"ஆச்சாரியார்"

"மூதறிஞர்"

"சக்கரவர்த்தி"

rajaji 320என்று பார்ப்பன பரிவாரங்களால் பரிவட்டம் சூட்டப்பட்ட இராஜகோபாலாச்சாரியார் 10.12.1878-ல் சேலத்தில் பிறந்து தனது 94ம் வயதில் 25.12.1972ல் சென்னையில் மறைந்தார். தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராய் இருந்த போதிலும், வாழ்நாள் முழுதும் தனது இனத்திற்கு நல்ல விசுவாசியாக, சேவகராக வாழ்ந்தார் என்பதையும் தாண்டி பார்ப்பன தர்மத்தைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் பெரியாரை தன் அன்பார்ந்த எதிரி என்றார். ஜாதிப்பற்றற்ற ஒரு சீர்திருத்தவாதியைப்போல் காட்டிக் கொள்ள முயற்சித்திருந்தாலும், அவர் வாழ்நாள் முழுதும் ஆற்றிய "திருப்பணிகளை" பட்டியலிட்டாலே அவை அவரின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

மனுதர்மவாதி:

  சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களிலேயே அதன் செயல்பாடுகளைக் கண்டு கொதித்தவர் இராஜாஜி. இந்துமத, வேத, புராண, சாஸ்திரக் குப்பைகளை சுயமரியாதை இயக்கம் கேள்விக்குறியாக்கி, பார்ப்பனர்களின் வர்ண பேத சூழ்ச்சிகளை வீதிக்குக் கொணர்ந்து, அவற்றைத் தீயிட்டுப் பொசுக்கிய நேரத்தில் மனுதர்மத்திற்கு ஆதரவாக வக்காலத்து போட்டவர் இராஜாஜி. "மனுதர்மம் அருமையான நீதியைக் கொண்டது. மனுசாஸ்திரத்தை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம்" என்று சொல்லி சுயராஜ்யப் பத்திரிக்கையிலே தொடர் கட்டுரைகளை தீட்டியதோடு, திருவில்லிப்புத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் தாலுக்கா மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாக குற்றப்பத்திரிக்கை வாசித்து, இவர்களின் ஜாதி துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என தன் தலைமை உரையில் குறிப்பிட்டவர்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டி காங்கிரசால் ஒதுக்கப்பட்ட நிதியை தனது பெயரில் வைத்துக்கொண்டு, அதனால் ஒரு காரியமும் செய்யாமல், மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுத்ததாக குடியரசு பத்திரிக்கை குற்றம் சாட்டியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி "பிறவியில் ஜாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது" என இயற்றிய தீர்மானத்தை எதிர்த்து, இராஜினாமா கடிதம் கொடுத்ததோடு தனது நண்பர்களையும் இராஜினாமா கடிதம் கொடுக்க வற்புறுத்தியவர் இராஜாஜி. பால்ய விவாக தடைச்சட்டத்தை பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, பிராமணர்-பிராமணர் அல்லாதார் சண்டை இல்லாதுபோனால் தென்னாட்டு பிராமணர்கள் அந்தச் சட்டத்தை எதிர்த்திருக்க மாட்டார்கள் என்று வியாக்யானம் புரிந்தவர்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் (26.6.1952) கலந்து கொண்டு "அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்ய வேண்டும். சலவைத் தொழிலாளர்களாகிய நீங்கள், துணியைக் கிழிக்காமல் சலவை செய்வது எப்படி என்பதைத்தான் கற்றுகொள்ள வேண்டும். எல்லோரும் படிக்க ஆரம்பித்தால் இந்தத் தொழிலை வேறு யார்தான் செய்வார்கள்?" என தன் பிறவித் திமிரை வெளிப்படுத்தியவர் இராஜாஜி.

