1960 களில்

1962 ல் அர்கான்சாவில் ரோஜெர்ஸ் என்ற இடத்தில் வால்மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டன் தனது முதலாவது தள்ளுபடி அங்காடியைத் திறந்தார். அதிலிருந்து தொடங்குகிறது வாலமார்ட்டின் வளர்ச்சிக் கதை. வால்மார்ட் விமான நிறுவனத்தின் முதலாவது முழுநேர விமான ஓட்டி சாம் மற்றும் பட் வால்டனுக்கு உதவிக்கு வந்தார், அவருடைய உதவியுடன் அர்கான்சாசுக்கு வெளியே சிகேஸ்டன், மோ., மற்றும் கிலாரிமோர், ஒக்லா ஆகிய இடங்களில் முதலாவது அங்காடிகளைத் திறந்தார்கள். 1969 அக்டோபர் 31 அன்று அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக வால்மார்ட் அங்காடிகள் என்ற பெயரில் பெருங்குழுமமாக அறிவிக்கப்பட்டது.

1970 களில்

1970கள் அந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் தொடக்கத்தைக் குறித்தன. அந்தப் பத்தாண்டின் முதலாவது ஆண்டில் அர்கான்சாசின் பென்டன்வில்லாவில் முதலாவது வால்மார்ட் விநியோக மையமும் வால்மார்ட் தலைமை அலுவலகமும் திறக்கப்பட்டன. அந்தக் கட்டத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் 38 அங்காடிகளில் 1500 ஊழியர்கள் வேளை செய்தனர். விற்பனைத் தொகை 44.2 மில்லியன் டாலர்களாக இருந்தது. 1970 ல் வரையறுக்கப்பட்ட பொதுக் குழுமமாகப் பங்குகளை விற்கத் தொடங்கியது.

1971

1971 மே மாதத்தில் வால்மார்ட் பங்கு நிறுவனம் தனது முதலாவது 100 விழுக்காடு பங்குப் பிரிவினையைப் பங்கு ஒன்றுக்கு 47 டாலர்கள் என்ற விலையில் நிர்ணயித்தது. அந்தநேரத்தில், அந்த நிறுவனம் அர்கான்சாஸ், கன்சாஸ், லூசியானா, மிஸ்ஸுரி, மற்றும் ஒக்லஹாமா ஆகிய ஐந்து மாகாணங்களில் இயங்கியது. 1972 ல் நியூயார்க் பங்கு வர்த்தக நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பட்டியலில் இடம் பெற்றது. வால்மார்ட் பங்குகள் இரண்டாவது முறையாக பங்கு ஒன்றுக்கு 47.50 டாலர் விலையில் 100 விழுக்காடு பிரிக்கப்பட்டது. பின்னர் அந்த நிறுவனம் 1973 ல் டென்னஸ்ஸீ, 1974 ல் கென்டகி, மிஸ்ஸிபி ஆகிய மூன்று மாகாணங்களுக்கு விரிவடைந்தது.

1975

இந்தப் பத்தாண்டுகளின் மத்திவாக்கில் வால்மார்ட்ட்டின் 125 அங்காடிகளில் 7500 ஊழியர்கள் இருந்தனர், 340.3 மில்லியன் டாலர்கள் விற்பனை நடந்தது. 1975 ல் வால்மார்ட் டெக்சாஸ் மாகாணத்தில் நுழைந்தது. அந்த ஆண்டு ஆகஸ்டில் வால்மார்ட் மூன்றாவது முறையாக தனது பங்குகளை ஒன்றுக்கு 24 டாலர் என்ற விலையில் பிரித்தது. மேலும் முதன்முறையாக மிச்சிகனிலும் இல்லினாய்ஸ்சிலும் 16 மோஹி மதிப்பு அங்காடிகளை ( Mohi Value Stores) கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

1977 ல் இல்லினாய்சில், பத்தாவது மாகாணத்தில், வால்மார்ட் தனது வணிகத்தைத் தொடங்கியது. அடுத்த ஆண்டு ஹட்சிசன் காலணி நிறுவனத்தை கைப்பற்றியது, வால்மார்ட் மருந்து அங்காடி, தானியங்கி சேவை மையம், மற்றும் ஆபரணப் பிரிவுகளைத் தொடங்கியது. 1979 ல் அவ்வளவு குறுகிய காலத்தில் 1 பில்லியன் டாலர் விற்பனையை எட்டிப்பிடித்த முதலாவது நிறுவனமாக ஆகியது. அந்தப் பதாண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் 276 அங்காடிகளில் 21000 ஊழியர்கள் வேலை பார்த்தனர், 1.248 பில்லியன் டாலர் விற்பனை நடந்தது. மேலும் 11 வது மாகாணமாக அலபாமாவிலும் நுழைந்திருந்தது.

