உலக உயிரினங்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கு வளமான இருப்பாய்த் திகழ்வது, மலைகள், காடுகள், செழிப்பான நிலங்கள், ஆறுகள், வளி, காற்று ஆகியவற்றைக் கொண்ட இந்த இயற்கைச்சூழல்தான். ஒன்றைச் சார்ந்து மற்றொன்று, மற்றொன்றைச் சார்ந்து பிறிதொன்று என உயிர்களின் வாழ்க்கைச் சங்கிலி பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. பெருவெடிப்பிலிருந்து தோன்றிய இந்தப் பிரபஞ்சம், கோடானுகோடி ஆண்டுகள் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதெனில் இயற்கையின் அசைக்க முடியாத சக்தியை வியக்காமல் எங்ஙனம் இருக்க முடியும்? கற்பனைக்கே எட்டாத இப்பேரண்டத்தின் மிகச் சிறிய துளிதான் நாமிருக்கும் பூமி.

தீயால் எரிந்த வனப்பகுதி

தற்போது 600 கோடிக்கும் மேல் மனித எண்ணிக்கையைக் கொண்டுள்ள நமது புவியில், கோடிக்கணக்கான உயிரினங்களும் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மனிதனோடு எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நெடும் போராட்டத்தினிடையே நுகர்வு வெறி பிடித்து அலையும் மனித இனம், ஒட்டு மொத்த இயற்கையையும் சூறையாடி, தனக்கு மட்டுமே என்ற இறுமாப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. இறுதியில் வெற்றி பெறப்போவது இயற்கைதான் என்பதை அறியாதவனாய், தனது பொறுப்பற்ற தன்மைக்கு, தனக்குத்தானே நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறான் மனிதன். தனது தேவைக்கும் மேலாக இயற்கையை உறிஞ்சத் துடிக்கும் மனித இனத்தின் பேராசைக்கு, இந்த பூமி இலக்காகி கொஞ்சம், கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கிறது என்பதே இன்றைய இயல்பு.

மலைகள், காடுகள், விலங்கு-பறவைகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்கென்றே நம் முன்னோர்கள், கடவுள், தெய்வம் என காப்பாளர்களை உருவாக்கி, அங்கெல்லாம் கோவில்களைக் கட்டியெழுப்பினர். அக்கோவில்களில் உறையும் கடவுளர்களை நினைத்தவண்ணமே, அங்குள்ள இயற்கைச் செல்வங்களையும் பாதுகாக்க முனைந்தனர். இதனால்தான் மலைகளிலும், அடர்ந்த வனங்களிலும் தெய்வங்கள் வாழும் கோவில்கள் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எந்த இயற்கையைப் பாதுகாப்பதற்காக இறை உருவங்கள் உருவாக்கப்பட்டனவோ, அவ்விறைக் கோவில்களின் பெயரால் இன்றைக்கு இயற்கையைச் சீரழிக்கும் முரண் நிலை தோன்றத் தலைப்பட்டிருக்கிறது. சபரிமலையிலிருந்து, திருப்பதி வரை எவ்வளவோ முன்னுதாரணங்களை இதற்கு சுட்டிக் காட்டலாம். அதைப் போன்ற இயற்கையின் வியக்கத்தக்க உட்கூறுகளையும், தாவர, செடி, கொடி வகைகளையும், நீராதாரங்களையும் கொண்டுள்ள இடமே சதுரகிரி என்றழைக்கப்படும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்களை உள்ளடக்கிய மலைத்தொடர்கள்.

