இந்தியாவில் உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை மிகுந்த இடங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். இங்கு பூமியில் வேறெங்கும் காணப்படாத அபூர்வ உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் தவளையினமும் ஒன்று. இவற்றில் ஒரு சில வியப்பூட்டும் தவளையினங்களைப் பற்றி இங்கு காண்போம்.

பர்ப்பிள் தவளை

இதன் அறிவியல் பெயர் நாசிகபட்ராகஸ் சக்யாத்ரென்சிஸ். இது கேரளாவில் பாதாளத் தவளை என்றும், மகாபலி தவளை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொதுவான பெயர் பர்ப்பிள் தவளை (Purple frog). கோடை மழையின் கடைசி இரண்டு வாரங்களில் இவை மண்ணிற்கடியில் இருந்து வெளிவருகின்றன. இணை சேர்வதற்காக மட்டுமே பூமியில் இருந்து வெளியில் வரும் இவற்றை சாதாரணமாக எல்லோரும் பார்க்க முடியாது.

இதில் பெண் தவளையை பதால் என்றும், ஆணை குறுவன் என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இது தவிர, இதற்கு பன்றி மூக்கு தவளை, ஆமைத் தவளை என்று பல பெயர்கள் உண்டு. இடுக்கி, கட்டப்பனை என்ற இடத்தில் முதல்முறையாக இந்த இனத்தவளையை டாக்டர் சத்யபாமா தாஸ் பிஜு மற்றும் பெல்ஜியம் ஆய்வாளர் பிராங்கி மோசிட் ஆகியோர் கண்டுபிடித்து அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இக்கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரை 2003ல் நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த விசித்திர தவளையின் இனப்பெருக்க முறை பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வனவிலங்குகள் மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை மீது ஆர்வம் ஏற்படுத்த, அவற்றின் சூழல் முக்கியத்துவத்தை உணர்த்த, பாதுகாக்க உதவும் வகையில் மாநில மலர், விலங்கு, மரம், பறவை என்பது போன்ற அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. பதவிகள் வழங்கப்படுகின்றன.frog 390மணவாட்டி தவளை

பலருக்கும் தவளைகள் மீது அருவருப்பும் பயமுமே இன்றும் உள்ளது. பர்ப்பிள் தவளை போலவே மற்றொரு அபூர்வ தவளையினமே மணவாட்டி அல்லது மணப்பெண் தவளை. இது இன அழிவை சந்திக்கும் இனம். ஆனால் இவை பற்றி இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு மலபார் பிரதேசத்தில் லாட்டரைட் நில அமைப்புடன் இணைந்ததே இவற்றின் வாழ்க்கை. செங்கல்லால் கட்டப்பட்ட வீடுகளில் உட்புறங்களிலும், குளியலறைகளிலும் ஒரு காலத்தில் இவை சாதாரணமாகக் காணப்பட்டன.

வீடுகளின் உட்புற அமைப்புகள் மாறியதுடன் இவை காணாமல் போகத் தொடங்கின. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரளா முதல் மும்பை வரை உள்ள பகுதிகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன. இவை ஃபங்காய்டு தவளை (Fungoid frog), மலபார் மலைத் தவளைகள் என்றும் அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவை.

பெயர் மாற்றம்

1883ல் முதல்முதலில் இவை பற்றிய செய்திகள் வெளிவந்தன. அன்று இவை ரானா மலபாரிகா (Rana Malavarica) என்று பெயரிடப்பட்டன. பிறகு இது ஹைலா ரானா மலபாரிகா (Hylarana Malabarica) என்று மாற்றப்பட்டது. இப்போது ஹைட்ரோபிலாக்ஸ் மலபாரிகஸ் (Hydrophylax Malabaricus) என்று அழைக்கப்படுகிறது. மணப்பெண் போல உடல் அலங்காரங்கள் காணப்படுவதால், பழைய வீடுகளில் இருண்ட அறைகளில் வாழ்கின்றன. இதனால் இவற்றிற்கு மணப்பெண் தவளை என்ற பெயர் ஏற்பட்டது.

ஊர்தோறும் பல பெயர்கள்

வடக்கு கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் பாரம்பரிய நாட்டிய முறையான தைய்யம் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்படும் அணிகலன்கள், அலங்காரங்கள் போல இருப்பதால் இவை தைய்யம் தவளை என்றும், காசர்கோடு மாவட்டத்தினரால் அழைக்கப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தினர் இதை பாறைத்தவளை என்று அழைக்கின்றனர்.

செங்கல் பரப்புகளுடன் சேர்ந்த பிரதேசங்களில் இலைகளுக்கு நடுவில், பழங்கால குகைகள், பொந்துகளில் இவை வாழ்கின்றன. இணை சேர மட்டுமே இவை நீரில் இறங்குகின்றன. இவற்றின் உடலமைப்பு வண்ணமயமான ஆடைகளை அணிந்த கல்யாணப் பெண் போல அழகானது. அதிகம் குண்டு இல்லை. அழகான மெலிந்த உடல்வாகு.

