மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் உள்ள ஊர் சாப்டூர் ஆகும். இவ்வூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஜமீன்தார்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்த ஊர் பண்டைக் காலத்தில் ‘மருதூர்’ என அழைக்கப் பெற்றுள்ளது.

பண்டைய ஊர்ப்பெயர்கள் இயற்கைப் பெயர்களாக இருந்தன. இயற்கையை உணர்ந்து நேசித்து வாழ்ந்த சமூகத்தில் ஊர்ப்பெயர்களும் இயற்கைத் தன்மையோடு இருந்தன. சமயங்கள் வருகை, வேற்றுமொழி பேசுவோர் வருகை போன்றவற்றாலும் ஊர்ப்பெயர்கள் மாற்றம் பெற்றன. இந்த அடிப்படையில் வேற்றுமொழி பேசியோர் (தெலுங்கு) ஆட்சியாளர்களாகவும் இருந்ததால் ‘மருதூர்’ எனும் ஆதிவடிவ ஊர்ப்பெயர், சாப்டூர் என மாறிய சமூகச் சூழலை மீட்டெடுக்க இயலும் எனும் கருதுகோளை இக்கட்டுரை மையமாகக் கொண்டுள்ளது.

முன் ஆய்வுகள்

பா.அ.ம. மணிமாறன் அவர்களால் ‘மதுரை மாவட்ட ஊர்ப்பெயர்கள்’ எனும் தலைப்பிலான முனைவர்பட்ட ஆய்வு 1982 - ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பெற்றுள்ளது. பாளையக்காரர்களின் ஆட்சியால் ஊர்ப்பெயர்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளது எனச் சுட்டியுள்ளாரே தவிர மூலஊர்ப்பெயர், அப்பெயர் மாற்றம் பெற்றதற்கான காரணம் ஆகியவற்றை ஆய்ந்தறியவில்லை.

சோ.முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் ‘தென்மாவட்ட ஊர்ப்பெயராய்வு’ எனும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் நிதி உதவியோடு 2010 - 2012 ஆம் ஆண்டு பெருந்திட்டப்பணியாக ஆய்வு மேற்கொண்டார். இவ்ஆய்வு சாப்டூர் தெலுங்கு மொழிச் சொல்லெனச் சுட்டினாலும் மூலவடிவப் பெயரையோ ஆவணங்களையோ, பெயர் மாற்றம் பெற்றதற்கான ஆட்சிச் சூழலையோ சுட்டவில்லை. எனவே, இரண்டு முன் ஆய்வுகள் இவ்வூர் சார்ந்து நிகழ்ந்திருப்பினும் இவ்ஆய்வுகளின் நீட்சியாக சமூகப் பின்புலச்சூழல் தன்மையில் இக்கட்டுரை அமைய உள்ளது.jameen buildingசாப்டூர் ஜமீன்தார்

கர்நாடக, ஆந்திர எல்லையில் விஜயநகர ஆட்சியின் கீழ் வாழ்ந்துவந்த ராஜகம்பளத்தார் என்னும் இனக்குழு மக்கள் தெலுங்கு மரபு வழியைச் சார்ந்தவர்கள். இந்த ராஜகம்பளத்தார் எனப்படும் இனக்குழு மக்கள் கி.பி 15 ஆம் நூற்றாண்டில் இசுலாமிய மன்னர் ஆதிக்கத்திலிருந்து விலகித் தென் இந்தியாவை நோக்கி நகர்ந்து மதுரையைச் சுற்றிக் குடியேறினார்கள். விசுவநாத நாயக்கர் அரண்மனையில் சிறந்த போர் வீரர்களாகவும் பொறுப்பு உள்ள பல பணிகளில் ஈடுபட்டுச் சிறந்த திறன் வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்தனர். இவர்களின் பணிச் செம்மையைக் கண்ட விசுவநாத நாயக்கர், இந்த ராஜகம்பளத்தார் என்னும் இனக்குழு மக்களை குடிசேரி பாளையக்காரராக நியமித்தார். இதன் காரணமாக, விசுவநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இன்றைய மதுரை மாவட்டத்தில் குடிசேரி என்ற இடத்தில் புலம்பெயர்ந்து வசித்தார்கள்.

