Act 1

இந்தத் தலைப்பே உங்களுக்குக் கொஞ்சம் அன்னியமாகத்தான் இருக்கும். இன்றைய காலத்தில் நாம் இப்படியான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதில்லை. வழக்கொழித்து விட்டோம். நாமே ஒருநாள் வழக்கொழிந்து போகப் போகிறவர்கள்தானே. என்ன ஏதும் காப்பி, டிபன், ஓட்டல் பத்தி சொல்லப் போறீங்களா, இன்னிக்கு ஒன்னு ரெண்டு ஓட்டல்களுக்கு இப்படி பேருங்க இருக்குதே-ன்னு நீங்க யோசிப்பதை நான் தடை செய்கிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கூத்தாடிகள், ஒழுக்கம் கெட்டவர்கள், மேனாமினிக்கிகள் என்று தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்பட்ட ஒரு கும்பலுக்கு சமூகத்தின் உயர்ந்த நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததில் மிக முக்கிய பங்கு வகித்தது சுகுண விலாச சபை.

pammal sambandha mudhaliarகூத்தாடிகள் என்கிற வார்த்தையைக் கண்டதும் நிச்சயம் நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள், இது கலைத் துறை தொடர்புடையது என்று. கலைத் துறை என்றாலே நமது பொது புத்தியில் பதிந்திருப்பது சினிமா மட்டும்தானே. இது நமது பொது புத்தியின் சாபக்கேடு. அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் கவைக்கு உதவாது. மேற்கொண்டுப் பார்ப்போம். சினிமாவிற்கும் முன்னோடியாக இருந்த நாடகக் கலையில் இருந்தவர்களை கூத்தாடிகள், கேடுகெட்டவர்கள், ஸ்திரி லோலன்கள், குடிகாரர்கள் என்று பலப்பட இந்த சமூகப் பழியாக பழிக்க, அவர்களுக்கு கலைஞர்கள் என்கிற சமூகத்தின் சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்ததில் முன்னோடியாக இருந்தது சுகுண விலாச சபை.

சுகுண என்பது பத்தென்பதாம் நூற்றாண்டில் மிகப் பரவலாக இருந்த வார்த்தை போலும். தமிழின் முதல் நாவலாசிரியராக கருதப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் இரண்டாம் தமிழ் நாவலின் பெயரில் கூட இந்த சுகுண ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த நாவலின் பெயர் சுகுண சுந்தரி. உங்கள் காதில் சொப்பன சுந்தரி என்று விழுமானால் சந்தேகமே வேண்டாம், உங்களுக்கு இரண்டாம்தர தமிழ் சினிமா இரசனை என்கிற நோக்காடு பீடித்திருக்கிறது என்பதில். வேதநாயகம் பிள்ளை நவீன தமிழ் நாவல் இலக்கியத்தின் தந்தையா என்பதில் சர்ச்சை இருப்பது வேறு விசயம். அவருடைய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்கிற நாவலுக்கு முன்பே ஈழத்தின் யாழ்பாணத்தில் இருந்தோ, திரிகோணமலையில் இருந்தோ தமிழின் முதல் நாவல் வந்துவிட்டதாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. சரி தமிழின் முதல் நாவல் குறித்த விசாரணைக் கட்டுரை அல்ல இது என்பதால், நாம் மேற்கொண்டு சொப்பன….மன்னிக்கவும் சுகுண விலாச சபை குறித்துப் பார்ப்போம்.

பம்மல் கே. சம்பந்தம் என்றால், “ஆமா ஆமா தெரியுமே... காமெடி படம்” என்று முந்திரிக்கொட்டைத்தனமாக முந்திக் கொண்டு பரபரப்பதாக இருந்தாலும், சந்தேகமே வேண்டாம் இரண்டாம்தர சினிமா நோய் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதில். பம்மல் கே. சம்பந்தம்தான் இந்த சுகுண விலாச சபைக்கு பின்னணியில் உயிர் மூச்சாக இருந்தவர். இன்னும் தெளிவாக இவரை அடையாளப்படுத்துவது என்றால் பம்மல் சம்பந்த முதலியார் என்று சொல்வது தகும். தமிழ் நவீன (அதாகப்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டு) நாடகக் கலையின் தந்தைகளில் ஒருவராக கருதப்படக் கூடியவர்களில் ஒருவர். மற்றொருவர் சங்கரதாஸ சுவாமிகள். சுகுண விலாச சபை என்கிற தமிழின் முதல் (இப்படி அடையாளப்படுத்துவதில் வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடாது என்பது என்னுடைய துணிபு) நவீன நாடகக் குழுவை உருவாக்கி, நாடகக் கலைக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் சமூகத்தில் ஒரு சிறப்பான இடத்தை உருவாக்கித் தந்தவர் சம்பந்த முதலியார்.