வண்ணஜாலம் காட்டும் உடலமைப்பு

உடல் மற்றும் தலையின் மேற்பகுதி பளபளக்கும் செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில் கறுத்த பொட்டுகள் காணப்படும். மற்ற உடற்பகுதிகளில் கறுப்பு கலந்த அடர் பழுப்பு நிறத்தில் அகலமான அடையாளம் காணப்படுகிறது. அப்பகுதிகளிலும், கை கால்களிலும் வெள்ளை நிற வரிகள் உள்ளன. வயிற்றுப் பகுதி நல்ல வெள்ளை நிறம்.

ஆண் பெண் தவளைகளுக்கு இடையில் உருவம் மற்றும் அமைப்பில் பெரிய வேறுபாடு இல்லை. உடலின் அடிப்பகுதி மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. முறைத்துப் பார்ப்பது போன்ற கண்களின் பின்புறத்தில் இதே அளவில் உள்ள கேட்கும் திறனுக்கான பகுதி (டிம்பானா) அமைந்துள்ளது. பழைய வீடுகளில் இவை பூசை அறைகளில் கிண்டியின் மீதும், சமையலறையில் கஞ்சிக்கலயத்தின் அருகிலும் காணப்படும்.

ஒரு வீட்டில் பத்து பதினைந்து வரை வாழ்ந்தன. ஆணும் பெண்ணும் சேர்ந்து வீட்டில் நிரந்தரமாக வசிக்கும். ஈரமும் இருட்டும் உள்ள சாணம் மெழுகிய படுக்கையறைகளை இவை தங்கள் சொந்த இடமாக மாற்றிக் கொண்டு வாழும். இவை வருடக்கணக்கில் ஒரே வீட்டில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும்! வீட்டில் இருந்து வெளியில் விரட்டினாலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மறுபடியும் அதே இடத்துக்கு திரும்ப வரும். தொலைதூரத்திற்கு கொண்டு போய் விட்டாலும் இவை நம்மை விடாது. வீட்டைத் தேடிப்பிடித்து திரும்ப வந்து சேரும்.

பகலில் ஓய்வு இரவில் நடமாட்டம்

இரவில் வெளியில் போய் உணவு தேடும். கொசுக்கள், எறும்புகள், சிறிய பிராணிகளே முக்கிய உணவு. பகல் முழுவதும் வீட்டுக்குள்தான் வாசம். பகலில் வீட்டுக்குள் அவ்வப்போது வந்து போகும் பூனைகள், தேரைகள் இவற்றை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆபத்து என்று உணர்ந்தால் அருவருப்பை ஏற்படுத்தும் ஒருவித துர்நாற்றத்தை வெளிவிட்டு எதிரிகளை விரட்டும்.

இணை சேரல்

மழைக்காலம் வந்தவுடன் நல்ல மழை பெய்து வயல்களில் நீர் தேங்கினால் ஆண் தவளைகள் மெல்ல வீட்டை விட்டு வெளியில் இறங்கும். தூரத்தில் வயலில் நீர் தேங்கியிருக்கும் வசதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே முகாமிடும். காதல் உணர்ச்சி பொங்கும் குரலில் இணை சேர பெண் தவளையை அழைக்கத் தொடங்கும்.

தாடைக்கு அருகில் இருக்கும் குரலெழுப்பும் பகுதியை பெரிதாகத் திறந்து உயர் அதிர்வெண் உடைய சத்தத்தை ஏற்படுத்தும். இந்த காதல் கீதம் நாட்கணக்கில் நீளும். சில நாட்கள் ஆன பிறகு பெண் தவளைகள் ஒவ்வொன்றாக வீட்டை விட்டு வெளியில் வந்து சத்தம் வந்த வயலில் நீரை இலட்சியமாகக் கொண்டு பயணம் தொடங்கும். கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி பெண் தவளைகள் இணைக்கு அருகில் செல்லும்.

உரத்த குரலில் ஓசை எழுப்பிய ஆண் தவளையையே தன் இணையாக பெண் தவளையைத் தேர்ந்தெடுக்கும். ஆண் தவளை, பெண் தவளையின் உடலின் மீது ஏறி அதன் உடற்பாகங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நிற்கும். பெண் தவளையின் ஜெலாட்டின் போன்ற அமைப்புடன் உள்ள பகுதியில் இருக்கும் முட்டைகள் கூட்டத்தில் ஆண் தவளை விந்தணுக்களை விடும். இணை சேர்ந்த பிறகும் பெண் தவளைகளே வீட்டிற்கு முதலில் வரும். சில நாட்கள் கழித்து ஆண் தவளைகள் திரும்பி வரும்.

வாசலைத் திறக்க என்ன தாமதம்?

