உயிரினங்களுக்கான அறிவியல் பெயரை, இலத்தீன் மொழியில் சூட்டுவது மரபு. இது உயிரியலாளர் கார்ல் லின்னேயஸ் வகுத்த முறை. சில நேரங்களில் உயிரினம் கண்டறியப்பட்ட இடத்தின் பெயரையோ, கண்டுபிடித்தவரின் பெயரையோ இணைத்துச் சூட்டுவது வழக்கம். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிதாக இரு தவளைகளைக் கண்டறிந்தபோது அவற்றுக்குச் சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டன (Nasikabatrachus sahyadrensis and Philautus neelannethrus). இது மரபை மீறிய செயல். சரி இருக்கட்டும், தவளைகளைக் கண்டறிந்த ஆய்வாளர்கள் ஒருவேளை மரபை மீற நினைத்திருந்தால், தம் தாய்மொழியான மலையாளத்திலோ, கன்னடத்திலோ இல்லையெனில் திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியான தமிழிலோ பெயர் வைத்திருக்கலாமே, ஏன் சமஸ்கிருதம்?
சமஸ்கிருதம் எவ்வளவு நுட்பமாக ஊடுருவுகிறது பார்த்தீர்களா ? இது போன்ற பல செய்திகளைச் சான்றுகளோடும், பகுத்தறிவுப் பார்வை கொண்டும் நமக்கு விளக்கும் முகமாக வெளிவந்துள்ளது, எழுத்தாளர் நக்கீரன் அவர்களின் “தமிழ் ஒரு சூழலியல் மொழி” என்னும் நூல்.
ஒரு மொழியின் இலக்கியங்களில் சூழலியல் இருக்கும். ஆனால் இலக்கணமே சூழலியலாக இருப்பது தமிழ். அதை அமைத்துத் தந்தது தொல்காப்பியம் என்கிறார் நூலின் ஆசிரியர். இந்தச் செய்தியை பள்ளிச் சிறார்களுக்கும் புரியும் பாங்கில் எடுத்துரைத்திருப்பது இந்நூலின் சிறப்பு.
கோயில்களில் உள்ள ‘யாளி’ டைனோசரா? அன்னப் பறவை இந்தியப் பறவையா ? அது பாலையும் நீரையும் தனியே பிரிக்குமா? இலக்கியத்தில் காணப்படும் செங்கால் நாரை என்பது எந்தப் பறவை ? ஆகிய கேள்விகளுக்கு இலக்கியம், அறிவியல், புவியியல் என்னும் மூன்றின் வாயிலாகவும் விடையளிக்கப் பட்டிருக்கும் விதம் சுவையானது.
இயற்கையின் தோற்றத்திற்குக் காரணம் கடவுள் என்ற கருத்து, தொல்தமிழ் இலக்கியங்களில் இல்லை. தொல்காப்பியத்தில் மதம், சமயம் போன்ற சொற்களே இல்லை என்னும் செய்திகள், தமிழை இந்து மதத்திற்குள் அடைக்க முயலும் ஆரியத்துக்குச் சரியான பதிலடி. தெய்வம் என்பது உணவு, விலங்கு, மரம், பறவை, தொழில் ஆகியவற்றுக்கு இணையாகவே வைக்கப்படுகிறது என்பதைத் தொல்காப்பியத்தின் துணை கொண்டு விளக்கியிருப்பது, தமிழரின் வாழ்வியலை நமக்கு உணர்த்துகிறது.
சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக, பூசனை மொழியாக, தெய்வீக மொழியாக இருப்பதுதான் இங்கு பிரச்சினையே தவிர, அது ஒரு மொழியாக இருப்பதில் எந்தவொரு சிக்கலும் தமிழுக்கு இல்லை என்ற உண்மையை எடுத்துரைப்பதோடு, மும்முனைத் தாக்குதலை நமது தமிழ்மொழி எதிர்கொண்டுள்ளதைப் பகுப்பாய்வு செய்துள்ளது, இந்நூலின் தனித்தன்மை.
பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு முனையும் சமஸ்கிருதம் ஒருபுறம், அரசியல் மேலாதிக்கத்திற்கு முனையும் இந்தி ஒருபுறம், பொருளாதார மேலாதிக்கத்திற்கு முனையும் ஆங்கிலம்
ஒருபுறம் என்ற மும்முனைத் தாக்குதல் குறித்து கவனப்படுத்தியிருப்பதோடு, மொழிப் பன்மயத்தின் தேவையை உணர்த்தி, ஒரே நாடு, ஒரே மொழி என்ற சிந்தனை எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது என்பதை மொழி அழகியலோடு உணர்த்தியுள்ள இந்நூல், மொழியியல் சிந்தனைகளை அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்கவும், கற்றுத் தெளியவும் உதவும் நூல்.
- வெற்றிச்செல்வன்