72 பாளையங்களில் ஒன்றாகக் குடிசேரியும் திகழ்ந்தது. குடிசேரியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். பின்னர், குடிசேரிக்கு அருகில் உள்ள சாப்டூருக்கு புலம்பெயர்ந்து ஆட்சிசெய்யத் தொடங்கினார்கள். ‘விசுவநாத நாயக்க மன்னர் காலத்தில் (கி.பி.1529-1564) பாளையக்காரர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1801) ஜமீன் ஆட்சி எனப் பெயர் மாற்றி அழைக்கப்பெற்றது’. பாளையக்காரர் ஆட்சி ஏற்பட்டதற்கான காரணத்தை கால்டுவெல் கூறிய கருத்தாக வர்க்கீஸ் ஜெயராஜ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார் (2020, ப.9).” விசுவநாத நாயக்கர் ஆட்சி அமைத்த காலத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஆட்சியின் ஒழுங்கற்ற நிலை தொடர்ந்தது. விவசாயம் பல வழிகளிலும் தடைபட்டு, சாகுபடி நிலங்களில் காடுகள் மண்டின. இது, பல வழிகளிலும் மக்களின் பாதுகாப்பிற்கும், நலவாழ்வுக்கும் ஆபத்தாய் அமைந்தது. மதுரை­யிலிருந்த மத்திய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. சக்தி வாய்ந்த நிர்வாகத்தை அளிக்க நிலையான அரசு தேவை என அரசர் உணர்ந்தார். எனவே, பாளையக்காரர் முறையைக் கொண்டுவந்தார்” (1934, பக். 8,9). இக்கருத்து பாளையக்காரர் தோன்றியதற்கான பின்புலத்தை அறியத் துணைநிற்கின்றது.

மருதூர்: இலக்கிய ஆவணச் சான்றுகள்

சாப்டூரின் ஆதிவடிவ ஊர் மருதூர் ஆகும். ஜமீன்தார்கள் காலத்தில் எழுதப்பட்ட ‘மருதூர்த் தாலாட்டு’ ‘பூதரவிலாசம்’ ஆகிய இலக்கிய நூல்கள் இவ்ஊரின் தொன்மையை நிறுவுகின்றன. 1901 ஆம் ஆண்டு ஜமீன்தாருக்கு வாரிசு தோன்றிய சூழலில் இயற்றப்பட்ட நூல் மருதூர்த் தாலாட்டு ஆகும். இந்நூலின் முதல் பக்கத்தில் ‘சாப்டூர் என வழங்கும் மருதூர்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. 1901 ஆம் ஆண்டு சாப்டூர் என்றும் மருதூர் என்றும் சுட்டப்பட்ட இரு வழக்குப் பெயர் நிலை இருந்துள்ளது.

1901 ஆம் ஆண்டு சதுரகிரிக்கட்டாரி ராமசாமி காமைய மகராஜா அவர்கள் சாப்டூர் ஜமீன்தாராக ஆட்சி செய்துள்ளார். இவருக்குப் பிறந்த மைந்தன் மீது பாடப்பட்ட நூலே மருதூர்த் தாலாட்டு என்பதை ‘திருப்புதல்வன் கட்டாரி நாகய காமராஜேந்திர ராமசாமிப் பாண்டியன் மீது மேற்படி சமஸ்தானத் தமிழ்வித்துவான் ச.சிதம்பரப் புலவரால் இயற்றப்பட்டது’ (1901, ப.1) என்று நூல் பதிவு குறிப்பிடுகின்றது. மருதூர்த் தாலாட்டு எனும் நூற்பெயரே ‘மருதூர்’ எனும் மூல ஊர்ப் பெயரை நிறுவி நிற்கின்றது.

சிறப்புக் கவிகளில் மருதூர்

மருதூர்த் தாலாட்டு எனும் இந்நூலுக்கு 1901 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த ஏழு ஆண்பாற் புலவர்களும் ஒரு பெண்பாற் புலவரும் சிறப்புக்கவிகள் படைத்து வாழ்த்தியுள்ளனர். இச்சிறப்புக் கவிகளில் ‘மருதூர்’ எனும் பெயரே இடம்பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. சென்னை அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார், சுதேசமித்தரன் உதவி பத்திராதிபர், முத்தூர் அ.சங்கரலிங்கம் பிள்ளை, வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக்கரவர்கள் மாணாக்கராகிய பல்லாவரம் வித்துவான் அப்புசெட்டியார், அஷ்டாவதானம் பூவை கலியாண சுந்தர முதலியார் அவர்கள் மாணாக்கர்களில் ஒருவராகிய நின்றை தங்கவேலு முதலியார், ஸ்ரீவில்லிபுத்தூர் கஸ்பா ஐயம்பட்டி பொன்னு செட்டியர், திரிசிரபுரம் இராஜண்ணநாயுடு, முல்லை நகர் ஆதீன வித்வான் மருதநத்தம் சின்னசாமி ஆசாரி, சென்னை நகர் பண்டிதை ஸ்ரீமதி மனோன்மணியம்மாள் ஆகியோர் சிறப்புக் கவிகளில் முறையே மருதூர் குறிக்கப்பட்டுள்ளது.

