எஸ்.ஆனந்தி, ஜெ. ஜெயரஞ்சன் & ராஜன்குறை (எம் எஸ் எஸ் பாண்டியன் உட்பட) ஆகியோர் ஆய்வின் அபத்தங்களை முன்வைத்து..
நாடகக் காதல் என்கிற வன்முறைக் கருத்தாக்கம் ராமதாஸ் என்கிற அரசியல்வாதியினால் சமூகப் புரையாக மாறி தமிழகத்தை நாசம் செய்த சூழலில், அவருக்கு எதிர்நிலையில் நின்று பணியாற்றி வரும் ஜனநாயக சக்திகளே ராமதாசின் கருத்துக்களுக்கு தம்மை அறியாமலேயே ஒரு வகையில் உதவி இருக்கிறார்கள் என்று நம்பத் தகுந்த வகையில் தற்போது விவாதங்கள் எழுந்திருக்கின்றன. அண்மையில் இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் ஒரு குறிப்பினை நான் எழுத, அதற்கு மறுப்பாக தோழர்.ராஜன்குறை அவர்கள் ஒரு குறிப்பினை எழுதினார். அதுதான் இந்தக் கட்டுரையை எழுத வைத்தது.
தோழர் ராஜன் குறை.. இப்படி ஒரு சூழலில் உங்களை எதிர்கொள்வேன் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. உங்களது கட்டுரையின் சில பகுதிகள் என எனக்குக் கிடைத்த வாட்ஸ்அப் குறிப்புகளைக் கொண்டு எனது எதிர்வினையினை பேஸ்புக்கில் நான் எழுதியவுடன், அது பற்றிக் கொண்டு எரிவதாக சில தோழர்கள் என்னிடம் சொன்னார்கள்.
நான் எழுதிய அந்தக் குறிப்பின் கடைசியில், "நாடகக் காதல் என்கிற சொல்லை உருவாக்கிய எம்.எஸ்.எஸ். பாண்டியனின் ஆன்மா இளவரசனின் ரத்த அபிஷேகத்தினால் சாந்தி அடைந்திருக்கும் என்றும், ராஜன்குறை எப்படியோ?" என்று முடித்திருந்தேன். அதற்கு மறுப்புத் தெரிவித்து நீங்கள் வினவிய கேள்வியினால் எனக்கு சின்ன குற்ற உணர்வு வந்தது. உங்களின் கட்டுரையை நான் முழுமையாகப் படிக்காமல் கருத்து பதிவிட்டது தவறு என்று உணர்ந்த காரணத்தினால் எனது குறிப்பின் பின்பகுதியினை முழுமையாக நீக்கி விட்டேன். நான் பொதுவில் நேர்மையாக இருப்பதற்கு முன்பு, எனக்கு நானே நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்பதை முன்னிபந்தனையாக வைத்திருக்கிறேன் என்பதால்தான்.
இளவரசனின் நினைவு நாளில் அக்குறிப்புகளைப் படித்ததால் எழுந்த கோபத்தில் எனது குறிப்பினை எழுதி விட்டேன். பிறகு ஏ.பி.ராஜசேகர் பேஸ்புக் பக்கத்தில் அது பற்றின அறிமுகம் இருந்தது. அதுவும் எனக்குப் போதுமானதாக இல்லை. ஜெயமோகன் கட்டுரையைப் படித்தேன். உங்கள் மீதான விமர்சனத்தில் தனது புனைவினையும் சேர்த்து எழுதி ஒரு உயிரோட்டத்தை உருவாக்கி விட்டார் ஜெயமோகன். எனவே அதைப் படித்து நான் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. எனவே, பேஸ்புக் குறிப்பில் இருந்தது எனது சொந்த முடிவு. பிறகு உங்களது கட்டுரையும், லட்சுமணன் அவர்களின் மறுப்புக் கட்டுரையும் ஏபி.ராஜசேகர் அனுப்பி வைத்தார்.
