தத்துவங்கள் யாவும் மனித வளர்ச்சியை உந்தித் தள்ளவும், புறக்காரணிகளாய் எழுந்தவையே எனலாம். குறிப்பாக, எந்த ஒரு சமூகச் சூழலிலும் எக்கருத்தை வலியுறுத்தியிருந்தாலும் அக்கருத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாய் அமையும். பொருளுற்பத்தியையே சார்ந்து வாழும் மனித இனத்தில் சிலர் இவ்வுலகில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், செல்வ சேர்ப்புமே முதன்மை அம்சமாய் கொண்டிருக்கின்றன. அம்முதன்மை அம்சத்தை நிலைநிறுத்திக் கொண்டு மக்களை வழிநடத்தவே தத்துவங்கள் துண புரிந்தன.

           thiruvalluvar ஒரு காரணத்தைக் கூறி, அதனை செய்யக் கூடாது அல்லது இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறும் இலக்கியத்தின் வழியாக அச்சமூக மக்களின் நிலைமைகளையும், சான்றோர்கள் சமூக வளர்ச்சிக்கான காரணிகளாக கருதியே தான் அக்கருத்தை வெளிப்படுத்தியிருக்க முடியும். சூனியத்திலேயே புற வெளியில் தாமாகவோ, தான் தோன்றித் தனமாகவோ எந்த ஒரு கருத்தும் வெளிவராது.  புறச்சூழலில் வாழும் மனிதன் தம் வாழ்வை சீர்செய்து கொள்வதற்கோ, எச்சமூகமாயினும் அச்சமூகத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டே தான் இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், எப்படைப்பாயினும் அப்படைப்பு தோன்றிய அதிகார மைய நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டேதான் கருத்தை உலகிற்கு வெளிபபடுத்த முடியும்.

            அவ்வகையில் சமூகத்தில் நிகழ்கிற நெருக்கடிகள், பிரச்சனைகள், மோதல்கள், பாதிப்புகள், நன்மைகள், தீமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கருத்தியல்கள் தோன்றும்.

            பண்டைய தமிழகத்தில் சங்க காலத்தில் அகம், புறம் சார்ந்த காதல், கற்பு வாழ்க்கை, போர்முறைகள், அரசரின் சிறப்புகள், வெற்றிகள் என மன்னர் உடைமை சமகத்தின் சங்க இலக்கிய பாடல்கள் பெரும்பகதி சுட்டி நின்றன. ஆனால், சங்க மருவிய காலத்தில் நீதியை வலியுறுத்தியும், எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது, எது உண்மை, எது பொய் என பல்வேறுபட்ட பொதுக் கருத்துக்களை கொண்ட சூழலை ஒரு சமூகம் ஏற்று இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதால் அக்கால சூழல் சங்க காலம் போலில்லாது மாறுபட்ட சூழலை தோன்றுவித்திருக்கிறது என்பதை முதற்கண் தெளிவு கொள்ளல் வேண்டும்.

            கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மனித குலத்தின் பல்வேறு தவறான நிலைகளை எடுத்துரைத்தும், மனிதகுலம் வாழ வேண்டிய வழிகுறித்தும் பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பகுதி நீதியாகவும், அற நெறியாகவும் எடுத்துரைக்கும் இலக்கியங்களாய் ப0ணமிக்கின்றன. பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய நூல்களும் 11 அற நூல்களும் 6 அகக் கருத்தியல் சார்ந்த நூல்களும் 1 புற நூல்களும் காணப்படுகின்றன.

            இவற்றுள் அறநூல்களின் கருத்துக்கள் யாவுமே பெரும்பகுதி ஒத்த கருத்யிலையே கொண்டிருக்கின்றன என்பது புலனாம்.

