மேல் படிப்பு படிப்பதற்கோ, வேலை வாய்ப்பிற்கோ மிகத் தகுதியான நாடு என்று சொல்லக் கூடிய அமெரிக்காவிற்கு செல்ல முக்கியமான தேவை விசா. சில நேரங்களில் சில மாணவர்களுக்கு விசா மறுக்கப்படும் பொழுது அவர்கள் மிகவும் ஏமாற்றமடைகிறார்கள்.

மதிப்பெண் குறைவான, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள சிலருக்கு விசா கிடைப்பதும், நல்ல மதிப்பெண்ணும், நல்ல பொருளாதார நிலையிலும் உள்ளவர்களுக்கு விசா நிராகரிக்கப்படுவதும் அனைவர்க்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருவதாக ஒரு எண்ணம் நிலவுகிறது.

இத்தகைய வருத்தங்களைப் பற்றி ஹைதராபாத்திலுள்ள யு.எஸ் தூதரக துணைத் தூதர் (Jeremy Jewett) ஜெரீமி ஜெவெட் டிடம் விசாரித்தபோது முக்கியமான சில பதில்களும் குறிப்புகளும் தருகிறார்.

இத்தகைய நிலை சில நேரங்களில் நேர்ந்தாலும், விசா விண்ணப்பிப்பவர்கள் நினைப்பது போல நாங்கள் வேண்டுமென்றே எந்தவித பாரபட்சமும் காட்டுவதில்லை. பொதுவாக படிப்பில் மிகுந்த அக்கறை காட்டி, தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.

ஆனாலும் நேர்முக விசாரிப்பின்போது விண்ணப்பதாரர்களின் ஆதாரச் சான்றுகளை விட, அவர்கள் விசா விசாரிப்பு அதிகாரியிடம் தரும் நம்பகமான நம்பிக்கையூட்டும் தகுந்த பதில்களே விசா பெறுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சில நேரங்களில் யு.எஸ்ஸில் படிப்பதற்கான ஆர்வத்தையும் குறிக்கோளையும் சரியான முறையில் விசாரிப்பு அதிகாரியிடம் தெரியப்படுத்தத் தவறிய மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற்றும் கூட விசா நிராகரிக்கப்படலாம்.

சில மாணவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒருவரியில் சிக்கனமான பதில்களைத் தருகிறார்கள். அவர்கள் சூட்டிகையாகவும், சாமர்த்தியமாகவும் பதில் தரவேண்டும். யு.எஸ்ஸில் படிப்பதற்குத் தேவையான விசா பெற தகுந்த காரணங்களைத் தயக்கமின்றி தெளிவாக அதிகாரியின் மனதில் படும்படி, நம்பிக்கையூட்டும் பதில்களைத் தெரிவிக்க வேண்டும், விசா கிடைப்பது உறுதி என்று தூதரக துணைத் தூதர் ஜெரீமி ஜெவெட் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Pin It