இப்போது எனது தரப்புக்கு வருகிறேன். இது மறுகூராய்வு என்பதில் ஐயமில்லை. 18 ஆண்டுகள் கழித்து ஒரு மறுகூராய்வு நடக்கிறது என்பது எப்போதோ அத்தி பூத்தாற்போல நிகழ்வது. அதில் இதுவும் ஒன்று. எஸ். ஆனந்தி, ஜெ.ஜெயரஞ்சன் மற்றும் ராஜன் கிருஷ்ணன் (குறை) இணைந்து எழுதிய Work, Caste and Competing Masculanities, Notes from a Tamil Village by S.Anandhi, J.Jeyaranjan, Rajan Krishnan (Kurai) (Economic and Political Weekly, October 26, 2002) பெருங்கட்டுரையையும், சி.லட்சுமணன் எழுதிய Dalit Masculanities is Social Science Research, Revising a Tamil Village என்கிற அந்த மறுப்புக் கட்டுரையையும் முழுமையாகப் படித்து முடித்த பின்பே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். எனவே ’பாண்டியன் மீதும், ராஜன்குறை மீதும் காட்டமாக இளவரசனின் ரத்தத்தை அபிஷேகம் செய்தற்காக’ எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மறுப்பிற்குப் போவதற்கு வசதியாக உங்களை இந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு, ஆய்வறிக்கைக்குள் நுழைகிறேன்.
Work, Caste and Competing Masculanities, Notes from a Tamil Village என்கிற ஆய்வுக் கட்டுரை “கருத்திலும் நடைமுறையிலும் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்தினூடே ஆண்மையக் கோட்பாடு (Masculanity) தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்படுகிறது” என்பதை ஆய்வு செய்ய ஒரு கிராமத்தைத் தேர்ந்து கொள்கிறது. அது செங்கல்பட்டுக்கு அருகே இருக்கின்ற திருனூர் என்கிற கிராமம். கட்டுரையின் அமைப்பு ஆறு பகுதிகளையும் அதனுள் துணைத் தலைப்புகளையும் கொண்டிருக்கிறது. மூன்று பேர் சேர்ந்து எழுதிய ஆய்வறிக்கை என்பதால் பகுதிகளை பிரித்துக் கொண்டு எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது.
முதலிரண்டு பகுதி ஆய்வுக் களத்தினையும், அக்களம் கடந்து வந்த அரசியல் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் விவரிக்கிறது. ஜமீன்தாரி முறையிலான வேளாண் பொருளாதார அமைப்பில் இருந்த கிராமம், ஜமீன்தாரி முறை ஒழிப்பிற்குப் பிறகு முதலியார்களின் ஆதிக்கம் நிறைந்த கிராமமாகவும் புதிய வகை நிலஉடைமை அமைப்பு உருவாவதையும் விவரிக்கிறது. அது அனேகமாக ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் எழுதியிருப்பார் என்று அனுமானித்தேன். விசாரித்து அது உண்மையென்றும் தெரிந்து கொண்டேன். மற்றவை யார் பகிர்ந்து எழுதிக் கொண்டார்கள் என்று தெரியாது. ஆனால் எஸ்.எஸ்.எஸ். பாண்டியன் ஆய்வின் முழுமைக்கு வழி நடத்தியிருக்கிறார் என்பது உறுதியான ஒன்று என்பதை பின்னிணைப்பின் அடிக்குறிப்பில் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். ஆய்வின் தொடக்கத்தில் விவாதிக்கப்படும் ஆண்மையக் கோட்பாடு பற்றின கருத்தியல் தளம் வலுவானதாக இல்லை. ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்மையக் கருத்தை வடிவமைப்பதில் வர்க்கம், சாதி மற்றும் இனம் ஆகியன எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது தனிவகை என்பதால் விட்டு விடுகிறேன். மேலும் ஆண்மையக் கருத்தை வரையறுப்பது தொடக்கத்திலேயே தடுமாறி விடுவதால் ஒட்டுமொத்த ஆய்வையும் அந்தத் தடுமாற்றம் வழிநடத்தி முடித்து விடுகிறது. எப்படியெனில் ஆண்மையக் கருத்துருவம் என்பது ஆண் வழியாக மட்டுமே செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை வரித்துக் கொண்டதால் அது ஆய்வினை பாழ்படுத்தி விட்டது.