திருவள்ளுவர் ‘அறம்’ என்பதற்கு

அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் / இழுக்கா இயன்றது அறன் (குறள். 35) என்று பொறாமையும்,  பேராசையும், கோபமும், கடுஞ்சொல்லும் ஆகிய நான்கினையும் நீக்கி செய்யப்படும் செயலை அறமெற குறிப்பிடுகின்றார். மேலும்,

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் / பிறன் பழிப்பழப்பது இல்லாயின் நன்று (குறள். 49) என்று பிறரால் பழிக்கப்படாமல் வாழும் இல்வாழ்க்கையே ‘அறம்’ என்றும் விளக்குகின்றார். மனைவியின் சிறப்பு, அறிவுற்ற மக்களை பெறுதல், அன்புடையோராய் இருத்தல், விருந்தோம்பல், இனியவையே கூறல, செய்நன்றி மறவாமை, நடுவுநிலைமை, அடக்கமடைமை, ஒழுக்கம், பிறன மனைவியை விரும்பாமை, பொறையுடைமை (தீமை செய்தவரிடத்தும் வெகுளாது பொறுத்துக் கொள்ளும் பண்பு) பிறர் மேன்மையைக் கண்டு பொறாமை கொள்ளாமை, பிறர்க்குரிய பொருளை தாம் கொள்ளக் கருதாமை, ஒருவர் இல்லாத விடத்து அவரைப் பற்றி இகழ்ந்து கூறாமை, தமக்கோ, பிறருக்கோ பயனில்லாத சொற்களைப் பேசாமை, தீய செயல்களை பிற உயிர்களுக்கு செய்ய அஞ்சுதல், பொது அறங்கள் செய்தல், இல்லை என இரப்பார்க்கு வேண்டுவன கொடுத்தல், எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளல், ஊண் உண்டலைத் தவிர்த்தல், மனத்தை அடக்கித் துன்பம் தருதலை தடுத்து நன்மையே செய்தல், பிறர் பொருளைக் களவாமை, சினம் கொள்ளாமை, இன்னா செய்யாமை, இனியவையே செய்தல், நிலையில்லாத பொருள் மீதான பற்றினைக் கைவிடுதல், மெய் உணர்ந்து ஆசையினை வேரறுத்தல், மெய்யுணர்தல், ஊழ்வினை சிந்தனை என்று பல்வேறு வகையான கருத்துக்களை திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட நீதி நூல்கள் அனைத்தும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா / வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா (இன்னா நாற்பது, 1: 1-2) என்று கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாம். புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா (இன்னா நாற்பது, 13:3) என்று புலால் உண்ணுதலை விரும்பி வாழுதல் இன்னா என்றும், பிறன் மனைவியை காமுற்றுப் பின்தொடரக் கருதும் அறிவின்மை துன்பமாம் என்றும் விறக்கும். பிறிதோ யிருரைக் கொல்லாது, கொல்லுதற்குடன்படாது, கொல்லாரினத்தைச் சேராது, பிறன் மனையாளை விரும்பாது, உனுண்டலோடு கலவாது, பிறருடைய குடிகளை நிறுத்தி கூழையீந்தவன் கொல்யானை ஏறி மண்ணையாண்டிடப்படுவன் (ஏலாதி, பா. 42) என்றுரைக்கிறது.

            நான்மணிக்கடிகை, பிறருக்கக் கொடுத்து உதவுபவனே புகழை நிறுத்துபவன், அவன் கையில் பெற்று உண்பவன் என்பான் வெம்பி வெதும்பி வாழ்பவன் ஆவான்; பகைவர் முன் சென்று எதிர்பார்த்து நிற்றல் நப்புக்கு உரியதாம்; முகக் குறிப்பறிந்து ஈயாதான் முன் இரந்து நிற்பது மானத்திற்க கேடானதாம் (நான்மணிக்கடிகை, பா. 60) என்கிறது. மேலும், கல்வியையும், தவத்தையும் முனினிறுத்தி உரைக்கிறது. குறிப்பாக,

எள்ளற்க என்று மெளியாரேன் றென்பெறினும் / கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவாஉள்சுடினும் / சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க / கூறல் லவற்றை விரைந்து (நான்மணிக்கடிகை, பா. 1)

என்று, இவர் எளியவர் என்று எவரையும் இகழ்தல் கூடாது; என்னதான் சிறந்தது, வேண்டத்தக்கது என்றாலும் பெறக்கூடாதவரித்தும் பெறுதல் கூடாது: மனம் வருந்தச் செய்தாலும் இழிந்த குடியில் பிறந்தவரை சீறுதல் கூடாது: எவரிடத்தும் கூறக் கூடாதவற்றைப் பொறுப்பின்றி கூடாது என்று குறிப்பிடுகிறது.

