உலகம் உருண்டை என்று முதன் முதலில் அறிவியல் எடுத்துரைக்க எத்தனித்தது. மதவாதிகள் மருண்டனர். வெகுண்டெழுந்து எதிர்த்தனர். தங்களது மேதாவிலாசத்தின் மீது மிகை மதிப்புக் கொண்டு, அறிவியல் அறிஞர்களை முட்டாள்களாகப் பாவித்து எள்ளி நகையாடினர். அவர்கள் வீசிய வினாக் கணைகளுள் ஒன்று பின்வருமாறு:

உலகம் உருண்டையானால் நியாயத் தீர்ப்பு வழங்கும் நாளில், எல்லோரையும் கடவுள் ஒரே நேரத்தில் எப்படிப் பார்க்க முடியும்? அப்படி வசதியில்லாத ஒரு வடிவத்திலா கடவுள் உலகத்தைப் படைத்திருப்பார்? எனவே உலகம் தட்டையானதுதான்.

இதனை இன்று வாசிக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? ‘அடடா, மனிதர்கள் இப்படியெல்லாம் விசித்திரமாக சிந்தித்தார்களா!’ என்று வியக்கவும் நகைக்கவும் தோன்றுகிறது இல்லையா? ஆனால் இவர்கள் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையை மனிதர்கள். நமக்கு இப்போதெல்லாம் சமகாலத்திலேயே இது போன்ற அறிவு முதிர்ச்சியான விவாதங்களையெல்லாம் இப்போது அதிகமாகக் கேட்க முடிகிறது. உதாரணம் தேவையா? இதோ பாருங்கள், ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆவணத்தைப் படித்து முடிக்கும் போது நாம் மேலே குறிப்பிட்டிருப்பவர்களைவிட, நம்மில் சிலர் பெரிதாக ஒன்றும் வளர்ந்து விடவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

இந்த ஆவணத்தைப் படிப்பதற்கு முன் அதன் கலைச் சொல்லகராதியைப் புரிந்து கொள்வது அவசியம் என்று அந்த ஆவணம் சொல்கிறது. எனவே நாமும் அதிலிருந்தே தொடங்குவோம்.

periyar_28தமிழ்:- தமிழ் மொழிக்கான விளக்கமே இவர்களின் இன அடிப்படையிலான பாராளும் ஆசையைப் பதிவு செய்கிறது. இதே கலைச் சொல்லகராதியில் அரசு என்பது வன்முறைக் கருவி என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அரசு என்ற அமைப்பையே வன்முறைக் கருவியாகப் பார்க்கும் ஓர் அமைப்பு, அதுதான் நாளை உலகை ஆளப்போகும் மொழி என்று எப்படி விளக்கம் தரமுடியும் என்று நமக்குப் புரியவில்லை.

யார் தமிழர்?:- இதற்கான விளக்கம் தமிழியத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டவர்கள் தமிழர் நலன் நாடுவோர் வாழும் தமிழர் என்றும், பிறப்பு வழித்தமிழர் என்பவர் மரபு வழியாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடுகிறது. தாய்மொழி என்றால் நமக்குத் தெரிகிறது. மரபு வழித் தாய் மொழி என்றால் என்ன என்று தெரியவில்லை. இதற்கான விளக்கமும் அதில் இல்லை. ஆனால் தமிழ் நிலப்பரப்புக்கும் தமிழர் அடையாளத்திற்கும் யாதொரு தொடர்பும் சுட்டப்படவில்லை.

தமிழியம்:- யார் தமிழர் என்ற கேள்விக்கு தமிழியத்தை வாழ்வியல் நெறியாகக் கொண்டவர் என்று ஏற்கனவே பார்த்தோம். இங்கு தமிழியத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் அய்ந்திணை சார்ந்த இயற்கை நெறி என்பதுவே முதலாவதாகச் சுட்டப்படுகிறது. நமக்குத் தெரிந்து தமிழ் இலக்கியங்கள் பேசுகிற அய்ந்திணை நெறி என்பது, நிலத்தை அடிப்படையாக வைத்து ஆண் பெண் களவு சார்ந்த ஒழுக்கங்களை வரையறை செய்கிறது. இந்த வரையறையை இவர்கள் யாராவது இன்றைய வாழ்க்கைச் சூழலில் நிலத்துக்கும் குறிப்பாக பெண்கள் ஒழுக்கத்துக்குமான தொடர்பை மீள் வாசிப்பு செய்து எழுதியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படியிருக்க பொத்தாம் பொதுவாக இந்த அய்ந்திணை ஒழுக்கத்தைத் தமிழியம் என்பதற்கான அடிப்படையாக வைத்து அந்த தமிழியத்தை யார் தமிழர் என்ற விளக்கத்தோடு இணைத்து விட்டிருக்கிறார்களே....??????