1980களில்

1980

1980 லும் வளர்ச்சி தொடர்ந்தது, நானகாவது முறையாக வால்மார்ட் பங்குகள் 50 டாலர் சந்தை விலையில் 100 விழுக்காடு பிரிக்கப்பட்டன. அந்த ஆண்டில் அந்த நாள் வரையிலும் இல்லாத மிகப்பெரிய விநியோக மையம் டெக்சாஸ் மாகாணத்தில் பாலஸ்டைனில் திறக்கப்பட்டது. 1981 ல் வால்மார்ட் ஜியார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் நுழைந்து குகனின் 92 பெரிய கே. அங்காடிகளை வாங்கியது; 1982 ல் புளோரிடா மற்றும் நெப்ராஸ்கா மாகாணங்களில் நுழைந்தது, அதைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக 100 விழுக்காடு பங்குகள் ஒன்றுக்கு 49.875 டாலர் விலையில் பிரிக்கப்பட்டன.

1983

1983 ல் போர்ப்ஸ் இதழ் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சில்லரை வணிகத்தில் வால்மார்ட்டை எண்.1 நிறுவனமாக வரிசைப்படுத்தியது. அந்த ஆண்டிலேயே இந்தியானா, லோவா, நியூ மெக்சிகோ, மற்றும் நார்த் கரோலினா ஆகிய மாகாணங்களில் அங்காடிகளைத் திறந்தது. துல்சியா, ஒக்லா ஆகிய இடங்களில் ஒரு மணி நேர நிழற்படக் கூடங்களைத் திறந்தது. மேலும் 1983 ல் அமெரிக்காவின் வூல்கோ அங்காடிகளை வாங்கியது. ஆறாவது முறையாக 100 விழுக்காடு பங்குகளை ஒன்றுக்கு 81.625 என்ற சந்தை விலையில் பிரித்தது.

1984

1984 ல் டேவிட் கிளாஸ் நிறுவனத்தின் தலைவரானார். வால்மார்ட் வர்ஜீனியாவில் நுழைந்தது.

1985

இந்தப் பத்தாண்டின் மத்தியில் வால்மார்ட் 880 அங்காடிகளையும் 1,04,000 ஊழியர்களையும் கொண்டதாக வளர்ந்து 8.4 பில்லியன் டாலர்கள் விற்பனையை எட்டியிருந்தது. 100 விழுக்காடு பங்குகள் ஒன்றுக்கு 49.75 டாலர் விலையில் பிரிக்கபட்டன. அந்த ஆண்டு விஸ்கான்சின் மற்றும் கொலராடா ஆகியவற்றில் நுழைந்தது, மேலும் கிரான்ட் சென்டிரல் அங்காடியை வாங்கியது. 1986 ல் வால்மார்ட் மின்னேசொடாவில் நுழைந்தது.

1987

1987ல் வால்மார்ட், 1198 அங்காடிகளில் 2,00,000 ஊழியர்களுடன் 15,9 பில்லியன் டாலர்கள் விற்பனையை எட்டி, தனது 25 ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. மீண்டும் 100 விழுக்காடு பங்குகள் ஒன்றுக்கு 66.625 என்ற சந்தை விலையில் பிரிக்கபட்டன. அந்த நிறுவனம் தனது செயற்கைக்கோள் வலைபின்னலையும் அந்த ஆண்டில் நிறைவு செய்தது. அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அங்காடிகளையும் தலைமை அலுவலகத்தையும் ஒன்றாக இணைத்து அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் தகவல் பரிமாற்ற அமைப்பாக ஆகியது.

