2.தாலமுத்து (1915 – 12.3.1939)
மொழிப்போரில் இரண்டாம் களப்பலியானவர் தாலமுத்து. தஞ்சை மாவட்டம் குடந்தையைச் சேர்ந்தர்வர். வேல் முருகன் - மீனாட்சி இருவரின் மகன். நடராசன் மறைந்த இரண்டு மாத இடைவெளியில் சென்னைச் சிறையில் மாண்டார். சென்னை இந்து தியாலசிகல் உயர்நிலைப் பள்ளியின் முன் 13.9.1938 ஆம் நாள் மறியலில் ஈடுபட்டுக் கைதானோரில் இவரும் ஒருவர்.
சரசு டவுன் வழக்கு மன்றத்தில் நடுவர் மாதவராவ் கேட்டார்: "உங்களை இங்கிருந்து விடுதலை செய்தால் வீட்டுக்குச் செல்ல விருப்பமா?
"விருப்பமில்லை. மீண்டும் மறியல் செய்து கைதாவோம்" என்று தாலமுத்து கூறியவுடன், நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்".
சிறைச்சூழலும் உணவும் பொருந்தாமல் வயிற்றுவலிக்கு ஆளாகிச் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காமல் மருத்துவமனையிலேயே மறைந்தார்.
தமிழ்காக்கச் சிறை சென்று 12.3.1939 ஆம் நாள் உயிரழிந்த போது அவருக்கு 24 வயது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர். திருமணமானவர். மனைவி குருவம்மாள்.
தாலமுத்து சிறை சென்று உயிரிழந்த நான்கு மாத இடைவெளியில், அவர் மனைவி குருவம்மாள் மறியலில் ஈடுபட்டார்.
தன்னைப் போலவே தன குடும்பத்தையும் கொள்கை ஈடுப்பாட்டோடு வைத்திருந்தவர் தாலமுத்து. மறியலில் ஈடுபட்ட அவரின் மனைவி 17.7.1939 ஆம் நாள் சிறை சென்றார்.
1938 மொழிப்போரில், வாரம் ஒரு முறை மட்டுமே மறியலில் ஈடுபடப் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். மறியல்போர் அன்றாடம் நடைபெற்று வந்தது. மறியலில் ஈடுப்பட்டோரில் சிறைப்படுத்தப்பட்டோர் 1271 பேர்.
சிறையிலேயே நடராசனும் தாளமுத்தும் உயிரழிந்தனர். இருவர் உடலும் மூலக்கொத்தளத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
தாலமுத்து இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்றனர். உடல் அடக்கமானபோது அறிஞர் அண்ணா கண்ணீர் வழிந்தோடப் பேசினார்:
"இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும்போது தாலமுத்து, நடராசன் இரு வீரர்களின் உருவச்சிலை எழுப்ப வேண்டும்".
தாலமுத்து சிறை சென்றது 13.9.1938இல்! நடராசன் சிறை சென்றது 5.12.1938இல்! முதலில் சிறை சென்றவர் என்பதால் தாலமுத்து பெயரை முதலில் கூறும் வழக்கம் வந்தது.
சென்னையில் எழுந்த தமிழக அரசுக் கட்டடத்திற்கு 1989 ஆம் ஆண்டு "தாலமுத்து நடராசன் மாளிகை" எனப் பெயர் சூட்டப்பட்டு, இருவர் பெயரும் இன்று நினைவுகூறப் படுகிறது.
தாலமுத்து நடராசன்
பாவேந்தர் பாரதிதாசன். (பாவேந்தம் -15 பக்கம் 548.)
தாலமுத்து நடராசனை
தந்ததும் போதாதா? - அவருயிர்
வெந்ததும் போதாதா?
ஆளவந்தார் தமிழரை
அடித்ததும் போதாதா? - சிறையில்
முடித்ததும் போதாதா?
இந்தியினால் உங்கள்தீய
எண்ணம் நிறைவேறுமா? - தமிழர்
எண்ணம் நிறைவேறுமா?
செந்தமிழ்ப் படைப்புலிகள்
சீறிப் புறப்படல்பார் - தடை
மீறிப் புறப்படல்பார்!
- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை
(தொடரும்...)