மனுவியம்:- பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழிலிருந்தும் தமிழியத்திலிருந்தும் பிரிந்து பல்வேறு மொழிகளாய்ப் பிறப்பு வழி உயர்வு தாழ்வாய் - உடல் வண்ணத்து வழி, உயர்வு தாழ்வாய் - ஒரு குலத்துக்கொரு நீதியாய்த் திரிந்து தமிழர்க்கு மூலப்பகையாய் மூண்டு நிற்கும் கோட்பாடு. அதாவது இந்த விளக்கம் என்ன சொல்ல வருகிறது என்பதைச் சொல்ல வேண்டுமென்றால், நமக்கு ஏற்கனவே உள்ள புரிதலை முதலில் வைக்க வேண்டும். இந்த விளக்கத்தின் வழி மனு நீதிதான் சுட்டப்படுகிறது என்றால் அது ஆரியர்கள் தங்களால் அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை காலந்தோறும் அடிமைப்படுத்தி ஆள மன்னர்களுக்கு வகுத்துத் தந்த சட்ட மறை என்பதே இதுகாறும் திராவிட இயக்கங்களாலும் தமிழியக்கங்களாலும் தனித்தமிழ் இயக்கங்களாலும் இந்த மண்ணில் செய்யப்பட்டு வந்த பரப்புரையாகும். எதிர் முகாம்களில் நேரு போன்றோரும் இந்தக் கோட்பாட்டை மறுத்தவர்களில்லை.

இந்தக் கோட்பாடானது கால்டுவெல் போன்ற வரலாற்று அறிஞர்களால் நிறுவப்பெற்று, அக்காலப் பார்ப்பனரல்லாத கல்விமான்களால், தங்கள் சமூகம் தாழ்வு நிலையை எதிர்த்துப் போராடும் பொருட்டு மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகும். பெரியார் இந்தக் கோட்பாட்டை எடுத்தாண்டபோது அவர் தனது சுயசிந்தனையின் பாற்பட்டு அதற்கு அளித்த விளக்கம் தனித்தன்மையானது. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, ஆரியர்கள் இரத்தக் கலப்பின்றி ஆரியர்களாக இருந்து வருகிறார்கள் என்றோ, திராவிடர்கள் தனித்த திராவிடர்களாக இருந்து வருகிறார்கள் என்றோ அவர் வாதிடவில்லை. மாறாக அந்த ஆரியர்களின் இரத்தம்தான் தங்களுடையது என்று இந்நாட்டின் பார்ப்பனர்கள் நம்புவதாலேயே அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களை எதிர்க்கும் இயக்கத்தைத்தான் நடத்துவதாக அவர் பல்வேறு இடங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எனவே ஆரிய திராவிட கோட்பாட்டை அடிப்படையாக வைத்து, தாங்கள் ஆரியர், தங்கள் இரத்தம் உயர்வானது என்று பார்ப்பனர்கள் 19ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தச் சமூகத்தை வழி நடத்தி வந்த காரணத்தினாலேயே அந்த வேறுபாடு நமக்கும் களமாயிற்று என்பதுதான் வரலாறு. ஆனால் ஒரு நூற்றாண்டு காலத் திராவிட இயக்க போராட்டத்தின் விளைவாக இனி இந்த மண்ணில், நான் ஆரியன் - உன்னைவிட உயர்ந்தவன் என்று எவரும் பொது வெளியில் வாயைத் திறக்கக் கூட முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்ட பிறகு, இன்று அவர்கள் வேறு ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். அதுதான் ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல நம்மிலிருந்து உருவானவர்களே என்ற பரப்புரையாகும். சரி அப்படியே இருக்கட்டும். நாம் பெரியாரியல்வாதிகளாகவே அவர்களை எதிர்கொள்வோம். நோய் வெளியிலிருந்து உருவாகி உள்ளே வந்தால் என்ன? உள்ளே இருந்து வெளிப்பட்டால் என்ன நோயை ஒழித்துத்தானே ஆக வேண்டும்? ஆனால் இங்கு பிரச்சினை அதுவன்று. கருப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு, பெரியார் தொண்டர்களால் வளர்க்கப்பட்ட சீமான் தலைமையில் இயங்குகின்ற ஒரு கட்சி ஆவணம் ஏன் இப்படி அவர்களின் தமிழ் மண்ணுரிமைக்காக வரிந்து கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