நாலடியாரின் முதல் பாடலே, அறுசுவை உண்டி அமர்ந்திலாள் ஊட்ட / மறுசிகை நீக்கி உண்டாரும்வறிஞராய்ச் / சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம் ஒன்று / உண்டாக வைக்கற்பாற் றன்று (நாலடியார், பா. 1) என்று அறுசுவை உணவை அருமையென மனைவி அருகே இருந்து விரும்பி உண்பிக்கவும், தம் வளமைப் பெருக்கால் மற்றொரு கவளம் வேண்டாம் என்று வி5லக்கி உண்பவரும், ஒரு காலத்தில் வறுமையடைந்து மற்றொரிடத்து இரந்து உண்பான் என்றால் ‘செல்வம்’ நிலைக்கத்தக்கது என்று கருதக் கூடியதே என்றுரைக்கிறது.

            யானை பொருத்தட் பொலியக் குடைநிழற் கீழ் ….. மனையாளை மாற்றார் கொள (நாலடியார், பா. 3) என்பது யாவும், போர்க்களத்தில் படைத்தலைவன் ஆட்சி செய்பவன் யாராயினும் நல்வினைக் கெட்டு தீவினை வந்து சூழ்தலால், அவ்வுயர் நிலையிலிருந்து மாறுபட்டுத் தங்கள் வாழ்க்கை துணையெனக் கொண்ட மனையாளையும் தாற்றார் கவர்ந்து கொள்ளும்படி தாழ்வடைவர் என்று உரைக்கிறது. இதன் வழி மாற்றார் மனைவியை கவர்ந்து செல்லுதல், செல்வந்தர், அதிகாரமுடையோர் தம் அதிகாரத்தையே இழந்து போன சூழல் நிலவியதையும் நாம் நன்கு உணர முடிகிறது. மனைவி கூட சொந்தமில்லாமல் போகுஙட கொடுஞ்சூழலே அன்றைய சமூக சூழலாய் இருக்க, அவ்வடிப்படையிலேயே பிறன்மனை நோக்காத எண்ணம் வேண்டும் என்றும், அது மட்டுமல்லாது பொருளிருக்கும் காலத்திலேயே வறுமையில் வாடுபவர்களுக்கு கொடுத்துதவ வேண்டும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. மன்னர்கள் சிறப்புற ஆட்சி செய்வதற்குரிய வழிமுறைகளை வகுக்கப்பட்டிருக்கிறது, தர்மம் செய்தல், கல்வி கற்றல், தவம் ஏற்றலை மிகச் சிறந்த நேறியாய் உணர்த்தியது.

            செல்வ செழிப்புடையவர்களே இந்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றால் வறுமையில் வாடிய மக்கள் எந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாமே சிந்தித்து பார்த்தல் வேண்டும். ‘நோய்’ பற்றிய கருத்துக்களும் சில நூலில் கூறப்பட்டிருக்கின்றன.

            செல்வம் நிலையில்லாதது, அச்செல்வம் பிறருக்கு வழங்கப்படும் போது தான் சிறப்படைவர். இல்லையேல் மறுபிறப்பினில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டுமேன நாலடியார் எச்சரிக்கிறது. உயிர் கொலை கூடாது, அப்படி செய்தால் மறுபிறவியில் தொழுநோயாளனாய், இன்னபிற நோயுடையவனாய் பிறப்பான் என்றும் சுட்டுகிறது. சங்க காலத்தினில் இக்கருத்தினை காண முடியவில்லை. மன்னன், புலவனுக்கு பரிசில் தந்த செய்திகளை மட்டும் காண முடியும்.