கொலைக்குற்றம்:

  மோட்டார் கார்கள் பயன்படுத்தப்படாத காலம். நாமக்கல்லிற்கு ஒரு வழக்கு தொடர்பாக சென்று குதிரைவண்டியில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார் இராஜாஜி. நள்ளிரவு நேரம். வரும் வழியில் சுங்கச்சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட சுங்கப்பணத்தை வசூல் செய்வதற்காக வண்டியின் பின்புறமாக வந்து இராஜாஜியை எழுப்ப முயற்சிக்கிறார் காவல்காரர். நல்ல தூக்கத்தில் இருந்த இராஜாஜி காவல்காரனை வழிப்பறிக் கொள்ளையன் என நினைத்து தன் கைத்துப்பாக்கியால் சுட அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுகிறார். பின் அவர் காவற்காரர் என்பதை அறிந்து தனது வண்டியிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வழியிலேயே அந்தக் காவற்காரர் இறந்து விடுகிறார். இது தொடர்பாக காவல்துறை இராஜாஜி மீது கொலைக்குற்றம் சுமத்த, வழக்கு நீதிமன்றம் சென்றது. நாமக்கல் மாவட்ட துணை ஆட்சியராகப் பணிபுரிந்த டி.ரங்காச்சாடியாரும், இராஜகோபாலாச்சாரியாரும் நண்பர்கள். நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் அவரது தலையீட்டில் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டததாகக் கூறி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த செய்தி 1949ல் வெளியான அவரது வாழ்க்கை வரலாறு நூலில் இடம்பெற்றுள்ளது. இவர்தான் மூதறிஞர் என்று பாராட்டப்பட்டவர்.

இந்திக்கு ஆதரவு:

 1937ல் சென்னை மாகாண பிரதமராக பதவி வகித்த போது இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்த எந்த மாகாணத்திலும் கொண்டு வரப்படாத இந்தி மொழி கட்டாயப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்தவர். 1938ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது பொப்பிலி அரசரை நீதிக்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வற்புறுத்திய பெருமான். பொப்பிலி அரசர் விலகுவதன் மூலம் நீதிக்கட்சியையே செயலிழக்கச் செய்துவிடலாம் எனக் கருதி, பதவி விலகவில்லையெனில் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதாவைப் பயன்படுத்தி உங்கள் ஜமீன் சொத்துக்களை அரசுடமையாக்கி விடுவேன் என்று மிரட்டினார். பொப்பிலிராஜா பதவி விலகியதும் நீதிக்கட்சித் தலைவர்களால் பெல்லாரி சிறையில் அடைபட்டிருந்த பெரியார் நீதிக்கட்சித் தலைவரானதுதான் ஆச்சாரியார் ஆப்பசைத்த குரங்கான கதை.

இந்தி எதிர்ப்புப்போரில் கைதாகி சிறையில் மாண்ட தாளமுத்து குறித்து சட்டமன்றத்தில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பிய போது "தற்குறி தாளமுத்து தேவையில்லாமல் சிறைபட்டு மாண்டார்" என தன் அதிகார மமதையை வெளிப்படுத்திய சக்கரவர்த்தி !

மொழிவாரி மாநில எதிர்ப்பு:

  மொழிவாரி மாநிலக் கோரிக்கை வலுவடைந்த நேரத்தில் அதை வீழ்த்தும் விதமாக பசல்அலி கமிஷன் பரிந்துரைப்படி இந்தியாவை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தியப்பகுதியாகக் கொண்டு தட்சிணப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மேற்குப்பிரதேசம், கிழக்குப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என ஐந்து பிரதேசங்களாகப் பிரிக்கப்போவதாக பிரதமர் நேரு அறிவித்தார். நேருவின் இந்தப் பிரகடனத்தை இராஜாஜி ஆதரித்ததோடு அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் "மொழிவாரி மாநில அரசு கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள்" எனக் கூச்சலிட்டார். அய்தராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையிலும் இதே கருத்தை வெளியிட்டார்.

1952ல் ஆந்திரம் தனி மாநிலமாக பிரிந்துவிட்ட நிலையில், சென்னை ராஜதான்ய அரசவையை தமிழில் நடத்த வேண்டும் என ஒரு மசோதா மேல்சபையில் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸ் ஆதரவுடன் அந்த மசோதாவை எதிர்த்து தோற்கடித்தவர் இராஜாஜி.