அடர்ந்த மலைக்காடுகளைக் கொண்டுள்ள சதுரகிரி, நமது மின்னணு ஊடகங்களின் பொறுப்பற்ற பரப்புரையால், இன்றைக்கு மிகப் பெரும் சீரழிவை எதிர்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கொரு முறை ஆடி மாத கார்உவா (அமாவாசை) நாளன்று, இம்மலையில் உருக்கொண்டிருக்கும் கடவுளர்களை வணங்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆடி மாத கார்உவா நாளன்று இம்மலையில் கூடிய மக்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய பத்து இலட்சம் பேர் என்றால், இம்மலைக்காட்டின் சூழல் கேடு எந்தளவிற்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். இயற்கையின் அத்தனை அழகும் கொட்டிக்கிடக்கும் இம்மலையின் அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவில் வரை நடந்து பயணம் செய்வதன் மூலம், மகிழ்ச்சியான உணர்வையும், ஒருமித்த சிந்தனையையும், உடல் நலத்தையும் பெற முடியும். எழுத்தில் வடிக்க இயலாத அவ்வுணர்வைக் குறித்து, அங்கே தொடர்ந்து பயணம் செய்து, கோவில்களுக்குச் சென்று திரும்பும் இறைப் பற்றாளர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் கேட்டால் தெரியும். 

சின்னப்பசுக்கிடைக்கு அருகே குவிந்து கிடக்கும் ஞெகிழிப் பொருட்கள்மூத்த இதழாளர்களோடு சதுரகிரி மலைக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு அண்மையில் கிடைக்கப் பெற்றோம். ஆடி அமாவாசைக்குப் பின்னர் அம்மலையின் சூழல் கேட்டை அளவிடுவதற்கும், தொடர்ந்து அங்கே நிகழும் இயற்கை அத்துமீறல்களைக் கண்டறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்மலை நோக்கிய எங்களின் பயணம் தொடங்கியது. தாணிப்பாறை அடிவாரத்திலுள்ள ஸ்ரீலஸ்ரீகாளிமுத்து சுவாமிகள் மடத்திலிருந்து அதன் பல்லாண்டுப் பணியாளர் திரு.இராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் எங்களது மூட்டை முடிச்சுகளோடு மலையேறத் தொடங்கினோம். மலைக்குக் கீழே இருக்கும் கருப்பசாமி, வனப்பேச்சியம்மன் கோவிலில் வணங்கி வழிபாடு நடத்திய பின்பு பயணம் தொடர்ந்தது. ஆன்மீகம், சமூகம், அரசியல், வளங்குன்றா வளர்ச்சி, பொருளியல், சித்தர் வாழ்வியல் போன்ற பல்வேறு கலந்துரையாடல்கள் நடைப்பயணத்தில் எங்களுக்குள்ளேயே நிகழ்த்தப்பட்டன.

பயணத்தினூடே மலைகளைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த இதழாளர் ஒருவர் மலையின் பண்டைய சூழல் குறித்து விளக்கிக் கொண்டே வந்தார். சிறிது தூரம் வரை சமதளமாகச் செல்லும் மலைப்பாதை ஓரிடத்திலிருந்து சற்றே உயரத் தொடங்குகிறது. 'வழுக்குப் பாறை என்றழைக்கப்படும் இச் சிறிய பாறையைக் கடப்பது ஒரு காலத்தில் மிகவும் சிரமமாக இருக்கும். காரணம், எப்போதும் இப்பாறையில் தண்ணீர் நிறைந்து வழிந்தோடிக் கொண்டிருக்கும். ஆனால், இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் அது போன்ற காட்சியைக் காண இயலும்' என்றார் இராமமூர்த்தி. தொடர்ந்து அவர், 'மலையின் போக்கில் பல்வேறு காட்டாறுகள் கோடைக்காலத்திலும் கூட, குறுக்கிட்டு ஓடிக் கொண்டேயிருக்கும். இப்போதெல்லாம் அந்தக் காட்சியைப் பார்ப்பது அரிதிலும் அரிதான ஒன்றாகிவிட்டது' என்றார் மிகுந்த வேதனையுடன்.

