“உண்மையாகவே ஒரு உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தை திறந்து வைப்பதாய் இருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்தி சாம்பலாக்கிவிட்டுப் பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றி பேசத் தொடங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்து விட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிட கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுற தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.''
– ஈரோட்டில் 1948இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார், திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை
தலித் உடைமை வேண்டும்; உடல் வேண்டாம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ள பெரிய காப்பான்குளம் என்ற கிராமத்தில், தலித்துகள் இறந்தவர்களை தங்கள் வீடுகளின் முற்றத்திலேயே புதைத்துக் கொள்ள வேண்டும். பொது சுடுகாட்டில் தலித்துகளின் பிணங்களைப் புதைக்க அனுமதி இல்லாததால், கடந்த 20 ஆண்டுகளாக இச்சேரிப் பகுதியில் ஏறக்குறைய 100 பிணங்கள் வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டும், 50 பிணங்கள் சேரிக்குள்ளேயே எரிக்கப்பட்டும் உள்ளன. தாங்கள் பிணங்களுடனேயே வாழப் பழகிவிட்டதாக இச்சேரி மக்கள் கூறுகின்றனர். “சாதி இந்துக்கள் நாங்கள் வாழும் சேரிப்பகுதியில் இரண்டு ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதால்தான், எங்களுக்கு சுடுகாடு இல்லாமல் போய்விட்டது. எங்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை'' என்கிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர். மேலும், இக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் (சாதி இந்து) இங்கு அமைந்துள்ள கோயிலின் அருகில், அரசுப் பணத்தில் ஒரு சமூகக் கூடத்தை கட்ட ஏற்பாடு செய்து, ஏறக்குறைய முக்கால்வாசி பணிகள் முடிந்து விட்டன (படம் பார்க்க பக் : 18). இந்நிலையில் இக்கோயிலின் அறங்காவலர் நீதிமன்றத்தில், மேற்கொண்டு இச்சமூகக் கூடத்தை கட்டக் கூடாது என்று மனு செய்து தடை உத்தரவு ஒன்றை வாங்கியிருக்கிறார். அதற்கு அவர் நீதி (சாதி) மன்றத்தில் சொன்ன காரணம் : “அனைத்துப் பிரிவு மக்களுக்கும் இச்சமூகக் கூடம் கட்டப்படுகிறது. தலித்துகளுக்கு இதில் அனுமதி அளிக்கக் கூடாது.'' இக்கோயிலில் தலித்துகளுக்கு இன்றுவரை அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது ("பிரண்ட்லைன்', ஏப்ரல் 24, 2009).
தலித்துகளின் (சேரி) இடம் வேண்டும்; அவர்களுடைய உழைப்பு வேண்டும்; அவர்களுடைய பெண்கள் வேண்டும். இதிலெல்லாம் தீண்டாமை பார்க்க மாட்டான்கள். ஆனால் தலித்துகளுக்குரிய பிறப்புரிமையை (அய்ந்தறிவு விலங்குகளுக்கெல்லாம் இருப்பது போன்ற தெருவில் நடமாடும் உரிமை) மட்டும் மறுப்பான்களாம்! அரசுப் பணத்தில் கட்டப்படும் சமூகக் கூடத்தில், தலித்துகளுக்கு அனுமதி மறுக்க நீதிமன்றமே தடை வழங்குமாம்! இதே கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் அரசியலில் தலித் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் வேலை பார்ப்பவர்கள், சமூக உரிமை என்று வரும்போது மட்டும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள். இந்த முதன்மை முரண்பாடுதான் முதலில் தீர்த்துக் கட்டப்பட வேண்டும் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். ஆனால் அரசியல் அதிகாரம் பெற்ற பிறகு இதையெல்லாம் தீர்த்து விடலாம் என்று சமூகம் கனவு காண்கிறது. அரசியல் அதிகாரம் மட்டுமே ஒருபோதும் சமூக அதிகாரத்தையோ, சமூக சமத்துவத்தையோ பெற்றுத் தந்து விடாது. கோயிலில் நுழைய அனுமதி மறுக்கும் கோயிலைப் புறந்தள்ள தலித்துகள் பழக வேண்டும். அதே ஊரில் இருக்கும் முஸ்லிம்களோ, கிறித்துவர்களோ – இக்கோயிலை காலாணாவிற்குக்கூட மதிப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கென தனித்த பண்பாடும் – மதமும் இருக்கிறது. அதேபோல, தலித்துகளும் தனித்த பண்பாட்டுக்கும் பகுத்தறிவுக்கும் சொந்தக்காரர்கள். இத்தகு பரப்புரைகள் தீவிரமாகும்போதுதான் – தலித் சுயமரியாதையுடன் நிமிர்ந்து நிற்க முடியும்.
