சிங்கம் பல உலகக் கலாச்சாரங்களில் சக்தி, வலிமை, கம்பீரம், அதிகாரம் மற்றும் செழுமையின் சின்னமாகக் கருதப்படுகிறது. தங்கள் கூட்டத்தில் இருப்பவர்களை, தாங்கள் வசிக்கும் பகுதியின் எல்லையைப் பாதுகாப்பதில் எப்போதும் முனைப்புடன் இருப்பதால் இவை பல நாடுகளின் அடையாளச் சின்னங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிரிக்கா, இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக அளவில் வாழ்ந்துவந்த இவை இப்போது ஆப்ப்ரிக்காவின் சில பிரதேசங்கள், இந்தியாவில் குஜராத் கிர் வனங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வாழ்கின்றன. இன அழிவைச் சந்திக்கும் அச்சுறுத்தல் உள்ள ஒரு வனவிலங்கு என்றாலும், இவை பண்ணைகளில் வளர்க்கப்பட்டு இவற்றின் உடற்பாகங்கள் ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கூண்டில் சிங்கங்கள்

2016-2019ல் 3,300 சிங்கங்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றின் எலும்புகள், உடற்பகுதிகள் வியட்நாம், லாவோஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் பெரும்பகுதியும் சட்டப்பூர்வ அங்கீகாரத்துடனேயே நடந்தது. ஒரு ஆண்டிற்கு 1500 உடல் பாகங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.lion 466ஒரு காலத்தில் ஆப்பிரிக்கா முழுவதும் வாழ்ந்த இவற்றின் 80 சதவிகிதமும் இப்போது சஹாராவிற்கு தெற்கில் வாழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி டான்ஜானியாவில் வாழ்கின்றன. இங்கு வாழும் சிங்கங்களின் எண்ணிக்கை 15,000. சமீபகாலத்தில் ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் இருந்து மறைந்த இவை, இன அச்சுறுத்தல் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வைத்தியத்தில் புலியின் எலும்புகளை கொதிக்க வைத்து அதில் இருந்து உண்டாக்கப்படும் மருந்துகள் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வாதம், மூட்டுவலிக்கு மருந்தாகவும், இனப்பெருக்கத் திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் இல்லை.

1900களில் இலட்சக்கணக்கில் இருந்த புலிகளின் எண்ணிக்கை குறைந்து வெறும் 1,000 ஆகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் புலியின் உடற்பாகங்களை ஏற்றுமதி செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் புலிக்குப் பதில் சிங்கத்தின் எலும்புகள் பயன்படுத்தப்படத் தொடங்கின. இப்போது ஆப்பிரிக்க சிங்கங்கள் இன அழிவை எதிர்நோக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க சஃபாரி

தென்னாப்பிரிக்கக் காடுகளில் இப்போது இயற்கைச் சூழலில் 3,500 சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன. கூண்டுகளில் வளர்க்கப்படும் இவற்றின் எண்ணிக்கை சுமார் 10,000. ஜொஹானஸ்பர்க் மற்றும் பிற இடங்களில் சஃபாரி பூங்காக்களில் இவற்றிற்கு தீவனம் போட, படமெடுக்க, சிங்கக்குட்டிகளை கொஞ்சி விளையாட, அவற்றுடன் நடக்க சுற்றுலாப் பயணிகளிடம் பூங்கா உரிமையாளர்கள் பணம் வசூலிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் செயல்படும் 300 பண்ணைகளில் தனி நபர்களின் கைவசம் இருக்கும் இந்த சிங்கங்களை சுட்டுக் கொல்ல, அவற்றின் தலை, தோல், எலும்புகள், நகங்கள் போன்றவற்றை வேட்டையாடுபவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு பரிசுப் பொருட்களாகக் கொண்டு செல்ல உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை பயணிகளிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கின்றனர்.

போலி சமாதானம்

சட்டப் பின்துணையுடன் இவ்வாறு வளர்த்து விற்பதால் காட்டில் இருக்கும் சிங்கங்கள் திருட்டுத்தனமாகப் பிடிக்கப்படாமல் பாதுகாப்புடன் வாழும் என்று வேட்டையை நடத்துபவர்கள் வாதாடுகின்றனர். ஆனால் இதற்கு எதிர்மாறாகவே செயல்கள் நடக்கின்றன. பன்னாட்டுத் தேவைகள் அதிகரிப்பதற்கேற்ப இதற்கு தடைகள் விதிக்கப்படாமல் இருக்கும் காலம் வரை காடுகளில் இருந்தே இவை பிடிக்கப்படுவது தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2007ம் ஆண்டிற்குப் பிறகு இவற்றின் எலும்பு ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இதனுடன் சேர்ந்து வளர்க்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. விலங்குநல ஆர்வலர்களிடம் இருந்து சிங்கங்களை வளர்ப்பதற்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றதுடன் 2021ல் இவற்றை வளர்க்க முழுமையான தடை விதிக்கப்படும் என்று தென்னாப்பிரிக்க சூழல் அமைச்சரகம் அறிவித்துள்ளது.