இந்த கட்டுரைத் தொடரில் அவரைக் குறித்து மட்டும் எழுதிச் செல்வதை விட, தமிழ் நாடகக் கலையின் வரலாற்றையும் இடை இடையே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதால், அதையும் செய்யலாம் என்று இருக்கிறேன். இன்றைக்கு தேர்ந்த திரைப்பட இரசனை மற்றும் சினிமா மொழி தெரிந்தவர்கள் தமிழ் திரைப்படங்களை கொஞ்சமும் மதிக்காமல், அசட்டையாக பார்ப்பதைப் போலவே பம்மல் சம்பந்த முதலியாரும் அவருடைய சிறு பிராயம் முதற்கொண்டு தமிழ் நாடகங்களை கீழ்த் தரமானவைகள் என்று நம்பியதுடன், அப்படியே விமர்சனமும் செய்து வந்திருக்கிறார். அப்படியான ஒருவர் எப்படி தமிழின் முதல் நவீன நாடகக் கலைக்கு உதவி செய்த ‘சுகுண விலாச சபை’ என்கிற தமிழ் நாடக சபையை உருவாக்கி இருப்பார் என்பதை அடுத்த தொடரில் தெரிந்து கொள்வோம்……

Act 2

சம்பந்த முதலியார் காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில்) நாடகம் என்பது பெரும் அளவில் தெருக் கூத்து வடிவிலேயே இருந்திருக்கிறது. படிப்பறிவற்ற சமூகத்தின் பெரும் பகுதி இந்த தெருக் கூத்து நாடக வடிவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது. கல்வியறிவு பெற்று, சமூகத்தின் மேல்தட்டிற்கு நகர்ந்து விட்டதாகக் கருதிக் கொண்டவர்கள், தெருக் கூத்தை கீழ்த்தரமான கலை வடிவமாகப் பார்த்திருக்கிறார்கள். இந்த மண்ணில் ஆங்கிலேயர்களால், ஆங்கிலேயர்களுக்காக நடத்தப்பட்ட நாடகங்களும், ஆங்கிலேய நாடக இலக்கியமும் கல்வியறிவு பெற்றக் கூட்டத்திற்கு புதுமையான விசயமாகப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆங்கிலேய நாடகக் கலை வடிவத்தை அடியொற்றி தமிழிலும் நாடகங்களைக் கொண்டுவர பலர் முனைந்து இருக்கிறார்கள். தமிழில் நாடகக் கலை என்று ஒன்று இருந்ததா? இருந்தது என்றால், இவர்கள் ஏன் வேலை மெனக்கெட்டு ஆங்கிலேயே நாடகக் கலை வடிவத்தை தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற கேள்வி இயல்பாக எழக் கூடிய ஒன்றுதான்.

அப்படியான கேள்வி உங்களுக்கு எழவில்லை என்றாலும் எனக்கு எழுந்துவிட்டது. அப்புறம் என்ன வரலாற்றின் பக்கங்களை திருப்பிவிட வேண்டியதுதானே. இதோ திருப்பிவிடலாம். சங்க இலக்கியங்களின் முன் கால எல்லையில் உட்கார்ந்திருக்கும் தொல்காப்பியரிடம் இது பற்றி கேட்கலாம் என்று நினைத்து, ஏறத்தாழ பத்தாயிரம் வருடங்கள் பழமையான தொல்காப்பியத்தைப் புரட்டினால் நாடகம் என்கிற சொல் மிகத் தெளிவாக நமக்கு அகப்படுகிறது. நாடகக் கலை வடிவில் கூத்து என்பது மிக முக்கியமாக தொல்காப்பியத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது. பல வகை கூத்துக்களின் பெயர்களை தொல்காப்பியர் நமக்குத் தந்தபடி இருக்கிறார்.

வெறிக் கூத்து

குன்றக்குரவை

ஆய்ச்சியர் குரவை

வள்ளிக் கூத்து

கழனிலைக்கூத்து

கருங்கூத்து

ஆமலைக்கூத்து

முன்தேர்க் குரவை

பின்தேர்க் குரவை

காடைக் கூத்து

கழைக் கூத்து

நாம் மேலப் பார்த்த அனைத்து கூத்துக்களும் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நபர்களால் ஆடப்படுவது. ஆமலைக்கூத்து, பின்தேர்க் குரவை மற்றும் முன்தேர்க் குரவை ஆகிய கூத்துக்கள் போர்க் களத்தில் ஆடப்படும் கூத்துக்கள். ஆமலைக் கூத்து என்பது போரில் எதிரியை பொறிபறக்க பொரட்டியெடுத்த அரசன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தன்னுடைய வெற்றித் தேரின் மீது நின்றுகொண்டு போர் வீரர்கள் முன்னிலையில் ஆடும் கூத்து. முன்தேர்க் குரவை என்பது வெற்றி பெற்ற அரசன் தன்னுடைய வெற்றி வீரர்களின் தோளோடு தோள் கோர்த்துக்கொண்டு போர்க் களத்தில் ஆடும் கூத்து. பின்தேர்க் குரவை என்பது வெற்றி பெற்ற அரசன் தன்னுடைய தேரில் போர்க்களத்திலிருந்து வெளியேறும்போது வீரர்கள் தேருக்குப் பின்னால் கூத்தாடியடி வருவது.

