'இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையல்ல, உண்மைச் சம்பவங்களே' என்ற உறுதிமொழியுடன் தொடங்குகிறது ' வெங்காயம் ' திரைப்படம். அதற்கேற்ப உண்மைகளை உள்ளபடியே போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். புராணம், இதிகாசம், கடவுள், சொர்க்கம், நரகம், சோதிடம், ராசிபலன், மூடநம்பிக்கை போன்ற கட்டுக்கதைகளை அதாவது ஒன்றுமில்லாதவற்றை வெங்காயம் என்று பெரியார் கூறுவார். இல்லாத சோதிடத்தைச் சொல்லி  மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களைத் தோலுரித்துக் காட்டும் படத்திற்கு வெங்காயம் என்று பொருத்தமான பெயர் சூட்டியதற்காக நம்முடைய முதல் பாராட்டு.

vengayamஒரு கிராமத்தில் திடீர் திடீரென்று சாமியார்களும், சோதிடர்களும் காணாமல் போகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதைச் சொல்லுவதுதான் கதை. ஒரு மையக் கதையோடு இணைந்த இரண்டு கிளைக்கதைகள் பின்கதையாக வருகின்றன. படத்தின் தொடக்கக் காட்சியே கிராமத்து வெள்ளந்தி மனிதர்களிடம் இருந்து தொடங்குகிறது. படுக்கையில் படுத்தபடியே, கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்துக் கதாநாயகன் பேசிக் கொண்டிருக்க (இப்படி பிசாசு பிடித்தவர்கள் நிறையபேரைச் சாலைகளில் பார்க்கலாம்), அவனுக்குப் பிசாசு பிடித்திருப்பதால்தான் தனக்குத் தானே பேசிக் கொள்கிறான் என்று வீட்டிலிருப்பவர்கள் திருநீரும், வேப்பிலையும் கொண்டு பேயோட்டுவது கிராமத்துக் கலகலப்பு.

காணாமல் போன சாமியார்களைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல் அதிகாரி அன்புமணி ‡  கதாநாயகன். பக்கத்து கிராம விவசாயின் மகள் செந்தமிழ் ‡ கதாநாயகி . கிராமத்துக் குறும்புக்காரி. பக்கத்து ஊருக்குப் பால் ஊற்றச்செல்லும் போது, தெருவில் குளித்துக் கொண்டிருக்கும் சிறுவனைப் பார்த்து, ' டேய் மாப்ள என்னடா இது, அத்த வரும்போது அம்மணமா குளிச் சிட்டிருக்க. ச்சீ..ச்சீ.. நா ஒனக்குப் பொண்ணு தரமாட் டேம்பா... ' எனக் கிண்டல் அடிக்க, சிறுவன் பாதிக் குளியலில் தெருத் தெருவாக ஓட, அவனுடைய அம்மா அவனை விரட்டிச் செல்லும் காட்சி நல்ல நகைச்சுவை மட்டுமன்று, கிராமங்களில் இயல்பாக நடக்கும் சேட்டையும் கூட. வம்புச் சண்டையில் தொடங்கி, காதலாக மாறுகிறது செந்தமிழ் ‡ அன்புமணி சந்திப்பு. அதைத் தொடரும் கிராமத்துக் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கின்றன.

