எழுதிக்கொள்ளுங்கள்:

நான் ஒரு அரேபியன்

என் முன்னோர்களின் திராட்சைத் தோட்டங்கள் பறிக்கப்பட்டன

என்னாலும் என் குழந்தைகள் அனைவராலும்

மற்றும் பயிரிடப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன

எங்களுக்கும் என் பேரக்குழந்தைகளுக்கும் எதுவும் மிச்சமில்லை

இந்தப் பாறைகளைத் தவிர...

அறிவித்தபடி உங்கள் அரசு அவர்களையும் எடுத்துக் கொள்ளுமா

எனவே,

உங்கள் முதல் பக்கத்தில் எழுதிக் கொள்ளுங்கள் :

நான் மக்களை வெறுக்கவில்லை,

நான் யாரையும் தாக்கவில்லை,

ஆனால்... எனக்குப் பசித்தால்,

நான் அபகரிப்பவரின் சதையை உண்பேன்.

ஜாக்கிரதை.. ஜாக்கிரதை..

என் பசி குறித்தும்

என் கோபம் குறித்தும் ஜாக்கிரதை.

பாலஸ்தீன கம்யூனிஸ்ட், கவிஞர் மொஹமத் தார்விஷ்

palastine kidஇப்போது ஆளும் சனாதனம் தன்னைப்போன்ற ஆதிக்கத்தின் பக்கத்தில் நிற்பதில் வியப்பில்லை. புதிதாய் விடுதலையடைந்த காந்தி தேசமாய், தனது அடிமைக்கால வலியை எண்ணி வியட்நாம், நமீபியா, ஜிம்பாப்வே, கியூபா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீன் என ஆதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் எதிர்த்த போராட்டங்களிலெல்லாம் பெரும்பாலும் இந்தியக் குடியரசு நீதியின் பக்கமே நின்றது. நாஜிகளின் இன அழிப்பைச் சந்தித்த ஒரு இனம் சற்று நியாயத்துடன் நடந்துகொள்ளும்ஞ் அதுவும் ஐரோப்பா முழுவதும் தன்னை வெறுத்து ஒதுக்கியபோது ஆதரவு அளித்த அரபு மக்கள் குறித்து கொஞ்சம் நேர்மையுடன் நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மீதும், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் மீதும் இஸ்ரேலிய ஜியோனிஸ்ட்டு வலதுசாரிகள் தொடர்ந்து காறி உமிழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்திய நிர்வாகம் தொடர்ந்து அவர்களுக்கு தார்மீக ஆதரவையும் ஆயுதங்களையும் வாரி வழங்கி வருகின்றது.

இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் சுற்றி இருக்கும் அரபு நாடுகளில் ஆட்சியில் கொலுவீற்றிருக்கும் அரசர்களும் சுல்தான்களும் அமீர்களும் எமிர்களும் அமெரிக்க அரசின் ஆதரவு இல்லையென்றால் அரபு மக்களால் துக்கி எறியப்படுவர் என்ற நிலை இருப்பதால், தங்கள் சகோதர சகோதரிகள் படும் தொடர் துயரங்களைக் கண்டும் காணாமல் இருக்கிறது. உலகமெங்கும் ஜனநாயகம் பற்றி மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் அமெரிக்க நிர்வாகம் அரபு நாடுகளில் ஜனநாயகம் மலர்வதற்கு முதல் பெரும் தடையாக இருந்து வருகின்றது. அரபு நாடுகள் தங்கள் பெட்ரோலிய வணிகத்தை அமெரிக்க டாலர்களில் மட்டுமே செய்வதற்கான நன்றிக் கடனாக அமெரிக்கா, காலத்திற்குப் பொருந்தாத ஜனநாயகமற்ற அரசுகளைத் தாங்கிப் பிடித்து நிற்கின்றது. பெட்ரோலிய வணிகம் டாலரில் அல்லாது வேறு நாணயத்தில் நடந்தால் டாலருக்கு இன்று உலகம் முழுவதும் இருக்கும் பொதுக் கரன்ஸி எனும் அந்தஸ்து இல்லாது போகும். அப்படி அதனை இழந்தால் அமெரிக்க அரசு தன் விருப்பப்படி தேவைப்படும் போதெல்லாம் டாலரை அச்சடித்து தனது தீர்க்கவியலாத வணிகப் பற்றாக்குறையையும் தனது பட்ஜெட் பற்றாக்குறையையும் சமாளித்து வருவது முடிவிற்கு வந்து விடும். இதனை உணர்ந்து இருப்பதால்தான் ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என இரட்டை வேடம் தரித்து வருகின்றன. உலகமெங்கும் அமெரிக்கா ஏற்படுத்திய இஸ்லாமிய விரோத மணப்பான்மையும் இதற்குத் துணையாக இருக்கின்றது.