இவை போக தொல்காப்பியர் தன்னுடைய காப்பியத்தில் மெய்பாட்டியல் பகுதியில் தொல் தமிழர்களின் நாடகக் கலை தொடர்பான பல விசயங்களைத் தருகிறார். ஆங்கிலேயர்கள் நாடகத்தை விளையாட்டு (play) என்று அடையாளம் காண்பதற்கு முன்பே தொல் தமிழர்கள் அதை விளையாட்டு என்று வகைப்படுத்திவிட்டார்கள். பின்ன தமிழன்னா சும்மாவா? தாரை, தப்பட்டைகளை அடித்து தரணிக்கே நாடகம் என்றால் என்ன என்று இலக்கணம் வகுத்தவன். தொல்காப்பியர் நாடகத்தை விளையாட்டு என்று குறிப்பிடுகிறார். உண்மைதானே. நாடகம் என்பது விளையாட்டு போன்ற நிகழ்த்துக் கலைதானே. விளையாட்டு என்கிற பொருள்தரும் ‘பண்ணை’ என்கிற சொல்லால் நாடகத்தைக் குறிக்கிறார் தொல்காப்பியர்.

அது மாத்திரமல்ல, ஒரு நாடக நடிகன் எத்தனை விதமான உணர்ச்சி பாவங்களை தன்னுடைய நடிப்பில் முகத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற உணர்ச்சிப் பெயர்களின் பட்டியலையும் தருகிறார்.

நகை

அழுகை

இளிவரல்

மருட்கை

அச்சம்

பெருமிதம்

வெகுளி

உவகை

இப்படியான உணர்ச்சிகளை ஒரு நாடக நடிகன் பாவங்களாக தன்னுடைய உடம்பின் மூலமும், முகத்தின் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். இப்படியான உணர்ச்சி பாவங்களை நடித்துக் காட்டும் கலைஞர்களுக்கு அவர் தரும் பெயர்கள், கூத்தன், பாணன், விறலி, பொருநன் என்பவைகள். இதில் கூத்தன் என்கிற பெயர் சிவக்கடாட்சம் பொருந்தியது. தொல் தமிழன் இயற்கையின் வடிவாக வழிபட்ட சிவனே கூத்தபிரான்தானே.

தரணிக்கே வழிகாட்டும் விதமாக நாடக கலைக்கு இலக்கணம் வகுக்க வேண்டுமானால் தொல் தமிழனிடம் அதற்கான அறிவுப் பெட்டக புத்தகங்கள் இருந்திருக்கும்தானே. இருந்தது. அவைகளின் பெயர்களை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் நமக்குத் தருகிறார்கள்.

முறுவல்

சயந்தம்

குண நூல்

செயிற்றியம்

இசை நுணுக்கம்

இந்திர காளியம்

பஞ்ச மரபு

பரதசேனாபதீயம்

மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்

கூத்த நூல்

செயன்முறை நூல்

நாடகக் கலை குறித்து, நாடகக் கலையின் நுட்பங்கள் குறித்து, நாடகக் கலைஞர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பது குறித்து பனிரெண்டு நூல்கள் தொல் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. இவைகள் கணக்கில் வந்தவைகள். கணக்கில் வராதவைகள் குறித்து ஆடல்வல்லானுக்கே வெளிச்சம். இப்படி கணக்கில் வந்த நூல்களும் இன்றைக்கு நம்மிடம் இல்லை என்பது நாம் பெற்றுவந்த துர்பாக்கிய வரம் என்று சொன்னால் அது மிகையாகாது. தொல்காப்பியரை அப்படி கொஞ்சம் உட்காருங்கள் ஐய்யனே என்று சொன்னால் மாட்டேன் என்றா சொல்லப் போகிறார். அதனால் அவரை அப்படி உட்காரச் சொல்லிவிட்டு நாம் மீண்டும் சம்பந்த முதலியாரிடம் வருவோம்.