‘தேமேவு மலர்விமலை நனிவிழையும் வளமருதூர்’               (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.1)

‘திருமருதம் மிருபுறஞ்சிறையொரு மருதூர்’ (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.1)

‘வள்ளவாய் மரைத்தடஞ்சூழ் துடவைசெறி மாமதுரை மருதூராளும்’ (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.3)

‘வீசுபுகழ் தமிழ் மருதூர்ப் பதி...’ (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.3)

‘மாமருதூருங் குயிலுங் கிள்ளைகளும்...’ (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.4)

‘கார்மருவு தண்டலைசோ; மருதூர்...’ (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.5)

‘பொரு விறமிழ் வித்வ குலப்பயிர் தழைக்க மருதூரில்’ (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.7)

‘தேத்துய் யானீனங்கஞறு மருதூர்ச் சக்ரேஸ்வரன்’       (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.8)

வளமருதூர், மருதூர், மாமதுரை மருதூர், தமிழ் மருதூர், மாமருதூர், தண்டலைசோ மருதூர் போன்ற அடைத்தொடர்கள் மருதூரை இயற்கை, நிலவியல், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கிக் காண இடம் தருகின்றன. சிறப்புக் கவியைத் தமிழ்நாட்டின் பல பகுதி சார்ந்த புலவர்கள் இயற்றியுள்ளனர். இப்புலவர்களின் பாக்கள் சாப்டூரை, ‘மருதூர்’ என்றே சுட்டுகின்றன. எனவே, தமிழகமெங்கும் ‘மருதூர்’ என்ற பெயரே பல்லோர் அறிந்த பெயராக இருந்தமை புலனாகின்றது.

வாழ்த்துக் கவியிலும் காப்புச் செய்யுளிலும் மருதூர்

சாப்டூர் சமஸ்தானப் புலவரும் மருதூர்த் தாலாட்டு நூலாசிரியருமான ச.சிதம்பரப்புலவர் தன் வாழ்த்துக் கவியிலும் காப்புச் செய்யுளிலும் மருதூரைச் சுட்டி வாழ்த்துவதைக் காண முடிகின்றது.

‘செங்க மலமலர்மேவுந் திருவெந்நாளுஞ்

               செழிக்கவுறை மருதூரான் ராசராச’ (மருதூர்த் தாலாட்டு, சிறப்புக் கவிகள், ப.9)

 ‘திருவெந் நாளுஞ் செழிக்கவுறையு நன்

               மருதூராளு மன்னன் ராமசாமி’ (மருதூர்த் தாலாட்டு, காப்புச் செய்யுள், ப.1)

மருத நிலப் பின்புலத்தில் மருதூர்

வயலும் வயல்சார் பகுதியும் மருதம் என வரையறுக்கப்பெற்றுள்ளது. மருதூர், மருதநிலம் சார்ந்த ஊர் என்பதைப் பாடல்பதிவு குறிப்பிடுகின்றது. சதுரகிரிமலை அடிவாரத்தை ஒட்டிய பகுதியாக மருதூர் திகழ்வதால் மலைவாழ் விலங்கும் பறவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோலைகள் நிறைந்த ஊராகவும் மருதூர் சுட்டப் பெற்றுள்ளது.

‘மருதநில முறையும்

               வானோர்களும் புகழு

மருதூரை யாளு மகா

மன்னனெனும் வாசவனோ’                    (மருதூர்த் தாலாட்டு, ப.4)

‘திருமருதம் மிகுபுநஞ் சிறையொடு மருதூர்’       (மருதூர்த் தாலாட்டு, ப.2)

               வாழ்த்துத் தண்பூங் காமருதூர்’ (மருதூர்த் தாலாட்டு, ப.4)

‘கழனி வருக்கைக்

               கனிபிடுங்கி வான ரங்கன்

முழுவெனச் சீராக

முழக்கு மருதூர ரசரே’                                (மருதூர்த் தாலாட்டு, ப.15)

