காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்!

“1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க! எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா? கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்சு பொரிக்கும்!”

'முதல்வன்' திரைப்படத்தில் சுஜாதா எழுதிய உரையாடல்! அவருடைய நினைவு நாள் வருகிற இதே பிப்ரவரி மாதம் வெளிவந்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இதைத்தான் நினைவுபடுத்துகிறது!

supreme court 255வழக்கில் முதன்மைக் குற்றம் சாட்டப்பட்டவரே ஜெயலலிதாதான். அவரே போன பிறகு வெளிவந்திருக்கிறது தீர்ப்பு – அவர் குற்றவாளி என்பதாக. இடைப்பட்ட காலத்தில் ஜெ.,  மேலும் இருமுறை முதல்வராகி இருக்கிறார். அதாவது,  ஜெயலலிதா என்பவர் ஒருமுறை முதல்வராக ஆட்சி செய்தபொழுது தவறு செய்தாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படுவதற்குள் மேற்கொண்டும் இரண்டு முறை அவர் முதல்வராக ஆகி விட்டார்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை “நீதியை நிலைநாட்டிய தீர்ப்பு”,  “அரசியலாளர்களுக்குப் பாடம் கற்பிக்கும் தீர்ப்பு”,  “வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு” எனவெல்லாம் தலைவர்கள்,  அறிஞர்கள்,  கலைஞர்கள்,  சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள் என எல்லோரும் புகழ்கிறார்கள்! அது பற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால்,  வழக்கின் முதன்மைக் குற்றவாளியே செத்து, தண்டனையிலிருந்து தப்பும் வரைக்கும் இந்த வழக்கு தாமதமாகியிருப்பது தவறு என்பது உறுதி. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நம்புகிறேன்.

ஆனால்,  இது பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் நம் மக்கள் இல்லை. “எப்படியோ,  சசிகலா முதல்வராகாமல் இந்தத் தீர்ப்பு தடுத்ததே!” என மகிழ்கிறார்கள் அவர்கள். ஏனய்யா,  அதற்காகவா இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது? இது ஏற்கெனவே முதல்வராக இருந்த ஜெயலலிதாவைத் தண்டிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா அல்லது சசிகலா முதல்வராகாமல் தடுப்பதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கா? இந்தத் தீர்ப்பினால் சசிகலா முதல்வராக முடியாமல் போனது ஒரு துணைவிளைவு (side effect),  அவ்வளவுதான். புற்று நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்து கூடவே சேர்த்து உடம்பிலிருந்த தேமலையும் குணப்படுத்தியது போலத்தான் இது. ஆனால்,  நாம் தேமல் குணமானதற்காக மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்; மருந்து சரியான நேரத்தில் கொடுக்கப்படாததால் புற்று முற்றிப் போனதைப் பற்றிக் கவலைப்படாமல். எந்த வகையிலாவது,  எப்படியாவது நல்லது நடந்தால் சரி என்கிற படிக்காத மக்களின் பரிதாபகரமான மனநிலைக்கு நம் முழு சமூகமும் ஆட்பட்டு விட்டதையே இது காட்டுகிறது.

இந்த நாட்டில்,  ஒருவர் தன் பொதுவாழ்வின் தொடக்கக் காலத்தில் குற்றம் புரிந்தாரா இல்லையா என்பதை அவர் வாழ்க்கையே முடிந்த இரண்டு மாதங்கள் கழித்துத்தான் தீர்மானிக்க முடியும்,  அதையும் நாம் வரவேற்போம் என்றால்... அந்த அளவுக்கு நம் நாட்டின் சீர்கேடான போக்கை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம் என்பதுதான் பொருள்! ஒரு சமூகத்தின் வேறெந்த சீர்கேட்டையும் விட அபாயகரமானது, சீர்கேடுகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளப் பழகும் மக்களின் மனநிலைதான். அது முதலில் மாற வேண்டும்!