திராவிடம்:- பல காலகட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்று மனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு. திராவிடர் என்பது ஓர் இனத்தை அந்த மக்களைக் குறிக்கும் ஒரு சொல். திராவிடம் என்றால் அம்மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணத்தில் அது கோட்பாடாகிறது. அது எப்படி? சரி, மனுவியம் சார்ந்து பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போனது என்கிறார்கள். மனுவியம் என்பதை ஒரு கோட்பாடென்றார்கள் முதலில், தமிழ் என்பது மொழி என்பதில் அவர்களுக்குச் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் ஒரு கோட்பாடும், ஒரு மொழியும் கலந்து பல்வேறு மொழிகள் தோன்றியதா? மனிதர்கள் குதிரைகளைப் புணர்ந்து ரிஷிகள் தோன்றினார்கள் என்று சிந்திப்பவர்களால்தான் இப்படியும் புனைய முடியும். தமிழ் வடமொழியுடன் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் தோன்றியது என்று எளிமையாக எழுத வேண்டியதற்கு ஏன் இப்படி ஒரு திணறல்?

அந்தணன், பார்ப்பான், ஆரியன், பிராமணர்:- இந்த சொற்களுக்கு முறையே ஈவு இரக்கங்கொண்ட அறநெறியாளன், ஆய்வாளன், இளைஞன், சீரியன், உயர்ந்தவன், பேரமணன் என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இந்தக் கட்டுரையில் சுட்டியிருக்கும் பல்வேறு செய்திகளுக்கு வேறு எந்தச் சான்றும் தேவையில்லையென்பதை இந்த விளக்கம் போதுமான அளவில் நிரூபித்து விட்டதாகவே கருதுகிறோம். சரி. இந்த விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதன் பின் சில வினாக்கள்! நம் நாட்டில் பார்ப்பனர்கள், பிராமணர்கள் என்று ஒரு சாதியார் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களைப் பற்றிதான் நீங்கள் எழுதியிருக்கிறீர்களா இல்லை, பொதுவாக அறநெறியாளர்கள், ஆய்வாளர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்ற பொருளில் எழுதியிருக்கிறீர்களா? இவ்வினாவிற்கு முதலாவது விடைதான் உங்களுடையது என்றால் இந்தக் கட்டுரையை இங்கேயே முடித்து விடலாம். இல்லை இரண்டாவது தான் உங்கள் விடை என்றால், நண்பர் சீமான் நிச்சயம் ஒரு அறநெறியாளர் என்ற நம்பிக்கையில் கேட்கிறோம், உங்கள் பார்ப்பன நண்பர்கள் யார் வீட்டுத் திருமணத்திற்காவது நீங்கள் புரோகிதராக இருந்து ஒரு திருமணத்தை நடத்தி வைத்துக் காண்பிப்பீர்களா?

மொழி விடுதலை, பெண் விடுதலை, சாதியொழிப்புப் பணிகளை ‘பகுதித் தமிழ்த் தேசியப் பணிகள்’ என்றும் இதில் பெண்விடுதலை, சாதியொழிப்புப் பணிகளை ‘மேற்கட்டுமானப் பணிகள்’ என்றும் வரையறை செய்கிறது. அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய சொற்றொடர்கள் அவை பிறந்த இடத்திலேயே ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்படியொரு புதிய அரைகுறைப் பிரசவம்.

கட்சித் திட்டம்:- கட்சித் திட்டம் முதலில் வரலாறு மற்றும் தோற்றுவாய் பற்றிப் பேசுகிறது. இதில் கலைச் சொல்லகராதி தந்த விளக்கங்களுக்கு மாறாக ஆரியப் பார்ப்பனர் ஈரானியப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று பதிவு செய்கிறது. ஆனால் அவர்கள் வருகையின் போது, இங்கிருந்தவர்கள் திராவிடர்கள் என்ற வரையறையை மறுத்து, அவர்களின் கலப்பினால் உருவானவர்களே திராவிடர்கள் என்று கூறுகிறது. இங்கு கலப்பு என்பது மொழிக்கலப்பா, இரத்தக் கலப்பா என்ற வினா விடையின்றி நிற்கிறது. பொதுவாகவே இரத்தக் கலப்பு தடுக்க முடியாமல் நடந்துதான் இருக்கும் என்பது வேறு.