மருதூர், மருதநிலத் தன்மை பெற்ற ஊர் என்பதை ‘மருதநிலமுறையும்’ ‘திருமருதம்’ போன்ற தொடர்கள் விளக்கி நிற்கின்றன. கிளி, குரங்கு போன்றவை மலை அருகிலுள்ள ஊரான மருதம் சார்ந்தும் பதிவு பெற்றுள்ளமை தவிர்க்க இயலாததாகும். மருத மரங்களும் நிறைந்த ஊர் மருதூர் எனக் கருத இடந்தருகின்றது. மருத மரத்தின் சிறப்புக்கருதி ‘திருமருது’ எனச் சுட்டும் வழக்கம் இருந்துள்ளதை (அகம்.36) குறிப்பிடுகின்றது. இதன் தொடர்ச்சியை மருதூர்த் தாலாட்டு நூல் பதிவிலும் காண முடிகின்றது. எனவே, மருதநிலமும் மருதநில மரங்களும் நிறைந்த ஊர் ‘மருதூர்’ என இயற்கை சார்ந்தும் ஊர்ப்பெயரை ஆய்ந்தறிய முடிகின்றது. மருதூர், திருவிடைமருதூர் போன்ற ஊர்ப்பெயர்கள் பண்டைய இயற்கைப் பெயர் மரபு சார்ந்து தமிழகத்தில் இன்றும் வழக்கில் உள்ளன.

பூதரவிலாசம் நூலில் மருதூர்

1934 ஆம் ஆண்டு சாப்டூர் ஜமீன் காலத்திய சிற்றிலக்கிய நூல், ‘பூதரவிலாசம்’ ஆகும். இந்நூல் குறித்து ‘சாப்டூரென்று பெயர் விளங்கிய மருதூர் ஜமீந்தார் மாட்சிமைத் தங்கிய நாயகசாமிக் காமய நாயக்கரவர்கள் மீது திருமங்கலம் தாலுகா பேரையூர் சமஸ்தான வித்துவான் ஸோடஸாவதானம் பொன்னுகூடக் கவிராயர் அவர்கள் இயற்றிய பூதரவிலாசம்’ (1934, ப.1) என்ற குறிப்பு நூலின்

முன்பகுதியில் அமைந்துள்ளது. இந்நூலில் நிலவியல் அமைப்பு சார்ந்த பதிவின் வழி மருதூர் சுட்டப் பெற்றுள்ளது.

‘.....பெரிய கவுண்டினிய

நதியும் வளஞ்சோ முட்டக நன்னாடு மருதூரும்’ (மருதூர்த் தாலாட்டு, ப.20)'

சதுரகிரி மலையடிவார ஊர் என்பதால் அருவி­யிலிருந்து நீர் வீழ்ந்து ஓடும் சிற்றாரும் பாயும் ஊராக மருதூர் இன்றும் திகழ்கின்றது. ‘முட்டகநாடு’ எனும் நாட்டுப் பிரிவிற்குள் குறிக்கப் பெற்றதை 19ஆம் நூற்றாண்டு ‘பூதரவிலாசம்’ இலக்கியம் சுட்டுகின்றது. இவ் ஊரைச் சார்ந்த கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கவில்லை. இருப்பினும் இவ்ஊருக்கு அருகே 5 கி.மீ தொலைவில் அமைந்த ஆயிரம் ஆண்டுப் பழமை மிக்க திருமாணிக்கம் தென்முட்ட நாடு எனக் கல்வெட்டில் சுட்டப்பெற்றுள்ளதை, “ஸ்ரீபாண்டி மண்டலத்து மதுரை உதைய வளநாட்டுத் தென்முட்ட நாட்டு திருமணிக்கயத்து உடையார்..." (2008, ப.2) என்ற சான்று நிறுவுகின்றது. எனவே, மருதூரும் பழமையான ஊராக இருந்திருத்தல் வேண்டும் எனக் கருத முடிகின்றது.