அடுத்ததாக மாற வேண்டியது,  பணமும் பதவியும் இருந்தால் இறுதி வரைக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம் என்கிற இன்றைய நிலைமை. “காலம் கடந்த நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம்” என்பார்கள். இதையே குற்றவாளிகளை மனதில் வைத்துச் சொன்னால்,  “காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்!”. அதுவும் அரசியலாளர்களைப் பொருத்தவரை,  அவர்களுக்குத் தண்டனை தாமதமாக, தாமதமாக மக்கள்தாம் தண்டனை அனுபவிக்க நேர்கிறது. சமூகம்,  நாடு,  மக்கள்,  இவர்களின் எதிர்காலம் எல்லாம் நாளை தண்டிக்கப்படப் போகும் குற்றவாளிகள் கையால் தீர்மானிக்கப்படும் பேரிழிவு அதனால் உருவாகிறது. நீதிக்கு இதை விடப் பெரிய தோல்வி வேறு ஏதும் இருக்க முடியுமா? நீதி என்பது உரிய காலத்தில் கிடைத்தாக வேண்டும் என்பதற்கு இதை விடப் பெரிய காரணம்தான் இருக்க முடியுமா?

இப்படிச் சொல்வதால் நான் நீதித்துறையையோ,  நீதியரசர்களையோ குறை சொல்வதாக யாரும் தவறாக நினைக்க வேண்டா!

பெருகிக் கொண்டே போகும் மக்கள்தொகை,  அதற்கேற்ப நீதியரசர்கள் இல்லாதது,  காலியாக இருக்கும் நீதியரசர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பத் தவறும் அரசுகள் எனப் பல காரணங்கள் இருக்கையில்,  குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள் எனும் ஒரே காரணத்துக்காக நீதியரசர்களைக் குறை சொல்வது தவறு!

மேலும்,  ஒரு தீர்ப்பு என்பது எல்லா வகையிலான வாய்ப்புகளையும் சூழல்களையும் இண்டு, இடுக்கு விடாமல் ஆற, அமர ஆராய்ந்து வழங்கப்பட வேண்டியது. காரணம்,  இதில் வழக்கில் தொடர்புடையவரின் வாழ்க்கை,  குடும்பம்,  மானம், எதிர்காலம் ஆகியவை மட்டுமல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலான நீதியும் அடங்கியுள்ளது. எனவே,  தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய பின்விளைவுகளை மட்டும் கருத்தில் கொண்டு எந்த ஒரு வழக்கையும் துரித வேகத்தில் முடித்து வைத்து விட முடியாது என்பதால் நீதித்துறையின் வேகமின்மையையும் ஓரளவுக்கு மேல் நாம் குறை சொல்ல முடியாது.

இதற்கு ஒரே வழி, நீதி வழங்கும் முறையை மாற்றியமைப்பதுதான். தீர்ப்பளிக்கும் முறையில் ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறு மாற்றத்தின் மூலம் இனி எக்காலத்திலும் எந்தக் குற்றவாளியும் கடைசி வரை தண்டனை பெறாமலே தப்பித்து விடாமல் கண்டிப்பாகத் தடுக்க இயலும். அது எப்படி எனப் பார்ப்போம்!

இந்நாட்டில்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கக் கையாளும் தலையாய வழிமுறை,  இழுத்தடிப்பு! எடுத்ததற்கெல்லாம் காலக்கெடு (வாய்தா) கேட்பதில் தொடங்கி, தனிநீதிமன்றமே கூடாது எனக் கோருவது வரை வழக்கின் ஒவ்வோர் அசைவையும் நகர்வையும் மெதுவாக்கி முடிந்த அளவுக்கு வழக்கைத் தாமதப்படுத்துகிறார்கள் குற்றம் புரிந்தவர்கள். இவர்களுக்கு வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும்,  தங்கள் மீதான களங்கத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லை. காரணம்,  அது களங்கம் இல்லை,  உண்மைதான் என்பது அவர்களுக்கே தெரிகிறது. தாங்கள் தவறு செய்திருக்கிறோமோ, இல்லையா என்பது வேறு யாரையும் விடக் குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தானே நன்றாகத் தெரியும்! ஆகவேதான், எப்படியும் சட்டத்தின் பிடியிலிருந்து தாங்கள் தப்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கும் இவர்கள்,  முடிந்த வரை அந்தத் தீர்ப்பு நாளைத் தள்ளி வைக்கவே தலையால் தண்ணீர் குடிக்கிறார்கள்.

