மதக் கலவர, மத வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதாவை கொண்டு வந்திருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு. இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்து பின்னர் சட்டமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு இந்த மசோதாவை அது முன் வைத்திருக்கிறது.
நோக்கம்:
இந்தியாவில் நிகழ்த்தப்படும் வகுப்புக் கலவரங்களின்போது பெருமளவில் முஸ்லிம்களும், அதற்கு அடுத்தபடியாக கிறிஸ்தவ சமுதாயமும் பாதிக்கப்படுகின்றனர். இந்த சிறுபான்மை மக்களின் உயிர், உடமைகளை பெருமளவில் பதம் பார்த்து விடுகின்றன மதக் கலவரங்கள்.
கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட வகுப்புக் கலவரங்களின் மூலம் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எவ்வித இழப்பீடோ, நீதியோ கிடைத்தபாடில்லை. இனி அந்த நிலை தொடரக் கூடாது; கலவரங்களை நிகழ்த்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; கலவரங்களால் பாதிக்கப்படுபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நியாய உணர்வோடு மதக் கலவர தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவிருப்பதன் நோக்கம்.
ஆணையம்:
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் பெருமைக்குக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தத்துவம். இந்தத் தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் மதக் கலவரங்களை கட்டுப்படுத்த ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டு, வகுப்புக் கலவரங்களை தடுக்க வேண்டிய வழிமுறைகளையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்க அதற்குரிய திட்டங்களைக் குறித்தும் மத்திய அரசுடன் இந்த ஆணையம் ஆலோசனை செய்து செயற்படுத்தும். அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு வழங்கப்படும்.
அதோடு, கலவரங்கள் நிகழும்போது அதனை தடுத்து நிறுத்த வேண்டிய அரசு இயந்திரங்களான காவல்துறை, பாதுகாப்புத்துறை, மாவட்ட நிர்வாகம், நீதித்துறை ஆகியவை கவனத்துடன் செயல்படுகின்றனவா என்பதையும் இந்த ஆணையம் கண்காணிக்கும் என்றெல்லாம் மதக் கலவர தடுப்பு மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால்...
மதக் கலவர தடுப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால்... 2002ல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் அரங்கேறிய அரச பயங்கரவாதம் நிகழாது. ஒரு மாநிலத்தின் அரசு இயந்திரம் கலவரத்திற்கு துணை நிற்காது. வன்முறையாளர்களுடன் காவல்துறை கைகோர்க்காது.
இந்தச் சட்டத்தை இந்தியா விடுதலை அடைந்த மறு நிமிடமே இயற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்... இந்தியாவின் மதிப்பு மிக்க பல ஆயிரம் உயிர்கள் பலியாகியிருக்காது. இந்தியப் பொருளாதாரம் நாசப்படுத்தப்பட்டிருக்காது. சிறுபான்மையின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டிருக்கும். அப்போதைய மத்திய அரசு அதைச் செய்யத் தவறி விட்டது.
உலகமே சாட்சியாக இருக்க முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலமான பாபரி மஸ்ஜித் தரை மட்டமாக்கப்பட்டது. அப்போது உ.பி. மாநில அரசின் கட்டுப்பாட்டில் அயோத்தி இருந்தது. பாபரி மஸ்ஜித்தை பாதுகாக்க வந்த மத்திய ரிசர்வ் படை கரசேவகர்களுக்கு பாதுகாப்பு படையாக மாறியது.
மதக்கலவர தடுப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இந்த அனர்த்தங்கள் நிகழாது. கலவரங்கள் ஏற்பட்டால் இனி மாநில அரசின் அனுமதியை மத்திய அரசு பெறவேண்டிய அவசியமில்லை. மத்திய அரசே நேரடியாக கலவரப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். அதுவே கலவரத்தை கட்டுப்படுத்தும். இங்கே குஜராத் போன்ற அரச பயங்கரவாதம் தலை தூக்காது. மாநில அரசை வேடிக்கை பார்க்க வைத்து மத்திய அரசு களம் காணும். இவை சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அரணாகத் திகழும்.
தமிழக முதல்வரும் பாஜக முதல்வர்களும்!