இப்போது அடுத்த பிரச்சனைக்குப் போவோம். ஆய்வின் மூன்றாவது பகுதி, ஒரு தலித்தின் கடந்த காலம் என்கிற தலைப்பில் உள்ளது. திருனூர் கிராமத்தில் சேரி மற்றும் ஊர் பகுதிகளுக்கு இடையிலான சமூகப் பொருளாதார உறவினை விவரிக்கும் விதமாக அதன் கடந்த காலத்தை ஆராய்கிறது. 50-60 குடும்பங்களைக் கொண்ட சேரிப் பகுதியில் இருக்கும் தலித்துகள் முதலியார்களிடம் படியாள்களாக வேலை பார்க்கிறார்கள். மரக்காலில் அளந்த நெல்லினைக் கூலியாகப் பெறுகிறார்கள். பலவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். விவசாயக் கூலிகளாக இருப்பதால் பல நேரங்களில் முதலியார்களால் தாக்கப் படுகிறார்கள். தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடைபெறும்போது ஒரு சம்பவத்தில் தலித்துகள் எதிர்க்கிறார்கள். பிறகு முதலியார்கள் தாக்குவது குறைகிறது. இக்காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் முதலியார்களின் ஆண்மையக் கருத்துருவம் எப்படி செயல்படுகிறது, வடிவமைக்கப்படுகிறது என்பதற்காக இத்தனை சான்றுகள் விவாதிக்கப்படுகின்றன. அத்தோடு நிற்கவில்லை. மேலும் பல சம்பவங்கள் வரிசைப்படுத்தப் படுகின்றன. அதில் இரண்டினை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
“Out of the 50 to 60 dalit families in the village only four or five families owned any land. Poverty forced them to steal from the fields of the landlords in the night. It would usually happen with the connivance of a fellow dalit who had been retained by the landlord to guard the fields. As a 67-year old dalit man, like many other dalit elders, claimed, "Thieving was very common among the scheduled castes as there was poverty and they had no land to cultivate”
என்ன சொல்கிறது இது? வறுமையின் காரணமாக தலித்துகள் பெரும்பாலும் திருடுகிறார்கள். அதை 67 வயதுள்ள ஒரு தலித் உறுதி செய்கிறார். மற்றுமொரு பகுதியைப் பார்ப்போம்.
“Some of them of course had illicit affairs with SC women, which is a well known fact in the village." சில சாதி இந்துக்கள் அதாவது முதலியார்கள் தலித் பெண்களுடன் முறைகேடான உறவுடன் இருந்தார்கள். அதைப் போல முதலியார் பெண்கள் தலித் ஆண்களுடன் முறைகேடான உறவு கொண்டிருந்தார்கள்.
...many mudaliar women expressed their sexual desires for scheduled caste men and forced them to have to sex with them…
"Similarly, Krishnan, a 72-year old dalit, recounts……. Women in mudaliar households would be voluptuous because of eating well, drinking milk and curds. Eating beef and working hard, the labourers would have well-built bodies. So those women invite these men to bed. But no one would come to know of it. The man would not talk of it fearing reprisal from the land owners”
முதலியார் பெண்கள் நன்றாக பாலும் தயிரும் சாப்பிட்டு வனப்பாக இருந்ததால் மாட்டுக்கறி தின்று கட்டுமஸ்த்தாக இருந்த தலித்துகளை உறவுக்கு அழைத்தார்கள் என்று கிருஷ்ணன் என்கிற முதியவர் வாக்குமூலம் அளிக்கிறார்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் உள்ள விமர்சனம் என்ன? இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரு பொதுத்தன்மை உருவாக்கப் பட்டுள்ளது என்பதுதான். தலித்துகள் திருடர்கள் என்பது போலவே முதலியார்கள் பெண்களும் காம வேட்டையாடினார்கள் என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த விபத்து எப்படி நிகழ்கிறது என்றால், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் பேச்சு வழக்கில் பொதுமைப் படுத்திப் பேசுவதை முழுமையான உண்மையாகவே எடுத்துக் கொண்டு, அதைக் கோட்பாடு போல மாற்றிப் பொதுமைப்படுத்திப் புரிந்து கொண்ட தவறானது இந்த ஆய்வு முழுமைக்கும் வெளிப்படுகிறது. அப்படியானால் இந்த இரு சம்பவங்களிலும் உண்மை இல்லையா என்கிற கேள்விக்கு உண்மையும் கொஞ்சம் இருக்கிறது என்பதுதான் பதில். எப்போதாவது சிலரிடம் நடக்கின்ற சம்பவங்களை பொதுமைப்படுத்த முடியாது. தலித் பெண்களைத் தலித் அல்லாத ஆண்கள் கவருவதும், தலித் அல்லாதப் பெண்களைத் தலித் ஆண்கள் கவருவதும் எப்போதும் நடந்து கொண்டிருப்பதுதான். ஆனால் அதன் அளவு வேறுபாடு எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஆனால் இந்த ஆய்வில் அது முழுமையாக தவற விடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
பகுதி நான்கில் நிகழ்கால தலித்துகள் - என்கிற தலைப்பில் உள்ள பகுதி மூன்றாம் பகுதியிலிருந்து பெரிதும் வேறுபடவில்லை. ஒரே தடம், அதுவும் பழைய தடம். சான்றாக.