Act 3

ஐந்திலிருந்து நான்காயிரம் வருடங்களுக்கு முன்பாக நாடகம் என்கிற கலையை பல வடிவங்களிலும், பெயர்களிலும் வளர்த்தெடுத்த நம்மவர்களின் நாடகக் கலை எப்படி சீரழிந்தது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை இதுயில்லை என்பதால், அதைப் பற்றி இங்கே நாம் பேசப் போவதில்லை. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் நம்முடைய நாடகக் கலை தேய்ந்து கட்டெறும்பும் பார்த்து சிரிக்கும் நிலைக்கு போய்விட்டது என்பதே பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிக் காலங்களில் நமக்குக் கிடைக்கும் எழுத்துத் தரவுகள் தெரிவிக்கின்றன. சாமானிய மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய தெருக்கூத்து நாடகங்கள் (இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக சமூகத்தை, அதன் பிரச்சனைகளை பிரதிபலிப்பதாகவே நம்முடைய நாடகங்கள் இருந்திருக்கின்றன) முற்றிலும் அன்னியப்பட்டு புராணக் கதைகளையே பெரும்பாலும் தங்களின் பேசு பொருளாக கொண்டிருந்திருக்கின்றன.

பேசு பொருள் என்பதை விட பாடு பொருள் என்று சொல்வது தகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் நாடகங்கள் மணிக் கணக்கில் பாடுபவைகளாகவே இருந்திருக்கின்றன. இதே நிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்தே தொடர்ந்த ஒன்றாகவும் இருந்திருக்கிறது. கதாபாத்திரங்கள் மணிக் கணக்கில் பாடுவதே நாடகம் என்கிற அபத்தக் கொள்கை அன்றைய நாடகக் கலைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது மாத்திரமல்ல, ஆளை அடிக்கும் வண்ணப் பூச்சுக்களை முகத்தில் பூசிக்கொள்வது, கதாபாத்திரங்களுக்கு தொடர்பே இல்லாத வகையில் ஆடைகளை உடுத்திக் கொள்வது (உதாரணமாக பிச்சைக்காரனாக இருந்தாலும் அவன் அரச உடையில் இருப்பது), ஆபாசமான அசைவுகளை வெளிப்படுத்துவது என்று பகுத்தறிவு பெற்ற எந்த ஒரு சமூகமும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்திருக்கிறது. இவைகளோடு சேர்த்து சில நாடகக் கலைஞர்களின் வாழ்வியல் ஒழுக்கங்களும் படு மோசமாக இருந்த காரணத்தால் அன்றைய தெருக்கூத்து நாடகக் கலை சமூகத்தால் கீழ்த்தரமானதாக கருதப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் ஒழுங்கீனமாக இருப்பவர்களைக் குறிக்க ‘குடியும் கூத்துமால்ல இருக்கான்’ என்று அடையாளப்படுத்துவது நமது வழக்கம். இங்கே கூத்து என்கிற வார்த்தை எத்தகைய ஒழுங்கீனங்களைக் குறிக்கிறது என்பதை சொல்லி தெளிய வைக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.

இப்பொழுதே இந்த நிலை என்றால் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பான நிலையை சொல்லியும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அன்றைய நிலையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்களுக்கு இந்த நிலையானது இன்னும் படுமோசமாக பட்டிருக்கிறது. தமிழ் நாடகங்கள் என்றாலே அவைகள் அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்தவைகள் என்பது அவர்களுக்குள் ஊறிய ஒன்றாகி விட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆங்கிலேய நாடகங்கள் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினருக்கும், கல்வியறிவு பெற்ற கூட்டத்திற்கும் ஆங்கிலேயர்களால் நடத்திக் காட்டப்பட, அவைகளின் பண்பட்ட கலைத்தன்மையானது தெருக்கூத்துக்களை மேலும் சறுக்கி விழும்படி செய்து கொண்டிருந்தது. இது கல்வியறிவு பெற்றவர்கள் தெருக்கூத்துக்களை மேலும் சக்கையடியாக விமர்சிக்க வழி செய்தது. இப்படியாக விமர்சித்தவர்களில் ஒருவர் பம்மல் சம்பந்த முதலியார். அவருடைய பள்ளிக் காலத்திலேயே அவருக்கு தெருக்கூத்துக்களின் ஆபாசமானது முகத்தில் அறைவதைப் போல இருந்திருக்கிறது.

