த சண்டே இந்தியன் பத்திரிக்கையின் தீபாவளி சிறப்பிதழ், ரசிகன் என்ற தலைப்பில் தமிழ்த்திரை உலகை ஆண்டு ரசிக மனங்களைக் கொள்ளைகொண்ட நடிகைகளைப் பற்றிய தொகுப்புச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. அதன் தலைப்பு என்னை மிகவும் வசீகரித்தது. ரசிகன்-சாவித்திரி முதல் சிம்ரன் வரை என்பதது. ஜெயமோகன், மாலன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலுமகேந்திரா, அஜயன்பாலா, சீனுராமசாமி, சுபகுணராஜன், பாஸ்கர்சக்தி, நாசர், சுகுமாரன் என தமிழின் அறியப்பட்ட முகவரிமுகங்கள், கோலோச்சிய தாரகைகளைப் பற்றிய தத்தமது எண்ணங்களை மீட்டெடுக்கிற அருமையான தொகுப்பு அது என்பதை படித்து முடிக்கும் வரை மாற்றிக்கொள்ளத் தேவையே இருக்கவில்லை.

அடிப்படையில் நானொரு ரசிகன் என்ற ஒரு தகுதி எனக்கு உண்டு. அது போதுமானது. ஷோபா, சில்க் போன்ற கலைந்த நட்சத்திரங்களாகட்டும், ராதிகா, ரேவதி, குஷ்பூ, ராதா, சிம்ரன் போன்ற சமகாலத்திலும் ஒளிந்து ஒளிர்ந்துகொண்டிருக்கிற நடிகையராகட்டும், கே ஆர் விஜயா, சரோஜாதேவி, லட்சுமி, சரிதா, அமலா, ஸ்ரீதேவி போன்ற வாழ்ந்துகொண்டிருக்கிற முகங்களாகட்டும், ஸ்ரீவித்யா என்னும் முடித்துவைக்கப்பட்ட கேள்வியின் நாயகி ஆகட்டும், எடுத்துக் கோர்த்த அழகான மாலை போன்ற உணர்வினைத் தந்த தமிழ் சினிமாவின் நாயகிகளைப் பற்றின மிக முக்கியமானதொரு தொகுப்பு இது என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமே இல்லை.

என்றாலும் இது சண்டே இந்தியன் சிறப்பிதழுக்கான பாராட்டுப்பத்திரமல்ல. ஏன் எனில் பாராட்டி மகிழும் மனமும் தகுந்த படைப்பை வாசிக்கிற அனுபவமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தாலும் கூட இந்தத் தொகுப்பில் ஒரு சின்ன அல்ல பெரியதொரு நெருடல் எனக்கு இருக்கிறபடியால், பாராட்ட வேண்டிய பொறுப்பை மற்றெல்லாருக்கும் வழங்கிவிட்டு வேறொரு நினைவூட்டலை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

நாளிதழ்களை வீட்டு வாசலில் எறிந்து செல்கிற முகவர்கள் அதன் மத்தியில் விளம்பர துண்டுப் பிரசுரங்களை அவ்வப்பொழுது இடைச்செருகி வைப்பர். செய்தித்தாள் விளம்பரங்களுக்கு நடுவாந்திரமாய் ஆதரவற்ற குழந்தையென அதுவும் நம் பார்வையில்படும் அல்லவா, அது போல, நானெழுதுகிற இப்பிரதியை அந்தத் தொகுப்பின் இடையில் சேர்த்து வாசிக்கிறபோது தான் ரசிகன் என்னும் தமிழ்த்திரை நாயகியரின் முழுமையான தொகுப்பாய் அது விளங்க முடியும் என்ற உறுதியான தீர்மானத்தில் இதனை எழுத விழைகிறேன்.

நதியா....பன்னீரில் நனைந்த மலர்

nathiya_450நதியா என்ற ஒரு நாயகியைப் புறந்தள்ளி ஒரு முழுமையான தொகுப்பை எங்ங‌னம் திட்டமிட முடியும் என்கிற வியப்பினை கைக்கொண்டு இதனை எழுதுகிறேன்.

பூவே பூச்சூடவா என்ற ஒரு திரைப்படத்தை இன்றைக்குப் பார்த்தாலும் ஒரு நாயகனின் தேவையற்ற சில அபூர்வமான படங்களில் ஒன்றாக நம்மால் உணரமுடியும். சிறியதொரு கால இடைவெளிக்குப் பிறகு பிடிவாதமான ஒரு பாட்டியாக நாட்டியப்பேரொளி பத்மினி நடித்த அந்தப் படத்தில் தமிழில் ஃபாசில் அறிமுகப்படுத்திய நடிகை நதியா, பெண்களின் கனவுக்கன்னியாக மாறியதில் எந்த விந்தையுமில்லை.