முந்தைய தலைமுறையில் ஐந்து பேரிடம் மட்டுமே நிலமிருந்தது. இப்போது பெரும்பாலான தலித்துகளிடம் நிலமிருக்கிறது. முதலியார்களிடமிருந்து குத்தகைக்குப் பெற்ற நிலங்கள், சொந்தமாக வாங்கிய நிலங்கள் மற்றும் ஆக்ரமித்த நிலங்கள் என நிலம் அவர்கள் கைக்கு மாறுகிறது.
Dalits have also accessed land through encroachment. Thirunur had more than 1,000 acres of village common land when Zamindari was abolished. They have systematically encroached the common lands, and most of them have over the years acquired either ownership or occupancy rights for their encroached lands..
தலித்துகள் நிலத்தினை ஆக்கிரமிக்கிறார்கள், முதலியார்கள் நிலத்தை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை குறைகிறது. தொடர்ந்து அடுத்த கோட்பாடு இன்னும் கூடுதலாகப் போகிறது. அதில்..
"Dalit youngsters keep away from agricultural work. Even while their parents consider owning and cultivating land as an important indicator of their social status, the dalit youths take special pride in stating that they do not know how to till the land. This is so even in the face of poverty. As Anjalakshi, a 45-year old dalit woman, notes, "Both my younger sons are not going to work. It would be good at least if they work in the field. But they say they will never do agricultural work. We are not able to admonish them."
இதைப் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும், ஒரு பக்கம் தலித்துகளிடம் நிலம் குவிகிறது, ஆனால் தலித் இளைஞர்களுக்கு விவசாயம் செய்வதில் ஆர்வம் இல்லை. விவசாயக் கூலிகளாக முன்னோர்கள் இருந்ததினால் விவசாயத்தை வெறுக்கின்றனர். அது அடிமைத் தொழில் என நம்புகின்றனர். அதனால் தமது பெற்றோரையும் விவசாயம் செய்யக் கூடாது எனத் தடுக்கின்றனர் என்று ஒரு சான்றினைக் காட்டுகிறது ஆய்வு. இப்படி ஒரு சான்றை வைத்து ஒட்டுமொத்த தலித் இளைஞர்களும் விவசாயத்தை கைவிடுகின்றனர் என்பது போன்ற முடிவுக்கு வந்து விடுகிறது ஆய்வு. எப்படியெனில், கட்டுரையின் நெடுகிலும் காண்கிற ஆய்வு முறைமை இதுதான். அதன்படி, “ஒரு கோட்பாடு அதற்கு துணையாக ஒரு சம்பவம், பிறகு பொதுமை”. இந்த ஆய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை எட்டுகிறார்கள்.
கிராமத்தின் பொருளாதார அமைப்பு தொழில் பெருக்கத்தினால் முற்றிலும் மாறிவிடுகிறது. நிலவுடைமையின் உறுதிப்பாடு தளர்கிறது. அது ஆண்மையக் கருத்துநிலையில் பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது. தலித்துகளிடமும், தலித்தல்லாத முதலியார் உள்ளிட்ட பிற சாதிகளிடமும் வெளிப்படையான மாற்றங்களை உருவாக்குகின்றன. புதிய பொருளாதார அமைப்பு தலித் இளைஞர்களுக்கு விடுதலை உணர்வைக் கற்றுத் தருகிறது. தலித் இயக்கங்கள் அவற்றை வளர்த்தெடுக்க உதவுகின்றன. அதன் விளைவாக தலித் இளைஞர்களிடமும் புதிய வகையான ஆண்மைய நிலை உருவாகிறது. அதன்படி அவர்கள் செயல்படுகிறார்கள். அவை எப்படியெல்லாம் வெளிப்படுகின்றன என்பதை விரிவாகப் பேச வேண்டும் என்றால் ஆய்வின் வரிக்கு வரி பேச வேண்டியிருக்கும். எனவே வசதி கருதி சுருக்கமாக அடுக்கிக் கொள்ளலாம்..
