"மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்தவும் சட்டம் ஒழுங்கை காக்கவும் தேச பாதுகாப்புக்காகவும் இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது" என்கிற முன்னுரையுடன் வழக்கம்போல் ஆர்ப்பாட்டமாகத் தொடங்குகிறது, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் மீனவர் உரிமைச் சட்டம். மீனவத் தொழிலை ஒழுங்குப்படுத்தப் போகிறோம் என்ற முஸ்தீபுடன் வந்திருக்கும் இந்தச் சட்டம், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளையும் பாதுகாக்குமா?

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், அதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தச் சட்டப்படி ஒவ்வொரு மீனவனும் கட்டாயமாக தனது படகையும் கலங்களையும் கட்டணம் செலுத்தி அரசிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத படகைக் கொண்டு மீன் பிடிக்க செல்ல முடியாது. இந்தப் படகுகள் மத்திய அரசு அறிவிக்க இருக்கும் இடங்களில் மட்டும், அனுமதிக்கப்பட்ட மீன்களை மட்டும், வரையறுக்கப்பட்டுள்ள கருவிகளை கொண்டு மட்டும், அவர்கள் சொல்கிற காலங்களில் மட்டுமே பிடிக்க வேண்டும். ஒவ்வொரு மீனவனும் தனது பதிவை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒன்று மாற்றி ஒன்றாக பல்வேறு கட்டுபாடுகளை இச்சட்டத்தின் பிரிவு 3 விவரிக்கிறது.

 

மேற்சொன்ன விதிமுறைகளை மீறி, எவரேனும் பதிவு செய்யாத படகில் கடலுக்குச் சென்றால் மூன்றாண்டு சிறை, ரூபாய் ஒன்பது லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என பிரிவு 9(1) கூறுகிறது. அதுமட்டுமல்ல பிரிவு 9(2)ன்படி இந்த குற்றம் (?) நிகழும்போது அந்தப் படகில் உள்ள ஊழியருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படுமாம். பிரிவு (6)ன்படி பதிவுசெய்யப்படாத படகு கடலுக்குள் இருந்தால், அந்த படகில் உள்ளவர்கள் மீன் பிடிப்பதற்கான எவ்வித தயாரிப்புகளையோ முயற்சியோ செய்யக்கூடாது, மீறினால் பிரிவு 10ன் கீழ் ரூபாய் ஒன்பது லட்சம் அபராதமும் பிரிவு 12ன்படி ரூபாய் 20 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

 

இந்த குற்றங்களை மீனவர்கள் செய்யாமலிருக்க, அவர்களை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கான அதிகாரங்களையும் தெரிந்துக் கொண்டால் அரசின் (உள்)நோக்கம் முழுமையாகத் தெரிந்துவிடும். இந்த சட்டம் சுதந்திர இந்தியாவில் மீனவ சமுதாயத்தை அடிமைகளாய் வாழ வைப்பதற்கான சட்டம் என்பதும் விளங்கும். பிரிவு 8(1)(1)ன்படி ஒரு அதிகாரி எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் மீனவனின் படகை சோதனையிடலாம். இதற்கு எந்த வகை பிடியாணையும் (Warrant)தேவையில்லை. அவ்வாறு சோதனையிடும்போது யாரேனும் அந்த அதிகாரியை தடுத்தாலோ அல்லது அவர் படகில்/ கப்பலில் ஏறுவதற்கு வசதிகளை செய்யாவிட்டாலோ அல்லது பதிவு ஆவணத்தை காண்பிக்க மறுத்தாலோ அந்த மீனவனுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10,000/- அபராதம் பிரிவு 15ன்படி விதிக்கப்படும். மேலும் பிரிவு 8(2)(c)ன்படி அந்த மீனவனின் படகை, வலைகளை, மீன்களை பிடியாணை இல்லாமலேயே அதிகாரி கைப்பற்றிச் செல்லலாம்.

 

பிரிவு 8(2)(நc)ன்படி எந்த மீனவனை வேண்டுமானாலும் பிடியாணை இல்லாமலே கைது செய்யலாம். இந்த பிரிவுகளின் மூலம் அதிகாரிக்கு அளவற்ற அதிகாரம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டவர்கள் 24 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 57 கூறுகிறது. ஆனால், இந்த சட்டத்தின் பிரிவு 8(4)(தீ)ன்படி கைது செய்யப்பட்டவர்களை எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம். இந்த சட்டம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து மனித உரிமைகளுக்கு எதிராக எழுதப்பட்டது என்பதை மேற்கண்ட பிரிவு தெளிவுப்படுத்துகிறது. வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளியின் படகையோ அல்லது கப்பலையோ அல்லது கைப்பற்றப்பட்ட பிற பொருட்களை பராமரிப்பதற்கு ஆகும் மொத்த செலவையும் குற்றவாளியே செலுத்த வேண்டும் என்கிறது.

 

மேற்சொன்ன பிரிவுகளைக் காட்டிலும் இந்த சட்டத்தின் மிகமிக மோசமானது பிரிவு 14 ஆகும். ஏனெனில் இந்த பிரிவின்படி மேற்சொன்ன குற்றங்களில் கைபற்றப்பட்ட படகுகள், வலைகள், மீன்கள், இன்னபிற அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்யலாம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்ட ஒருவர் அரசு மீதோ அல்லது தன்னை வேண்டுமென கைது செய்தார் என எந்த அதிகாரி மீதோ நடவடிக்கை எடுக்க இயலாது. ஏனெனில் அவர்களது நடவடிக்கை நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டதாக இச்சட்டம் கூறுகிறது. அதாவது, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் "மீனவன்" என்கிற சொல்கூட சுதந்திரமாய் இருக்காது.

 

தன் சொந்த நாட்டு மீனவர்களை இவ்வளவு கடுமையாக தண்டிக்கும் மத்திய அரசு, வெளிநாட்டினர் எவரேனும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைவது பற்றி என்ன சொல்கிறது? "வெளிநாட்டினர் தெரியாமல் வந்திருக்க கூடும். எனவே, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது" என்பதே. ஒருவேளை இச்சட்டம் மீனவ சமுதாயத்தின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைக்கு வருமெனில், எதிர்காலத்தில் கடலில் அந்நியனைத் தவிர இந்திய குடிமக்கள் எவரேனும் நின்றால்கூட ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என சட்டம் வரலாம். இந்தியாவை அண்டை நாட்டினருக்கு ஏலம் போட்டு விற்றுவிட்டு நம்மையெல்லாம் அடிமையாக்குவதற்கான முதல்படியே இச்சட்டம்.

 

மக்களுக்காக சட்டம் இருக்க வேண்டுமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இருக்க கூடாது. இந்த சட்டம் தானாக மாறினால் மாறட்டும். இல்லையேல் மாற்றுவோம்...

(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

 

Pin It