பெரும் செலவில் வளர்க்கப்படும் சிங்கங்கள்

மருத்துவ செலவு, ஊழியர் சம்பளம், மின் வேலி செலவு ஆகியவற்றைத் தவிர ஒரு சிங்கத்தை வளர்க்க 5000 டாலர் செலவாகிறது. எவ்வாறென்றாலும் வளர்த்து விற்பவர்களுக்கு இவற்றின் எலும்புகள் மட்டுமே அவசியம். இதனால் இவற்றின் ஆரோக்கியத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த ஏற்றுமதி சட்டப்பூர்வமாகத் தொடரும் வரை அதன் மறைவில் ஏராளமான எலும்புகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் ஏற்றுமதி செய்யப்படும் என்பது நிச்சயம். சட்ட அங்கீகாரத்துடன் சேர்ந்தே இந்த வியாபாரம் நடக்கிறது என்பதே இதை தடை செய்ய உள்ள பெரும் பிரச்சனை. தென்னாப்பிரிக்காவில் சிங்கங்களைக் கொல்லும் இடங்கள் யாரும் அங்கு செல்ல முடியாத அளவில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விலங்குநல சட்டங்கள் எல்லாவற்றையும் இங்கு காற்றில் பறக்கவிட்டு இந்த இடங்கள் செயல்படுகின்றன. பல இடங்களில் சட்டம் அனுமதித்துள்ள எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக விலங்குகள் ஒரே இடத்தில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் அடைத்து வைக்கப்படுகின்றன. பல நோய்கள் பாதித்து எலும்பும் தோலுமாக வாழ்கின்றன. இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இவை வளர்க்கப்படுகின்றன.

மனித விலங்கு மோதல்

சிறிய குட்டிகள் கூட தாயிடம் இருந்து பிரித்து வளர்க்கப்படுகின்றன. டான்ஜானியாவில் மனித விலங்கு மோதல் அதிகம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் ஒட்டி அமைந்துள்ள மனிதர்கள் வாழும் இடங்களில் விலங்குகள் நுழைகின்றன. உயிர் மற்றும் உடமையைக் காப்பாற்றிக் கொள்ள இவை பிடிக்கப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் உடல் பாகங்களும் பன்னாட்டு வணிக மையங்களில் விற்கப்படுகின்றன.

வனவிலங்கு மோதல் நடக்கும் இத்தகைய 77 சமூகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 96% சமூகங்கள் சிங்கங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பகுதிகள். இவர்களில் பாதி பேர் தங்களைத் தாக்கும் சிங்கங்களைத் திருப்பித் தாக்கிக் கொல்கின்றனர். மொசாம்பிக்கில் கள்ளத்தனமாக நடக்கும் சிங்க வேட்டையே அங்கு வாழும் இவற்றின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவில் ஒரு காலத்தில் இந்த உயிரினங்கள் வளர்ப்பு விலங்குகளாக பராமரிக்கப்பட்டு வந்தன.

சிங்கத்தின் பாதங்களும் பற்களும்

மனித விலங்கு தாக்குதலின் போது கொல்லப்படும் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் பிராந்திய நாட்டுப்புற வைத்தியம், பன்னாட்டு வணிகச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இவற்றின் பாதங்கள், பற்கள் பெருமைக்குரிய சின்னங்களாக வீடுகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. 2010 முதல் மொசாம்பிக்கில் இருந்து பிடிக்கப்பட்ட உடற்பாகங்களில் 50% வியட்நாம், தென்கிழக்கு ஆசியாவிற்கு கடத்தப்பட இருந்தவை.

இதே காலத்தில் டான்ஜானியாவில் கடத்தல்களில் 1,555 உடற்பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இதில் பெரும்பாலானவை இவற்றின் பாதங்களே. பன்னாட்டு அழுத்தம் காரணமாக இவற்றை வளர்ப்பது தடை செய்யப்பட்டால் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மாற்றம் கொண்டு வருமா அமெரிக்காவின் தடை?

பொழுதுபோக்கிற்காக இவற்றை சுட்டுக்கொன்று தலை மற்றும் இதர உறுப்புகளை பரிசுப்பொருட்களாக (trophy) கொண்டு வர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. சிங்க வேட்டையைக் குறைக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வரும் வேட்டைக்காரர்கள் அரை லட்சம் டாலர் வரை கட்டணமாகக் கொடுத்து வேட்டையாடி சிங்கத்தின் தலையைக் கொண்டு செல்வது நிறுத்தப்படுவதால் இவற்றை வளர்ப்பது அதிக லாபம் தராத தொழிலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.

காட்டுக்கு அரசன் என்ற பெருமையுடன் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த இந்த கம்பீரமான உயிரினம் இன்று மனிதச் செயல்களால் கூண்டுகளில் அடைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உயிருக்கே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாறும் என்று நம்புவோம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/the-industry-which-exports-lion-parts-is-still-active-in-africa-eco-story-1.8543295

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It