1988

1988ல் 99 விழுக்காடு வால்மார்ட் அங்காடிகள் பார்-கோடு ஸ்கேனிங் வசதி பெற்றன, முதலாவது சூப்பர் மையம் வாஷிங்டனில் தொடங்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனம் சூப்பர்சேவர் அங்காடிகளை வாங்கியது. 1989 களில் வால்மார்ட் மிச்சிகன், வேஷ்ட வர்ஜினியா, வயோமிங் உட்பட மொத்தம் 29 மாகாணங்களில் இயங்கியது.

1990களில்

1990 ல் வால்மார்ட் அமெரிக்காவின் எண்.1 சில்லறை விற்பனையாளராக ஆகியதொடு கலிபோர்னியா, நெவேடா, வடக்கு டகோடா, பென்சில்வேனியா, தெற்கு டகோடா, மற்றும் உடா ஆகிய மாநிலங்களிலும் நுழைந்திருந்தது. டெக்சாஸின் மெக்லான் நிறுவனத்தை வாங்கியது. 1990 ல் ஒன்பதாவது முறையாக 100 விழுக்காடு பங்குகள் 62.50 டாலர்கள் சந்தை விலையில் பிரிக்கப்பட்டன.

1991

மேலும் கிளை பரப்பும் விதமாக 1991 ல் வால்மார்ட் மெக்சிகோ மாநகரில் ஒரு சில்லறை விற்பனை அங்காடியைத் திறந்து, பன்னாட்டுச் சந்தையில் நுழைந்தது. உள்நாட்டில் வடகிழக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பகுதிகளில் கனக்டிகட், டேலாவேர், மைனே, மேரிலாண்ட், மாஸ்ஸாசூசட்ஸ், நியூஹாம்ப்ஷையர், நியூஜெர்சி, மற்றும் நியூயார்க் ஆகியவை உட்பட மாகாணங்களில் கிளை பரப்பியது; டெக்சாஸின் அமரில்லோவில் இருந்த வெஸ்டர்ன் மெர்கண்டைசர்ஸ் நிறுவனத்தை வாங்கிய வால்மார்ட் ‘சாமின் அமெரிக்க விருப்பம்’ என்ற முத்திரைப் பெயரில் பொருள்களை அறிமுகப்படுத்தியது.

1992

1992 ஏப்ரல் 5 அன்று வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டன் இறந்து போனார், அவருடைய மகன் ராப்சன் நிறுவனத் தலைவர் ஆனார். சாம் வால்டனுக்கு அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ்.எச்.டபிள்யூ.புஷ் நாட்டின் மிகஉயர்ந்த குடிமை விருதான ‘சுதந்திர விருது’ வழங்கியிருந்தார். 1992 ல் இடாஹோ, மொன்டானா, ஒரேகான் ஆகியவை உட்பட அமெரிக்காவின் 45 மாகாணங்களில் கிளைபரப்பியிருந்த வால்மார்ட் அந்த ஆண்டில் போர்டோ ரீகோவிலும் நுழைந்தது.

1993

வால்மார்ட்டின் பன்னாட்டு வணிகம் பாபி மார்டினைத் தலைவராகக்கொண்டு தனது சொந்தப் பிரிவைத் தொடங்கியது. அந்த ஆண்டில் 10 வது முறையாக 100 விழுக்காடு பங்குகள் ஒன்றுக்கு 63.625 என்ற சந்தை விலையில் பிரிக்கப்பட்டன. அலாஸ்கா, ரோடித் தீவு, வாஷிங்டன் ஆகிய இடங்களில் கிளைபரப்பி 49 மாகாணங்களில் இடம்பிடித்தது, மேலும் பேஸ் வேர்ஹவுஸ் கிளப்பின் 91 அலகுகளை வாங்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது 50 வது மாநிலத்தில் நுழைய இருந்தது.

1994

1994ல் கனடாவில் 122 வூல்கோ அங்காடிகளை வாங்கியது; ஹாங்காங்கில் மூன்று அங்காடிகளைத் திறந்தது. அந்த ஆண்டில் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனம் கனடாவில் 123 அங்காடிகளையும் மெக்சிகோவில் 86 அங்காடிகளையும் நடத்தியது.