அதன்படி.. தலித்துகள் திருடினார்கள். சில தலித் பெண்கள் முதலியார் ஆண்களுடன் உறவுடனிருந்தார்கள். தலித் ஆண்களை முதலியார் பெண்கள் உறவுக்குப் பயன்படுத்தினார்கள். அதற்கு தலித் ஆண்கள் இணங்கினார்கள். தலித் இளைஞர்கள் விவசாயத்தை வெறுக்கிறார்கள். தமது பெற்றோர்களும் விவசாயத்திற்குப் போவதைத் தடுக்கிறார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் அளவிற்குத் திறமையற்றவர்களாகத் தலித் இளைஞர்கள் இருக்கிறார்கள். அதனால் சூப்பர்வைசர்களைத் தாக்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தலித் இளைஞர்கள் வன்முறையினைக் கைக்கொள்கிறார்கள். முதலியார் தெருக்களில் சுற்றி, வன்முறை நடவடிக்கைகளைக் காட்டுவதின் மூலம் தமது ஆண்மைய நிலைபாட்டை நிலைநிறுத்துகின்றனர். அவர்களது வன்முறைகள் வேலைக்கோ அல்லது படிப்பதற்கோ போகும் உயர்சாதி இளம் பெண்களுக்கு எதிராக நடக்கின்றன. அரசியல் வன்முறைகளும் அவர்களால் நடக்கின்றன.
தலித் இளைஞர்களுக்கும் உயர்சாதிக்காரர்களுக்கும் இடையிலான மோதல் தலித் இளைஞர்களின் குடிப்பழக்கத்தினால் நிகழ்கிறது. அவர்கள் குடித்து விட்டால் என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. பெரும்பாலான வன்முறைகள் தலித் இளைஞர்கள் தெருக்களில் சுற்றும்போதும், பெண்களை கிண்டல் செய்யும் போதும் நடக்கின்றன. தலித்துகளிடையே வன்முறை செய்பவருக்கே மதிப்பிருக்கிறது. முந்திய தலைமுறையினரிடமிருந்து தம்மைப் பிரித்துக் காட்டும் விதமாக தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், சட்டை, ஷூ, தொப்பி, கழுத்தில் சங்கிலி, கையில் பிரேஸ்லெட் அல்லது கைக்கடியாரம் என அணிந்து தமது தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆணுக்கு வலுவான உடலும், பெண்ணுக்கு வாயாடும் திறனும் இல்லையென்றால் இந்தக் கிராமத்தில் வாழ முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சண்டை நடந்து கொண்டே இருக்கும்.
தலித் இளைஞர்கள் குடிப்பவர்களாகவும், புகையிலை பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். கெட்ட பழக்கம் உள்ள தலித் இளைஞன்தான் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறான். தலித் இளைஞனுக்குக் குறைந்தபட்சம் ஒரு கெட்ட பழக்கமாவது இருக்க வேண்டும். துணிமணிகளை வாங்க வீட்டிலிருந்தே பணம் வாங்கும் தலித் இளைஞர்களுக்கு எதிர்காலம் பற்றின யோசனை இல்லை, வீடு கட்டவோ நிலம் வாங்கவோ அவர்கள் யோசிப்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாகக் காதலித்து ஓடிப் போவது அதிகரித்துள்ளது. உயர்சாதிப் பெண்களைக் கவர்வது, காதல் வயப்படுத்தி திருமணம் செய்து கொள்வது தலித் ஆண்மையத்திற்கான பெரும் சவாலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்கு உயர்சாதிப் பெண்கள் தலித் இளைஞர்களை உதாசீனப்படுத்துவதும் ஒரு காரணம்.
