தமிழ்நாட்டின் நீர், நிலம், காடுகள், மலைகள் அனைத்தும் தனியாருக்கு விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பற்றி எவ்வித அக்கறையும் இன்றி அரசும், முதலாளிகளும் தங்களது பணப்பையை நிரப்புவதிலேயே குறிப்பாக இருக்கின்றனர். எதிர்காலத் தலை முறையினரைப் பற்றி துளியும் கவலையில்லை. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் பறம்புமலை (பிரான்மலை) வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதனை கைகட்டி வேடிக்கைப் பார்க்கப் போகிறோமா?

அமைவிடம் :

வள்ளல் பாரியின் பறம்புமலை என்கிற பிரான்மலை தற்போது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ளது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை நகரங்களுக்கு நடுவில் உள்ளது.

பறம்பு மலையின் வரலாற்றுச் சிறப்பும் அதன் முக்கியத்துவமும்:

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட மலை பறம்புமலை. பாரி பறவைகளின் சமிக்கைகளைப் புரிந்து கொண்டு அவைகளை கட்டுப்படுத்துபவர், அவைகளுக்கு உத்தர விடுபவர். குறுநில மன்னரான பாரி 300 ஊர்களை 300 ஊர் மக்களுக்கு தானமாக கொடுத்தார். ஆகையினால் இவரது புகழ் சேர, சோழ, பாண்டிய நாட்டு மக்களிடம் பரவியது. அதனால் மூவேந்தர்களும் எரிச்சலடைந்தனர். நிலம் மன்னர்களுக்கு உரியவையாக இருக்க வேண்டுமே ஒழிய மக்களுக்கு இல்லை எனப் பாரியை எச்சரித்தனர். இவர்களின் எச்சரிக்கையைப் பாரி பொருட்படுத்தவில்லை. பிறகு மூவேந்தர்களும் பாரியின் இரண்டு மகள்களைத் திருமணம் செய்து பாரியின் பறம்பு நாட்டை அடைய திட்டமிட்டனர். அதற்கு பாரி உடன்படவில்லை. இதனால் மூவேந்தர்களும் பாரியின் மீது போர் தொடுத்தனர். மக்கள் துணையுடன் பாரியே வெற்றி வாகை சூடினார்.

parampu malaiபோர் மூலமாக வெற்றி பெற முடியாது என தெரிந்து மூவேந்தர்கள் பாரியின் நண்பர் கபிலரிடம் தாங்கள் வெற்றி பெற வழி என்ன? என்று கேட்டனர். பாரியின் வெற்றியை தானமாக கேட்டால் கொடுப்பான் என்கிறார் கபிலர். மூவேந்தர்களும் கலைக்குழுவினர் வேடமிட்டு பாரியின் நாட்டுக்கு வந்து பாரியுடன் பழகி அவர் தனிமையில் இருக்கும்போது வாளால் வெட்டி படுகொலை செய்கின்றனர். பாரி இறந்த பிறகு பாரியின் இரு மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவிலூருக்கு அழைத்துச் சென்று சிற்றரசர்களுக்கு மனம் முடிக்கிறார் கபிலர். அதன்பின் கபிலர் வடக்கு இருந்து உயிர் நீக்கினார். போர்க் காலத்தில் பாரியின் அவர்களது படையின் உணவுத் தேவைக்காகப் பறவைகள் கூட நெற்கதிர்களை கொண்டு வந்து குவித்ததாக சங்கப்பாடல்கள் உள்ளன. பாரியின் பெருமைகள் அப்பகுதியில் கல்வெட்டுகளாகவும் மக்களிடம் பேசப்படுவதாகவும் உள்ளன.

பறம்பு மலை சுமார் 2500 அடி உயரமானது. இந்த மலையின் வடிவம் “எம்பிரான் சிவபெருமான் குடியிருக்கும் மலையான கைலாய மலைபோல் உள்ளது. எனவே எம்பிரான் குடியிருக்கும் தென்கைலாய மலை” என்று அருணகிரிநாதர் பாடினார். இம்மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சிப் பூப் பூக்கும். மலையின் உச்சியில் பாலமுருகன் சாமி, தர்கா ஆகியவை உள்ளன. மலையின் நடுப்பகுதியில் மலையாண்டி சாமி, கிழக்கே சிறிய குன்றுகளில் அழகு சொக்கன் சாமி கோவில், அடிவாரத்தில் மிகப்பெரிய கோட்டைச் சுவர்களுடன் கூடிய சிவன் கோவில் மூன்று அடுக்குகளால் கட்டப்பட்டவை, கீழ்த்தளத்தில் உள்ள சிவன் கோவிலை ஒட்டி முருகன் கோவில், மேல்த்தளத்தில் பைரவர் சாமி என்னும் பெயரில் சிவன் கோவில் அதற்கு அடுத்த தளத்தில் மங்கை பாகர் - பராசக்தி இணைந்த சிவன்கோவில் உள்ளன. இக்கோவிலை கி.பி.300 ஆம் ஆண்டில் பாண்டியர்கள் கட்டினர். சுவர்கள் அனைத்திலும் 2000 ஆண்டுகளைக் கொண்ட கல்வெட்டுகள் உள்ளன. கோவிலைப் பற்றிய கல் வெட்டுகள் அடங்கிய புத்தகம் வெளிவந்துள்ளது. உழவர் எழுச்சியை சொல்லும் உத்திர மேரூர் கல்வெட்டுகள் போன்ற கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில்களில் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா போன்று 10 நாட்கள் சித்திரை மாதத்தில் நடைபெறும். 9 ஆம் நாள் சித்திரைத் தேரோட்டம் நடைபெறும். மேலும் மலையின் உச்சியில் மருது பாண்டியர்கள் பயன்படுத்திய பீரங்கி உள்ளது. இம்மலையின் உச்சிப்பகுதியில் கட்டபொம்மன் தம்பி ஊமைத் துரை மறைந்து இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார். சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் இணைக்கும் பெருவழி இம் மலையின் வழியாகச் செல்கிறது. இவ் வழியாகத்தான் கோவலனும் கண்ணகியும் நடந்து பாண்டிய நாட்டுக்குச் சென்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்லுயிர்களான மான், காட்டெருமை, மலைப்பாம்பு, தேவாங்கு, குரங்கு, அரியவகைப் பறவைகள் போன்றவை வாழுகின்றன.