1995

1995 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் 50 வது மாகாணமான வேர்மாண்டில் நுழைந்த வால்மார்ட் அர்ஜென்டினாவில் மூன்று அங்காடிகளையும் பிரேசிலில் ஐந்து அங்காடிகளையும் கட்டியது. அந்த ஆண்டில் வால்மார்ட் 1995 அங்காடிகள், 239 சூப்பர் மையங்கள், 433 சாம் கிளப்கள், 276 பன்னாட்டு அங்காடிகளில் 6,75,000 ஊழியர்களைக் கொண்டு 93.6 பில்லியன் டாலர்கள் விற்பனையை எட்டியிருந்தது.

1996

1996 ல் சீனாவில் ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாக வால்மார்ட் நுழைந்தது.

1997

அதற்கு அடுத்த ஆண்டில் அமெரிக்காவில் 6,80,000 ஊழியர்கள் மற்றும் பன்னாட்டு அங்காடிகளில் 1,15,000 ஊழியர்களுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் வேலையளிப்போராக ஆகியது. அந்த ஆண்டில் 105 பில்லியன் டாலர் விற்பனையுடன் முதல்முறையாக வால்மார்ட் 100 பில்லியன் டாலர் விற்பனையை எட்டியது. உலகெங்கும் வாரம்தோறும் 90 மில்லியன் வாடிக்கையாளர்கள் வால்மார்ட்டில் பொருள்களை வாங்குகிறார்கள்.

1998

1998 ல் வால்மார்ட் மேலும் இரண்டு நாடுகளில் நுழைந்தது. ஜெர்மனியில் 21 வெர்ட்காப் அங்காடிகளை வாங்கியது, தென்கொரியாவில் கூட்டுமுயற்சி நிறுவனத்தைத் தொடங்கியது. அருகாமை சந்தை கருத்தாக்கத்துடன் மூன்று அங்காடிகளை அர்கான்சாசில் அறிமுகப்படுத்தியது.

1990களின் இறுதியாண்டில் 11,40,000 ஊழியர்களுடன் வால்மார்ட் உலகின் மிகப்பெரிய தனியார் வேலையளிப்போராக ஆகியது. 11 வது முறையாக 100 விழுக்காடு பங்குகள் ஒன்றுக்கு 89.75 டாலர்கள் சந்தை விலையில் பிரிக்கப்பட்டன. 1999 ல் ஜெர்மனியில் இண்டர்ஸ்பார் அங்காடிகளையும் ஐக்கிய அரசியத்தில் ஏ.எஸ்.டி.ஏ. குழுமத்தையும் வாங்கியது.

2000ம்கள்

2000

இந்த ஆண்டில் எச். லீ ஸ்காட் ஜூனியர் வால்மார்ட் அங்காடிகளின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பார்ச்சூன் இதழ் வால்மார்ட்டை அமெரிக்காவின் மூன்றாவது பெரிய, புகழ் பெற்ற நிறுவனமாக அறிவித்தது. 2000 ஆண்டில் கோன்/ரோபர் இதழ் வால்மார்ட்டை அமெரிக்காவின் எண்.1 பெருங்குழுமக் குடிமை உறுப்பினராக வரிசைப்படுத்தியது.

2002

2002 ல் லத்தீன் அமெரிக்கர்களை வேலையில் அமர்த்திய தீவிரத் திட்டத்திற்காக ஹிஸ்பானிக் வணிக இதழ் வால்மார்ட்டை “25 பெரிய பல்லினத் வேலைவாய்ப்புத் திட்டங்களில் ஒன்றாக” வரிசைப்படுத்தியது.

2003-2004

பார்ச்சூன் வார இதழ் வால்மார்ட்டை மிகவும் போற்றப்படும் நிறுவனங்களின் வரிசையில் தொடர்ச்சியாக 2003, 2004 ஆண்டுகளில் இடமளித்தது. அதே ஆண்டில் அதற்கு “பெருங்குழும தேசபக்த விருது” வழங்கப்பட்டது.

2005

2005ல் வால்மார்ட், அமெரிக்காவில் 3800 அங்காடிகள், அயல்நாடுகளில் 3800 அங்காடிகள், 1.6 மில்லியன் ஊழியர்களைக் கொண்டு, அந்த ஆண்டு 312.4 பில்லியன் டாலர்கள் விற்பனையை எட்டியது. அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, கானடா, கோஸ்டா ரீகா, எல் சால்வடார், ஜெர்மனி, காதமாலா, ஹோண்டுராஸ், ஜப்பான், மெக்சிகோ, நிகாரகுவா, போர்டோ ரிகா, தென்கொரியா, ஐக்கிய அரசியம் ஆகிய நாடுகளில் 138 மில்லியன் வாரந்திர வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்குகிறது.