விடியற்காலையில் திரும்பி வரும் இவை வாசற்படியில் பொறுமையுடன் காத்திருக்கும் காட்சி சுவாரசியமானது. வீட்டுக்காரர்கள் வாசலைத் திறந்தால் “என்ன? கதவைத் திறக்க இவ்வளவு தாமதமா என்ன?” என்ற பாவனையில் பதட்டம் கலந்த ஒரு பார்வையை வீசும். பயமும் தயக்கமும் இல்லாமல் சொந்த வீட்டுக்குள் துள்ளிக் குதித்தபடி ஒரே பாய்ச்சலில் தாவி வீட்டுக்குள் ஓடும்.

அருவருப்பும் வெறுப்பும்

வீட்டில் இருப்பவர்கள் இவற்றிடம் அருவருப்பையோ வெறுப்பையோ காட்டுவதில்லை. இதனால் இவற்றை வீட்டில் இருந்து விரட்டியடிக்க யாரும் மெனக்கெடுவதும் இல்லை. மனிதர்களுடன் இந்த அளவிற்கு இணைந்து வாழும் வேறொரு தவளையினமும் இல்லையென்றே சொல்லலாம். லாட்டரைட்செங்கல் குன்றுகளின் மறைவு இவற்றை இன அழிவிற்கு ஆளாக்கும் அபாயம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த தவளையினம் காப்பாற்றப்பட வேண்டும்.

பறக்கும் தவளை

மற்றொரு அபூர்வத் தவளையினம் பறக்கும் தவளை (Flying frog/Rhacophorus) malabaricus. இது மரத்தவளை, க்ளைடிங் தவளை (gliding frog) என்றும் அழைக்கப்படுகிறது. மழைக்காடுகளுடன் சேர்ந்த பிரதேசங்களில் மழைக்காலத்தில் இவை காணப்படுகின்றன. இதன் வண்ணமயமான உடலமைப்பு, அதிசயிக்க வைக்கும் அழகு தோற்றத்தினால் பல நேரங்களில் புதிய அற்புத தவளையினத்தை கண்டுபிடித்துவிட்டதாக உள்ளூர் செய்திகளில் இது இடம் பெறுவதுண்டு.

காற்றில் நீந்தும் தவளை

ஒரு கிளையில் இருந்து மற்றொன்றிற்கு இவை காற்றில் நீந்திப் பறக்கக் கூடியவை. இவ்வாறு இவை 9 முதல் 12 மீட்டர் வரை பறக்கும். உடலின் வெளிப்பகுதி நல்ல பச்சை நிறத்துடனும் அடிப்பகுதி மங்கலான மெல்லிய வெள்ளை நிறத்துடனும் காணப்படுகின்றன. பகலில் கண்ணின் மணி கூம்பி ஒரு வரி போலக் காட்சி தரும். பகலில் இலைகளுடன் சுறுண்டு கிடப்பதால் அப்போது இவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். இரவில்தான் நடமாட்டம். இரை தேடலும்.

பறப்பது எப்படி?

விரல்களுக்கு இடையில் இருக்கும் சதையை பறக்கும் நேரத்தில் விரிவுபடுத்தி அதிக தொலைவிற்குப் பயணிக்கவும், இறங்கும்போது பாராசூட் மாதிரியில் வேகத்தைக் குறைத்தும் தரையிறங்க இப்பகுதி உதவுகிறது. விரல்களின் நுனியில் இருக்கும் பகுதி இலைகளை, கிளைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. சதைப்பற்றுள்ள பகுதி ஆரஞ்சும், சிவப்பும் கலந்த நிறமுடையது. இதனால் இவை பார்ப்பதற்கு சொக்க வைக்கும் அழகுடையவை.

பார்வைக்கு சாதுவான இவற்றை ஒரு முறை பார்த்தவர்கள் எவரும் பிறகு மறக்க மாட்டார்கள். பச்சை நிறமுடைய உடலும், விரல்களுக்கு இடையில் கடும் சிவப்பு நிறமும் சேர்ந்து இத்தவளைக்கு ஓர் அற்புத அழகைத் தருகிறது. மழையுடன் சேர்ந்துதான் இவற்றின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. சில சமயங்களில் இவை அருவிகள் மற்றும் மீன்கள் வளர்க்கப்படாத தோட்டக் குளங்களில் இருக்கும் மரக்கிளைகளின் உச்சியில் இணை சேர்வதுண்டு.

இலை நுனியில் முட்டைகள்

முட்டைகளை இலை நுனிகளில் ஒட்டி வைக்கும். ஈரப்பசை இழக்கப்படாமல் இருக்க, பறவைகள் முட்டைகளைக் கொத்திக் கொண்டு போகாமல் இருக்க இந்த ஏற்பாடு. மழை பெய்யும்போது இலைகளில் இருந்து இறங்கி தண்ணீருடன் சேர்ந்து விரிந்து முட்டைகள் தலைப்பிரட்டைகளாக மாறும். சாதாரணமாக ஒருகாலத்தில் காணப்பட்டன என்றாலும் இவை வாழிட இழப்பு காரணமாக அழியும் ஆபத்தில் உள்ளன. தவளைகளின் உலகில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்! அற்புதங்கள்!

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/which-should-be-our-state-frog-purple-frog-or-manavatti-frog-1.8246187

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It