காணாமல் போன சாமியாரின் ஊருக்கு விசாரணைக்காக வரும் காவல்துறை வண்டியின் மீது ஒரு பைத்தியக்காரக் கிழவி கல்லை எடுத்து வீசுகிறார். அவரைத் திட்டி அனுப்பிவிட்டு, அந்தச் சாமியாரின் மனைவி, கிழவியின் கதையைக் காவல் அதிகாரி அன்புமணியிடம் சொல்கிறார். கிழவியும், அவளது பேரனும் களியும், பருப்புக் குழம்பும் சாப்பிடும் நிலையிலிருந்தாலும், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருக்கும், அவர்களது வாழ்க்கையில் சோதிடம் குறுக்கிடுகிறது. நண்பனோடு சேர்ந்து சொந்தமாகத் தறி போட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் அவன் ஒரு சோதிடரைப் பார்க்கப் போகிறான். அந்தச் சோதிடரோ, இவனுடைய நண்பனுக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்றும் இவனுக்கு எட்டாம் இடத்தில் சனி  அதாவது அட்டமச் சனி என்றும் கூறிவிடுகிறார். இதனால் இவனோடு தொழில் தொடங்க நண்பன் மறுத்துவிட, கடைசியில் தற்கொலை செய்துகொள்கிறான். பாட்டிக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அந்த சோதிடர் கடத்தப்படுகிறார். இதே போன்று இன்னும் மூன்று சாமியார்களும் அடுத்தடுத்துக் கடத்தப்படுகிறார்கள்.

காவல்துறை விசாரணை மெல்ல மெல்ல, சிறுவர் காப்பகத்தில் இருந்து காணாமல் போன  மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை நோக்கி நகர்கிறது. மூன்று சாமியார்களையும் கடத்தியது அந்தச் சிறுவர்கள்தான் என்று தெரிய வரும்போது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும், அந்த சோதிடர்களால் தங்கள் குடும்பத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்கள் என்று தெரியவரும்போது சோதிடர்களின் மீது நம்முடைய கோபமும் குவிகிறது. சோதிடரின் பேச்சை நம்பி, தந்தையால் சந்தேகப்பட்டு அடித்து விரட்டப்படும் தாய் தற்கொலை செய்து கொண்டதால் சிறுவர் காப்பகத்திற்கு வந்து சேரும் சிறுவன், நரபலி சாமியாரினால் கூத்துக் கலைஞரான தந்தையையும், அன்பான தம்பியையும் இழந்து அநாதையான பூ விற்கும் சிறுமி எனப் பாதிக்கப் பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து சாமியார்களைக் கடத்துகின்றனர். எல்லாம் தலைவிதிப்படி நடந்திருக்கிறது என்று நம்பி, மனத்திற்குள் அழுது கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் சிறுவர் காப்பகத்திற்கு வருகை தரும் நடிகர் சத்தியராஜின் பகுத்தறிவுப் பேச்சினால், உண்மையை உணர்கின்றனர். சோதிடத்தின் பெயரால் தங்களின் வாழ்வு எப்படியயல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்று சிந்திக்கின்றனர். சாமியார்களைக் கடத்தி காட்டுக்குள் இருக்கும் மண்டபத்தில் கட்டிப் போடுகின்றனர்.

இடையில், செந்தமிழ் ‡ அன்புமணி காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுத் திருமணத்திற்கும் நாள் குறிக்கப்படுகிறது. செந்தமிழுக்குச் செவ்வாய் தோ­ம் இருப்பதால், பரிகாரம் செய்வதற்காக அவளது பெற்றோர் ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கே அந்தச் சாமியார் மயக்க மருந்து கொடுத்து அவளை பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்த, குத்துவிளக்கில் தவறி விழுந்து உயிரிழக்கிறாள் செந்தமிழ். அந்தச் சாமியாரையும் சிறுவர்கள் கடத்திச் செல்கின்றனர். கடத்தியவர்கள் யார் என்பதையும், அவர்களின் இருப்பிடத்தையும் கண்டுபிடித்துவிட்ட அன்புமணி, சாமியார்களை மீட்கச் செல்கிறார்.