பள்ளிப் படிப்பையும் தாண்டிய சம்பந்தம் அவர்களின் வாசிப்பு பழக்கமும், அன்றைய நம் நாடகக் கலையின் அபத்தங்களை அவருக்கு எடுத்துக்காட்ட உதவியாக இருந்திருக்கிறது. பனிரெண்டு, பதிமூன்று வயதுகளிலேயே அவர் பல தலைப்புகளிலான ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார். இதற்கு முழுக் காரணம் அவருடைய தந்தை பம்மல் விஜயரங்க முதலியார். விஜயரங்க முதலியார் பள்ளி வாத்தியாராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, அன்றைய மிக உயரிய பதவிகளில் ஒன்றான இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் என்கிற பதவி வரை உயர்ந்தவர். அவர் தன் வாசிப்பிற்காக வீட்டில் சேர்த்து வைத்திருந்த ஆயிரக்கணக்கிலான ஆங்கில மற்றும் தமிழ்ப் புத்தகங்களே சிறுவனாக இருந்த சம்பந்தம் முதலியாரின் வாசிப்புப் பழக்கத்தை தூண்டி விட்டிருக்கிறது. புத்தகங்களை வாங்கி படிப்பது மாத்திரமல்லாமல், விஜயரங்க முதலியார் பல தமிழ் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடவும் செய்திருக்கிறார். இதன் காரணமாக தமிழகத்தின் எந்த மூலையில் புதிதாக எப்படியான ஒரு தமிழ்ப் புத்தகம் அச்சானாலும் அதன் ஒரு பிரதி இவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த வகையிலும் நூற்றுக்கணக்கில் பல தமிழ்ப் புத்தகங்களை உடனுக்கு உடன் படிக்கும் வாய்ப்பும் சம்பந்த முதலியாருக்கு அந்த சிறுவயதிலேயே கிடைத்திருக்கிறது.

இந்த சிறுவயது வாசிப்புப் பழக்கமானது அவருக்கு அப்பொழுதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமையைக் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக சிறுவயதிலேயே கலை நயம் மிக்க விசயங்களில் அவருக்கு ஈடுபாட்டையும் கொண்டுவந்திருக்கிறது. சம்பந்தம் அவர்களின் தந்தை அவர் சிறுபிள்ளையாக இருக்கும்போதே ஆங்கிலேயர்கள் நடத்தும் ஆங்கில நாடகங்களுக்கு அவரை அழைத்துப்போவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் பல ஆங்கில நாடகங்கள் ஆங்கிலேயே நடிகர்களின் நாடகம் வழியாகவே அவருக்கு அறிமுகமாகியிருக்கிறது. வாசிப்பு அனுபவமும் அந்த நாடகங்களின் பண்பட்ட கலை வெளிப்பாட்டுத் தன்மைகளும் சேர்ந்து அவருக்குள் நாடகக் கலையின் மீது ஓர் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இன்றைக்கு எப்படி சினிமா கலையானது சிறுவயதில் பலருக்குள் ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறதோ அதேபோன்று சினிமாக் கலை நம் ஊருக்கு வந்திராத அன்றைய காலகட்டங்களில் (ஆங்கிலேய) நாடகக் கலையானது அன்றைய சிறுவர்களிடையே ஈர்ப்பை உண்டாக்கியது.

Act 4

சிறுவயதிலேயே தெருக்கூத்து நாடகங்களை சகட்டு மேனிக்கு விளாசியிருக்கிறார் சம்பந்த முதலியார். தெருக்கூத்து வடிவத்திலிருந்த அபத்த ஆபாச அம்சங்களையே அவர் விமர்சனம் செய்தாரே ஒழிய, தெருக் கூத்து நாடகக் கலையையே அல்ல. நம் நாடகக் கலையில் இருக்கும் அபத்த ஆபாசங்களை ஒழித்துக் கட்டினால் நம் நாடகக் கலையும் அற்புத வடிவம் பெறும் என்பதை அவருக்கு முதன் முதலில் உணர்த்தியது தெலுங்கு நாடகங்களே. அவருடைய பதினெட்டாம் வயதில் (வருடம் 1891) சென்னையிலிருந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் கிருஷ்ண மாச்சார்லு என்பவரின் சரச வினோதனி சபா நடத்திய ஐந்து தெலுங்கு நாடகங்களைப் பார்க்கிறார். அந்த நாடகங்களே, உள்ளூர் நாடகங்கள் குறித்த அவருடைய விமர்சனப் பார்வையை முற்றிலும் புரட்டிப் போட்ட நாடகங்கள். நாடகங்களில் தானும் நடிக்க வேண்டும் என்கிற தீரா தாகத்தை அவருக்குள் உண்டாக்கியதும் இந்த நாடகங்களே. கல்வியறிவு பெற்ற மேட்டுக்குடி பிள்ளைகளுக்கு இப்படியான ஆசை என்பது அன்றைய சமூக சூழலில் மிகவும் கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. கூத்தாடி என்றாலே கீழ்த்தரமான பழக்கங்களையும் ஒழுக்கங்களையும் உடையவன் என்கிற பொதுப்படையான பச்சைக்குத்தல் சிந்தனை அன்றைக்கு மேலோங்கியிருந்தது.