நீதிமன்றத்தை நாள்தோறும் அவமதிக்கும் அரசு
கையால் மலம் அள்ளுவது, பாதாள சாக்கடையில் இறங்குவது, உலர் கழிப்பிடங்களைப் பராமரிப்பது போன்றவை எல்லாம் தடை செய்யப்பட வேண்டும் என்று ஓராயிரம் முறை நீதிமன்றங்கள் தடை விதித்து விட்டன. ஆனாலும் நீதிமன்றத்தை அரசு அவமதித்தே வருகிறது. கையால் மலமள்ளுவதை ஒழிக்கப் பணியாற்றும் "சபாய் கரம்சாரி அந்தோலன்' சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனுவை அளித்துள்ளது. அதில், புதுக்கோட்டை, மதுரை, தேனி, சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டிணம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் 486 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இவர்கள் எல்லாருமே நகராட்சி மற்றும் மாநகராட்சியால் ஒப்பந்தக்காரர்களாக நியமிக்கப்பட்டவர்கள். இந்த 486 பேரும் பட்டியல் சாதியினரே என்றும் இந்த ஆய்வு மனு கூறுகிறது. கழிவுநீர் அகற்றும் பணிக்கும், அதை எந்திரமயமாக்குவதற்கும் தமிழக அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. ஆனால் அந்தப் பணியில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 21.4.2009). இதைச் செய்பவர்கள் எல்லாம் தலித்துகள் என்ற நிலையில், "அது அவர்களுடைய தலை எழுத்து' என்ற சிந்தனைதான் அரசு அதிகாரிகளிடம் மேலோங்கி நிற்குமே தவிர, நீதிமன்ற ஆணையெல்லாம் அவர்களுக்கு தூசுதான்!
உரக்கச் சொல்லுங்கள்
தலித் ஊராட்சித் தலைவர்களின் மாநாடு ஒன்று சென்னையில் 13.4.2009 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலித் தலைவரான பி. சின்னம்மாள், சாதி இந்துக்களால் தான் கடும் பாதிப்புகளை சந்திப்பதாகக் கூறி வெடித்தழுதார். இப்பஞ்சாயத்தின் துணைத் தலைவர் ஜெகதாபி சக்திவேல் (சாதி இந்து) சின்னம்மாவை நாற்காலியில் உட்காருவதற்குக்கூட அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து சின்னம்மாள் கொடுத்த புகாரும் காவல் துறையினரால் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில் பஞ்சாயத்தின் பொதுப் பணத்திலிருந்து துணைத் தலைவரின் ஒப்புதலோடு சில திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால் இத்திட்டங்களை நிறைவேற்றிய பிறகு இதற்குரிய பற்றுச் சீட்டுகள் சரிவர அளிக்கப்படவில்லை என்றும், பஞ்சாயத்து நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இறுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இம்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய கிருத்துதாசு காந்தி, “பஞ்சாயத்துத் தலைவர்கள் சட்ட ரீதியாக என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர, வேறு எந்த சாக்குபோக்குகளையும் சொல்லக் கூடாது. பல்வேறு தலித் தலைவர்கள் நாற்காலியில் உட்கார அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நாற்காலியில் அமருவதற்கு எந்த சிறப்பு அதிகாரங்களும் தேவையில்லை. சாதி இந்துக்கள் முன்பு நீங்கள் துணிவுடனும் ஆளுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் உங்களுக்கான கோரிக்கைகளை உரக்கச் சொல்லி பழகுங்கள். அப்பொழுதுதான் சாதி இந்துக்கள் உங்களை இழிவுபடுத்த முன்வர மாட்டார்கள்'' என்றார்.
கிராமங்களில் மட்டுமா வன்கொடுமை?
புகழ் பெற்ற எழுத்தாளர் கெயில் ஓம்வெத், அண்மையில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து ("தி வீக்') ஒரு பகுதி : “வன்கொடுமைகள் கிராமங்களில்தான் நடைபெறுகின்றன : சாதி மறுப்பு காதலர்கள் கொடூரமாக கொல்லப்படுவது; ஆதிக்க சாதியினரின் நிலங்களை உழ மறுப்பவர்களை நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவது; கரு கலையும் வரை கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றில் போலிஸ் எட்டி உதைப்பது என இத்தகைய காட்சிகள்தான் நம்முன் தோன்றும்; அல்லது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் வன்கொடுமைகள் – தேநீர்க் கடைகளில் தனிக்குவளை, பொதுக் கிணற்றில் நீர் எடுக்க, தெருவில் நடக்க, கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு போன்றவை. ஆனால் பள்ளிகளில் நடைபெறும் வன்கொடுமைகள் நம் கண்முன்னே வருவதில்லை. கடந்த கால இழிவுகளைத் துடைத்தெறிவதற்கான ஒரு பயிற்சிக் களமாக பள்ளிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியும் கல்வியில் கவனம் செலுத்தி இருக்கின்றனர். கல்வி நிறுவனங்களில் சாதி வேறுபாடுகளைக் களைவதே இடஒதுக்கீட்டின் நோக்கமாகும்.
இருப்பினும், ஒரு தலித் மாணவனோ, மாணவியோ ஒரு கல்வி நிறுவனத்தில் நுழையும்போது, வெளி உலகத்தில் தாங்கள் சந்தித்திராத சாதி இழிவுகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள் அவர்களை திட்டலாம்; "சரியாகப் படிக்கவில்லை' என்றோ, "பேசத் தெரியவில்லை' என்பதற்காகவோ, அவர்களை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி நிர்பந்திக்கப்படலாம்; அல்லது அவ்வாறு செய்ய மறுப்பவர்களை கொடூரமாக அடிக்கலாம். கல்லூரி அவர்களை "எஸ்.சி.' மாணவர்கள் என்று பழிக்கலாம். இத்தகைய பாகுபாடுகள், உயர் கல்வி நிறுவனங்களில்கூட நடக்கிறது. தலித்துகளால் செய்யப்பட்ட சத்துணவை மறுக்கும் சாதி இந்து மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தலித் மாணவர்களுக்கான சிறப்புத் திட்டங்களெல்லாம் வெறும் கோப்புகளிலேயே கிடக்கிறது. கல்விக்கான சாலை தங்க நாற்கரச் சாலை போன்றது அல்ல; தலித்துகளுக்கு பள்ளங்களும் தடைகளும் நிறைந்தே காணப்படுகின்றன.''