யாப்புப் பாடலில் (இரதபந்த சித்திர வெண்பா) மருதூர்

சாப்டூர் ஜமீன்தார்களின் வாரிசுகள் தங்கள் முன்னோர் மீது பாடப்பட்ட யாப்புப் பாடலைத் தந்தார்கள். இந்த யாப்புப் பாடல் இரதபந்த சித்திர வெண்பா வடிவில் படைக்கப்பட்டுள்ளது. இதனைப் போடிநாயக்கனூரைச் சார்ந்த ஜோதிடர் கு.வெள்ளையாண்டி பிள்ளை வித்வான் இயற்றியுள்ளார். ஒரு பக்கத்திலான இப்பாடல் போடிநாயக்கனூர் ஹக்கீம் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டுள்ளது. மாட்சிமை வாய்ந்த சாப்டூர் ஜமீன்தார், சதுரகிரி காமயபூபதி அவர்கள் மீது இயற்றியது என்ற குறிப்பின் வழி சித்திரவெண்பா பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனை அறிய இயலுகின்றது. ஆனால், இவ்வெண்பா எழுதப்பட்ட ஆண்டு குறித்த தகவல் இல்லை.

1901, 1934 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட இலக்கிய ஆவணங்களில் சாப்டூர், மருதூர் என இருபெயர் இடப்பட்டிருந்த நிலையைப் பார்க்க முடிந்தது. ஆனால், இந்தத் தனிப்பாடலில் மருதூர் எனும் பெயர் இன்றிச் சாப்டூர் எனும் ஒற்றைப் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 1934 ஆம் ஆண்டின் பின்பு எழுந்த பாடலாக யாப்புப் பாடலைக் கருத முடிகின்றது. 1934 ஆம் ஆண்டிற்குப் பின்பே மருதூர், சாப்டூர் என நிலைபெற்றிருக்க வேண்டுமெனக் கருதவும் இச்சான்றுகள் துணை நிற்கின்றன.

மருதூர் மறைவிற்கான காரணம்

தெலுங்கு மொழி பேசும் கம்பளத்தார் குல ஜமீன்கள் பாளையக்காரர்களாக குடிசேரி, பழையூர் (இராமசாமி முடங்கி) ஆகிய ஊர்களுக்கு இடம்பெயர்ந்தும் நிறைவாகச் சாப்டூரில் தங்கி, வாழத் தொடங்கினர்.

“‘சாப்பா’ எனும் தெலுங்குமொழிச் சொல்லுக்குப் பாய் என்பது பொருளாகும். ஊத்து என்பது நீரூற்றைக் குறிக்கும். ‘நீரூற்று இருந்த இடத்தில் தங்கள் கம்பள இனக்குழு மூதாதையர் பாய்விரித்துத் தங்கிய இடம், ‘சாப்பளூத்து’ என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் சாப்டூர் என மாறியது" (ராம்குமார், ஜமீன்தார் தலைமுறையினர், சாப்டூர், பேட்டிநாள்: 18.10.2021) எனத் தெரிவிக்கின்றார். ‘சாப்பா’ எனும் தெலுங்குச் சொல்லும் ‘ஊர்’ எனும் தமிழ்ச் சொல்லும் கலந்து நிற்கும் மொழிக் கலப்புப் பெயராகவும் இன்றைய ஆட்சி ஆவணப் பெயராகவும் ‘சாப்டூர்’ வழக்குப் பயன்பாட்டில் இருக்கின்றது.

“பண்டைய காலத்தில் இருந்து தமிழகத்தில் வாழும் நாயக்கர் இன மக்கள் பாயினைச் ‘சாவ’ எனச் சுட்டுகின்றனர்” என்றும் (நா. சுலோசனா, உதவிப் பேராசிரியர், மொழியியல் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. பேட்டி நாள்: 31.10.2021), "ஆந்திராவில் வாழ்ந்துவரும் தெலுங்கு இன மக்கள் பாயினைச் ‘சாப்பா’ எனச் சுட்டுகின்றனர்” என்றும் (கே. விஜயபாஸ்கர நாயுடு, இந்தித் துறைத் தலைவர், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. பேட்டி நாள்: 18.10.2021) தெரிவித்தனர். இக்கருத்துக்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தெலுங்கு இன மக்களின் மொழியில் சாப்டூர் எனும் ஊர்ப்பெயர் உருவாகவில்லை; தெலுங்கு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த கம்பளத்து நாயக்கர்களின் தெலுங்கு மொழியில் சாப்டூர் எனும் ஊர்ப்பெயர் உருவாகியுள்ளது என்பதை ஆய்வு உறுதிப்படுத்துகின்றது.