அத்திகிரி சித்தர் வாழ்ந்த பகுதியைக் கடக்க முற்பட்டோம். அது காட்டாற்றுப் பாதை என்பதால், அதனைக் கடந்து செல்வதற்காக இரு பாறைகளுக்கிடையே சங்கிலி ஒன்றைக் கட்டியிருப்பதைக் கண்டு அதற்கு விளக்கம் கேட்டோம். வெள்ளக் காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, அதனைக் கடந்து செல்வதற்காக இந்த இரும்புச் சங்கிலியைக் கட்டி வைத்துள்ளனர் என்று விளக்கம் கிடைத்தது. அப்பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் பளிங்காகக் காட்சியளித்தாலும், அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் ஞெகிழிப் பைகளின் எண்ணிக்கை, நம்மை கிறுகிறுக்க வைத்துவிட்டது. ஆசை தீர அள்ளிக் குடிக்க வேண்டும் என்று நம் மனம் நினைத்தாலும், ஒருவேளை உடம்பிற்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்..? சற்றே பின்வாங்கி, அந்த உயரமான பாறையை அடி மேல் அடியெடுத்து நடந்து கடந்தோம்.

முன்னும் பின்னுமாய் ஆட்கள். ஆன்மீக நோக்கிலும், மலையேறும் ஆவலிலும் நிறைய பேர் சென்ற வண்ணம் இருந்தனர். சதுரகிரியில் வாழ்ந்த சித்தர்கள் குறித்து குழுவொன்று கலந்துரையாடிக் கொண்டே சென்றது. 'சித்தர்கள் எப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரிவார்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?' என்று ஆவல் மிகுதியால் சில இளைஞர்கள் நச்சரித்துக் கொண்டே சென்றதையும் கண்டோம். 'மக்களுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நல்லது செய்கின்ற அனைவருமே சித்தர்கள்தான். நீங்களும், நானும் ஒரு வகையில் சித்தர் பரம்பரைதான். ஆகையால், வெற்றுப் பரபரப்பிற்காக செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்துவிட்டு இது போன்ற கேள்விகளையெல்லாம் தயவுசெய்து கேட்காதீர்கள். ஒருமித்த சிந்தனையில் மெய்யுணர்வோடு பயணம் செய்து பாருங்கள். அப்போதுதான் சித்தர்கள் என்ற நம் முன்னோர்களை உணர்ந்தறிய முடியும்' என்று மிகப் பெரிய ஆன்மீக விளக்கமளித்தார் வழக்குரைஞர் மகாராஜன். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சதுரகிரிமலைக்குத் தொடர்ந்து வந்து செல்லும் இறைப் பற்றாளர். இந்து சமய அறநிலையத்துறைக்காக பல்வேறு சிக்கல்களில் நேர்நின்று வாதாடியவர்.

குவித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பாட்டில்கள்அவர் மேலும், 'இயற்கை எண்ணற்ற அருட்கொடையை இந்த மலையில் புதைத்து வைத்திருக்கிறது. அதுமட்டுமன்றி, தனக்கு ஏற்படும் சீரழிவுகளைத் தானே சரி செய்து கொள்ளும் வல்லமை இந்த மலைக்கு உண்டு. ஞெகிழிப்பைகள் உள்ளிட்ட குப்பை கூளங்களை அடித்துப் பெய்யும் ஒரு மழையின் மூலமாக தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும். ஆகையால் அதைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. இருந்தபோதும், இயற்கையே அதனைச் செய்யும் என எண்ணாமல் இந்த மலைகளை தூய்மையோடு பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்' என்று இயற்கை நேயராக நமது கேள்விகளுக்கும் விளக்கமளித்துக் கொண்டே வந்தார்.