அங்கீகரிக்கப்பட்ட இரத்தக் கலப்பினால் ஆங்கிலோ இந்தியர் போன்று புதிய பிரிவு உண்டாவது வேறு. இவர்கள் எந்தக் கலப்புக் கூட்டு இனம் இங்கு உருவாகியதாகக் கூறுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை.

நாம் தமிழ் மொழியில் வடமொழி கலந்ததால், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பிறந்து, அந்த மொழி பேசும் மக்கள் முறையே மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் என ஆனார்கள் என்றே கூறி வருகிறோம். ஏன் இத்தனை தெளிவின்மை? குழப்பம்? இவை திராவிட இயக்கத்தை வலிந்து தாக்குவதையே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதால் எழுந்தவையே தவிர வேறல்ல.

அதன்பின் இந்த ஆவணம் திராவிடர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் கலைச் சொல் விளக்கத்தில் திராவிடர் என்ற சொல்லுக்கு விளக்கம் இல்லை. இந்த ஆவணம் சுட்டும் திராவிடர் என்போர் யார்? நம்மைப் பொறுத்தவரையில் திராவிடர் என்ற சொல் இன்றைய நிலையில் தமிழர்களை மட்டுமே குறிக்கிறது. ஏனெனில் இந்தச் சொல்லுக்கு இன்று மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ உரிமை கொண்டாடவில்லை. வரலாற்றில் இவர்களையும் உள்ளடக்கி நம்மையும் (தமிழர்களையும்) உள்ளடக்கி இந்தச் சொல் ஒலித்து வந்தது. மொழிவாரி மாகாணம் பிரிந்தவுடன் இச்சொல் பெருவாரியாக நம்மால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் திராவிடர் இயக்கங்களால் ஆரிய இன எதிர்ப்புச் சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதேயல்லாமல், இந்தப் பெயரால் எந்த தமிழரல்லாதோருக்கும் சலுகை வழங்கப்படவில்லை. தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவர்க்கான சலுகைகள் மொழிச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாக இருக்கிறதேயொழிய, திராவிடர் என்ற பெயரில் அல்ல.

இந்த ஆவணமும் பிறமொழியாளர் நலன் காக்கும் என்றுதானே உறுதியளிக்கிறது? தமிழ் நாட்டில் பிற மொழியாளர்கள் ஆட்சியாளர்களாக வருவதற்கு வழி செய்வது இந்திய அரசியல் சட்டம்தானே தவிர, திராவிட அரசியல் சட்டம் என்று எதுவும் தமிழ் நாட்டில் நடப்பில் இல்லை. சென்னை மாகாணத்தில் அரசியல் மேலாண்மை செய்யும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருக்கும் பட்சத்தில் தெலுங்கர்கள் ஏன் ஆளுக்கு முந்தி 1920லேயே ஆந்திர மாநிலம் வேண்டும் என்று கேட்க வேண்டும்? தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் இம்மூன்றையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிக்க நேரு திட்டமிட்ட போது, அதனை எதிர்த்து முறியடித்த இயக்கம் எது? எந்த அடிப்படையில் எந்த ஆதாரத்தில் திராவிட இயக்கத்தை நீங்கள் தமிழர்களுக்கு எதிராக நிறுத்துவீர்கள்? திராவிடர் கழகங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில், கட்டப்பட்ட சாதியடிப்படையில்லாமல் தமிழர்களைத் திரட்டிய ஒரே ஒரு கட்சியை உங்களால் காட்ட முடியுமா? அந்த இயக்கத்தை முதற் பகை என்று சொல்கிற ஓர் ஆவணத்திற்கு நம்மால் என்ன மரியாதையைத் தர முடியும்?

இட ஒதுக்கீடு:- ஆவணத்தில் குழப்பம் தொடர்கிறது. இட ஒதுக்கீடு என்ற சூழ்ச்சியை திராவிடர் எடுத்துத் தமிழருக்குத் தருவது போல் நாடகமாடித் தெலுங்கர்களுக்குத் தந்து விட்டார்களாம். ஆதாரம் தெலுங்கர்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்குவதிலிருந்தும், அமைச்சரவையில் பேரளவில் இடம் பெறுவதிலிருந்தும் சரி பார்த்துக் கொள்ளலாம் என்கிறது. கல்வி வேலை வாய்ப்பில் பெற்ற இட ஒதுக்கீட்டிற்கும், தமிழக அரசியல் கட்சிகளில் தெலுங்கர்கள் இருப்பதற்கும் என்ன தொடர்பு? அதே போல் சாதிவாரி ஒதுக்கீட்டினால் சாதிகளுக்குள் முரண்பாடுகள் முற்றி வருகின்றன என்கின்றனர். சாதி அடிப்படையில் ஒதுக்கீடே தவறு என்று சொல்லி விட்டு, அதே கையோடு ஆளுமைச் சாதியார் பறித்த நிலங்களை மீட்கும் பணியைப் பற்றிப் பேசுகிறது ஆவணம்.