தலித் இளைஞர்கள் தலித் பெண்களைக் காதலிப்பது குறைவு. தலித் இளைஞர்கள் முதலியார் பெண்களைக் காதலித்து ஓடிப் போனால் அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. தலித் இளைஞர்கள் வேலைக்குப் போக மறுக்கிறார்கள். தங்களை அதிகப்படியாக அழகாக்கிக் கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் பொழுதுபோக்கே பெண்களின் பின்னால் சுற்றுவதுதான். வீட்டில் கஷ்டமிருந்தாலும், உடைகளைக் கடன் வாங்கிப் போட்டு வந்தாலும் அதை மறைத்து விடுவார்கள். பெரியவர்களுக்கு மரியாதை தருவதில்லை. அவர்களின் எதிரே சிகரெட்கூட பிடிக்கிறார்கள். தங்களின் ஆண்மையைக் காட்டுவதற்காக வீட்டில் உள்ள பெண்கள் மீது வன்முறையைக் காட்டுவது போலவே, உயர்சாதிப் பெண்கள் மீதும் அவர்கள் வேலைக்குப் போகும்போது காட்டுகிறார்கள். வீட்டில் உள்ள சகோதரிகளின் சம்பாத்தியத்தில் தமக்கென நல்ல உடைகளை வாங்கி அணிந்து தமது ஆண்மையை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
இப்படிப் போகிறது ஆய்வு. சரி ஆய்வின் முடிவுதான் என்ன..?
Thus, the articulations of new masculine norms by the dalit youths have empowered a section of the dalits with uneven results for the community of dalits as a whole. Simultaneously, the empowerment of the dalit youths itself is problematic. It is a process of empowerment that fails to transcend the limits imposed on it by the masculine identity.
இந்த முடிவினை நியாயப்படுத்த அல்லது கோட்பாட்டுத் தகுதியினைக் கொடுக்க, அமெரிக்க கருப்பர்களுடனான ஒப்பீட்டுடன் ஆய்வுக் கட்டுரை முடிக்கப்படுகிறது. கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அந்தக் கேள்விகள்தான் காலம் தாண்டி கேட்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்விற்கு உருவாக்கி விட்டது.
தலித் இளைஞர்கள் நல்ல உடை உடுத்துகிறார்கள், ஜீன்ஸ் உள்ளிட்ட விலையான உடைகளை உடுத்துகிறார்கள் என்று சுட்டிக் காட்டப்படுவதை நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். சந்தேகிக்கவில்லை. அது சமூக மாற்றத்தின் விளைவாக உருவானது என்கிற முடிவினை வரவேற்கிறேன். ஆனால் எனது கேள்விகள் மிகவும் எளிமையானவை.
தலித்துகள் பற்றி இந்த ஆய்வு கொடுக்கும் பொது சித்திரம் உண்மையானதா?
இந்தப் பொதுச் சித்திரத்தைப் பெறும் தலித்தல்லாத ஒருவர் அந்த கிராமத்தைப் பற்றி என்ன மனநிலைக்கு வருவார்? அவர் பெரும் அச்சித்திரம் அந்த கிராமத்திற்கானதாக மட்டும் இருக்குமா அல்லது அவர் எல்லா தலித் இளைஞர்களும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்திக் கொள்வாரா?
புதிய தலித் இளைஞர்கள் வேலைக்குப் போவதில்லை, வன்முறை, காதலியைக் கவர்தல், பெரியவர்களை மதிக்காதிருத்தல், எப்போதும் சண்டை, குடி, புகையிலை இவை மட்டும்தான் அடையாளமா?
அந்தக் கிராமத்தில் ஒரு படித்த தலித் இளைஞன் கூடவா இல்லை?
தனியார் துறையில் வேலைக்குப் போகும் சிலரைத் தவிர அரசு வேலைக்குப் போகும் தலித்துகள் யாரும் இல்லையா?
தலித் இளைஞர்களில் பண்பானவர்களைக் காட்டும் ஒரு சான்று கூடவா கிடைக்கவில்லை?