            கள்ளுண்டு களித்தல், ஆநிரை கவர்திலில் வீரர்கள் ஈடுபட்டு வெற்றிப் பெற்றதம் குடிபிபதை வழக்கமாக கொண்டிருந்தனர். நீதி இலக்கியம் அதனை மறுக்கிறது. ‘பிறன்மனை நோக்கா பேராண்மை’ வேண்டும் என்றால், அச்சமூகச் சூழல் இல்லற வாழ்வை ஏற்றும், நிலையாமை கொள்கையை ஏற்றும் நின்ற சூழலும், நிலையாமையும் தவமுமே முதன்மை நெறியெனவும் கூறும் சூழலே நிகழ்ந்திருக்கிறது.

இலக்கியங்கள் தோன்றுவதற்குரிய சூழல்கள்

            சங்க காலத்தில் அளவு கடந்த சிற்றின்ப நுகர்ச்சி, மதுவுண்ணல்பரத்தையர் ஒழுக்கம், புலால் உண்ணல் போன்ற எல்லா நாட்டு வீர யுகங்களிலும் பெருகிக் காட்சித் தருகின்றன. இவை தனியுடைமை பெருகிய அறநெறிக் காலத்தில் அதிகமாகக் கண்டிக்கப்படுவதைக் காண்கிறோம். வீரயுகப் போக்கில் மனிதகுலம் கொண்டவெறுப்பாலும், தனியுடைமைகளின் வளர்ச்சியாலும் தோன்றிய அறநெறிக் காலத்தின் புதிய மனப்போக்கிற்கு இதே மனப்போக்கில் அவ்வந் நாட்டில் தோன்றிய சமயங்களும், புகுந்த சமயங்களும் வலுவூட்டின. தமிழ்நாட்டு அறநெறிப் பாடல்களில் புத்த, சமண சமயங்களும் பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தின.” (ஜி.ஜான்சாமுவேல், 1978, இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்)

மேலும், நிலையான அரசுகளின் தோற்றமும் (Establishment of monar Chies) தனி உடைமைகளைப்  (Private property) பாதுகாக்க வேண்டிய அவசியத் தேவையுமே அறநெறிப்படைப்புகள் தோன்ற வழியமைத்துக் கொடுத்தன எனலாம். இப்பாடல்கள் அனைத்தும் மேட்டுக்குடி மக்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் சாதகமாக அறநெறிக் கோட்பாடுகளை அமைத்துக் கொண்டன” (ஜி.ஜான்சாமுவேல், இ.ஏ.க.) என்பர். மேலும்,

            “போர் நெறியோடு வைதீக நெறியும் ஒருங்கிணைந்து செயலாற்றி வந்ததால் போர் மறுப்பும், வைதீக மறுப்பும் சங்க காலப் போக்கிற்கான மாற்றுநெறியை முன்வைக்கும் செயன்மைக் கூறுகளாக முன் வந்தன, போர்க்கால சூறையாடல், பிறவழிப் பொருள் கவர்தல் ஆகியவை கள்ளாமையும் இயல்பான மெய்சிதைவு பொய்யாமையையும், போர்க்கால பெண் அபகரிப்பு காம மிகுதியால் பிறன்மனை கவர்தல் ஆகியவை பிறன்மனை நயவாமையும் என்று ஏராளமான அறநெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியதாக சங்க காலச் சமூகம் இருந்தது. இதே காலக் கட்டத்தில் இந்திய மெய்யியல் தளத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கி வந்த வைதீக வேள்விநெறி  எதிர்ப்புச் சிந்தனைப் பள்ளிகளான பௌத்தம், சமணம் போன்றவையும் மேற்குறித்த அறநெறி கோட்பாடுகளையே முன் வைத்தன. எனவே, பௌத்த, சமண சமயங்களின் தமிழக வருமையும், சங்க கால வாழ்நிலைகளில் இருந்து இயல்பாக எழுந்து வந்த புதிய அறசெயல் நெறிகளும் ஒன்றையொன்று வளப்படுத்தவும், வழிப்படுத்தன என்பது தெளிவாகிறது” (சு.மாதவன்,   பக். 40-45, தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களம்,

