அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

madhivendan 450‘தமிழ்த் தேசியத்தந்தை’ என்று போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 20ஆம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கவர். கவிஞர், இதழாளர், இயக்கத் தலைவர், தமிழின உணர்வாளர், தமிழ் மக்களின் தொண்டர், தாய்மொழிப் பற்றாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராகத் திகழ்கின்றார்.

தம் நெறியிலிருந்து எக்காரணத்திற்கும் மாறாத நெஞ்சுரம் கொண்ட வராகவும் களப்போராளியாகவும் வாழ்ந்தவர். தமிழ் மக்களின் நலனிற்காக வெகுசிரத்தையுடன் செயல்பட்டுள்ளார்.

“பாவலரேறு” என்று தேவநேயப் பாவாணரால் அழைக்கப்பட்டவர். இத்தகையச் சிறப்பிற்குரிய பெருஞ்சித்திரனார் தமிழக வரலாற்றில் போற்றத்தகுந்த ஆளுமையாகத் திகழ்கிறார்.

சேலம் மாவட்டம் ‘சமுத்திரம்’ என்னும் சிற்றூரில் துரைசாமி, குஞ்சம்மாள் இணையருக்கு 10.03.1933ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ‘இராச மாணிக்கம்’ என்பதாகும். பின்னர், இராச என்பதைத் துறந்து, தம் தந்தையின் பெயரினையும் இணைத்துத் ‘துரைமாணிக்கம்’ என்று வைத்துக்கொண்டார்.

இவருக்குப் பல்வேறு புனைபெயர்கள் உண்டு. அவை மெய்மைப்பித்தன், தாளாளன், அருணமணி, பாஉண் தும்பி, கௌனி ஆகியவையாகும். அவற்றுள் ஒன்றே ‘பெருஞ்சித்திரன்’ என்பதாகும். இப்பெயரே காலத்தால் நிலைத்துவிட்டது.

இவருக்கு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகச் சேலம் நடேசனாரும் ‘தமிழ் மறவர்’ பொன்னம்பலனாரும் பாடம் கற்பித்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தேவநேயப் பாவாணரின் நட்பும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.

இத்தொடர்பு பெருஞ்சித்திரனாரைத் தனித்தமிழ் இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உந்துதலாக அமைந்துள்ளது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘குழந்தை’, ‘அருணமணி’ என்னும் புனைப்பெயர்களில் மலர்க்காடு என்னும் கையெழுத்து இதழினை நடத்தியுள்ளார். அதோடு, பள்ளிப் பருவத்தில் மல்லிகை, பூக்காரி என்னும் காவியங்களைப் படைத்துள்ளார்.  இளம் பருவத்திலேயே பாரதிதாசன் மீதும் அவரின் கவிதைகள்/படைப்புகள் மீதும் தீராக் காதல் கொண்டுள்ளார். இதற்குச்  சான்றாக, “பள்ளிப் பருவத்தில் தாம் எழுதிய இரு காவியங்களை(மல்லிகை,பூக்காரி) எடுத்துக் கொண்டு பாரதிதாசனைச் சந்தித்து அச்சிட விரும்பி யுள்ளார். ஆனால், அப்போது அவரைச் சந்திக்க முடியாமல் போனதென்றும் பின்னர், சில காலங்கள் கழித்துக் ‘கொய்யாக்கனி’ எனும் அவர்தம் நூலைப் பாரதிதாசனே தமது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.” என்ற இச்செய்தியைப் பெருஞ்சித்திரனார் தம்முடைய ‘கொய்யாக்கனி’ நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தமிழ் இயக்க வரலாறு

தனித்தமிழ் இயக்கம் என்பது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். இவ்வியக்கம் மறைமலை யடிகள், தேவநேயப்பாவாணர், பரிதிமாற்கலைஞர்,  திரு.வி.கலியாணசுந்தரனார், உமா மகேஸ்வரனார், சோமசுந்தர பாரதி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், நீலாம்பிகை அம்மையார் போன்ற பல்வேறு ஆளுமை களைக் கொண்டதாகும். 1916இல்  மறைமலையடிகள் தலைமையில் இவ்வியக்கம் உருவாகியுள்ளது.  இதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் மகள்)  ஆவார். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மையாகும். இவ் வியக்கம் சார்ந்தோர் அதன் கொள்கை, கோட்பாடு களைத் தீவிரமாகக் கடைபிடித்துள்ளனர். தமிழ்