வரலாற்றுத் தொன்மைகளையும், கோவில் களையும் அழகிய இயற்கைச் சூழல்களையும் பல்லுயிர்களையும் கொண்ட இம்மலையை சுற்றுலாத் தளம்போல் காண பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வந்து போகக்கூடிய பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

பறம்பு மலையைப் பாதுகாப்போம்

பறம்பு மலைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு குடிவந்த குடும்பத்தினர் இம்மலையை தங்களுக்கு பட்டாபோட்டுள்ளனர். இவர்கள் நீதிபதியாக, வழக்கறிஞராக, மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளனர். இப்பதவிகளை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு மலையின் பாதியை (சுமார் 1500 ஏக்கர்) தங்களுக்குப் பட்டாப் போட்டுள்ளனர். தங்களுக்கு சொந்தமானது எனக் கூறிகொண்டு மலையை வெடிவைத்து உடைத்து சில்லிகளாக, சல்லிக்கற்களாக, மணலாக மாற்றிக் கொள்ளையடித்து வருகின்றனர்.

இக்கொள்ளையை எதிர்த்து அப்பகுதி மக்களும் தமிழ்நாட்டின் பல்வேறு மக்களும் போராடி வருகின்றனர். பறம்புமலைப் பாதுகாப்பு இயக்கம் 12.9.20 அன்று சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் பறம்புமலையை பாதுகாக்கக் கோரி போராட்டம் நடத்தினர். மலையின் உச்சியில் செல்வதற்கான வழியை பட்டாப் போட்டுள்ள கும்பல் தடுக்கிறது. 2020 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு வந்த திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் மலை உச்சிக்குச் செல்ல காவல்துறை அனுமதி மறுத்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிபந்தனைகளுடன் அவரை அனுமதித்தது. வ.கௌதமனுடன் பறம்புமலைப் பாதுகாப்பு இயக்கத்தினரும் சென்று வந்தனர். தைப்பூச நாளில் மலையிலுள்ள பாலமுருகன் கோவிலுக்குப் பொங்கல் வைக்கக் காவல்துறை அனுமதிக்க மறுக்கிறது. இதிலிருந்து காவல்துறை அக்கும்பலுக்குத் துணை செய்கிறது என அறிகிறோம். 1970 ஆம் ஆண்டில் குன்றக்குடி அடிகள் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில் கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டு இதன் வரலாற்றுச் சிறப்புகளையும் அதன் முக்கியத்து வத்தையும் பேசியுள்ளார். பாரி விழா தற்போது நடத்தப்படுவது இல்லை. அடிவாரத்திலுள்ள சிவன்கோவில் குன்றக்குடி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவஸ்தானம் மலையைக் காக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் உள்ள சமூக செயல்பாட்டாளர்கள் பறம்புமலைப் பாதுகாப்பு இயக்கத்தை அமைத்து பறம்புமலையைப் பாதுகாக்க பல்வேறு வடிவிலான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இம்மலையை 100 அடிக்கு கீழே ஆழமாக வெடிவைத்து வெட்டியுள்ளனர். ஆகையினால் மலையிலிருந்து வரும் அருவி நின்றுபோய் கண்மாய் வறண்டு கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீரும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்லுயிர்ச் சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பதிப்படைந்துள்ளன. கோவில் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு கல்வெட்டுகள் சிதைத்துள்ளன. மலையின் உச்சியிலுள்ள தர்காவிற்குச் செல்வதற்கு இஸ்லாமிய மக்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவார்கள். பாரியின் வரலாற்றுச் சின்னம் அழிக்கப்படும். தனியாரிடம் 1500 ஏக்கர் நிலம் இருப்பது ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம், நில உச்ச வரம்புச்சட்டம் ஆகியனவற்றிற்கு எதிரானது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்குப் புகார் செய்யப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த கனிமொழியும், அவரது கட்சியினரும் மலையை மீட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

பாரியின் பறம்புமலைக்கு வந்துள்ள சிக்கல் அப்பகுதி சிக்கல் என்று எண்ணாமல் தமிழக சிக்கலில் பறம்புமலையைப் பாதுகாக்க தமிழக மக்களும் முன்வரவேண்டும்.

- பறம்புமலை பாதுகாப்பு இயக்கம்

Pin It