அதே நேரம்,  குற்றம் செய்யாதவர்கள் ஒருநாளும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. ஏனெனில்,  அது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் வீண் பழி. எனவே,  எப்பொழுது அதிலிருந்து மீளலாம்,  தலைநிமிர்ந்து நடக்கலாம் என்பதைத்தான் அவர்கள் பார்ப்பார்கள். அதுதான் மனித உளவியல்.

ஆக,  எப்பொழுது ஒருவர் தன் மீதான வழக்கை இழுத்தடிக்க முயல்கிறாரோ அப்பொழுதே அவர் அந்தக் குற்றச்சாட்டு சரியானதுதான் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார். எனவே,  இனி வரும் காலங்களில், குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமெனவே வழக்கைத் தாமதப்படுத்த முயன்றால்,  அதையே அவருடைய குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடாகக் கருதி,  நீதிமன்றங்கள் அதையே போதுமான சான்றாக எடுத்துக் கொண்டு தண்டனை வழங்குதல் வேண்டும்! அரசியலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொதுவான தண்டனை நடைமுறையாக இது வகுக்கப்படல் வேண்டும்!

இப்படிச் செய்தால்தான்,  எவ்வளவு வலுவான வழக்காக இருந்தாலும் இழுத்தடித்தே இறுதி வரை தப்பித்துக் கொள்ளலாம் என யாரும் மனப்பால் குடிக்க மாட்டார்கள். தேவையில்லாமல் காலக்கெடு (வாய்தா) கேட்டுக் கேட்டு, நீதிமன்ற நேரத்தையும், மக்களின் வரிப் பணத்தையும் வீணடிக்க மாட்டார்கள். சட்டத்தை மதித்து உடனுக்குடன் நீதிமன்றத்தில் வந்து நிற்பார்கள். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால்தான் கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும். ‘வழக்கு,  நீதிமன்றம் எனப் போனால் வீண் அலைச்சல்தான்’ என்கிற பொதுமக்களின் எண்ணம் மாறும். நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை துளிர்க்கும். அதே நேரம்,  குற்றவாளிகளுக்கு அச்சமும் பிறக்கும். அதனால் குற்றங்கள் குறையும். குற்றமற்ற சமுதாயமாக இது மாற ஒரு வாய்ப்பு திறக்கும்!

ஆனால்,  இப்படி ஒரு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள அரசியலாளர்கள் முன்வர மாட்டார்கள். தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே,  உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிப் பரிபாலனம் புரியும் 650 நீதியரசர்களில் யாராவது ஒரே ஒருவர்,  நிலுவையிலிருக்கும் கோடிக்கணக்கான வழக்குகளில் ஏதாவது ஒன்றே ஒன்றில் இப்படி ஒரு எடுத்துக்காட்டான தீர்ப்பை வழங்க முன்வர வேண்டும்! வரலாற்றில் எத்தனையோ முறை,  சட்டத்தால் பரிந்துரைக்கப்படாத பல புதுமைத் தீர்ப்புகளை இந்திய நீதிமன்றங்கள் வழங்கி நீதியை நிலைநாட்டியிருக்கின்றன. அப்படி ஒரு முன்மாதிரித் தீர்ப்பாக இது திகழட்டும்! அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு,  இறுதித் தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டால்,  பின்னர் அதையே மேற்கோள் காட்டி வருங்காலத்தில் இனி எந்த ஒரு வழக்கிலும் எப்பேர்ப்பட்ட குற்றவாளியும் தப்பிக்காமல் தண்டனை அடைய வழி செய்யலாம்.

நாடெங்கும் உள்ள மாண்பமை நீதியரசர்களே! தங்களில் யாரேனும் ஒருவர்... ஒரே ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மனம் வையுங்கள்! பணமும் பதவியும் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் செய்து விட்டுத் தப்பி விட முடியும் என்கிற இந்த இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! மக்களுக்கு நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை பிறக்கச் செய்ய அருள் கூர்ந்து முன்வாருங்கள்!

இது,  இக்கட்டுரையை எழுதும் தனிப்பட்ட ஒருவனின் குரல் இல்லை; இந்நாட்டு நீதித்துறை மீதும், நீதியரசர்கள் மீதும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக்கணக்கான குடிமக்கள் சார்பான சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It