சக்கரவர்த்தி திருமகன்:

திராவிடர் இயக்கம் இராமாயணத்துக்கு எதிராக தீவிரப்பிரச்சாரத்தை மேற்கொண்ட போது கல்கி வார இதழில் சக்கரவர்த்தி திருமகன் என தலைப்பிட்டு இராமாயணத்தை கட்டுரை வடிவில் எழுதியவர் இராஜாஜி. மூகாஜி என்ற பெயரில் முரசொலியில் இராஜாஜிக்குப் பதிலடி கொடுத்தார் கலைஞர். டெல்லியில் ராமலீலா என்ற பெயரில் இராவணன் உருவப்பொம்மைகளை எரிப்பது தொடர்ந்தால் தென்னாட்டிலும் இராமனை எரித்து இராவணலீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும் என அதில் எச்சரித்தார். இது நடந்ததோ 1954ல். சரியாக இருபது வருடங்களுக்குப் பின்னர் டெல்லியில் நடைபெற இருந்த இராமலீலா நிகழ்வில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கலந்து கொள்ளவிருந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேள்வியுற்ற அன்னை மணியம்மையார் அவர்கள் "டெல்லியில் இராமலீலா நடந்தால் தமிழ்நாட்டில் இராவண லீலாவை நடத்துவோம்" என பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு ஓலை விடுத்தார். இராமலீலா நடந்தது. இராவணலீலாவும் நடந்தது. அன்னை மணியம்மையார் தலைமையில் திட்டமிட்டபடி சென்னை பெரியார் திடலில் தோழர்களின் உணர்ச்சிப்பிழம்பாய் கூடினர். தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் இராவணலீலாவைக் கை விடும்படி கேட்டுக் கொண்டதையும் மறுத்து சிங்கமென சிலிர்த்தார் அன்னை மணியம்மையார். இராமன், இலட்சுமணன், சீதை உள்ளிட்ட உருவ பொம்மைகள் தீக்கிரையாக்கி தோழர்கள் கைதாகினர்.

குலக்கல்வித் திட்டம்:

1954ல் தமிழக முதல்வராக பதவி வகித்த இராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தார். கிராமப்புற மாணவர்களின் பள்ளிப் படிப்பை மூன்று மணி நேரமாகக் குறைத்து மீதி நேரத்தில் அவரவர் பாரம்பரியத் தொழிலை செய்யலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களை சவக்குழியில் தள்ளும் இந்தத் திட்டத்தின் சூழ்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட பெரியார், ராஜாஜி கொண்டுவந்தது “குலக்கல்வித் திட்டம்” என்று விமர்சித்ததார். 24.1.54 அன்று ஈரோட்டில் “ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு ” மாநாட்டை கூட்டினார்.

ஆச்சாரியார் தொடர்ந்து அத்திட்டத்தை கைவிட மறுக்கவே சென்னையில் 31.1.54ல் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி அதில் ஆச்சாரியாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “தோழர்களே! இந்தக் கல்வித் திட்டம் எவ்வளவு யோக்கியமற்றது! இந்தப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவு தூரம் கொடுமை படுத்துகிறார்கள். அடக்கி மிதித்து நசுக்குகிறார்கள் என்பதற்கு, இந்தக் கல்வித்திட்டமே போதுமானது என்பது விளங்கும். எவ்வளவு தைரியம்? இந்தக் காலத்தில் இவ்வளவு தைரியமாக நம்மைக் கொடுமைப்படுத்துகிறார்களே! இந்தக் கல்வித் திட்டம் கேடானது; எங்கள் மக்களை நசுக்குவது; நாங்கள் படிக்கக்கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்படும் அழிவுத் திட்டம் என்று சொன்னால், இவர்கள் இல்லை இதுதான் நல்ல திட்டம். மக்களை கெடுப்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று நமக்கு சொல்லுகிறார்கள். என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங்களுக்குத் தகுதியில்லை திறமையில்லை என்கிறார்கள். படிக்கவும் வசதி செய்து தரமாட்டேன் என்கிறார்கள். கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும் அதற்கும் விடாமல் கல்வித்திட்டம் என்ற பெயரால் அவனவன் சாதித் தொழிலுக்கு போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள். உள்ளபடி இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட்டமாகக் கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான உயிர்நிலைப் போராட் டமாக கருதுகிறோம். ஆச்சாரியார் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ இல்லையோ அது வேறு விசயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாக இருக்கப் போகிறது.” என்று பெரியார் அறிவுறுத்தினார்.