இறுதிக்காட்சியில், சாமியார்களிடம் அந்தச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. சோதிடப் புரட்டுகளைப் புட்டுப்புட்டு வைத்து, அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல்  சோதிடர்கள் வியர்வையில் குளித்து, விக்கித்துப்போய் நிற்கின்றனர். வயதுக்கு மீறிய பேச்சுக்கள் போன்று தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். அறிவு என்பது வயதை அடிப்படையாகக் கொண்டதன்று. அதிலும் பகுத்தறிவுக்கு கேள்விகேட்கும் தன்மையும், உண்மையை அறிய முயலும் தேடலும்தான் தேவையே தவிர, வயது தடையில்லை. பட்டறிவுதான் உண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியன். அந்தவிதத்தில், அந்தச் சிறுவர்களின் வலியும், வேதனையும், அவர்களுக்குள் கேள்விகளாய் முளைத்துச் சிந்திக்க வைத்திருக்கலாம். அவர்கள் சந்தித்த பகுத்தறிவுவாதியின் விளக்கங்களும் அவர்களின் தேடலைத் தீவிரப்படுத்தி யிருக்கக் கூடும்.

இனியாவது திருந்தி வாழுங்கள் என்று சாமியார்களை மன்னித்து விடுதலை செய்யும் சிறுவர்களைச் சாமியார்கள் கொல்ல முயல, அங்கு வரும் காவல் அதிகாரி அன்புமணி, சாமியார்களைச் சுட்டுக்கொன்று சிறுவர்களைக் காப்பாற்றுகிறார்.

கூத்துக் கலைஞராக வருபவர் இயக்குனரின் தந்தை மாணிக்கம் என்பது தெரிந்தபோது வியப்பாக இருந்தது. பரம்பரைக் கூத்துக் கலைஞரைப் போல, அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார். மகனின் மருத்துவச் செலவுக்காக, தெருவில் கூத்துக்கட்டும் போது கலையை நேசிக்கும் கலைஞனின் சுயமரியாதையும், தந்தையின் பாசமும் வெளிப்படுகிறது. இவரைப் பற்றிய கூடுதலான ஒரு செய்தி, இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். மகனின் இலட்சியத்திற்கு வடிவம் கொடுத்த தந்தையாகவும் நம்முடைய  மரியாதைக்குரியவராகிறார். பேரனாக வரும் இயக்குனர் ராச்குமார் பாசக்காரப் பட்டிக்காட்டுப் பேரனாக அசத்தியிருக்கிறார்.

கதை மட்டுமன்று, பாடல்களும் நல்ல பல கருத்துகளைச் சொல்கின்றன. கருப்புச் சட்டைக்காரர்களான, கவிஞர் அறிவுமதியும், பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். இவர்களோடு இயக்குனரின் தந்தை எஸ்.எம். மாணிக்கம், இயக்குனர் ராச்குமார் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். அறிவுமதி எழுதிய ' அரைக் கிறுக்கன் ' பாடல் இளைஞர்களை முணுமுணுக்க வைக்கும். ' அச்சமென்ன அச்சமென்ன... 'என்ற பேரா. சுபவீயின் பாடல் குழந்தைகளுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்கிறது. திரைப்படத்தில்  இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லுவதற்கு  கண்டிப்பாகத் துணிச்சல் வேண்டும். காரணம், பணம் சம்பாதிப்பதற்கான பொழுதுபோக்கு ஊடகம் என்ற எண்ணமே பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஊடகத்தின் வாயிலாக பெரும்பான்மை நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் கதையைச் சொல்லும் இயக்குனரின் கொள்கை உறுதி பாராட்டிற்குரியது. முதல்படம் என்பதால், சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகளும் படத்தில் இருக்கின்றன. கதை, கருத்தாழமிக்க பாடல்கள், எழிலார்ந்த கிராமத்துப் பசுமைக் காட்சிகள் ஆகியவற்றை முன்னிறுத்தி அந்தக் குறைகளை மறக்கலாம். பிரபல நாளேடுகளின் பாராட்டுக்கள், இயக்குனரின் துணிவுக்கும், உண்மையைப் பேசும் படத்தின் கதைக்கும் கிடைத்த பெருமை என்றே சொல்லலாம். மிகக் குறைந்த செலவில், நல்ல கருத்தாழமிக்கப் படத்தை, அதுவும் தன் முதல்படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு மீண்டும் நம்முடைய பாராட்டுக்கள்.

Pin It