            யாவருக்கும் அறத்தை வலியுறுத்துவதை இலக்கியங்கள் தம் கடமையாகக் கொண்டிருநத்னர். மன்னனின், மக்களின் தவறைச் சுட்டிக் காட்டி அறமே சிறந்த வாழ்க்கை, பற்றற்ற நெறியே உயர்ந்த நெறி, பொய், களவு, தர்மம், பிறன்மனை நோக்கா பேராண்மை, செல்வம், இளமை, யாக்கை நிலையாமை என்ற கருத்தியலோடு உலகிலுள்ள யாவுமே நிலையற்றது; தெய்வநெறி ஒன்றே உயர்ந்தநெறி போன்ற எண்ணிலசங்கா கருத்தினை புலவர்கள் வெளிப்படுத்தினர். இவை யாவற்றையும் ஆராய்ந்தால் சங்க காலத்திற்கு பிறகு மிகப் பெரிய நெருக்கடியை அச்சமகம் சந்தித்திருக்கிறது. கள்ளுண்ணாமை, உண் உண்ணாமை, களவு செய்யாமை, பிறர் மனைவியை விரும்பாமை என்று பல்வேறு நிகழ்வுகளை தவறென நீதி நூல்கள் சுட்டுகின்றன. சங்க காலத்ல் கள்ளுண்ணுதல், ஊண் உணவு உண்ணுதல், பரத்தை அங்கீகரிப்பு போன்றவை அங்கீகரிக்கப்பட்ருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

            மனிதனின் தீரா வேட்கை பல்வேறு தவறுகளை செய்ய தூண்டியிருக்கிறது. அதனால் ‘யாக்கை நிலையாமை’ என புலவர் எடுத்துரைத்துள்ளனர். செல்வம் ஓர் குறிப்பிட்ட இடத்திலேயே குவிந்திருக்கிறது. அதனால் ‘தர்மம்‘ செய்ய கூறியிருக்கின்றனர். அக்கால சூழலில் அதிகார வர்க்கத்தை எச்சரிக்கின்ற சூழல் நிலவியிருக்கிறது என கருத முடிகிறது. மன்னர்களின் தவறுகளை மக்கள் செய்யும் சூழலும் அல்லது மன்னர் உடைமை அரசை கேள்வி கேட்கம் சூழலும் தோன்றியிருக்கின்றன. அநீதிகளை தடுக்கும் நீதி இலக்கியங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அன்றைய சமகக் கட்டமைப்பையும், அரசு நிறுவனத்தையும், பாதுகாக்க பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பெருகிய சூழலும், மனிதன் சக மனிதனை இழிவுபடுத்தும் சூழலும் தோன்றியதன் விளையே தர்மம் செய்தலையும், யாருக்கும் தீங்கு செய்தல் தவறென்ற கொள்கையும், அதிகார வர்க்கம் மொத்த உற்பத்தியையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டே ‘நீ திருடக் கூடாது’ என்ற போதனையையும், செல்வம் ஒரு பக்கம் குவியகுவிய மறுபுறம் மக்கள் உண்ண உணவின்றி கூட வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆற்றுப்படை நூல்களே பாணர்களின் வறுமையை உணர்த்திற்று. அதற்கு பின்னரான சமூகச் சூழல் பூசல்கள், முரண்பாடுகளும், குறிக்கோளற்ற செயல்களும் நிகழ்ந்திருக்கின்றன. இதனை தடுத்து சமூகக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி மக்களை அதற்கேற்ப வாழ வழிவகுக்க முயன்றதே நீதி இலக்கியத்தின் பணியாக இருந்திருக்கின்றது.

- பா.பிரபு, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Pin It