மிகக் கடுமையான வளைவினைக் கொண்ட கோணத்தலைவாசல் ஏறிய பிறகு சிறிது இளைப்பாறினோம். பின்னர், மறுபடியும் நமது பயணத்தைத் தொடர்ந்தோம். செல்லும் வழியெங்கும் மதுப்புட்டிகள் உடைந்தும், உடையாமலும் ஆங்காங்கே பரந்து கிடந்தன. 100 மிலி குடிநீர்ப்பைகள், ஒன்றரை மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் என பாதை நெடுகிலும் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே முளைத்திருந்த சிறிய கடைகளைக் கூட, அழகிய கூடாரமாய் அமைத்து, அங்குள்ள மரங்களில் கயிற்றைக் கட்டி, சூழல் நேயத்தோடு உருவாக்கியிருந்தனர். 'ஆமாங்க இதுக்காக, இங்குள்ள மரங்கள வெட்டி அந்தக் கட்டையப் பயன்படுத்தணுமா என்ன? நமக்கு எப்படி இந்த இயற்கை உதவுதோ, அதே மாதிரி எல்லாத்துக்கும் உதவணும். அதுக்கு நாம வழி செய்யணும்' என்றார் அங்கே கடை வைத்திருந்த உள்ளூர்க்காரர் ஒருவர். இந்த சிந்தனை இங்கே வருகின்ற எல்லோருக்கும் இருந்துவிட்டால் எப்படியிருக்கும்? என்று எண்ணிக்கொண்டே சென்றபோது, எதிர்த்தாற்போல் நான்கைந்து ஆண்களும், பெண்களும் தலையில் ஆளுக்கொரு மூட்டைச் சுமையோடு இறங்கிக் கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தபோது, மலையில் ஆங்காங்கே கிடக்கும் செருப்பு, உடைகள், பைகள் மற்றும் சில பொருட்களைச் சேகரித்து, மலைக்குக் கீழே கொண்டு செல்வதாகக் கூறினர். நாளுக்கு இருமுறை இது போன்று செய்வதாகவும், குறிப்பாக மக்கள் அதிகமாக வருகின்ற வெள்உவா (பௌர்ணமி), கார்உவா (அமாவாசை) நாளுக்கு மறுநாள் இதுபோன்ற சேகரிப்புப் பணியில் ஈடுபடுவதாகவும் கூறினர்.

'ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்து, சூரிய ஒளியே படாதவாறு மலையில் எப்போதும் குளுமை நிறைந்திருக்கும். பச்சைப் பட்டாடை போர்த்தியது போல், பார்க்கும் திசையெங்கும் பசுமையாய்க் காட்சியளிக்கும். ஆனால் இப்போது நிலைமை மிகவும் மாறிவிட்டது. வனத்துறைக்குத் தெரியாமல் உள்ளே புகுந்து மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல், இந்த மலையை சுத்தமாய் மொட்டையடித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போது வனத்துறை மிகக் கடுமையான கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பயணிகளாக வரும் சிலர் அத்துமீறி, காப்புக் காடுகளுக்குள் புகுந்து மூலிகைச்செடிகளை நாசம் செய்து விடுகின்றனர். இதனை ஒன்றும் செய்ய இயலவில்லை. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செடி, கொடிகள் கூட, இந்த மலையின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உண்டு. தவசிப்பாறைக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு, வனத்திற்குள் சிலர் புகுந்துவிடுகின்றனர். கரடி உள்ளிட்ட விலங்குகளால் தாக்கப்பட்டு, உயிர் பிழைக்க ஒடி வந்தவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த மலையின் அருமை தெரிவதில்லை. அதன் புனிதமும் புரிவதில்லை' என்கிறார் மகாலிங்கம் கோவிலின் பூசகப் பொறுப்பிலுள்ள ஒருவர்.