2006

2006 ல் உலகில் 6779 இடங்களில் வால்மார்ட்டின் வாராந்திர வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 176 மில்லியன் (பதினாறு கோடியே எழுபது லட்சம்) ஆகியது, சாதனை விற்பனையாக 345 பில்லியன் டாலர்களை எட்டியது. ஜப்பானில் செய்யு நிறுவனத்தின் 53.3 விழுக்காடு பங்குகளை வாங்கியது, கார்ஹ்கோ நிறுவனத்தின் 51 விழுக்காட்டை வாங்கி அதற்கு வாலமார்ட் மத்திய அமெரிக்கா என்று பெயரிட்டது.

2007

2007ல் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளை எட்டியது. ஆகஸ்டில் வால்மார்ட்டும் பார்தி நிறுவனமும் இந்தியாவில் ரொக்க விற்பனை மற்றும் பின்புலச் சேவைகளுக்கான மொத்த வழங்கல் சங்கிலித்தொடரை இயக்க பார்தி வால்மார்ட் தனியுரிமை நிறுவனத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தன.

பிரேசிலின் சாஒ பாலாவில் ஒரு சூப்பர் மையத்தையும் 3000 ஆவது பன்னாட்டு அங்காடி 2007 நவம்பரில் திறந்தது. டிசம்பரில் ஜப்பானின் செய்யு நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் வாங்கி அதன் உரிமையில் 95.1 விழுக்காட்டை உடமையாக்கிக் கொண்டது.

2008

2008 ஏப்ரல் 10அன்று சாம் கிளப் அதன் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அமெரிக்காவில் 590 கிளப்புக்களும் பல்வேறு நாடுகளில் 100க்கும் மேற்பட்ட கிளப்புக்களும் இயங்கின.

2009

2009 பிப்ரவரி 1 லிருந்து, லீ ஸ்காட்டைத் தொடர்ந்து மைக் டியூக் அதன் தலைவராக ஆனார். டியூக் இயக்குனர் குழுத் தலைவராகவும் ஸ்காட் நிர்வாகக் குழுத் தலைவராகவும் தொடர்கின்றனர்.

வால்மார்ட்டின் இரண்டாவது பெரிய இயக்கப் பிரிவான வால்மார்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் டூ மேக்மில்லன் பதவி உயர்த்தப்பட்டார்.

மேலோட்டமாகப் பார்த்தால் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி வியப்பைத் தரலாம் மாபெரும் சாதனையாகத் தோன்றலாம். ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சியே சந்தைப் போட்டியை ஒழித்துக் கட்டித் தனது லாபவேட்டையை முடிவின்றித் தொடர்வது தான். அந்த வேட்டையில் பலியாவதும் பலிகொடுக்கப்படுவதும் எப்போதும் சாமான்ய மக்களே.

வால்மார்ட்டின் பகாசுர வரலாறு நமக்குத் தெரிவிப்பது என்னவென்றால் அது காலடி வைத்த இடத்தில் எல்லாம் சில்லறை வணிகச் சந்தையைக் கபளீகரம் செய்துள்ளது. ஒரு நாட்டில் கூட்டாளியைச் சேர்த்துக்கொண்டு பின்னர் அந்தக் கூட்டாளி நிறுவனத்தையும் ஒட்டுமொத்தமாக விழுங்கியுள்ளது.

 அந்த நிறுவனத்திற்கு இந்தியச் சில்லறை வர்த்தகச் சந்தையையும் பலி கொடுக்க மன்மோகன்சிங் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார். அமெரிக்காவின் ‘பெருங்குழும தேசபக்த விருதை’ தட்டிச் சென்றுள்ள வால்மார்ட்டுக்கு வால் பிடிப்பதன் மூலம் தானும் ‘அமெரிக்க தேசபக்த விருதை’ வெல்லலாம் என்று எண்ணியுள்ளார் போலும்.

- வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It