தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பாக தொண்டாற்றியவர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர், ஆராய்ச்சி நெறிமுறைகளில் முதிர்ச்சியுடன் செயல்பட்டவர், சிந்தனையும் செயலும் தமிழுக்காகவே என வாழ்ந்தவர் வ.அய்.சுப்ரமணியம்.

v i subramaniamஈழத் தமிழறிஞரான முனைவர் தனிநாயகம் அடிகளோடு இணைந்து உலகத் தமிழாய்ராய்ச்சிக் கழகத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தவர். பல்வேறு நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதற்கு பாடுபட்டார். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வந்த தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைந்தார்.

நாகர்கோவில் வடசேரியில் 18.02.1926 அன்று பிறந்தார். தந்தை கே. அய்யம்பெருமாள் பிள்ளை, தாய் சிவகாமி. கூடசேரியில் 1941-ஆம் ஆண்டு எஸ்.எம்.ஆர்.வி. இந்து உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். பின்னர், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து இடைநிலைக் கல்வி மற்றும் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1946-ஆம் ஆண்டு தமிழில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தில் 1957-ஆம் ஆண்டு மொழியியலில் ‘முனைவர்’ பட்டமும் பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1983-ஆம் ஆண்டு முதுமுனைவர் (டி.லிட்) பட்டமும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் 2002-ஆம் ஆண்டு முதுமுனைவர் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தன. திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் 1947 முதல் 1953 வரை தமிழ் விரிவுரையாளராகவும், திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் 1953 முதல் 1958 வரை பேராசிரியராகவும் பணியாற்றினார். இதே பல்கலைக்கழகம் கேரளப் பல்கலைக்கழகமாக உருமாறியபோது 1965 வரை அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் மொழியியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். மேலும் 1978-ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக் கழக கீழைக்கலைப் புலத்தின் முதன்மையராகப் பணியாற்றினார்.

ஈழத் தமிழறிஞரான முனைவர் தனிநாயகம் அடிகளோடு இணைந்து உலகத் தமிழராய்ச்சிக் கழகத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தவர். பல்வேறு நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதற்கு பாடுபட்டார். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வந்த தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைத்தார்.

தமிழுக்கென்று ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்பட வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் நீண்டகாலக் கனவு நனவானபோது, அதன் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்று தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு தொலைநோக்குடன் திட்டமிட்டு கொடுத்தவர்.

தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளில் அமைந்திருக்கும் தமிழ்த்துறைகள் செய்துவரும் ஆய்வுகளை நெறிப்படுத்தவும் முறைப்படுத்தவும் தீவிரமாகப் பாடுபட்டார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அவர் துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில், தமிழக அரசிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பெற்று, அதில் வியத்தகு கட்டிடங்களை எழுப்பி சாதனை படைத்தவர்.

திறமையுள்ளவர்களைக் கண்டறிந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு வரவேற்றுப் போற்றினார். திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம் முதலிய பல்வேறு அமைப்புகளைத் தழைக்கச் செய்தவர் அவர்.

இந்தியர்கள் ஆங்கிலேய ஆட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டு தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள ரப்பர், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில் முதலியவற்றில் ஈடுபடுத்தப்பட்டனர். தென்கிழக்காசிய நாடுகளில் குடியேற்றப்பட்ட இந்திய மக்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து முழுமையான செய்திகள் தொகுக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார் வ.அய். சுப்ரமணியம். அதற்காக பல்வேறு நாடுகளுக்கும் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் பல பேராசிரியர்களை அனுப்பி தமிழர்கள் பற்றிய செய்திகளையெல்லாம் திரட்டி தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.

தமிழ்நாட்டிலுள்ள உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரை அவ்வப்போது கூட்டிக் கருத்தரங்குகள் நடத்தி ஒருமுகப்படுத்தினார்.

மேலும், இலங்கைத் தமிழ் அறிஞர்களின் உயிருக்கே ஊறு ஏற்பட்ட காலக்கட்டத்தில் அவர்களில் பலரை வருகைப் பேராசிரியர்களாக அழைத்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பணிகள் தொடர்வதற்கு ஏற்பாடு செய்தார். ஈழத்தமிழ் மாணவர்களுக்கு இங்கு கல்வியைத் தொடர வழிவகுத்தார்.

காவிரிப் பிரச்சனை முற்றிய கால கட்டத்தில், அப்பிரச்சனை குறித்து தமிழக அரசு நமது தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பதற்காக, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் சங்க இலக்கியத்திலும், தற்கால இலக்கியத்திலும், கல்வெட்டுகளிலும் காவிரி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் தொகுத்து நூல் ஒன்றினை வெளியிட ஏற்பாடு செய்தார். இதன் விளைவாக நியாயமான உரிமை நிலைநாட்டப்பட்டது.

ஆரம்பப் பள்ளியில் கூட தமிழ்வழிக் கல்வி வேண்டும் என போராட வேண்டிய இச்சூழலில், மருத்துவம் பொறியியல் முதலிய படிப்புகளைத் தமிழிலேயே நடத்தத் துணிந்து திட்டமிட்டார். அறிஞர்கள் பலரைக் கூட்டிவைத்து அதற்கான நூல்களை உருவாக்கினார். ஆனால், தமிழக அரசின் அனுமதி கிடைக்காததால் அந்தத் திட்டத்தை அவரால் நிறைவேற்றிட இயலவில்லை.

தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழ்ச் சுவடிகள், தமிழர்கள் குறித்த கல்வெட்டுகள், பட்டயங்கள் முதலியவற்றை சேகரிக்க பெருமுயற்சி செய்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற இந்திய அலுவலக நூலகத்தில் உள்ள ஆவணங்களை மைக்ரோ பிலிமில் பதிவு செய்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாப்பாக வைத்தார். இந்தியாவில் வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இந்த ஆவணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சுற்றியுள்ள கடலில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, அகழ்வாய்வு நிறுவனத்தை இராமேசுவரத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் நிறுவினார். இதன் மூலம் மறைந்த பூம்புகார் பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டன.

ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக 1997-ஆம் ஆண்டு பணியேற்றார். அப்போது, திராவிட மொழிகளில் அகராதி ஒன்றினைத் தொகுக்கும் திட்டத்தை வகுத்துத் தக்க அறிஞர்களைக் கொண்டு நிறைவேற்றினார்.

தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தமது வாழ்நாள் கடமையாகக் கொண்ட இந்த அறிஞரின் பெருமைகளை உணர்ந்து உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் உட்பட பல விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன.

நாகர்கோவிலில், உலகத் தமிழர் பேரமைப்பு 2005-ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில் இவருக்கு ‘உலகப் பெருந்தமிழர்’ எனும் விருதினை வழங்கியது.

அனைத்து வகையிலும் தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய வ.அய்.சுப்ரமணியம் 2009-ஆம் ஆண்டு காலமானார். தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உயர்ந்திட வேண்டும் என்பதே அவரது உயரிய நோக்கமாகும். அவரது நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழர்களின் கடமையாகும். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

- பி.தயாளன்

Pin It