sathuragiri_621

காராம்பசுத்தடம், கோரக்கர் குகை என வழி நெடுக சில முக்கியமான இடங்கள் உண்டு. இவற்றிலெல்லாம் தங்கி இளைப்பாறிச் செல்லலாம். அதிலும் கோரக்கர் குகை அருகே சிற்றோடை ஒன்று செல்கிறது. அது முற்றிலுமாய் தூய்மைக்கேடடைந்து காணப்படுகிறது. அவ்வோடைக்கு சற்றே மேலேறிச் சென்றால்தான் நல்ல தண்ணீரைப் பருக முடியும். 'இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில்தான் மான் ஒன்று செத்துக் கிடந்தது. வனத்துறையினர் எதனால் இறந்தது என்பதைக் கண்டறிவதற்காக, அதன் வயிற்றுப் பகுதியைக் கிழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது உட்கொண்ட ஞெகிழிப் பொருட்கள்தான் காரணமென்று. வயிறு மிகப் பெரிதாய் ஊதி, செத்துக் கிடந்த இந்த மானைப் போன்று இன்னும் எத்தனை விலங்குகள், பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை' என்று அப்பகுதியில் கடை வைத்திருந்த ஒரு பெண்மணி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.

ஓரிடத்தில் மரங்கள் அனைத்தும் கருகி, காடே அழிக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் காணப்பட்டது. 'இந்த இடத்துலதான், போன ஆடி அமாவாசைக்கு வந்த ஒரு சிலர் தீ வைச்சிட்டாங்க. மலையில தீப்பிடிச்சு எரியுதுன்னு கேள்விப்பட்டு, மலைக்கு வந்த நிறைய பேரு, அடிவாரத்தோட திரும்பிப் போயிட்டாங்க. அவங்களா தீ வெச்சாங்களா, இல்ல அவங்க கொண்டு வந்த பொருட்களால தீப்பிடிச்சதான்னு முழுமையா தெரியல. இருந்தாலும், நம்ம மேல தப்பு இருக்குங்க. மலைப் பகுதிகளுக்கு வரும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள யாரும் பயன்படுத்தக்கூடாதுன்னு, எச்சரிக்கைப் பலகை வச்சிருந்தும் கூட நம்ம மக்கள் கேட்கமாட்டேங்குறாங்க' என்றார் நம்மோடு வந்த உள்ளூர்ப் பத்திரிகையாளர்.

நாவல்ஊற்று என்ற இடத்தினருகே வந்தோம். விரிந்து நிழல் பரப்பியுள்ள நாவல்மரத்தின் வேர்ப்பகுதியில் அமைந்துள்ள அச்சிறிய ஊற்றுநீர், பயணிகளின் தாகம் தணிப்பதற்காகவே இயற்கை அளித்துள்ள அருங்கொடை. அந்த ஊற்றுக்குள்ளும் ஞெகிழிப்பைகள் காணப்பட்டன. பிஸகெட் டப்பாக்களும் அதற்குள் ஊறிக் கிடந்தன. நீளமான குச்சி ஒன்றை எடுத்து, அதிலுள்ள கூளங்களை எடுத்துப் போட்டு, இயன்றவரை தூய்மை செய்தோம். கலங்கிய தண்ணீர் நன்றாய்த் தெளிந்தபின்னர், கையோடு கொண்டு போயிருந்த பாட்டிலில் நீரை நிரப்பி தாகம் தீரும் வரை அள்ளிக் குடித்தோம். சுவையாக இருந்தது. அந்நீரின் மருத்துவ குணம் குறித்த அறிவிப்புப் பலகையொன்று அம்மரத்தினடியிலேயே தொங்கவிடப்பட்டிருந்தது. பச்சரிசிப்பாறை என்ற இடத்தைக் கடந்த பின்னர், காட்டாறு ஒன்று குறுக்கிடும் இடத்தில் வனதுர்க்கைக்கு கோவில் ஒன்று உள்ளது. அடர்ந்த மரங்களைக் கொண்ட அப்பகுதியில் சில் வண்டுகள் எழுப்பும் ஒலி மனதுக்கு மிக இதமாக உள்ளது. சின்னப்பசுக்கிடை, பெரிய பசுக்கிடை என்ற பகுதிகளைக் கடந்து செல்லும்போது, 'அந்தக் காலத்துல உள்ளூர்க்காரவுங்க தங்களோட மாடுகள இந்த மலையிலதான் மேய்ச்சலுக்கு விடுவாங்க. ஒரு வாரம், ரெண்டு வாரம்னு தங்கி மாடுகள மேய்ச்சலுக்கு விடுறவங்க, இந்த ரெண்டு இடங்கள்லதான் கிடை போடுவாங்க. இன்னைக்கி மேய்ச்சலுக்கு ஒரு ஆடு, மாடுகளக்கூட பாக்க முடியல' என்றார் இராமமூர்த்தி.

