பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவார காலம் நிறுத்தி வைத்துள்ளது. இது வெறும் இடைக்காலத் தடைதான். மூச்சுவிட்டுக் கொள்ள நேரம் கிடைத்துள்ளதேயன்றி, முழுதுமாய் அச்சுறுத்தல் முடிந்துபோய்விடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்விடைக் காலத்தில் பல செய்திகளை நாம் நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். மரண தண்டனையே கூடாது என்பதுதான் நம் நோக்கம். எனினும், தண்டனைச் சட்டத்திலிருந்து அதனை அறவே நீக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் நாம் காத்திருக்க வேண்டும். அதுவரையில், பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கான தண்டனை காத்திருக்காது. எனவே, இவர்கள் மூவரையும் ஏன் தூக்கிலிடக்கூடாது என்பதற்கான அழுத்தமான காரணங்களை அரசியல் அடிப்படையிலும், சட்ட அடிப்படையிலும், மனிதநேய அடிப்படையிலும் உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

சட்ட அடிப்படையில் முக்கியமாக மூன்று கோணங்களில் நாம் வாதங்களை முன்வைக்கலாம்.

(1) மூவரின் கருணை மனுக்களின் மீதும் முடிவெடுப்பதற்கு, ஏறத்தாழ 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் தூக்குமரத்தின் நிழலிலேயே வாழ்ந்துள்ளனர்.  இதுவே மிகப்பெரிய தண்டனை. இதற்கு மேல் இன்னொரு தண்டனை கூடாது.

இது குறித்து, கடந்த ஆகஸ்ட் 16 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில், உள்துறை இணை அமைச்சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். “ அரசமைப்புச் சட்டத்தின் 72ஆவது பிரிவின்படி, கருணை மனுவின் மீது முடிவெடுப்பதற்கு எந்தக் காலவரையறையும் கூறப்படவில்லை” என்பதே அவர் முன்வைத்த செய்தி.

ஆனால், மத்தியப் பிரதேச அரசிற்கும், ஜகதீஷ் என்பவருக்கு மான வழக்கில், 2009ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. பாதிக்கப் பட்டவரும், அவருடைய உறவினர் களும், கருணை மனுவின் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் உரிமை பெற்றவர்கள் என்றும், கூடுமானவரை மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அப்படி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவருக்கே அப்பலன் செல்ல வேண்டும் என்றும், அதன்மூலம் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.(“...failing which the power should be excercised in favour of the prisoner and the sentence should be commuted to one of life imprissonment”)

இதனை உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடவில்லை. மூன்று மாதங்க ளைத் தாண்டினாலே தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறும்போது, 11 ஆண்டுகள் காத்திருந்த மூவருக்கு ஏன் தண்டனை குறைக்கப்படக் கூடாது?

(2) ராஜீவ் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு ‘ தடா ’வின் கீழ் வராது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், வழக்கு முழுவதும் ‘ தடா ’ சட்டத்தின் கீழ்தான் விசாரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில் கதவுகள் அனைத்தும் சாத்தப்பட்டு, பத்திரிகையாளர் உள்பட பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாமல் (in-camera court) விசாரணை நடைபெற்றது. மேலும், நீதிபதியின் முன்னால் கொடுக்கப்படும் வாக்குமூலமே செல்லுபடியாகும் என்னும் நடைமுறைக்கு மாறாக, தடா வழக்கு என்பதால் காவல் துறையினரும் சிறப்பு விசாரணைக் குழுவினரும் பெற்ற வாக்குமூலமே செல்லும் என்ற நிலை ஏற்பட்டது. காவல்துறை வாக்குமூலங்களை எப்படி வாங்கும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

இந்நிலையில், தடா சட்டத்தின் கீழ் வராது என்று கூறிவிட்டபின், திறந்தவெளி நீதிமன்றத்தில் (open court)    மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நீதிபதியின் முன் குற்றஞ்சாட்டப்பட்டப் பெற்றவர்கள் கொடுக்கும் வாக்குமூலம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கோருகின்ற சட்ட உரிமை நமக்கு உள்ளதல்லவா?

