திருச்சி கீழப்பழுவூர் சின்னச்சாமி (30.7.1937 – 25.1.1964)

மொழிக்காகத் தீக்குளித்த உலகின் முதல்வீரர் என்னும் துயரமான பெருமைக்குரியவர் கீழப்பழுவூர் சின்னச்சாமி.

அறியலூரை அடுத்துள்ள ஊர் கீழப்பழுவூர். ஆறுமுகம் - தங்கத்தம்மாள் இவரின் பெற்றோர். பெற்றோர்க்குத் திருமணமாகி 23 ஆண்டு கழித்துப் பிறந்த செல்ல மகன் இவர்! ஆடுதுறையில் பிறந்த கமலா இவர் மனைவி. இருவரின் ஒரே மகள் திராவிடச் செல்வி.

chinnasamy hindi agitation

ஓராண்டிற்குப் பின் ஆட்சிமொழியாக இந்தி அரியணையில் அமர்த்தப்பட்ட உள்ள செய்தியறிந்து சின்னச்சாமி வருந்தினார். இந்திக்குள்ள உரிமை தமிழுக்குக் கிடையாதா எனக் கவலைப்பட்டார்.

சென்னை சென்றார். தியாகராய நகர் தொடர் வண்டிநிலையத்தில் முதலமைச்சர் எம். பக்தவத்ச்சலம் செல்வதைப் பார்த்தார். அவர் காலில் விழுந்து கதறினார். "தமிழைக் காப்பாத்துங்க அய்யா"

காலில் விழுந்த சின்னச்சாமியை அலட்சியமாய் இடறித் தள்ளிவிட்டு சென்றுவிட்டார் முதலமைச்சர். சொந்த ஊர் திரும்பிய சின்னச்சாமி எப்போதும்போல் தான் இருந்தார்.      

தென்வியட்நாமில் கொடுங்கோலாட்சியைக் கண்டித்துப் புத்த துறவிகள் தீக்குளித்த செய்தி சின்னச்சாமிக்குத் தெரியும். அவர் மனத்தில் எழுந்த புதிய திட்டம் யாருக்கும் தெரியவில்லை!

திருச்சி வந்தார். ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். அதனைப் பெற்றுக் கொள்வதற்கான பற்றுச் சீட்டை நண்பருக்கு அனுப்பி வைத்தார். நண்பர் நாகராசனுக்கும் குடும்பத்தினருக்கும் பொறுமையாய் இரண்டு கடிதங்கள் எழுதினார். ஒரு போர் வீரனைப் போல ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டுச் செய்தார்.

"தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகின்றேன்.. இதை நான் திருச்சியிலிருந்து எழுதுகிறேன். என்னை மன்னித்து வாழ்த்தி வழியனுப்புங்கள். தமிழ் வாழ வேண்டும் என நான் செய்த காரியம் வெல்லும்".

        - சாகப்போகும் சின்னசாமி

கடிதங்கள் பெட்டியில் போடப்பட்டன. திருச்சி தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தார். 25.1.2964 ஆம் நாள் விடியற்காலை உடலில் தீ வைத்துக் கொண்டார். தமிழ் வாழ்க! இந்தி வாழ்க! இந்தி ஒழிக! முழக்கம் கேட்டு ஓடி வந்தவர்கள் கருகிய உடலைச் சின்னசாமியாய்க் கண்டனர்.

சின்னச்சாமி உடலில் பற்றிய தீ, ஒவ்வொருவர் உள்ளத்திலும் பற்றியது. தமிழுக்காகத் தன்னை எரித்துக் கொண்ட தமிழனை வழியணுப்புத் தமிழர்கள் திரண்டனர். 28.11.1964 ஆம் நாள் சின்னச்சாமி இறுதி ஊர்வலம் புறப்பட்டது. தென்னூரில் அடக்கம் செய்யப்பட்டனர்.

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 16.4.1967 ஆம் நாள் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது.

- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It