இந்த சமூக சூழலில்தான் சம்பந்தம் அவர்களுக்கு நாடகக் கலை பித்துப் பிடிக்கிறது. அந்த வருடம் சரச வினோதனி சபா சென்னையில் நடத்திய நாடகங்கள் சம்பந்தம் போன்ற பல படித்த மேட்டுக் குடி இளைஞர்களின் மத்தியில் நாடகக் கலை பித்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. சரச வினோதனி சபா தொழில் முறையில் நாடகங்களை நடத்தும் நாடகக் கம்பெனி கிடையாது. இது ஒரு அமெச்சூர் நாடகக் கம்பெனி. இதிலிருந்த அனைவரும் அமெச்சூர் நடிகர்கள். சென்னையில் அமெச்சூர் நாடகக் கம்பெனிகள் அதற்கு முன்பு இருந்ததில்லை என்று குறிப்பிடுகிறார் சம்பந்தம். நாடகங்கள் வேடிக்கை வினோத நிகழ்ச்சி போலவே கொத்தவால் சாவடி போன்று மக்கள் பெரும் அளவில் கூடும் இடங்களில் நடத்தப்படும் என்கிறார். அன்றைய சென்னையில் (அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டங்களில்) இரண்டே இரண்டு தொழில் முறை நாடகக் கம்பெனிகளே இருந்திருக்கிறது. ஒன்று சுப்பராயாச்சாரி கம்பெனி; மற்றொன்று கோவிந்தசாமி ராவினுடைய மனமோஹன நாடகக் கம்பெனி. இந்த இரண்டு கம்பெனிகளும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து செங்காங் கடை என்கிற இடத்தில் நாடகம் நடத்துவதற்காக போடப்பட்டிருக்கும் ஓட்டுக் கொட்டகையில் புராணக் கதைகளை நாடகங்களாக நடத்தியிருக்கிறார்கள்.

பல்லாரியில் வழக்குரைஞராக இருந்தவர் கிருஷ்ண மாச்சார்லு. அவரைப் போலவே நாடகக் கலையில் விருப்பமும் ஈடுபாடும் கொண்ட பல படித்தவர்களை சேர்த்துக்கொண்டு அவர் உருவாக்கியதே சரச வினோதனி சபா. கிருஷ்ண மாச்சாருலுவின் சரச வினோதனி சபாவே பம்மல் சம்பந்தம் அவர்களின் சுகுண விலாச சபை உருவாக முதலும் முற்றிலும் உந்துதலுமான காரணம். இதை சம்பந்தம் அவர்களே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். அன்றைய சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளம்) இருந்த உயர் குடி மற்றும் படித்த சமூகமானது ஆங்கிலேய நாடகங்களைத் தவிர தமிழ் நாடகங்களைப் பார்ப்பதை ஒரு கேவலமான செயலாக கருதியிருக்கிறது. தமிழ் நாடகங்கள், படித்தவர்களால் படித்தவர்களுக்கு நடத்தப்படும் ஒன்று கிடையாது என்பது அன்றைய புரிதல்! இந்தப் புரிதலில் பழம் சட்டிப்பானைகளைப் போட்டு உடைத்தவர் கிருஷ்ண மாச்சார்லு. அவரைப் போல மெத்தப் படித்தவர்களை அமெச்சூர் நடிகர்களாகக் கொண்ட சரச வினோதனி சபா 1891-ல் சென்னையில் நடத்திய ஐந்து தெலுங்கு நாடகங்களும் சென்னையில் பெரும் பரபரப்பையே கிளப்பிவிட்டிருக்கிறது. அதிலும் சென்னையின் படித்த மேட்டுக் குடி சமூகத்தின் மத்தியில்.

ஒரு வக்கீலாவது நாடகம் நடத்தரதாவது என்று பரபரத்தபடியே சென்னையின் படித்த வாசிகள் எல்லாம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் அலைமோதி அந்த நாடகங்களைப் பார்த்திருக்கிறார்கள். இப்படிப் பார்த்தவர்களில் சம்பந்தம் அவர்களின் சகோதரர்களுள் ஒருவரான ஐயாசாமி முதலியாரும் ஒருவர். இந்த நாடங்களைப் பார்த்து வந்த ஐயாசாமி முதலியார் சம்பந்தம் அவர்களிடம் நாடகங்கள் மிகவும் நன்றாகவும், தரமாகவும் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதுவரை உள்ளூர் நாடகங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த சம்பந்தம் அவர்களுக்கு இது என்னடா அதிசயம் என்று தோன்றியிருக்கிறது. வரம் கொடுக்கும் சாமி வீடு தேடி வந்த கதையாக அடுத்த நாள் கிருஷ்ண மாச்சார்லு, சம்பந்தம் அவர்களின் வீட்டிற்கு அவருடைய தந்தையைப் பார்க்க வந்திருக்கிறார், விஜயரங்க முதலியாரை தன்னுடைய நாடகத்தைக் காண சிறப்பு விருந்தினராக அழைக்க. வாய்ப்பாகப் போனது என்று சம்பந்தம் அவர்கள் தந்தையுடன் அடுத்த நாள் சரச வினோதனி சபாவின் நாடகங்களைக் காண விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு போயிருக்கிறார், அப்படியென்ன காணா அதிசயத்தை கண்டுவிடப் போகிறோம் என்கிற நினைப்பில். நிற்க இடமில்லாமல் படித்தவர்களின் கூட்டம் குழுமியிருக்கிறது. அந்த நாடகத்தைத் தான் எப்படி திறந்த வாயைப் மூடாமலும், வைத்த கண்ணை எடுக்காமலும் ஐந்து மணி நேரங்களுக்கு சிலை போல் பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பந்தம் அவர்கள் அவர் கைப்படவே எழுதியிருக்கிறார்.