மக்களின் அறியாமை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விமர்சித்து, அவை, தவறான செயல்பாடுகள் எனச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி யுள்ளனர்.  ஒவ்வொரு தமிழனும் இனம், மொழி, நாடு என்ற உணர்வுடனும் பற்றுடனும் இயங்க வேண்டு மென்று விரும்பியவர்களாகத் தனித்தமிழ் இயக்கத் தினரை இனங்காண முடிகிறது.

இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பகைவர்களை எதிர்த்தல், சாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்தல் போன்ற வற்றினைத் தம் வாழ்வின் நெறிகளாகக் கொண்டிருந்தார் பாவலரேறு. தாய்மொழி வாயிலாகவே கல்வி கற்க வேண்டும். தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்தல்  வேண்டும் என்ற கொள்கைகளுக்கு வலிமை சேர்த்த வராகப் பெருஞ்சித்திரனார் விளங்குகிறார்.

இதழியல் பங்களிப்பு

தமிழ்ச்சமூகத்தில் இதழ்கள் என்பவை மாற்றத்திற்கு வழிவகுத்தன. கல்வி, வாசிப்பு போன்றவற்றினைப் உழைக்கும் மக்களிடத்தில் கொண்டு சேர்த்ததில் இதழ் களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் வாழ் நாளில் மூன்று இதழ்களை நடத்தியுள்ளார்.

1952இல் தென்மொழி - என்னும் தனித்தமிழ் திங்களிதழினையும்; 1965இல் தமிழ்ச்சிட்டு - சிறுவர்களுக்கானக் கலை இதழினையும்; 1982இல் தமிழ்நிலம் - உலகத் தமிழின முன்னேற்றக் கழக வார இதழினையும் வெளியிட்டு வந்துள்ளார். தனித்தமிழ் இயக்க இதழியல் வரலாற்றில் ‘தென்மொழி’ குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைச் செய்துள்ளது. பெருஞ்சித்திரனார் தம் கருத்துக்களை இதழ்களின் வாயிலாகவே  பெருமளவில் வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இந்தி எதிர்ப்புப் பேராட்டத்திற்குத் தம்முடைய ‘தென்மொழி’ இதழினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.  இவர் எழுதிய இந்தி எதிர்ப்புப் பாடல்கள் தமிழ் மக்களிடையே தமிழுணர்வைத் தூண்டி, கிளர்ச்சியை உண்டாக்கியது.

தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘தமிழ்ச்சிட்டு’ எனும் சிறார் இதழினைத் தொடங்கி, அதில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பப் பாடல்கள், கட்டுரைகள்,  பொதுஅறிவுச் செய்திகள் எனப் பல்வேறு செய்திகளை எழுதியும் வெளியிட்டும் வந்துள்ளார். தமிழுணர்வு, இந்தி எதிர்ப்பு, தமிழ்ப்பற்று, தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் போன்றவற்றை எளிமையாக, மாணவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில்  படைத் துள்ளார். அதுபோன்றே, பிறரையும் எளிமையாக எழுதவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு, இளம் தலைமுறையினரிடம் தனித்தமிழ்  உணர்வுகளை வளர்த்திட ‘தமிழ்ச்சிட்டு’  இதழானது வித்தாக அமைந்துள்ளதைக் காணலாம்.

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் உலகத் தமிழ்க் கழகத்துடன் இணைந்து பெருஞ் சித்திரனார் செயல்பட்டுள்ளார். 1981ஆம் ஆண்டு பாவாணரின் மறைவுக்குப் பிறகு,  உலகத் தமிழ்க்கழகம் என்பதினை ‘உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் ’ என மாற்றிப் புதியதாக இயக்கத்தைத் தொடங்கினார்.  அதன் தொடர்ச்சியாக 1982ஆம் ஆண்டு ‘தமிழ்நிலம்’ என்ற இதழினைத் தொடங்கினார். இவ்விதழ் ‘தமிழ் நாடு தனி நாடாக வேண்டும்’ என்ற கொள்கையை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டுள்ளது. இதனால், இதழும் இதழாசிரியரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தம்முடைய மூன்று இதழ்களின் (தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்) வாயிலாகத்  தமிழ் உலகிற்கும் இதழியல் துறைக்கும் பெரும் பங்களிப்பினைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அளித்துள்ளார்.