முடிவுரை

இயற்கை நெறிக் காலத்தில் இயற்கையான நில அமைப்போடும் இயற்கை சார்ந்த தாவரங்களோடும் பொருந்தி அமைந்த பெயராக ‘மருதூர்’ இருந்துள்ளது. நாயக்க மன்னர்கள் காலத்தில் ஊர்கள் பாளையங்களாகப் பகுக்கப்பட்டு நாயக்கர், வன்னியர், மறவர் போன்ற இனத்தார் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆளத் தலைப்பட்டதும் தெலுங்குமொழி பேசிய நாயக்க ஆட்சியாளர்களால், ஊர்ப்பெயர்கள் மொழி மாற்றம் பெற்று வேறொரு பெயராக மருவி நிற்கும் நிலையையும் வரலாற்றுச் சான்றாய் நிற்கும் சாப்டூர் வழி ஆய்ந்தறிய முடிகின்றது.

கி.பி 1901 ஆம் ஆண்டு முதல் கி.பி 1934 ஆம் ஆண்டு வரை மருதூர், சாப்டூர் என இருபெயர் சுட்டு வழக்கு நிலை வழக்கில் இருந்ததைத் தெளிய முடிகின்றது. ஆனால், இலக்கியப் பாடல்களில் 1934 ஆம் ஆண்டு வரை சாப்டூர் பெயர் சுட்டாது மருதூர் என்றே சுட்டியுள்ளனர். மருதூரின் அருகே உள்ளே ஆயிரம் ஆண்டுப் பழமை மிக்க ஊர் திருமணிக்கயம், தென்முட்ட நாடு எனக் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளது. மருதூர், இலக்கியப் பதிவில் முட்டகநாடு எனச் சுட்டப்பட்டுள்ளது. மருதூருக்கு அண்மையில் உள்ள திருமணிக்கய நாட்டுப் பிரிவே மருதூருக்கும் குறிக்கப்படுவதால் இரு ஊர்களையும் தொன்மையான ஊர்களாகக் கருதுவதற்கும் ஆய்வு இடமளிக்கின்றது.

இரதசித்திர வெண்பா யாப்பிலான பாடல் பாடப்பெற்ற பாட்டுடைத் தலைவனை மருதூரின்றி சாப்டூர் பெயரால் மட்டும் குறித்துள்ளனர். இச்சூழலைக் கூர்ந்தாயும் பொழுது, மருதூர் வழக்கிலிருந்து ஒழிந்திருக்க வேண்டுமென்றும், ‘சாப்டூர்’ எனும் புது ஊர்ப் பெயராக்கம் ஆவணப் பதிவிற்கான ஏற்பினைப் பெற்றிருக்க வேண்டுமென்றும் கருத ஆய்வு இடந்தருகின்றது.

ஆட்சி அதிகாரம் மொழியின் வழியாகவும் வெளிப்பட்டு இருப்பதைச் ‘சாப்டூர்’ புலப்படுத்துகின்றது. தெலுங்குமொழி ஆட்சியாளர்கள் இடம்பெயர்ந்து, வாழிடச்சூழலை உருவாக்கிய தன்மையை விளக்கும் விதமாக சாப்டூர் எனும் பெயரை நோக்க முடிகின்றது. சாப்பா எனும் தெலுங்குச் சொல்லும் ஊர் எனும் தமிழ்ச் சொல்லும் இணைந்த மொழிக்கலப்பு ஊர்ப் பெயராக சாப்டூர் இருப்பதும் புலனாகின்றது

வெவ்வேறு மொழிசார் இனக்குழு மக்கள் கலந்து வாழ வேண்டிய சூழலில் ஊர்ப் பெயர்களும் மொழிக்கலப்பிற்கு ஆளாகும் என்பதற்குச் ‘சாப்டூர்’ வரலாற்றுச் சான்றாய் நிற்கின்றது.

துணைநூற் பட்டியல்

சிதம்பரப்புலவர், ச. (1901). மருதூர்த் தாலாட்டு (முதற்பதிப்பு). சென்னை: பண்டித மித்திரா யந்திர சாலை.

பொன்னுங்கூடக் கவிராயர்,(1934). பூதர விலாசம் (முதற்பதிப்பு). மதுரை : ஹரிஸமய திவாகர முத்திரா சாலை.

வர்க்கீஸ் ஜெயராஜ், எஸ். (மூல நூலாசிரியர்), யூசுப்ராஜா (மொழிபெயர்ப்பாசிரியர்). (2020). தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை, மதுரை மாவட்டம் (இரண்டாம் பதிப்பு). சென்னை: பாவை பப்ளிகேஷன்ஸ்.

Tirumalai, R. (2003). The Pandyan Townships (First Edition). Chennai: Department of Archaeology.

- முனைவர் ந.அருள்மொழி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.

Pin It