களது வெற்றிக்கு காரணமாகும். பண்டைய பொருள்முதல்வாத நூல்கள் அனைத்தும் அழிந்து போயின என்பதால் அவ்வாய்வுகள் குறித்தப் புரிதல்கள் நம்மிடையே இல்லை. வெளி, காலம், இயக்கம், அண்டம் குறித்துத் தொல்கபிலரும், தொல்காப்பியரும் கூறிய கருத்துக்கள் தமிழருக்குப் பெருமை தருபவை.

            மெய்யியலில் மட்டுமல்ல பல்வேறு அறிவியல், தொழில்நுட்பத் துறைகளிலும் பண்டைய தமிழர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருந்தார்கள் எனலாம். மெய்யியல் என்பது பல துறைகளையும் உள்ளடக்கியது ஆகும். மெய்யியலில் உன்னத நிலையை அடைந்திருந்தனர் எனில் பிற அறிவியல் தொழிநுட்பத் துறைகளிலும் ஒரு உயர் நிலையை அவர்கள் அடைந்திருக்க வேண்டும். பண்டைய நூல்கள் அனைத்தும் அழிந்து போனதால் அவை பற்றிய தரவுகள் நம்மிடையே இல்லாது போய்விட்டது. சான்றாக இசையிலும் தமிழர்கள் சங்ககாலத்திலேயே ஒரு உன்னத நிலையை அடைந்திருந்தார்கள். இசைத்தமிழ் அன்றே சாத்திர நெறிப்பட்ட ஒரு வளர்ச்சிபெற்ற கலையாக ஆகி இருந்தது. இதனை இசைத்தமிழ் குறித்த எனது கட்டுரை மு. அருணாசலம் அவர்களின் இரு நூல்களைக்கொண்டு சுருக்கமாக விளக்கியுள்ளது. இயல், இசை, நாட்டியம் ஆகிய மூன்றும் கொண்ட தமிழ் என்ற பொருளில் தமிழ் அன்றே முத்தமிழாக அழைக்கப்பட்டு வந்தது. மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவை குறித்துச் சொல்ல இயலவில்லை

            இயல் எனச் சொல்லப்பட்ட சங்ககால இலக்கியம் இன்று ஒரு செவ்விலக்கியமாக உலக அறிஞர்கள் அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இயல் அன்று ஒரு உன்னத நிலையை அடைந்திருந்தது என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்றே இசை, நாட்டியம் ஆகிய இரண்டும் உன்னத நிலையை அடைந்திருந்தது எனலாம். இசை ஒரு உன்னத நிலையை அடைந்திருந்தது என்பதை முன்பே குறிப்பிட்டோம். பரதரின் பண்டைய நாட்டிய நூலான ‘நாடகத்தமிழ்’ அன்றே நாட்டியம் ஒரு உயர்நிலை அடைந்திருந்தது என்பதை உறுதி செய்கிறது. வடமொழியின் பரத நாட்டிய சாத்திரம் தமிழ் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வழிநூல் என்பதை முன்பே நிறுவியுள்ளோம். ஆகவே இயல், இசை, நாட்டியம் ஆகிய மூன்றும் ஒரு உன்னத நிலையை அடைந்த நிலையில்தான் இம்மூன்றையும் கொண்டிருந்த தமிழ் பண்டைய காலத்தில் முத்தமிழ் என அழைக்கப்பட்டது எனலாம். இசை குறித்துத் தொல்காப்பியம் கூறும் வனப்பு, வண்ணம், பண்ணத்தி போன்றவைகளும், சிலப்பதிகாரத்தின் இசை பற்றிய பல செய்திகளும் இன்று அறிய இயலா நிலையை அடைந்துவிட்டன. பரிபாடலைப்பாடும் பண்டைய முறைமையை அறிய இயலவில்லை. இசையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. அதுபோன்றே மெய்யியல் முதலான பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டு, அவை குறித்து எதுவும் அறிய இயலாத ஒரு நிலை பிற்கால தமிழகத்தில் ஏற்பட்டுவிட்டது எனலாம்.

                        சங்ககாலம் குறித்துதொடர்ந்து நடத்தப்படும் ஆய்வுகள் தான் பழந்தமிழர்களின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தமுடியும். தமிழ்ச் சமூகம் இன்று ஒரு தன்னம்பிக்கை அற்ற சமூகமாக மாறிப்போயுள்ளது. இந்நிலை மாறுவதற்கு, பழந்தமிழர்களின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துவது ஒரு அவசியத்தேவையாகிறது. அதனை உணர்ந்து தமிழ் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு நமது பழந்தமிழர்களின் பல்வேறு பரிமாணங்களை, அவர்களின் சாதனைகளை, அவர்களது பெருமைமிகு வரலாற்றை வெளிப்படுத்தி இன்றைய தமிழ் மக்களின் தன்னம்பிகையை வளர்க்கப் பாடுபடட்டும்.

பார்வை:

15. தமிழ் இசை இலக்கண வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்:546-556.

16. “   “ பக்:535-540.

17. “   “ பக்:592-593.

18. தமிழ் இசை இலக்கிய வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்:100-101.

19. தமிழ் இசை இலக்கண வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்:593-608.

20. “    “ பக்:483-501. 

- கணியன் பாலன், ஈரோடு

Pin It