தமிழ்க்கவிதை வரலாறு

தமிழ்க்கவிதையின் வரலாறானது இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியினைக் கொண்டதாகும். சங்க காலம் தொட்டு இன்றுள்ள நவீனக்கவிதை வரை பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்டுள்ளது.  தமிழின் கலைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது கவிதைக்கலையாகும். இது மரபு, நவீனம் என்னும் இருவேறு தன்மைகளைக் கொண்டு இயங்குகிறது. இலக்கண வரம்பிற்கு உட்பட்டதை ‘மரபுக்கவிதை’ என்றும் இக்கட்டுபாடு களை உடைத்தெறிந்து படைக்கப் பெற்றவை ‘நவீனக் கவிதை’ அல்லது ‘புதுக்கவிதை’ என்றும் அழைக்கப் படுகின்றன.

தமிழின் மரபுக்கவிதை, புதுக்கவிதை குறித்துப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்   கருத்தானது, “ மரபு தழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறை மாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும் மன இழிவாலும் பிதுக்கப் பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை” (கனிச்சாறு,முன்னுரை) மேற்சுட்டிய விளக்கமானது மரபுக்கவிதை, புதுக்கவிதை என்னும் இரண்டிற்குமான வேறுபாட்டினைப் பெருஞ் சித்திரனார் தம் கருத்துநிலை சார்ந்து  எடுத்துரைக் கின்றார்.

தமிழின் கவிதைகள் பெரும்பான்மையாக இயற்கை, சமுதாயச் சிக்கல்கள், மனிதர்களின் அக உணர்வுகள் போன்றவற்றை முதன்மைப்படுத்தி அமை கின்றன. குறிப்பாக வறுமை, ஏழ்மை, அறியாமை, மூடநம்பிக்கை, சாதி,மத, இனப் பிரச்சனைகள் , வர்க்க முரண்பாடுகள், பாலியல் கொடுமைகள், ஆணாதிக்க மனோநிலை போன்றவற்றினைப் பாடுபொருளாகக் (கருவாகக்) கொண்டு கவிதைகள் படைக்கப்படுகின்றன.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கவிதைக்கானப் பாடுபொருள் என்பது சமுதாயச் சிக்கல்களை முன்னிலைப்படுத்தியே அமைந்துள்ளன. மொழி, இனம், நாடு, தாய்மொழிப்பற்று, தாய்மொழி வழிக்கல்வி, இந்தி எதிர்ப்பு,  தமிழீழம், பாலின வேறுபாடு,  சாதி, மத, மூடநம்பிக்கைகள், இயற்கை மற்றும் காதல் சார்ந்த உணர்வுகள் எனப் பல்வேறு விசயங்களை முதன்மைப் படுத்துவதாகக் கவிதைகள் அமைந்துள்ளன. மரபுக் கவிதைகளாக, தனித்தன்மையுடன் யாப்பியல் விதி களுடனும் புதுமையாகவும் அமைந்து மிளிர்கின்றன. இவற்றில் பாரதிதாசனின் சாயல்களோடும் அவரையும் விஞ்சுகின்ற கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

மொழிப்பற்று

உலக மொழிகளுள் தமிழின் நிலை தனித்துக் காணப்படுகிறது. தமிழ்மொழியின் பிறப்பு, அதன் வளமான இலக்கண, இலக்கியங்கள் மொழியமைப்பு போன்றவற்றை மையப்படுத்தியே தமது கவிதைகளைப் படைத்துள்ளார். தமிழின் பெருமைகளையும் சிறப்பு களையும் பல்வேறு தலைப்புகளின்கீழ் கவிதைகளாகப் புனைந்துள்ளார். அவற்றுள் சில  “தமிழ்த்தாய் அறுபது, முத்தமிழ் முப்பது, தமிழில் கற்க முன்வருக, தமிழ் உழவு செய்க, தமிழ் படித்தால் அறம் பெருகும்,  தூயதமிழ் எழுதாத இதழ்களைப் பொசுக்குங்கள், பைந்தமிழில் படிப்பதுதானே முறை” (கனிச்சாறு தொகுதிகள்) என்பனவாகும்.