Final Act

சரச வினோதனி சபாவின் நாடகங்களைப் பார்த்துவந்த சம்பந்தம் அவர்களுக்கு அன்று இரவு தூக்கம் கொள்ளவில்லை. தானும் அதுபோல நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவரை பிடித்துக் கொண்டுவிட்டது. ஆசை முடிவாகி தீர்மானமானது அந்த இரவே. சரச வினோதனி சபாவின் ‘சிரகாரி’ நாடகம் சம்பந்தம் அவர்களின் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த அளவிற்கு என்றால், அதே போன்று ஒரு நாடகத்தை எழுதி, தான் அதில் நடிக்க வேண்டும் என்கிற அளவிற்கு. அடுத்த நாளே நாடகக் கதை எழுதும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் எழுதுவதற்கு கதைதான் தோன்றவில்லை. இருந்தாலும் நாடகக் கதை எழுதியே ஆகவேண்டும் என்கிற உந்துதலில் சகுந்தலை நாடகத்தை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து எழுதத் தொடங்கிவிட்டார். அந்த நாட்களில் அவருடைய சகோதரைத் தேடி வெங்கட கிருஷ்ண நாயுடு என்பவர் வந்திருக்கிறார். இவர் சம்பந்தம் அவர்களுக்கும் நண்பர்தான். சரச வினோதனி சபாவைப் போன்று தமிழில் ஒரு நாடக சபையை உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியை முன்னெடுக்கும் விசயமாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் பத்திரிக்கையை சம்பந்தம் அவர்களின் சகோதரர்களிடம் கொடுக்க வந்திருக்கிறார் வெங்கட கிருஷ்ண நாயுடு.

தான் எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாரோ அது தானே தன் வீட்டைத் தேடி வருவதை அறிந்த சம்பந்தம் துள்ளிக் குதித்திருக்கிறார். தானும் அந்த கூட்டத்திற்கு வருவதாக சொல்லியிருக்கிறார். சம்பந்தம் தமிழ் நாடகங்களை சகட்டு மேனிக்கு வார்த்தை சாட்டையால் விளாசித் தள்ளுபவர் என்பது வெங்கட கிருஷ்ண நாயுடு அறிந்த சங்கதி. ஆகையால் நீ வந்து எங்களின் முயற்சியை கேலி செய்வதற்கா என்று தயங்கியிருக்கிறார். சரச வினோதனி சபாவின் நாடகங்களைப் பார்த்து தனக்கும் அதுபோன்று ஒரு நாடக சபையை உருவாக்க வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதை நம்ப வெங்கட கிருஷ்ண நாயுடு தயாராக இல்லை. சம்பந்தம் கூட்டத்திற்கு வந்து எதாவது துடுக்குத்தனமாக பேசி முயற்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் அவருக்குள். அவருடைய பயத்தைப் போக்க சம்பந்தம் அவர்கள் தான் தமிழ் நாடகம் ஒன்றை நடத்துவதற்காக மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் சகுந்தலை நாடகத்தின் கதையை எடுத்துவந்து அவரிடம் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த பிறகே வெங்கட கிருஷ்ண நாயுடுவிற்கு நம்பிக்கை வந்திருக்கிறது. சரி நீயும் வரலாம் என்று அழைத்திருக்கிறார்.