வியப்பாக இருக்கிறது இந்த ஆய்வு. ஆய்வின் இந்தப் போக்கினைத் திசைதிருப்பி நல்ல தடத்தில் உருவாக்கும் வாய்ப்பை ஒருவர் உருவாக்கியிருந்தார் அதைக்கூட ஆய்வாளர்கள் கவனிக்காமல் விட்டது எப்படி? 30 வயது மதிக்கத்தக்க செட்டியார் பின்வருமாறு சொல்கிறார் என ஆய்வு பதிவு செய்திருக்கிறது. அதில்..
The present- day youngsters like to eat in the shop. Only they have money and education now...In the colony everybody in the family would go for work. The reason is, they understand the state of affairs in the country today. Only if we have some money, we can be comfortable. They wear good pants and shirts. Their fashion is very much like that in the town. They build now pucca houses with stones. They have unity, Here, people [upper castes] 'are jealous about each other and are vain glorious (varattu gouravam). They do not understand the changing times.
என்ன சொல்கிறார் இந்த மனிதர்? காலனியில் உள்ள எல்லா குடும்பத்திலும் வேலைக்குப் போகிறார்கள். தலித்துகள் படிப்பு மற்றும் பணத்தை மட்டுமே கைக்கொள்கிறார்கள். உலக நடப்புகளைப் புரிந்து கொண்டு தம்மை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நகரத்தில் உள்ளவர்களைப் போல நல்ல உடை அணிகிறார்கள். ஆனால் உயர்சாதிக்காரர்கள் பொறாமையில் இருந்து கொண்டு பழம்பெருமை பேசித் திரிகிறார்கள் என்று ஆதங்கப்பட்டாரே.. அப்போதே ஆய்வு நேர்பாதைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் முற்றிலும் திசை திருப்பி தலித்துகள் மீதும் வைக்கப்படும் பொதுக்கருத்திற்குப் பலியாகி ஆய்வு தனது தரத்தினை முற்றிலும் இழந்து விட்டது.
இப்போது இந்த ஆய்விற்குத் தொடர்புடைய. எஸ்.ஆனந்தி, ஜெ.ஜெயரஞ்சன், ராஜன் கிருஷ்ணன் (குறை) மற்றும் வழிநடத்திய எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆகியோரை எப்படி எதிர்கொள்வது? பேசப்படும் நாடகக் காதலுக்கு மூலவிதை இந்த ஆய்வுதான் என்று ஜெயமோகன் சொல்வதை ஏற்றுக் கொள்வதா? அல்லது இந்த ஆய்வே தவறு என்று ஏற்பதின் மூலம் வரலாற்றுத் தவறினை சரிசெய்வதா?
என்னுடைய நிலைப்பாடு இதுதான். இந்தக் கட்டுரையின் தத்துவம் சார்ந்த அடிப்படைக்குள் நுழைய விரும்பவில்லை. ஏனென்றால் அதன் அடிப்படையே தவறாகக் கட்டப்பட்ட கருதுகோளின் மீது ஆய்வு செலுத்தப்பட்டது என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விட்டேன். ஆய்வுக் கட்டுரை மூவரால் தனித்தனியாக எழுதப்பட்டாலும் அது உருவாக்கிய பொது முடிவிற்கு மூவரும் பொறுப்பு என்பதைப் போலவே, வழி நடத்திய பாண்டியனும் பொறுப்பு. அதிலிருந்து விலக்களிக்க முடியாது என்பதே எனது நிலைப்பாடு. அதே நேரத்தில் ஜெயமோகன் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ராமதாஸ் செய்த கொடும் பாவத்தினை இவர்கள் மீது சுமத்த நான் விரும்பவில்லை. ஜெயமோகனின் இந்த இலக்கிய அரசியலுக்குத் தலித்துகள் பகடைக்காய்களாக மாற்றப்படுவதை நான் உறுதியாக எதிர்ப்பேன்.