மொழி என்பது மனித இனத்தின்  அடையாளம். மொழி அழிகிறது என்றால் அம்மொழி பேசும் மக்களும் அவர்களின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்கள் அழிகின்றன என்றே பொருளாகும். இதனைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தாய்மொழியினைச் சரியான முறையில் பயன்படுத்துதல் வேண்டும். அதுபோல், மற்ற மொழிகளைப் பழித்தல் கூடாது என்றும் கூறுகிறார். தம் தாய்மொழியினை இழிவு செய்தவர்களையும் கவிதைகளின் வழியாக கடுமையாகச் சாடி வந்துள்ளார்.  

தன்னலமற்ற தலைவர்களைப் பற்றிய பதிவுகள்

பெருஞ்சித்திரனார் பல்வேறு தனித்தமிழ் இயக்க  அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் போராளிகள் எனப் பலரையும் குறித்துக் கவிதைகள் படைத்துள்ளார்.  அவற்றுள், தனித்தமிழ் இயக்க முன்னோடிகளான  மறை மலையடிகள், தேவநேயப்பாவாணர் போன்றோரைப் பற்றி பெருமளவு கவிதைகள் படைத்துள்ளார். உலகம் போற்றும் தலைவர்களையும் களப்போராளிகளையும் தம் கவிதைகளின் வழியாகப் போற்றியுள்ளார். காரல் மார்க்சு, நெல்சன் மண்டேலா போன்றோரைப் பற்றிய கவிதைகள் இரங்கற்பாக்களாக அமைந்துள்ளன. டாக்டர். அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, பிரபாகரன் போன்றோரின் சமூகப் பணிகளையும் பொதுவாழ்வில் செயல்பட்டுள்ள பாங்கினையும் எடுத்துரைக்கும் விதத்தில் கவிதைகள் படைத்துள்ளார்.

பெரியார், பாரதிதாசன் போன்றோரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “பெரியாரையும் பாவேந்தரையும் பட்டிமன்றத்திற்கும் பாட்டரங்கத்திற்கும் மட்டும்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமா?” என ஆதங்கத்தோடு பதிவு செய்துள்ளார். அம்பேத்கர் பற்றி ‘அம்பேத்கர் வாழ்க’, ‘அவர்தாம் பீமாராவ் அம்பேத்கர்’ எனும் இருவேறு தலைப்புகளின்கீழ் கவிதைகள் படைத்துள்ளார். சான்றாக, பட்டங்கள் பல பெற்றார்/பல்கலை மிகக் கற்றார்!/சட்டங்கள் இந்தியர்க்குச் செய்தார் - அவர்/சாதிகள்மேல் அம்புகளை எய்தார்! இக்கவிதைகளில்  அம்பேத்கரின் அயராத உழைப்பு, போராட்டம், கல்வியின் வழிப் பெற்ற பட்டங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய பாங்கு போன்றவற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.   

தமிழ்த் திரைப்படங்களில் நிகழும் கேடுகளையும் கொடுமைகளையும் வெகுவாகக் கண்டித்துக் கவிதைகள் படைத்துள்ளார். குறிப்பாக, பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடல் பாடும் முறை, கதாநாயகிகளின் ஆடைகள் எனக் குறிப்பிடத்தக்க விசயங்களைக் கேள்விக்குள்ளாக்கி விமர்சனம் செய்துள்ளார். மொழிப் பற்று இல்லாது பாடல் எழுதியும் பாடியும் தமிழ் மொழியினைச் சிதைத்து வருகின்றனர் என்று கடிந் துள்ளார். தூயதமிழ்ச் சொற்களினால் பாடல்கள் எழுதாமல் பிறமொழிச் சொற்களைக் கலந்து ‘தமிழ்க் கொலை’ புரிவதனை விமர்சிக்கிறார்.  இரட்டைப் பொருள்படும் வசனங்கள், பெண்களை இழிவுபடுத்தும் காட்சியமைப்புகள் போன்றவற்றை வெகுவாகக் கடிந்துரைத்துள்ளார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் கவிதைகளில் இந்து மதத்தினை வெகுவாகவே விமர்சித்துள்ளார். சாதி, மத, மூடநம்பிக்கைகளை வெறுத்து, அவை வெறும் பொய், புரட்டு என்றும் கடிந்துரைத்துள்ளார்.  இதனை, அவர்தம் கவிதைகளின் வழி அறியலாம்.