இந்தி எதிர்ப்பு:- இட ஒதுக்கீடாக இருக்கட்டும், இந்தி எதிர்ப்பாக இருக்கட்டும் திராவிடர் கழகத்தின் பங்களிப்பெல்லாம் இவர்கள் அகராதியில் நடிப்பாக மாற்றப்பட்டு விடுகிறது. அது எப்படி என்று தெரியவில்லை.

அண்ணல் தங்கோ முயற்சியால் நிறுவப்பட இருந்த தமிழர்க் கழகத்தை முறியடித்து திராவிடர் கழகம் நிறுவப்பட்டதாகச் சொல்கிறது இந்த ஆவணம். சாதியொழிப்பை இலக்காக வைத்துச் செயல்பட்ட அதே நேரத்தில் அந்தந்தச் சாதிகள் தங்களுக்கென இயக்கம் கட்டித் தங்கள் சமூகத்தை முன்னேற்றுவதற்காக இயங்க வேண்டும் என்று வழிகாட்டியவர் பெரியார். பெண்கள் தங்களுக்குள் சிறு சிறு அமைப்புகளை நிறுவிக் கூடியிருக்கப் பழக வேண்டும் என்று ஊக்குவித்தவர் பெரியார். தன்னுடைய இயக்கம் மட்டும்தான் இருக்க வேண்டும் வேறு இயக்கங்கள் கூடாது என்று நினைத்தவர் இல்லை அவர். அவர் எதற்காகத் தமிழர் கழகத்தை முறியடிக்க வேண்டும் என்றே நமக்குப் புரியவில்லை. 1944இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட சுயமரியாதை இயக்கம் 1925லிருந்தே செயல்பட்டு வந்து ஒன்றுதானே தவிர திடீரென தோன்றிய இயக்கம் அன்று.

தமிழ் மொழியும் பெரியாரும்:- தனித் தலைப்பில் எழுதப்பட வேண்டிய பகுதி இது. நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பெரியார் தன் நாட்டு மக்களை நேசித்தார். அவர்கள் அறிவும் மானமும் பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்று அரும்பாடுபட்டார். அதற்கெனவே சிந்தித்தார். அதற்கெனவே வாழ்ந்தார். அந்த மக்கள் நல்வாழ்வுக்கு மொழி உரிமை தேவைப்படும்போது, அதற்காகக் குரல் கொடுத்தார். அந்த மொழிப்பற்றினால் அதே தமிழர் மடமையிலும், சாதிச் சேற்றினுள்ளும் பெண்ணடிமையினுள்ளும் தள்ளப்படும்போது அந்த மொழியிலிருந்து விடுபட்டு வா என்று அழைத்தார். அவருடைய அந்த அழைப்பை அவரது காலத்திய தமிழகம் உரிய முறையிலேயே புரிந்து கொண்டது. ஏனெனில் அன்றைய தமிழகத்தின் தேவை பெரியார். இன்று இவர்களின் தேவைகள் வேறு வேறு. இவர்களை மறுப்பதற்குப் பெரியாரின் உரைகளிலிருந்து ஆயிரம் சான்றுகளை நம்மால் தூக்கிப்போட முடியும். ஆனால் பத்து வயதுக் குழந்தை புரிந்து கொள்வதைக் கூட இவர்கள் புரிந்து கொள்ளமாட்டேன் என்று சாதிப்பார்கள். பாவாணரிலிருந்து எத்தனையோ தமிழறிஞர்கள் தமிழை வளர்த்திருக்கலாம் ஆனால் தமிழுக்குத் தன்மானத்தை மீட்டுத் தந்தது திராவிடர் இயக்கம் மட்டும்தான். அந்தப் பெருமையும் பெரியாருக்குரியதுதான்.

