ஆழவள்ளிக்கிழங்கு
டீயோடு முடிந்து போன
பல உணவு வேளைகளில்
நீ தந்த முத்தம்
நிரப்பியிருக்கிறது
வயிற்றையும், மனதையும்.

கடன்வாங்கி
கழிக்க முடியாத வாழ்க்கை,
பொருளாதார பாம்பால்
வெட்டப்பட்ட காதல்காய்கள் நிறைய.

அலை உரசும்
கரைபோல
நினைவுச்சுவடுகளை
அழித்து, அழித்து
விளையாடுகிறது மனசு.

அந்தத் தெருவைக்
கடந்த போகும்போது
எங்கிருந்தோ
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
என்ற குறுகுறுப்பில்
கழிந்து கொண்டிருக்கிறது  ஆயுள்.

கோவிலுக்குப் போகலாமென்று நீயும்
திரையரங்கு செல்லலாமென நானும்
கதைத்துக் கொண்டிருக்கிற வேளையில்
அனாதையாய்  கைபிசைந்து
காத்துக்கொண்டிருக்கிறது காதல்.

என் கவிதைகளைப் போல
கடிதங்களுமென்கிறாய்.
கவிதையாயிருக்கிறா எனக்கேட்டால்
புரியவேயில்லை எனச்சிரிக்கிறாய்.

எத்தனையோ
பூக்களிருந்தாலும்
இலையுடன் கூடிய ரோஜாவை
தேடித்தேடி தேர்ந்தெடுக்கிறாய்.
செடியில் மட்டுமின்றி
சிகையிலும் சேர்ந்தே
சாகும் சாதி
ரோஜாப்பூ மட்டுமென்கிறாய்.

பெயர் கேட்டு
சீட்டெடுக்கச்சொல்லும்
ஜோசியக்காரன்
கிளிக்குத் தானியம் கொடுத்து
கூண்டை அடைக்கையில்
உழைப்புக்கு உடனடி கூலி
கிடைக்கிறது என்கிறாய்.
“என்ன சோசலிசமா“ என்றால்
ஜோசியலிசம் என்கிறாய்.

- ப.கவிதா குமார்

Pin It