எழுத்துச் சீர்த்திருத்த மறுப்பு

தமிழில் ‘எழுத்துச் சீர்த்திருத்தம்’ என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு நிலைகளில் நிகழ்ந்துள்ளது. தமிழின் எழுத்துச் சீர்த்திருத்த மரபில் குறிப்பிடத்தக்கவர்களாக வீரமாமுனிவர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், அண்ணா போன்றோரின் முயற்சி மொழியினை வேறு பரிணாமத்திற்கு இட்டுச் சென்றன. எனினும், இக்கருத்திற்குத் தனித்தமிழ் இயக்க ஆளுமைகள் எதிர்வினை செய்துள்ளனர். அதற்கு அவ்வாளுமைகள் காரணமாக முன்வைத்துள்ள கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். அவை, “புதிய எழுத்துருக்கள் தோன்றி வருவதால் முன்னைய தொன்மையான இலக்கண, இலக்கியங்கள் படிக்க முடியாமல் போகும். சில இலக்கண விதிகள் பயனற்றுப் போகும். தமிழின் தொன்மையையும் அதன் காலத்தை நிலைநாட்டிடச் சான்றுகள் ஏதுமின்றிப் போகும்” எனப் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இவ்வியக்கத்தினர் எழுத்துச் சீர்த்திருத்தத்தை எதிர்த்து வந்துள்ளதை காணமுடிகிறது.

இயற்கை, காதல், குழந்தைப் பாடல்கள்

காடு, மலை, கடல், ஆறு, அருவி, சூரியன், மலர், காற்று, நிலவு, புயல் என இவற்றின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளுடன் தமிழ்மொழியினையும் இணைத்து வெகுஇயல்பாகக் கவிதை படைத்துள்ளார்.  ஒவ்வொரு பொருண்மையின்கீழ் அமைந்த கவிதைகள் வெவ்வேறு வகைப்பட்ட பார்வையோடு படைத்துள்ளார். ‘கடல்’ பற்றி எழுதிய கவிதையானது அழகியலோடு கற்பனைத் திறத்தினை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. நிலமெனும் பெண்ணுக் கிந்த/நீள்கடல் நீல ஆடை/இலமெனும் ஏழை யர்க்கே/இமிழ்கடல் கழனி ! இதுபோல் தமிழின் கற்பனை நயத்துடன் இயற்கை அழகினையும் வர்ணித்துக் கவிதைகள் படைத்துள்ளார்.

மொழி, இனம், நாடு என இவற்றினை மட்டும் சார்ந்து செயல்பட்டவராகக் கருதப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகஉணர்வுகள் சார்ந்த கவிதைகளை இயல்பாகப் படைத்துள்ளார். அதோடு, தனித்தமிழ் இயக்க உணர்வுகளையும் காதலோடு இரண்டறக் கலந்து அழகிய கவிதைளை ஆக்கியுள்ளார். அவற்றுள், கொத்தான மலரினைக்/குழலினில் வைத்தான்! - பின்/ குனிந்தென்னை முத்தமிட்டான்! - என்/அத்தானின் குறும்பிது தோழி!/ஆனாலுமவன் அன்பின் செயல் தானடி!/ஆண், பெண் சார்ந்த காதல் உணர்வினையும் காமத்தின் வெளிப்பாட்டினையும் நயமாகப் படைத் தளித்துள்ளார்.