தோழர்களே! பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். நாள் குறிக்கிறேன் என அக்கிரஹார கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். நாகையிலிருந்து குலக் கல்வித்திட்ட எதிர்ப்புப் படை சென்னையை நோக்கி புறப்பட்டது. பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் ராஜாஜி ராஜினாமா கடிதம் கொடுத்து ஓடினார். அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

ராஜாஜி-காமராஜர்-நேரு:

நாகர்கோவில் மக்களவை இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றபோது அவர் இந்தியாவின் துணைப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பத்திரிக்கைகள் எழுதின. அதைக்கண்டு பொறுக்க இயலாத இராஜாஜி "டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா வேலைக்குத்தான் காமராஜ் லாயக்கே தவிர வேறு எந்த பொறுப்புக்கும் லாயக்கற்றவர்" என தன் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டினார். காமராஜரின் வளர்ச்சி மீது ஏற்பட்ட வெறுப்பில் காங்கிரஸ் மீதே தன் எதிர்ப்பைக் கக்கிய இராஜாஜியைப் பற்றி

 "இன்று இராஜாஜிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் ஏமாற்றம்தான் அவரை காங்கிரஸ் எதிரியாக்கியிருக்கிறது. இராஜாஜிக்கு வேதனை தருவது இதுதான். அதாவது நாகரீகமற்ற, படிப்பில்லாத, பட்டிக்காட்டுப் பேர்வழி (illeterate poor) என தாம் கருதிக் கொண்டிருக்கும் ஒருவர், தாம் முன்பு இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு நன்றாக நிர்வாகம் நடத்திக் கொண்டு வருகிறாரே? என்ற மனவேதணைதான் ராஜாஜியை வாட்டுகிறது" என காங்கிரஸ் பார்லிமென்ட் கூட்டத்திலேயே தெரிவித்தார் பிரதமர் நேரு! (தினமணி சித்தூர் பதிப்பு: 25.3.1960)

பேராசை:

முதலமைச்சர், ஆளுநர், கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர் என சகல பதவிச்சுகத்தையும் சொட்டச்சொட்ட அனுபவித்த இராஜாஜி தான் நெடுங்காலம் வாழப்போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத்தொகையை கணக்கிட்டால், தான் வசிக்கும் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும், எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுவதும் தனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.

(இந்தச் செய்தி ஆச்சாரியாரின் பென்ஷன் குறித்த தகவல் புத்தகத்தில் கண்டதாகக் கூறப்படுகிறது)

ஆச்சாரியார் பற்றி குடியரசு:

"ஶ்ரீ இராஜகோபாலாச்சாரியார் என்கிற ஓர் அய்யங்கார் பார்ப்பனர், தமிழ்நாடு முழுவதும் பெரிய சீர்திருத்தக்காரர் என்று பெயர் வாங்கியவர். தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். தனக்கு சாதி வித்தியாசம் இல்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், தன்னிடம் பார்ப்பனத்தன்மை இல்லை என்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாகிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் இந்தியாவில் உள்ள பார்ப்பனரெல்லோரையும் விட அதிகமான கவலையும், அதற்கேற்ற சூழ்ச்சியும் கொண்டவர்." (குடியரசு 25.3.1928)

- கி.தளபதிராஜ்

Pin It