நதியா எதை அணிந்தாலும் அது பாணியாகிப்போனது. நதியா உச்சரித்த வார்த்தைகளை ஆண்களை விடப் பெண்கள் மனனம் செய்தார்கள். நதியா கொண்டை முதல் நதியா நகப்பூச்சு வரை சந்தையில் விற்றுத்தீர்ந்தது. எங்கும் நதியா, எதிலும் நதியா என தமிழ் மக்களின் குடும்பங்களில் ஒருவராக நினைக்கப்பட்டார் நதியா. இந்த வாக்கியங்களில் ஏதேனும் மிகை இருக்கலாம். ஆனால் நிச்சயம் குறை இருக்காது.

அந்த அளவுக்கு ஒரு காலகட்டத்தை தன்பிடியிலேயே வைத்திருந்த நடிகை நதியா.

நிலவே மலரே, அன்புள்ள அப்பா, உயிரே உனக்காக, பூக்களைப் பறிக்காதீர்கள், கண்ணே கலைமானே, பாடு நிலாவே, பூ மழை பொழியுது, சின்ன தம்பி பெரிய தம்பி, உனக்காகவே வாழ்கிறேன், பூவே இளம் பூவே, பவழமல்லிகை, மந்திரப் புன்னகை என தமிழிலும், நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு, கண்டு கண்டறிஞ்சு, கூடும் தேடி, பஞ்சாக்னி, ஷ்யாமா போன்ற மலையாளப்படங்களிலும் நடித்த நதியா ஒரு பதினைந்து ஆண்டுகாலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த நாயகியாக இருந்தார் என்பது உண்மையான ஒன்று.

தம் குழந்தைகளுக்கு நதியா எனப் பேர் சூட்டி மகிழ்ந்தனர் தமிழ்மக்கள். நதியாவுக்கு நடிகர்களுக்கு நிகரான ரசிகர்மன்றங்கள் இருந்தது. இத்தனைக்கும் நதியா திரைப்படங்களில் தோன்றிய அனைத்துப் படங்களிலும் சின்னப்பெண்ணாக, துள்ளல் நாயகியாக, காதலியாக, சோகம் ததும்பும் பிரிவுகொண்ட இளம்பெண்ணாக என எல்லா படங்களிலும் மிகச் சாதாரணமான வேடங்களிலேயே நடித்தார் என்பது கவனத்திற்குரியது. நதியா என்ற ஒரு நாயகி திரையில் தோன்றியதுமே தாங்கள் வசீகரிக்கப்படுவதை ஒவ்வொரு ரசிகனும் விரும்பியே நம்புமளவுக்கு தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் தன் துள்ளலை, இயல்பான நடிப்பை கலந்தே தந்தார் நதியா.

அவரது நடிப்பில் மறக்க முடியாத படங்கள் என்றால் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே சொல்லலாம். வெற்றிக்குதிரை நாயகர்களிடம் இருந்து விலகியே இருந்தார் நதியா. கார்த்திக் உடனும் கமல் உடனும் நடிக்கவே இல்லை. கிட்டத்தட்ட தன் திருமண முடிவை எடுத்த காலகட்டத்தில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் ராஜாதிராஜா படத்தில் ரஜினி உடன் இணை சேர்ந்தார் நதியா. அந்தப் படத்தில் ராதா இன்னுமொரு நாயகி. ஆனால் படம் பார்த்த அத்தனை பேருக்கும் அப்படத்தில் வண்ணமயமான பகுதியாக நதியா, ரஜினி இணைத்தோற்ற காட்சிகளைத் தான் குறிப்பிடப் பிடிக்கும்.

பத்மினி உடன் பூவே பூச்சூடவாவிலும், சிவாஜி கணேசனுடன் அன்புள்ள அப்பாவிலும், ரஜினி உடன் ராஜாதிராஜாவிலும், விஜயகாந்த் உடன் பூமழை பொழியுது படத்திலும் நடித்தார் நதியா. அத்தனை படங்களும் அவரவர்க்கு வித்தியாசமான படங்களாக அமைந்தன. அத்தனை படங்களையும் தனதாக்கிக் கொண்டார் நதியா. அவர் நடித்த பாத்திரங்கள் கல்லூரிப்பெண், சூட்டிகையான பெண், காதலிக்கிற பருவ வயது பெண் என்றாலும் தானணிகிற ஆடைகள் பேசுகிற வசனங்கள், தனது அசைவுகள் என ஒவ்வொன்றிலும் படு கவனமாகவும் நேர்த்தியாகவும் இருந்தவர் நதியா. அவரளவுக்கு தன் பாத்திரங்கள் தேர்வில் கடுமையைக் கடைப்பிடித்த இன்னுமொரு நடிகையாக ரேவதியை மட்டுமே குறிப்பிட இயலும்.