sathuragiri_370அதனைக் கடந்து சென்றதும் நம் கண்களில் தெரிவது பிலாவடிக்கருப்பர் ஆலயம். ஆறு ஓடி வரும் பாதையில், பலா மரத்தின் அடியில் அமைந்துள்ளது கருப்பசாமி கோவில். இங்கே வருகின்ற பக்தர்கள் அனைவரும் கருப்பசாமிக்கு தேங்காய் உடைக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், அவ்விடம் முழுவதும் தேங்காய்ச் சிரட்டைகளால் நிறைந்து காணப்படுகின்றது. அவையெல்லாம் அழுகிய நிலையில், பெரும் துர்நாற்றத்தோடு கிடக்கின்றன. இவ்விடத்தைக் கடந்து செல்லும் தண்ணீரும் கூட, எண்ணெய்ப்பிசுக்கோடு ஏதோ ஒரு நிறத்தில் காணப்படுகிறது. அக்கோயிலைச் சுற்றி குரங்குகள் நிறைய வாழ்கின்றன. அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில்கள். அக்கோவிலை ஒட்டி ஓடும் சிற்றோடை, மனிதக் கழிவுகளால் மிகப் பெரும் தூய்மைக்கேடு அடைந்துள்ளது. சில ஆயிரம் பேர் வந்து செல்லும்போதே, இப்படியொரு நிலையெனும்போது, பத்து இலட்சம் பேர் வந்து சென்ற ஆடி கார்உவா நாளில் எப்படியிருந்திருக்கும் என்பதை வாசிப்போரின் கற்பனைக்கே விட்டுவிடலாம். அப்போது அவர்கள் பயன்படுத்திய இயற்கைக்சூழலுக்கு ஒவ்வாத பொருட்கள், கழிவுகள் என்று கணக்கிட்டுப் பார்த்தால், சதுரகிரியின் தூய்மை எந்த அளவிற்கு பாழாகியிருக்கும்..? இந்த அழகில் புதிதாய் வருகின்ற சிலர் மலையேறும்போதே மேலே தங்கும் விடுதிகள் உள்ளனவா..? சுற்றுலா வழிகாட்டிகள் உண்டா..? 'சிறப்பு பானங்கள்' கிடைக்குமா..? என்றெல்லாம் கேட்டு தங்களது பயணத்தைத் தொடங்குபவர்களை என்னவென்று சொல்ல..?

இறைத்தேடலோடு வருவோர், வசதிகளை நினைத்துக் கொண்டு வரக்கூடாது. இயற்கை என்ன வழங்கியிருக்கிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில்களுக்காக வனத்துறையால் வழங்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தற்போது பார்த்தீனியச் செடிகளும் பரவியிருக்கின்றன. இச்செடிகளின் பரவல், சதுரகிரியின் வனவளத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்ற பயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் மனிதர்களின் அத்துமீறல், மற்றொரு புறம் பார்த்தீனியச் செடிகளின் பெருக்கம். இவற்றையெல்லாம் தாண்டி சதுரகிரியின் வனவளத்தையும், சூழலையும் பாதுகாக்க வேண்டிய கடமை, வனத்துறைக்கும், அறநிலையத்துறைக்கும் மட்டுமன்றி, அங்கே பயணம் செய்யும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த நவம்பர் மாத பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் கட்டுரையாளர் திரு.தங்கப்பாண்டியன் கூறியதுபோல், சதுரகிரியும், மற்றுமொரு சபரிமலையாய் உருவெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே உறுதியான உண்மை.

- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It