மதக் கலவர தடுப்புச் சட்ட மசோதா குறித்த அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் மசோதாவை எதிர்த்து குரலெழுப்பி வருகின்றனர். பாஜக முதல்வர்கள் எதிர்ப்பு காட்டுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இனி தங்கள் தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் இந்த மசோதா தடுத்து விடும் என்பது அவர்களது எதிர்ப்புக்கு காரணம். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ - எதிர்ப்பு என்ற பெயரில் சொத்தையான வாதத்தை முன் வைக்கிறார். இந்த மசோதா மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும். அதற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் அனைத்து மாநில முதல்வர்களும் இதனை எதிர்க்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார். எதிர்ப்பை கைவிடுவாரா ஜெயலலிதா?
குடிமக்களின் உயிர், உடமைகளைவிட மாநில அரசின் அதிகாரம் எவ்விதத்திலும் உயர்ந்ததல்ல. மக்களுக்காகத்தான் சட்டங்களும், அதை இயக்க அரசுகளும் என்கிற அடிப்படை நியாயத்தை முதல்வர் ஜெயலலிதா விளங்கிக் கொள்ள வேண்டும். அதனால் இச்சட்டத்திலுள்ள நியாயங்களை விளங்கிக் கொண்டு ஜெயலலிதா தனது எதிர்ப்பைக் கைவிட வேண்டும். தமிழக முதல்வர் வேண்டுமானால் சட்டம் ஒழுங்கை கையாள்வதில் கெட்டிக்காரராக இருக்கலாம். தமிழகத்தில் வன்முறை- கலவரம் தலைதூக்கி விடாமல் இரும்புக்கரமாக சட்டத்தை பிரயோகிக்கலாம்.
ஆனால் வட மாநிலங்களோ அம்மாநில முதல்வர்களோ, அப்படி இல்லை. குறிப்பாக - பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் கலவர பூமியாகவே காட்சியளிக்கின்றன. அங்கெல்லாம் கலவரத் தடுப்புச் சட்டம் தேவை என்பதை கடந்த காலம் நமக்கு சுட் டிக் காட்டுகிறது.
ஆகவே, மதக் கலவர தடுப்புச் சட்ட மசோதா குறித்த தனது பார்வையை தமிழக முதல்வர் தொலைநோக்கோடு, விசாலப்படுத்தி பார்க்க வேண்டும் என அவருக்கு அறிவுரையாகவே சொல்கிறோம்.
தமிழக முதல்வருக்கு ஐஎன்டிஜே கண்டனம் - மத்திய அரசுக்கு ஆதரவு!
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் மதக் கலவர தடுப்புச் சட்டத்தை முழுமனதாக வரவேற்பதாகவும், இச்சட்டத்தை நியாய உணர்வில்லாமல் எதிர்க்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கண்டிப்பதாகவும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் இந்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது ஐஎன்டிஜே.
கடந்த 6ம் தேதி பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கான அமைச்சர் நாராயணச்சாமியை ஐஎன்டிஜேவின் நிர்வாகிகளான எஸ்.எம்.பாக்கர், துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், மாநிலச் செயலாளர் அபு ஃபைஸல், புதுவை மாநில நிர்வாகிகளான ஜாபிர், பீர் முஹம்மது ஆகியோர் நேரில் சந்தித்து, மதக் கலவர தடுப்புச் சட்டத்தின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி - மத்திய அரசின் இந்த சட்ட மசோதாவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது முழு ஆதரவை தருகிறது என்று தெரிவித்தனர்.
அமைச்சர் நாராயணசாமியும், “தமிழக முதல்வர் இச்சட்டத்தை எதிர்ப்பது கவலையளிக்கிறது. இது தேவையற்ற எதிர்ப்பு'' என்று தனது கருத்தையும் ஐஎன்டிஜே தலைவரோடு பகிர்ந்து கொண்டார். பின்னர் பிரதமரிடத்தில் ஐஎன்டிஜேவின் ஆதரவு குறித்து தெரிவிப்பதாகவும், இந்தச் சட்டம் நிறைவேற அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
அமைச்சரிடம் விடைபெறுவதற்கு முன், பிரமுகர்கள் - அரசியல் தலைவர்களை சந்திக்கும்போது ஐஎன்டிஜே வழக்கமாக கடைபிடித்து வரும் அழைப்புப் பணியான திருமறைக் குர்ஆனை பரிசளித்து வருவதின் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியின் உடல் நலம் குறித்தும் அக்கறையுடன் விசாரித்தார் ஐஎன் டிஜே தலைவர்.
- ஃபைஸல்