(3) ராஜீவ் காந்தி கொலை நடந்த மறுநாள் (22.05.1991), சிறப்புப் புலனாய்வுக் குழு, கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்டது ‡ கொலையாளிகளைக் கண்டுபிடிப்ப தற்காக. அதே மாதம் 27ஆம் தேதி, வர்மா கமிசன் என ஒன்றும் அமைக்கப்பட்டது ‡ ராஜீவ் கொலையில், பாதுகாப்புக் குறைபாடுகள் எவையும் உள்ளனவா என்று கண்டறிவதற்காக. அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் மூன்றாவது ஆணையமாக ஜெயின் ஆணையம் உருவாக்கப்பட்டது ‡ கொலையில் உள்நாட்டு, அயல்நாட்டுச் சதித்திட்டம் ஏதும் உள்ளதா என்று ஆராய்வதற்காக! இவ்வாறு, ஒரு கொலையை மூன்று கோணங்களில் ஆராய அரசு முன்வந்தது.

ஜெயின் கமி­னின் இறுதி அறிக்கை (Final report) ராஜீவ் கொலை வழக்கில் இன்னும் ஆராயப்பட வேண்டிய இருட்டுப் பகுதிகள் உள்ளன என்று கூறுகிறது. குறிப்பாக சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோர் மீது தன் சந்தேகப் பார்வையை வெளியிடுகிறது. 1995ஆம் ஆண்டு, அவ்விருவரும் இலண்டன் பயணம் மேற்கொண்டது மர்மமாக உள்ளது என்றும், அதுபற்றித் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயின் கூறுகின்றார். (“Trip to London in 1995 by chandrasamy and subramanian swamy is a mystry and it needs to be profed”)

ஆனால் அவர்கள் இன்றுவரை விசாரிக்கப்படவில்லை. ஸ்ரீகுமார் என்னும் புலனாய்வு அதிகாரி ஒருவர், இலண்டன் சென்றிருந்தபோது, ராஜீவ்காந்தி கொலை தொடர்பான, சில முக்கியக் கோப்புகளைத் தொலைத்துவிட்டதாக, வெளிப்படையான வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தக் கோப்புகள் இன்றுவரை கிடைக்கவில்லை. மேலும் சாமிகள் மற்றும் ஸ்ரீகுமார் மேற்கொண்ட பயணங்களுக்கிடையில் தொடர்புகள் இருக்கக்கூ டுமோ என்ற எண்ணம் சாதாரணமானவர்களுக்கே எழுகின்றது.

ஆக மொத்தம், ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய பகுதிகள் இன்னும் உள்ளன என்பது தெளிவாகின்றது. விசாரணையே முடியாமல், தண்டனை வழங்க முற்படுவது என்ன நியாயம்?

இவைபோன்ற சட்டச் சிக்கல்களைத் தாண்டி, மனிதநேய அடிப்படையிலும், இத்தண்டனை நிறை வேற்றப்படக் கூடாது என்று தமிழகம் முழுவதும் இன்று குரல்கள் எழுந்துள்ளன.

ஒரிசாவின் மலைக்கிராமம் ஒன்றில், மதப் பரப்புரை செய்து வந்த ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும்,   அவருடைய மகன்கள் இருவரையும், உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில், தாராசிங்கிற்கு விசாரணை நீதிமன்றம் 2003 செப்டம்பரில் மரண தண்டனை விதித்தது. மே 2005இல் உயர்நீதிமன்றம் அதனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க, 2011 ஜனவரியில் உச்சநீதிமன்றம் அதனை உறுதி செய்துள்ளது.

மூவரை உயிரோடு எரித்துக் கொன்ற, தாராசிங்கிற்குக் காட்டப்பட்ட மனிதநேயம், இம்மூவருக்கும் ஏன் காட்டப் படக் கூடாது?

1990ஆம் ஆண்டு, லாகூரில் நடைபெற்ற, 14 பேரைப் பலி கொண்ட, தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியரான சரப்ஜித்திற்கு (Sarabjit), பாகிஸ்தான் நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. மனிதநேய அடிப்படையில் அவருக்குக் கருணை காட்டும் படியும், அவருடைய தண்டனையை வாழ்நாள் தண்டனை யாகக் குறைக்கும்படியும் இந்திய அரசே பலமுறை கேட்டுக்கொண்டமையால், இன்னமும் அத்தண்டனை நிறைவேற்றப் படாமல் தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

அந்த இந்தியரிடம் காட்டும் கருணையை, இந்தத் தமிழர்களிடமும் இந்திய அரசு ஏன் காட்ட மறுக்கிறது?

இத்தனை நியாயங்களையும் இந்திய அரசு புறக்கணிக்குமானால், தமிழினத்தின் நெஞ்சங்களில் மாறாத ரணமும், வேதனையும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதன்று.

Pin It