தோழர் ராஜன்குறை, இப்போது நீங்கள் உள்ளே வரலாம். உங்கள் தரப்பினை விளக்கலாம். இந்த ஆய்வினைச் செய்த அத்தனை பேர்களின் மீதும் எனக்கு தனிப்பட்ட காழ்ப்புகள் ஏதும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதே நேரத்தில் தலித் மக்கள் மீதான உங்களனைவரின் பரிவையும் நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் ஒரு விசயத்தைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். அதை புதிய கோடாங்கியிலும் எழுதியிருக்கிறேன். தலித் தொடர்பான ஆய்வுகளில் தலித் அல்லாதார் தொடர்ந்து அசட்டையாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் அது. அந்த அசட்டை ஏன் நடக்கிறது என்பதை எத்தனை காலம் கேள்வியின்றி கடந்து போவது? தலித் தொடர்பான ஆய்வுகள் மூலமாக தலித்தல்லாதார் அறிஞர் நிலையினை அடைவது எளிது என்பதை அப்போதே சுட்டிக் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் இந்த சாதிய சமூகம் அதற்காகவே காத்திருந்து தலித்தல்லாதாரை அறிஞராக வரித்துக் கொண்டு பெருமிதப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட தலித்துகள் கருத்துநிலையானது மறுத்துப் பேசப்படுவதற்கான வாய்ப்பின்றி காட்டில் கொல்லப்பட்டவனின் பிணம்போல அழுகிக் காய்ந்து வடுவாகி விடுகிறது.
அதனால்தான் இப்போது இந்த மறுகூராய்வு. ஓர் ஆய்வு என்கிற அடிப்படையில் பார்க்கின்ற போது எந்தவிதமான அறிவாண்மையும் இதில் வெளிப்படவில்லை. வெறும் அசட்டுத்தனமான கட்டுரை என்று நான் கடந்து போக விரும்பவில்லை. உங்கள் தரப்பை நீங்கள் நிலைநிறுத்திக் கொள்ளலாம். காலம் அதிகமாகி விட்டதால் உங்கள் அனைவரின் அறிவுச் செயல்பாட்டிலும் பெரும் மாறுதல்கள் உருவாகியிருக்கும். சில விசயங்களில் நீங்களே உங்களுக்கு எதிராகக்கூட நின்று உங்களை வென்றிருக்கலாம். இதெல்லாம் நடப்பதுதானே. எனவே மறைந்த பாண்டியனைத் தவிர நீங்களேகூட இந்த ஆய்வினைப் படித்துப் பார்த்து ஒரு தீர்ப்பை உங்களாலே சொல்ல முடியும். அதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறேன். வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் தலித்துகளுக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கை 'இந்துத்துவம் நம் எதிரே இருக்கிறது பார்த்து செயல்படுங்கள்' என்று குறிப்பிடப்படும். அதை தோழர்.ராஜன்குறை அவர்களும் எனக்கு சொல்லியிருக்கிறார். அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அந்தத் தளத்தில் நாம் அனைவரும் சேர்ந்து நின்று ஒருசேர எதிர்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்களுக்கு அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வருமாயின் உங்கள் பக்கம் நின்று உங்களனைவரின் தளத்தை வலுப்படுத்துவேன். இதற்குப் பிறகும். அதற்காக ஒரு ஆய்வின் மூலம் இழைக்கப்பட்டிருக்கின்ற மோசமான அநீதியினை கடந்துவிட வேண்டும் என்று நம்ப மாட்டீர்கள் அல்லவா?
அதுமட்டுமின்றி இந்த சச்சரவு ஏன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்றால் இந்தக் கட்டுரையினை துண்டு, துண்டாகப் படித்த இடைநிலைச் சாதியின் மனநோயாளிகள் தலித்துகள் மீது இந்த ஆய்வு கட்டமைத்திருக்கும் பொது அடையாளம் உண்மைதானே என்று பரப்புவதற்கு உதவியாக மாறியுள்ளது என்பதை இந்நேரம் நீங்கள் அறிந்திருக்கலாம். அதேவேளை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நம்பகத்தன்மையுள்ள ஒரு ஆய்விதழில் வெளிவந்ததால் சர்வதேசத் தளத்தில் என்னவிதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே சிக்கலை அவிழ்க்க வேண்டியது அவசியம் என்று ஆய்வுக் குழுவினர் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த ஆய்வு அடிப்படையற்றது என்பதையும் மீளவும் வலியுறுத்துகிறேன்.
நிறைவாக, 'இளவரசனின் ரத்தத்தினை உங்கள் மீது தெளித்ததற்காக’ எனது வருத்தத்தை தெரிவித்திருந்தேன். ஆனால் அதைத் துடைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
- கௌதம சன்னா