பிரியாணிக்கு நல்ல மணம் கொடுப்பது நல்ல தரமான பட்டைதான். இலங்கைதான் பட்டையின் தாயகம். இதனை இலங்கை மக்கள், லவங்கம் என்று சொல்கின்றனர். அங்கு விளையும் பட்டைதான் நல்ல தரத்துடனும், மிகுந்த மணத்துடனும் இருக்கும். சீனாவில் விளையும் பட்டையின் பெயர் கச்சியா (cassia). இது இலங்கைப் பட்டையைவிட கொஞ்சம் தடிமனாக இருக்கும். மணமும் தரமும் இலங்கைப் பட்டையை விட கம்மி.

cinnamomum_verum_300உலகம் முழுவதும் அடிக்கடி பயன்படுத்தும் வாசனை/நறுமணப் பொருட்களில் ஒன்று, பட்டை என நம் தமிழக மக்கள் அழைக்கும் லவங்கப்பட்டை. இதனை லேசாக ஒடித்தாலே போதும்... அருகில் உள்ளவர்கள் அதன் மூக்கைத் துளைக்கும் மணத்தை அறியமுடியும். பட்டை பணமாகவும், பாலியல் உணர்வு தரும் பொருளாகவும் கூட பயன்பட்டதாம். இதன் தாயகம் நம் இந்தியாவின் தெற்கே நீர்த்துளி போல தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கை தான்! அதனால்தான் இதன் அறிவியல் பெயரிலேயே இலங்கை ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

இலவங்கப் பட்டையின் தாவரவியல் பெயர், சின்னமோமம் சிலானிகம் (Cinnamomum zeylanicum) என்றும் சிலான் பட்டை/ உண்மையான நயம் பட்டை என்றும், சின்னமோமம் வேறம் (Cinnamomum verum) என்றும் சொல்லப்படுகிறது! இந்த அறிவியல் பெயர் ஹீப்ரு/அரபியிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில், அரபியில், அமோமோன் (amomon) என்பதற்கு, வாசனை மிகுந்த நறுமணத் தாவரம் என்பது பொருளாகும். மேலும் சின்னமன்(cinnamon) என்ற சொல், கிரேக்க மொழியில் நறுமணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்தும் வந்திருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள் பட்டையைப் பயன்படுத்தினராம்.

 பட்டை கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் பிரபலமான நறுமணப் பொருளாகும். இதற்கு மனதைக் கவரும் மெலிதான மணமும், யாவரும் விரும்பும் லேசான இனிப்புச் சுவையும் உண்டு. பட்டை எனப்படும் இலவங்கப்பட்டை, இலவங்க மரத்தின் உள்பட்டைப் பகுதியே..! இது இந்தியாவின் பல பகுதிகளில் விளைகிறது. இதனை இந்தியில் தார்ச்சினி என்றும், பஞ்சாபியில் தாளிச்சினி என்றும், கன்னடத்தில் இலவங்கப்பட்டை என்றும், சமஸ்கிருதத்தில் தருஷீலா என்றும், தமிழில் சன்னா லவங்கப்பட்டை என்றும் அழைக்கின்றனர். இத்தாலியர்கள் லவங்கத்தை கனேல்லா(canella) என்று சொல்கின்றனர். இதற்கு இத்தாலிய மொழியில் சின்ன குழல்(Little tube) என்று பொருளாகும்.

 இலவங்கப் பட்டை விளையும் இடத்தைப் பொறுத்தே அதன் தரமும்,மணமும் இருக்கிறது. இலங்கை மற்றும் இந்துமாக்கடலில் உள்ள செய்செல்லே தீவிலும் விளையும் பட்டைதான் உலகிலேயே தரமானது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரையிலும் இது வளர்க்கப்படுகிறது. கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தின் அஞ்சனார்க்கண்டி ஊரில் 248 ஏக்கர் நிலத்தில் பட்டை விளைகிறது. இதுதான் உலகில் அதிகமாக பட்டை விளைவிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும், மேலும் இதுதான் ஆசியாவில் பட்டை விளையும் மிகப் பழமையான தோட்டமும் ஆகும். இலவங்கப்பட்டை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரங்களிலும், கர்நாடகத்திலும் விளைகிறது. இந்தியாவில் அதிகமான இலவங்கப்பட்டை பயன்படுத்துவதால், விளையும் பட்டை போதாமல், இறக்குமதியும் செய்யப்படுகிறது. இப்போது பட்டை உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.

உலகின் மிகப் பழமையான நறுமணப் பொருள்களில் லவங்கப் பட்டையும் ஒன்று. சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே, இதனைப் பற்றி சீன எழுத்துகளிலும், பைபிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைபிளில் மோசஸ் பட்டையைப் பயன்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. எகிப்தியர்கள் பட்டையை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தனராம். எகிப்தியர்கள், லவங்கப் பட்டையை மருந்தாக மட்டுமின்றி, உணவுப் பொருளாகவும், இறந்த உடல்களைப் பதப்படுத்தும் அற்புத பொருளாகவும் பயன்படுத்தினர். அக்காலத்தில் லவங்கப்பட்டை, தங்கம் போல் மதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ரோமானியர்களும் கூட, லவங்கப் பட்டையை முக்கியமான புனிதப் பொருளாகவே கருதினர். மனிதர்கள் இறந்தபின், எரியூட்டும்போது இலவங்கத்தையும் சேர்த்தே எரித்தனர். ரோமப் பேரரசர்

நீரோ ,கி.பி 65 ம் ஆண்டில் ,தன் மனைவி போப்பயாவைக் கொலை செய்தபின், அவரின் உயிருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் முகமாகவும், தனது செயலுக்கும் வருத்தம் தெரிவிக்கவும், மனைவியின் உடலை எரியூட்ட ஓர் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்த லவங்கத்தைப் போட்டு எரியூட்டினாராம்.