ஈழத் தந்தை செல்வாவும் தமிழர் தலைவர் பெரியாரும்:- செல்வா பெரியாரைச் சந்தித்தபோது, பெரியார் நானே ஓர் அடிமை. இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி என்று கேட்டார் என்ற செய்தியை இந்த ஆவணத்தின் கற்பனைத் தேர், அவர் சிங்களத்திற்கு ஆதராவாக நின்றார் என்று இழுத்துச் செல்கிறது. திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுத இந்த ஆற்றல் பயன்படலாம். ஆனால் வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படாது என்பது நம் கருத்து. மேலும் பெரியாருக்கும், தந்தை செல்வாவுக்கும் நடந்த உரையாடல் என்பது இந்த ஒற்றை வரியாக இருந்திருக்காது. அந்த முழு உரையாடல் நமக்குத் தெரியவில்லை. ஆனால் பெரியார் உடனடியாக ஓர் ஆயுதப் போராட்டத்தைப் பரிந்துரைத்திருக்க மாட்டார்.

‘ஜின்னாவுக்குப் பிரிந்து போகும் ஆலோசனையை வழங்கியதே நான்தான். ஆனால் ஜின்னா பெற்ற வெற்றியை நான் எனது மக்களுக்குப் பெற முடியவில்லை. காரணம் ஜின்னாவால் மதத்தைச் சொல்லி தனது மக்களை ஒன்றுதிரட்ட முடிந்தது. ஆனால் சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் இந்த மக்களை அது போல் ஒன்று திரட்ட முடியவில்லை’ என்று பெரியார் பதிவு செய்கிறார்.

இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஒன்று பெரியாரால் ஓர் அடிப்படைவாதக் கருத்தியலில் மக்களை ஒன்றிணைக்க முடியாது. ஏனெனில் அவர் அதைச் செய்ய மாட்டார். மற்றொன்று சாதிப் பிரிவினைகளை வென்றெடுக்காமல் தமிழர் ஒற்றுமை சாத்தியமில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் வளர்த்தெடுத்த தமிழர் என்னும் உணர்வுதான், 1983களில், சிங்கள வன்முறையில் தப்பி ஓடி வந்த தமிழ் இளைஞர்களை இந்த மண்ணில் தாங்கிப் பிடித்தது. அவர்களுக்கு தஞ்சமளித்த தொன்னூறு விழுக்காடு குடும்பங்கள் திராவிடர் கழக, திராவிடர் முன்னேற்றக் கழகக் குடும்பங்கள்தான். அந்த இளைஞர்கள்தாம் போராட்டக் குழுக்களை உருவாக்கினார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலம்தான். நெஞ்சு கனக்கும் சோகம்தான். ஆனால் ஈழப் போராட்ட வரலாற்றை அதிலிருந்து மட்டுமே பார்க்க முடியாது.

முடிவுரை:- தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பிற மாநிலத்தவர் அதிகம் பெற்றிருந்தால், அதனை எடுத்துரைத்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது எந்தவொரு தமிழர் இயக்கத்திற்கும் கடமையேயாகும். ஆனால் அவற்றிற்கெல்லாம் மேலாகத் தென் மாநிலங்களைப் பகையிலேயே வைத்திருக்கும் மத்திய அரசு இருக்கிறது என்பதே உடனடி கவலைக்குரியதாகும். இவ்வளவு பேசிய இந்த ஆவணத்தில், மானுடம், மனித நேயம் என்ற சொற்கள் இடம் பெறவேயில்லை. ஆனால் உலகப் பார்வையோடு தமிழினத்தின் உயர்வைப் பற்றிக் கவலைப்பட்ட, சிந்தித்த ஒரு பேரியக்கத்தைக் கொச்சைப்படுத்தியிருப்பதை வரலாறு மன்னிக்காது.

திராவிடம் என்ற சொல்லால் தமிழ் என்ற முன்னெடுப்புகளையே தடுத்தார்கள் என்று இந்த ஆவணம் சொல்கிறது. பகுத்தறிவாளர் கழகம், சிந்தனையாளர் மன்றம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம் இவையெல்லாம் பெரியாரியக்கத்தின் அமைப்புகள்தாம். விடுதலை, குடி அரசு, உண்மை, புரட்சி, இதோ இந்தக் கட்டுரையைத் தாங்கி வரும் கருஞ்சட்டைத் தமிழர் - இவையெல்லாம் அவர்தம் இதழ்களின் பெயர்கள். இதிலெல்லாம் திராவிட என்ற முன்னொட்டு எங்கே இருக்கிறது? தமிழ் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே அந்த இயக்கத்தின் சாதனையில்லையா? தமிழகம் ஒருபோதும் ‘நாம் தமிழர்’களின் இந்த நன்றிகெட்டதனத்தை ஏற்றுக் கொள்ளாது.

Pin It