"நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் வாழ்ந்தார் என்றாலும், அவருடைய எண்ணங்களும் செயலும், பிறநாட்டவர் நல்கினவாகவே இருந்தமையால், வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப் பருவத்தே, தாய், தான் தந்த பாலோடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ் நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையை மாற்றினர்; தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுத் தமிழ் மக்கட்குரிய சான்றாண்மையைக் கைதூவி, காலஞ்சென்ற தேசியகவி பாரதியார் கூறுவது போல ‘நாமமது தமிழரெனக் கொண்டு’ உயிர் வாழ்ந்தனர். ‘தாய் நாட்டிலிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றிவிட்டதே இந்த ‘அந்நிய மொழிக் கல்வி’ என அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை!" என 1954 ஆம் ஆண்டில் முழங்கினார். ‘உரைவேந்தர்’ எனப் போற்றப்படுபவரான ஒளவை சு. துரைசாமி.

Avvai duraisamy pillaiஇலக்கிய ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்; ஏடு பார்த்து எழுதுதல், கல்வெட்டுக்களைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் காண்டல், இன்னோரன்ன செயல்களால் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்று விளங்கியவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர்; ‘தமிழ் இலக்கிய வரலாறு’, ‘பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு’ முதலிய அரிய நூல்களை ஆக்கியவர்; பல்வேறு நூல்கட்கு ‘உரைநயம்’ கண்ட உரவோர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவியவர்; நா நலம் மிக்கவர்; ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; வடமொழியும் அறிந்தவர். தாம் வாழ்ந்த காலத்திலேயே ‘சித்தாந்த கலாநிதி’, ‘உரை வேந்தர்’, ‘தமிழ்ச் செம்மல்’ எனும் தகைசால் பட்டங்களைப் பெற்றவர்; அவர் தான் அருந்தமிழ் வித்தகர் ஒளவை சு. துரைசாமி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ‘ஒளவையார் குப்பம்’ என்னும் சிற்றூரில், சுந்தரம்பிள்ளை சந்திரமதி இணையருக்கு மகனாக 05.09.1902 ஆம் நாள் பிறந்தார் துரைசாமி.

உள்ளூரில் தொடக்கக் கல்விப் பயின்றார். பின்னர் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார். பின்பு, வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் குடும்ப வறுமையினால் கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. குடும்பத்திற்கு உதவ ‘உடல்நலக் கண்காணிப்பாளர்’ பணியில் சேர்ந்தார். அப்பணியில் தொடர மனம் விரும்பாமல் ஆறே மாதத்தில் விலகினார். ‘தமிழை முறையாகப் பயில வேண்டும்; என்பதை இலட்சியமாகக் கொண்டார்.

கரந்தைத் தமிழ் சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனாரால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். ஆசிரியப் பணிபுரிந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று, 1930 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக ‘வித்துவான்’ தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

தமது வாழ்க்கைத் துணைவியாக உலோகாம்பாள் என்பவரை ஏற்றார்.

"மாணவர் உள்ளத்தில் தனி மதிப்பும் மரியாதையும் தாமாகவே தோன்றச் செய்யும் சான்றோராக இருத்தல் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும். பெருமிதமான தோற்றப் பொலிவு வேண்டும். நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், சொல் வன்மை வேண்டும்." என நல் ஆசிரியர்களின் இயல்புகளைக் கூறுவர் நற்றமிழ்ச் சான்றோர். அந்த அடிப்படையில் ஆசிரியராக விளங்கியவர் ஒளவை சு. துரைசாமி.

கரந்தையை விட்டு வெளியேறிய பின்னர், வட ஆர்க்காடு மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

‘தமிழ்ப்பொழில்’, ‘செந்தமிழ்ச்செல்வி’, ‘செந்தமிழ்’ முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில், 1942ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 1943 ஆம் ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில், விரிவுரையாளரானார். அங்கு எட்டு ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் பேராசிரியராக விளங்கினார்.

மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்து போது, நாவலர் திடீரென்று இயற்கை எய்திவிட்டார். அதன் பின்னர்க் ‘கரந்தைக் கவியரசு’ வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்க, ‘மணிமேகலை’க் காப்பியத்தின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் ஒளவை சு. துரைசாமி.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பொழுது, ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ ‘ஞானாமிர்தம்’ முதலிய அரிய நூல்களை எழுதினார். அந்நூல்கள் பல்கலைக் கழகத்தின் வெளியீடுகளாக வெளியிடப்பட்டன.

"வருங்காலத் திருநாட்டை ஒளிரச் செய்யும் மாணவ நன்மணிகளை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் ஆசிரியர் பால் உள்ளது"என்பதை உணர்ந்து ஆசிரியப் பணியை மேற்கொண்டவர் ஒளவை சு. துரைசாமி.

தம்மிடம் கல்வி பயிலும் மாணவர்கள் தம்மைப் போலவே கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவராகவும், தாம் அரிதில் கற்றுத் தேர்ந்த தமிழ்ச் செல்வத்தை மாணவர்கட்கு வாரி வழங்கும் கல்விக் கொடையாளராகவும் திகழ்ந்தார்.

கருமுத்து தியாகராசனாரின் துணைவியார் ‘கலையன்னை’ இராதா தியாகராசனாருக்கு தமிழ் கற்பிக்கும் ஆசானாக விளங்கினார் ஒளவை சு.துரைசாமி.

மதுரைப் பல்கலைக் கழகம் உரை வேந்தரின் பண்பினைப் போற்றி, இந்தியப் பல்கலைக் கழகங்களின் ஆய்வுக்குப் பேராசிரியராகப் பணியமர்த்திச் சிறப்பித்தது.

தமிழகத்தில் 1938 ஆம் ஆண்டு, கட்டாய இந்தியை அன்றைய ஆட்சியாளர்கள் கொண்டு வர முயன்றபோது, அதனை எதிர்த்துத் தமிழ்வேள் உமாமகேசுவரனார், நாவலர் ச. சோமசுந்தரபாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் முதலியோர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வட ஆர்க்காடு மாவட்டம் வந்த போது, ஒளவை சு.துரைசாமி, வரவேற்று, நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். அதனால், பழிவாங்கும் நோக்கத்தோடு பற்பல ஊர்களுக்கு, அரசினரால் மாற்றம் செய்யப்பட்டார். பழிவாங்கல்களுக்கு அஞ்சாமல் மொழி காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

‘புறநானூறு’, ‘ஐங்குறுநூறு’, ‘பதிற்றுப்பத்து’, ‘நற்றிணை’, ‘சிலப்பதிகாரம்’, மணிமேகலை’, சீவக சிந்தாமணி’, ‘திருவருட்பா’, ‘சூடாமணி’, ஆகிய நூல்களுக்கு உரை எழுதியதுடன், ‘ஞானசம்பந்தர் வழங்கிய ‘ஞானவுரை’, ‘திருமாற் போற்றும் திருப்பதிகவுரை’, ‘திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை’, ‘சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரை’, ‘யசோதர காவியம் மூலமும் உரையும்’, முதலிய முப்பத்து நான்கு உரை நூல்கள் படைத்துள்ளார். மேலும், ‘பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு’, ‘தமிழ் நாவலர் சரிதை’, ‘மதுரைக் குமரனார்’ ‘வரலாற்றுக் காட்சிகள்’, ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’, ‘புது நெறித்தமிழ் இலக்கணம்’ (2 தொகுதிகள்), ‘பெருந்தகைப் பெண்டிர்’, ஊழ்வினை’, ‘ஒளவைத் தமிழ்’, ‘தமிழ்த் தாமரை’, ‘ஆர்க்காடு’ முதலிய நூல்களையும் தமிழுக்கு அளித்துள்ளார்.