பிளேக் நோய் பாதிப்பு

 சில நாடுகள் 11 ம் நூற்றாண்டில், பட்டை போன்ற நறுமணப் பொருள்களை பணமாகப் பயன்படுத்தினர். ஐரோப்பாவில், 14 ம் நூற்றாண்டில், பிளேக் நோய் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாய் இறந்தனர். சுமார் 30-60 % மக்கள்தொகை காலியாயிற்று. அப்போது, நோயாளி இருக்கும் அறைகளில், பஞ்சில் பட்டை மற்றும் கிராம்பை நனைத்து வைப்பார்களாம். மேலும் பட்டையை எரித்து அந்த மணத்தை நுகரச் செய்வார்களாம். பின்னர் 15, 16ம் நூற்றாண்டுகளில் மேலை நாட்டினர் பட்டையைத் தேடிப் பயணம் மேற்கொண்டனர். மத்தியகாலத்தில், சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே, பயன்படுத்தப்படும் பொருளாக லவங்கம் இருந்தது. அப்போது ஒருவரிடம் எவ்வளவு நறுமணப் பொருள் உள்ளது என்பதைக் கணக்கிட்டே, அவரின் சமூக மதிப்பீடு செய்யப்படுமாம்..!

கி.பி முதலாம் நூற்றாண்டிலேயே, இயற்கையியல் தத்துவஞானி, வரலாற்றியலாளர் பிளினி, பட்டையைப் பற்றி தெளிவாக எழுதி வைத்துள்ளார். அந்தக் காலத்திலேயே, 350 கிராம் லவங்கப் பட்டைக்கு 5 கிலோ வெள்ளிக்கு இணையான மதிப்பு /லவங்கத்தை விட 15 மடங்கு எடையுள்ள வெள்ளி கொடுக்கப்பட்டே லவங்கம் பெறப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். மத்திய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள், லவங்கப் பட்டையை மருந்தாகவே பயன்படுத்தினர். இதனை இருமல், தொண்டைக் கமறல், தொண்டைப்புண் போன்றவற்றிக்கும் உபயோகித்தனர்.

 லவங்கம் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான உறவையும் வாணிபத் தொடர்பையும் ஏற்படுத்தும் பொருள்களில் ஒன்றாக இருந்தது. போர்த்துகீசியர்கள், இலவங்கம் விளையும் இலங்கையை, 15ம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடித்தனர். பின் லவங்கப் பட்டையின் ஆதிக்க நாடாகிய இலங்கையை, அதன் வாணிபத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்தனர். 17 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டச்சுக்காரர்களின் கை ஓங்கியது; இலங்கையை போர்த்துகீசியர்களிடமிருந்து பறித்துக் கொண்டனர். குறைந்த கூலி கொடுத்து பட்டையை அறுவடை செய்தனர். அதனால், பட்டை வாணிபம் டச்சுக்கரர்களின் கைக்கு மாறியது. அப்போது டச்சுக்காரர்கள்தான், உலகம் முழுக்க பட்டையை விற்கும்/விநியோகம் செய்யும் நபர்களாக இருந்தனர். அவர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பட்டை விளைவிக்கப்படும் பல இடங்களையும் கண்டுபிடித்தனர். அந்தப் பகுதியின் மன்னர்களை எல்லாம் மிரட்டி/ கையூட்டு தந்து அங்குள்ள பட்டை விவசாயத்தை எல்லாம் எரித்து அழித்தனர். இப்படித்தான், தங்களது முதாளித்துவ வாணிபத்தை தங்களிடம் மட்டும் தக்கவைத்துக் கொண்டனர்.

காலனியாதிக்கமும்.. இலவங்கத்தின் இறங்குமுகமும்..!

பிரிட்டிஷ் முடியாட்சி, 18 ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியா போன்ற பல நாடுகளை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. அத்துடன் இங்கிலாந்து அரசு 1795ல், இலங்கையைக் கைப்பற்றியது. பூக்களின் வெற்றி மொழியில், சின்னமோன்(Cinnamon) எனபதற்கு "என்னுடைய அதிர்ஷடம் உன்னால்"(My fortune is yours) என்ற பொருளாகும். லவங்கப் பட்டையின் போக்குவரத்து, கி.பி 1796லிருந்து பிரிட்டிஷ் முடியாட்சிக்கு கட்டுப்பட வேண்டியதாகி விட்டது. உலகிலுள்ள அனைத்துப் பொருள்களின் வாணிபமும், போக்குவரத்தும் நாடுகளின் போர் மற்றும் தொடர்பைப் பொறுத்தே அமைந்தது. அதன் பின், லவங்க வாணிகத்தின் மதிப்பு குறைந்து படுத்து விட்டது. ஏனெனில், லவங்கம் உலகின் மற்ற பகுதிகளிலும் பயிரிடப் பட்டதுதான். ஜாவா, சுமத்திரா, போர்னியோ மற்றும் மொரீஷியஸ் போன்ற இடங்களில் லவங்கம் பயிரிடப்பட்டது. இப்போது தென்னமெரிக்கா, வியட்னாம், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற இடங்களிலும் வளர்க்கப்படுகிறது.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It