சின்ன தம்பி பெரிய தம்பி படத்தில் அத்தனை செல்வந்தத்தையும் இழந்து ஏழை மாமன் வீட்டில் வந்து வசிக்கிற நதியாவுக்கு நின்று போன திருமணத்தை மீண்டும் நடத்திவிட முயலும் மாமன்களாக பிரபுவும் சத்யராஜும் நடித்தனர். இருவருமே ஒரு கட்டத்தில் அவரை விரும்ப, பிரபுவை சேர்வார் நதியா. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் நதியா நன்றாக வாழவேண்டும் என்று பிரார்த்தித்தபடியே படம் பார்த்தனர் என்பது ருசிகரம்.

உனக்காகவே வாழ்கிறேன் படத்தில் ஒரே விபத்தில் தத்தமது காதலிணையை தொலைத்த சிவக்குமாரும் நதியாவும் சோகம் பொழிந்து உணர்ச்சிக் குவியலாக நடித்த படம். அப்படத்தை பார்த்தவர்கள் நதியா, சிவக்குமார் இருவரின் நடிப்பில் கரைந்து காணாமற்போயினர்.

மந்திரப்புன்னகை படத்தில் நதியா சத்யராஜுடன் நடித்தார். அது ஒரு வெற்றிப்படம். நதியாவுக்கு மேலும் புகழ் சேர்த்தது.

தான் நிற்கிற நிலத்தை தனதாக்கிக் கொள்கிற வல்லமை சில அபூர்வ நாயகியருக்குத் தான் வாய்த்தது. பானுமதி ராமகிருஷ்ணா, டி.ஆர்.ராஜகுமாரி, அவர்களிருவருக்குப் பின் நதியா. அவரது வேடங்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டுப் பெண்ணை நினைவுபடுத்துவதாகவே இருந்தது. அவரது வெற்றி பக்கத்து வீட்டுப்பெண்களத்தனை பேருக்கும் நதியா போலவே வாழும் ஆவலை விதைத்தது.

நதியாவுக்கென்று ஒரு காலம் அமைந்தது. அவர் நடித்துக்கொண்டிருந்த காலம் முழுவதும் அவர் ஏற்ற வேடங்களும் அவர் மறுத்த வேடங்களுமாகவே இருகூறாய்ப் பிரிந்தது தமிழ் சினிமா. சமகால நாயகியரான அமலா, குஷ்பூ, கௌதமி, ஷோபனா போன்றோர் இரு விதமான வேடங்களையும் ஏற்கவே நிர்பந்திக்கப்பட்டனர். கவர்ச்சிகரமான உடலழகை வெளிப்படுத்துகிற வேடங்கள் எதையுமே நதியா அண்டவிடவே இல்லை. நதியா தன் முகத்தை, தன் ஒல்லியான உடலமைப்பை நம்பினார். மக்கள் நதியாவை மொத்த அழகியாகவே ஏற்றுக்கொண்டாடினர். அவர் ஒரு படத்தின், ஒரு ஃபிலிம் துண்டத்திலும் தன் முடிவை மாற்றிக்கொள்ளவே இல்லை.

இறுதிவரை வெற்றிகரமாகப் பயணிக்கிற சூட்சுமத்தை நதியா அறிந்தே வைத்திருந்தார். அவர் பரபரப்பாக இருந்த காலகட்டத்திலேயே திருமணம் செய்துகொண்டு திரைவாழ்வை உதறினார். நதியாவை அழியாத கோலங்களிலொன்றாக மறக்க இயலாத பொக்கிஷமாக போற்றலாயினர் தமிழ்மக்கள்.

அவர் ஒரு காலகட்டத்தின் நாயகி. நதியா என்று சொன்னாலே நமக்கு புன்னகையுடன் கூடிய அன்பு ததும்பும் முகம் தோன்றும். எல்லாப் பெண்களும் தேவதைகளாகிவிட முடியாது. போலி தேவதைகளுக்கு மத்தியில் நிஜமானதொரு நட்சத்திரம் நாடியா மொய்து என்ற இயற்பெயர் கொண்ட நதியா. மறக்கவும் புறக்கணிக்கவும் முடியாத மகாநடிகை. தான் நிற்கிற நிலத்தை தன் வசீகரத்தால் அபகரிக்கிற அபூர்வ தாரகை. ஒரு பத்திரிக்கையின் தொகுப்பில் தான் இடம்பெறவில்லை என்றாலும் கூட, தமது கோடானுகோடி ரசிகர்களில் ஒரு கட்டுரையாளன் எழுதுகிற தனித்த கட்டுரையை உருவாக்கிவிடக்கூடிய மந்திரப்புன்னகை நதியா.

Pin It