ஆனால் உலகம் முழுவதும் இருக்கின்ற ஜனநாயகச் சக்திகள் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்துள்ளன. ரஷ்யாவும் சீனாவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. ரஷிய அதிபர் புடீன் காஸா மீதான முற்றுகை ஃபாசிஸ்டுகளின் ஸ்டாலின்கிராட் முற்றுகைக்கு இணையானது என்று கூறியுள்ளார். இன்று உலக அரங்கில் காத்திரமான முற்போக்கு வகிபாகம் கொண்டுள்ள லூலா வின் பிரேசில் அரசு அதனை வன்மையாகக் கண்டித்துள்ளதோடு ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்ஸிலில் போர் நிறுத்தத் தீர்மானத்தை முன்மொழிந்தது. 15 நாடுகளில் 12 நாடுகள் ஆதரித்தன. அமெரிக்கா ஒன்று மட்டுமே எதிர்த்தது. பிரிட்டன் வழக்கம்போல் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா என்ன செய்யும் எனத் தெரியுமென்பதால் முன்மொழிவின் சாந்தமான மொழி அதற்கு ஏற்பில்லை என்பதால் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே இதுபோன்று எண்ணற்ற தீர்மானங்களை அமெரிக்கா தடுத்துள்ளது.

உலகம் முழுவதிலுமுள்ள இடதுசாரிகளின் கடமை தத்தமது நாடுகளின் அரசைத் தொடர்ந்து துயரத்திற்கு உள்ளாக்கப்படும் பாலஸ்தீனர்கள் பக்கம் உறுதியாக நிற்கச் செய்வதுடன், அடிப்படை பிரச்சினையான பாலஸ்தீனியர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கொண்டுவர அமெரிக்காவிற்கு நிர்ப்பந்தம் அளிக்கக் கோருவதுதான். தனது நலன்கள் மோசமாகப் பாதிப்படையும் என்றால் மட்டுமே அமெரிக்கா ஒரு நியாயமான தீர்விற்கு இறங்கி வரும். சமீப காலங்களில் இந்திய அரசின் அதிகாரபூர்வமான நிலைபாடு மிகவும் நீர்த்துப்போனதாக உள்ளது. உலகமெங்கும் உள்ள முற்போக்கு யூத மக்கள் இந்த அநியாயத்தை எதிர்த்த அளவிற்குக் கூட இந்தியாவின் எதிர்ப்பு இல்லை என்பது, இந்தியா உலக அரங்கில் அதன் இடத்தை பிரேசில் போன்ற மற்றவர்களுக்கு விட்டுவிட்டு அமெரிக்காவின் இளைய பங்காளி ஆவது இந்தியாவின் சொந்த நலன்களுக்கே உகந்ததல்ல. இதனைப் பரந்துபட்ட மக்களுக்குப் புரிய வைக்கும் கடமை இடதுசாரிகளுக்கு உள்ளது.

பாலஸ்தீன வீரர்களுக்கு

எங்கே நான் சென்றாலும்

எனதருமை பாலஸ்தீனமே

உன் அவமானம் என் இதயத்தை சுட்டெரிக்கும்

ஆனால் ஆறுதல்கள் உண்டு

உனது கம்பீரம் என்னை நிமிரச் செய்யும்

உனது நேசம் என்னோடு நடந்துவரும்

எனது மூச்சுக் காற்றில்

உனது ஆரஞ்சுத் தோட்டத்தின் வாசம் வீசும்

நான் நேரில் கண்டிராத நண்பர்கள்

என்னோடு எப்போதும் உடனிருப்பர்

நான் கை கொடுத்து குலுக்காத

அவர்கள் கரங்கள் என் கரத்தை வலுப்படுத்தும்

அந்நியபூமியின் அக்கறையற்ற நெடுஞ்சாலைகளில்

அடுத்தவர் நகரங்களின் அறிமுகமில்லாத

வீதிகளில் என்று

எங்கெல்லாம் எனது ரத்தப் பதாகையை உயர்த்துகின்றேனோ

அங்கெல்லாம் பாலஸ்தீனக் கொடி பட்டொளி

வீசிப் பறக்கும்

எனது எதிரிகள் ஒரு பாலஸ்தீனை அழித்திருக்கலாம்

எனது மனத்துயர் எண்ணற்ற பாலஸ்தீனங்களை படைத்திருக்கும்.

உருது மஹாகவியும் கம்யூனிஸ்ட்டுமான,

ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ்

என் இதயம் என் சக பயணி, 1981

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It