‘சைவ இலக்கிய வரலாறு’ என்ற அரிய நூலையும் படைத்துள்ளார். அந்நூலில், தமிழர்கள் போற்றி வளர்த்த பேரறிவு நிறைந்த இலக்கியம் பற்றியும் புலவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்ந்த காலம், அரசியல் நிலை, சமயநிலை, சமுதாயவாழ்வு, வாணிபம், தொழில் ஆகியன குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளார். இந்நூலில், ‘திருஞானசம்பந்தர்’ முதல் ‘வேம்பையர்கோன் நாராயணன்’ ஈறாகவுள்ள ஆசிரியர் வரலாறுகளை எழுதியுள்ளார்.

ஓளவை சு. துரைசாமி தமது புலமை நலம் அனைத்தும் தமிழ் நாட்டிற்குப் பயன்படும் முறையில் இந்த இலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதியுள்ளார் என்பது சிறப்புடையது.

உரைவேந்தர், தமிழுக்கு சிறப்பாகத் தொண்டு ஆற்றியதற்காக, 1964 ஆம் ஆண்டு, செந்தமிழ்த் திறனும், பன்நூற் பயிற்சியும், ஆராய்ச்சியாற்றலும், உரைகாணும் வன்மையும், நூலியற்றும் நுண்ணறிவும், நிரந்தினிது சொல்லும் நெஞ்சுறுதியும், உலகியல் உணர்வும், ஆங்கில மொழியறிவும் ஆகிய இவை ஒருங்கே அமையப்பெற்ற பேராசிரியர், "புலத்துறை முற்றிய புலவர்"! என்று ‘மதுரைத் திருவள்ளுவர் கழகம்’ பாராட்டுப் பத்திரம் வாசித்தளித்துச் சிறப்பித்தது.

மதுரையில் 16.01.1964 ஆம் நாள், ஒளவை சு. துரைசாமியாருக்கு மணிவிழா நடைபெற்றது. அன்று மாலை உரைவேந்தர் குதிரை பூட்டப்பட்ட ‘சாரட்டு’ வண்டியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலிலிருந்து நான்கு சித்திரை வீதி வழியாக, நாதசுர இன்னிசையுடன் ஊர்வலமாகக் கழக மன்றத்திற்கு அழைத்து வரப்பெற்றார். ‘தமிழ்வேள்’ பி.டி. இராசனார் உரைவேந்தருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். ‘கலையன்னை’ இராதா தியாகாராசனார், தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பலவாறு பாராட்டி, ‘உரைவேந்தர்’ எனும் பட்டம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கம் அளித்தார்.

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் துணை வேந்தராக பதவி வகித்த போது, 29.03.1980 அன்று நடைபெற்ற விழாவில், அன்றைய ஆளுநர் மேதகு. பிரபுதாசு பி. பட்வாரி உரைவேந்தருக்குத் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ எனும் பட்டம் வழங்கி, பொன்னாடை போர்த்திப் பொற்கிழி அளித்துச் சிறப்பித்தார்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், ‘தமிழ்த்தொண்டு செய்த பெரியார்’ எனும் பட்டமும், கேடயமும் வழங்கிப் பாராட்டினர்.

மதுரையில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், உரை வேந்தருக்கு அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்.

உரைவேந்தரின் மூத்த மகனார் ஒளவை து. நடராசன், தம் தந்தையைப் போன்று மிகச் சிறந்த சொல்லேருழவர்; தமது விடா முயற்சியால் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர். இன்றைக்கும் தமிழுக்குத் தொண்டு செய்து பேரும் புகழும் பெற்றுத் திகழ்பவர்.

அன்னைத் தமிழுக்காக தமக்கு நினைவு தோன்றிய நாள் முதல், வாழ்நாளின் இறுதிவரையிலும் பாடுபட்ட தமிழ்ச் சான்றோரான, ‘உரைவேந்தர்’ தமது எழுபத்தொன்பதாவது வயதில் 03.04.1981 ஆம் நாள் இயற்கை எய்தினார். உரைவேந்தரின் தமிழ்த் தொண்டு, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

- பி.தயாளன்

Pin It