பெருஞ்சித்திரனார் தம் கவிதைகளில் (கனிச்சாறு, தொகுதிகள்) குழந்தைகளுக்காகக் குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை என மூன்றாகப் பகுத்துப்  பாடல்களைப் படைத்துள்ளார். எளிமையான சொற்களைக் கொண்டு இனிய நடையில் இலக்கிய நலன்கள் அமைய கருத்துச் செறிவுடன் பாடல்களை எழுதியுள்ளார். அதோடு இதனை ‘தமிழ்ச்சிட்டு’ இதழில் வெளியிட்டு வந்துள்ளார். அவற்றில் தமிழின் அகர வரிசை முறையினைக் கற்றுத் தருதல், உயிர்மெய் எழுத்துக்களை அறிமுகப்படுத்துதல்,  தமிழ் எண்களை மனனம் செய்யுமாறு செய்தல் போன்றவற்றைத் தம் பாடல்களில் கையாண்டுள்ளார். கூன் விழுந்த  பாட்டி/ குட்டைக் காலை நீட்டிப்/பாலுஞ் சோறும் ஊட்டிப்/ படுக்க வைப்பாள் ஆட்டி!/எதுகை, மோனை, இயைபுத் தொடை நலன்கள் மிளிரப் பாடல்கள் படைத்துள்ளார்.

இளைய தலைமுறைக்கான வழிகாட்டல்

இளைய தலைமுறைக்காகப் பல்வேறு வேண்டு கோள்களையும் அறிவுரைகளையும் முன்வைத்துள்ளார். இன்றைய  வாழ்வியலுக்குப் பொருந்துவனவாக உள்ளன. இவற்றில் பொதுமை சார்ந்தும் இயக்கம் சார்ந்தும் தமிழ் உணர்வுடனும் கவிதைகள் படைத்துள்ளார்.  சுருட்டு, பீடி புகைத்தல், மது குடித்தல் போன்றவற்றைக் கண்டித் துள்ளார்.  அது உடல் நலத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்று தம் கவிதைகள் வழி சுட்டிக்காட்டியுள்ளார். ‘ஓ மாணவச் செல்வரே’ என அழைத்து இந்தி எதிர்ப்பு, பிறமொழிக் கலப்பு, தாய்மொழிக்கு நிகழும் கேடுகள் போன்றவற்றைத் தம் கவிதைகள் மூலமாக  விமர்சனம் செய்துள்ளார்.

சமகாலப் படைப்பாளிகளின் கருத்துகள்

தமிழ்ப்படைப்பாளிகள்/ஆளுமைகளின் பார் வையில் பாவலேரேறு பெருஞ்சித்திரனார் என்னும் ஆளுமை ஓர் உச்ச ஒளி விளக்காகத் திகழ்கிறார். தனித் தமிழ் இயக்கம், அதன் இதழியல் வரலாறு,  சமூக நிகழ்வுகளில் வீறுடன் செயல்பட்ட பாங்கு, அரசியல் தளத்தில் நின்ற துணிவு போன்றவை பலரையும் வியப் பிற்குள் ஆழ்த்தியுள்ளன என்பதை அறியமுடிகிறது. திரு. கலைஞர்.கருணாநிதி, திரு. தொல். திருமாவளவன்,  திரு.மணியரசன், தமிழ்க்கவிஞர்களான ஈரோடு தமிழன்பன், இன்குலாப், காசி ஆனந்தன், கவிப்பேரரசு வைரமுத்து எனப் பல்வேறு படைப்பாளிகளும் பெருஞ் சித்திரனாரை விரும்பியவர்களாக, அவரது கொள்கை, கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்னும் ஆளுமைத் தனித்தமிழ் இயக்க வரலாறு, தமிழ் இதழியல்  வரலாறு, தமிழ்க்கவிதை வரலாறு எனப் பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்கவராகக் காணப்படுகிறார். தமிழினம், தமிழ்மொழி, தமிழ்நாடு என மூன்றினையும் தம் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டுள்ளார். இந்தி எதிர்ப்பு, ஈழம் சார்ந்த கருத்தாக்கம், சாதி, மத, எதிர்ப்பு, சமூக நிகழ்வுகள் சார்ந்த தன்முனைப்பு, தமிழக அரசியல் செயல்பாடுகள் எனப் பலவற்றையும் உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டுள்ளார். எந்த நிலையிலும் யாருக் காகவும் எதற்காகவும் உடன்பாடு செய்து கொள்ளாத வராக, இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் திகழ்கிறார்.

Pin It