அந்தக் கூட்டம் 1891 ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில், மண்ணடிக்கு அடுத்த தெருவிலிருந்த ஜாக்கியஸ் பள்ளிக்கூட கட்டிடத்தில் நடந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் முப்பதிலிருந்து நாற்பது நபர்கள் கலந்து கொண்டதாக சம்பந்தம் எழுதுகிறார். சரச வினோதனி சபா போன்று தமிழிலும் படித்தவர்களைக் கொண்டு ஒரு நாடகக் கம்பெனி உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படுகிறது. அந்த முடிவின் படி நாடக சபையை உருவாக்க விருப்பமும் ஈடுபாடும் உடையவர்கள் சபையின் உறுப்பினர்களாக சேருவதற்கான கையொப்பம் இட்டிருக்கிறார்கள். அதில் முதலாவது கையெழுத்து போட்டவர் ஜெயராம் நாயக்கர். இவர் சம்பந்தம் அவர்களின் நண்பர். இரண்டாவது கையெழுத்து சம்பந்தம் அவர்கள். இவர்களைத் தொடர்ந்து மேலும் ஐந்து நபர்களே உறுப்பினர்களாக சேர்ந்து சபையை உருவாக்க கையெழுத்து  இட்டிருக்கிறார்கள். அவர்கள் ஊ. முத்துகுமாரசாமி செட்டியார், வி. வெங்கடகிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை, ஜி.இ. சம்பத்து செட்டியார் மற்றும் சுப்பிரமணியப் பிள்ளை.

இந்தக் கூட்டம் முடிந்து 1891 ஜூலை மாதம் முதல் தேதியில் தம்புச் செட்டித் தெருவிலிருந்த ஜெயராம் நாயக்கருடைய வீட்டில் மீண்டும் இந்த ஏழு உறுப்பினர்களும் கூடி மாலை ஆறு மணிக்கு சுகுண விலாச சபையை முறைப்படி அறிவித்து தோற்றுவிக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு தலைமை சம்பந்தம் அவர்கள். சுகுண விலாச சபை என்கிற பெயரில் சுகுண என்பதைப் பரிந்துரைத்தவர் ஊ. முத்துகுமாரசாமி செட்டியார். விலாசம் என்கிற வார்த்தை இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர் ஜி.இ. சம்பத்து செட்டியார். சுகுண விலாச சபை நாடகக் குழுவின் நிர்வாக சபை உறுப்பினர்களாக தேர்வானவர்கள் முத்துகுமாரசாமி செட்டியார், வெங்கடகிருஷ்ண நாயுடு, வெங்கடகிருஷ்ண பிள்ளை, ஜெயராம் நாயக்கர் மற்றும் பம்மல் சம்பந்தம் முதலியார். பிற்காலத்தில் தமிழகத்தில் உருவான அமெச்சூர் நாடக சபைகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த சுகுண விலாச சபையை உருவாக்கிய இந்த ஏழு பேரும் அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்.

நவீன தமிழ் நாடகக் கலையின் வரலாற்றை எழுத உட்கார்ந்தால் அதில் முதல் மைல்கல்லாக வருவது சுகுண விலாச சபை. தமிழ் நாடகக் கலையின் பிதாமகர் என்று புகழப்படும் அளவிற்கு உயர்ந்தவர், அதை உருவாக்கி அதன் செயல்பாடுகளில் முக்கிய பங்குவகித்த பம்மல் சம்பந்தம் அவர்கள். சுகுண விலாச சபை நடத்திய பிரசித்தி பெற்ற நாடகங்களின் கதைகள் அனைத்தையும் எழுதியவர் சம்பந்தம் அவர்கள். சுகுண விலாச சபையை நடத்திக்கொண்டே பிற்காலத்தில் உயர்நீதிமன்ற வழக்குரைஞராகவும், உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தவர் சம்பந்தம் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் தமிழ் நாடகக் கலையில் சுகுண விலாச சபையின் மூலம் பல புதுமையான மாற்றங்களைக் கொண்டுவந்தவரும் சம்பந்தம் அவர்களே. நாடகக் கலை ஒழுக்கம் கெட்டவர்களுக்கானது என்கிற தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனமான எண்ணத்தை உடைத்தெறிந்தவரும் அவரே. சமூகத்தின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான நீதிபதி பதவி வகித்த ஒருவர் தமிழ் நாடகக் கலையின் முன்னேற்றத்திற்கு உழைத்தது, தமிழ் நாடகக் கலை குறித்த உயர்வான எண்ணத்தை சாமானிய மக்களிடையே கொண்டு செல்வதற்கு பெரிதும் உதவியது.

இருந்தும், எத்தகைய அபத்தங்களை ஒழித்து பண்பட்ட நாடகக் கலையை உருவாக்க சம்பந்தம் அவர்கள் தீர்க்கமாக உழைத்தார்களோ அந்த அபத்தங்கள் அவர் காலத்திலும் (சில சமயங்களில் நண்பர்களின் அழுத்தம் காரணமாக அத்தகைய அபத்தங்களை தானும் மேற்கொள்ள வேண்டியிருந்ததையும் சம்பந்தம் அவர்கள் வெளிப்படையாக எழுதுகிறார்) அவருக்குப் பின்பும் தமிழ் நாடக மேடையை பீடித்திருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. இன்றைய நிலையிலும் அத்தகைய அபத்தங்கள் வேறு உருவங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் ஆகச் சிறந்த நகைமுரண்.

- நவீனா அலெக்சாண்டர்

Pin It