பிரபல முன்னாள் Hollywood நடிகை 'Audrey Hepburn'. இவர் பிரபல பிரிட்டிஷ் நடிகையும், மனிதாபிமானமும் மிக்கவர். இவர் 1929 ஆம் வருடம், மே மாதம் 4 ஆம் தேதி,  பெல்ஜியத்தில் பிறந்து, பாலே நடனம் கற்றுக் கொண்டு  1948 ல் லண்டனுக்கு குடி பெயர்ந்தார். Roman Holiday (1953), Ondine (1954), The Nun's story (1959), My Fair Lady (1964) போன்ற சுமார் 28 படங்களிலும், Gregory Peck, Rex Harrison, Peter O'Toole போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இரண்டாம் உலக போரில் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும், தாயார்களுக்கும் அவசரகால மருத்துவ உதவியும், உணவும் அளிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர நிதி (UNICEF) 1946 ஆம் ஆண்டு டிசம்பர், 11 ல் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகில் சுமார் 150 நாடுகளைச் சார்ந்த குழந்தைகளுக்கு சுத்தமான குடி நீர், ஆரோக்கியமான உணவு, கல்வி, மருந்துகள் மற்றும் அவசர நோய்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை UNICEF நிறுவனம் அளிக்கிறது.

Audrey Hepburn, UNICEF நிறுவனத்துடன் 1950 முதல் இணைந்து பணியாற்றினார். 1988 முதல் 1992 ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளில் மிகவும் பின் தங்கிய மக்களுக்காகவும், அவர்களின் குழந்தைகள் நலத்திற்காகவும் UNICEF நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். எத்தியோப்பியா, துருக்கி, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, சூடான், பங்களா தேஷ், வியட் நாம், சோமாலியா ஆகிய நாடுகளுக்கு நேரில் சென்று உதவியிருக்கிறார். UNICEF இன் நல்லெண்ணத் தூதுவராகப் பணியாற்றியதற்காக 1992 ல் 'Presidential Medal of Freedom' என்ற பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்.

இவரிடம் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று ஒருமுறை கேட்டபோது, சாம் லீவென்சன் (Sam Levenson) என்ற கவிஞரின் 'காலத்தால் அழியாத அழகுக் குறிப்புகள்' (Time Tested Beauty Tips) என்ற அருமையான கவிதையைக் குறிப்பிடுகிறார்.

"கவர்ச்சியான இதழ்களுக்கு அன்பான சொற்களைப் பேசுங்கள்.

அழகிய கண்களுக்கு பிறரிடம் உள்ள நல்லதையே பாருங்கள்.

மெல்லிய உடலுக்கு பசியோடிருப்பவர்களுடன் உங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அழகிய கூந்தலுக்கு ஒரு குழந்தை அதன் விரல்களை உங்கள் கூந்தலின் மேல் தினம் ஒரு முறை படர விடட்டும்.

நிதானத்துடன் கூடிய தன்னம்பிக்கைக்கு நான் தனியாள் அல்ல என்ற எண்ணத் தெளிவுடன் நட" என்று கூறுகிறார்.

ஒரு அழகிய நடிகை காலத்தால் அழியும் புற அழகைப் பற்றியும் அழகு சாதனங்களைப் பற்றியும் குறிப்பிடவில்லை.  எவ்வளவு தெளிந்த மனதுடன் அழகின் ரகசியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பதை நினைந்து பெருமிதம் கொள்வோம். இவர் 1993 ல் மறைந்து விட்டார். ஆனால் இவர் நினைவுகள் மறையாது.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It