நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உணவு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மையில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட்கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலிருந்து வெளிப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவையன்றோ!
நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவையை கட்டுப்படுத்தும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உறுப்பாகும். உடலிற்கு சத்துத்தேவை ஏற்படும்பொழுது இப் பகுதி அதை உணர்ந்து வயிற்றிற்குச் செல்லும் நரம்புகளை தூண்டிவிடுகின்றன. உடனே நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. நாமும் உணவை நாடுகிறோம். எல்லா உயிரிகளுக்கும் பொதுவான ஒரு நிகழ்வாக உள்ளதே இந்த நிலைதான். பொதுவாக ‘பசி’ என்ற நிலை இல்லாவிடில் நாம் உண்ண வேண்டும் என்றே நினைக்க மாட்டோம்’. ‘பசித்தபின் புசி’ என்ற பழமொழியும் நாமறிவோம். பொதுவாக ‘பசி உணர்வு’ என்பது மகிழ்ச்சியான உணர்வல்ல.
கீழ்முகுளத்தால் உடல் சோர்வு உணரப்படும் பொழுது, மேல்வயிற்றிற்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இந்த நரம்புகள் தூண்டுதல், மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகியவற்றை அதிகரிப்பதுடன், எரிச்சல், கோபம், ஆத்திரம் போன்றவற்றையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் தலைவலி, குமட்டல் போன்றவையும் ஏற்படும். வயிறுபுரட்டல், மேல் வயிற்று வலி போன்றவையும் கூட சிலருக்கு உண்டாகும். இந்த நரம்புத் தூண்டுதலால் வயிறு சுருங்கி விரியும். இதனால் வயிற்றுப் பகுதி மட்டுமல்லாது, வயிற்று குடல் இணைப்புப் பகுதியும் சுருங்கி விரியும். இதை ‘பசி சுருங்கல்’ என்று அழைப்பர். இது நிகழும் போழுது பசி உணர்வு மேலும் அதிகப்படும்.
சற்று நேரத்தில் தானாகவே இந்த சுருங்கல்கள் அடங்கிவிடும். கான்சர் போன்ற நோய்களில் இந்த சுருங்கல்கள் முழுமையாக நிகழாது. இதனால் பசி உண்டாகாது. சிலவகை நோய்களில் ‘பசியின்மை’ ஏற்படுவது மட்டுமன்றி உணவின் மீது வெறுப்பும் கூட உண்டாகும். இவ்வகை நோயாளிகள் உணவு எடுத்துக்கொள்ள மிகவும் தொல்லைப்படுவர். ஆக பசியுணர்வு நம் உடலின் ஓர் அவசியத் தேவையெனில் மிகையாகாது.
உண்ணும் விருப்பம்: பசி உணர்வு ஒரு தொல்லையான உணர்வெனில் உண்ணும் விருப்பம் ஒரு மகிழ்ச்சியான உணர்வாகும். பசி உணர்வு வயிற்றில் ஏற்படும் என்றால் உண்ணும் விருப்ப உணர்வு வாயிலும், அன்னத்திலும் தூண்டப்படும் ஓர் உணர்வாகும். சில நேரங்களில் இந்த விருப்ப உணர்வு பசியை தூண்டும் ஓர் உணர்வாகவும் இருக்கும். “அந்த உணவை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது” என்பது நாம் அடிக்கடி நினைக்கும், கேட்கும் ஒரு வாக்கியமாகும். சில நேரங்களில் உணவு சமைக்கும் பொழுது உண்டாகும் மணம் கூட உணவு விருப்ப உணர்வை தூண்டக் கூடியதாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் உணர்வு உட்கொள்பவர்களுக்கு, குறிப்பிட்ட அந்த நேரத்தில் உணவு விருப்ப உணர்வையும், பசி உணர்வையும் தானாக வாயும், வயிறும் உண்டாக்கி விடுவதையும் நாமறிவோம்.
உணவுப் பழக்கங்கள்:
உணவுப் பழக்கங்களை பொருத்தளவில், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். சிலர் சைவ உணவுப் பிரியர்கள். சிலர் அசைவ உணவுப் பிரியர்கள். அதிலும் கூட சிலருக்குக் கீரைபிடிக்கும், சிலருக்கு காய்கள் பிடிக்கும். சிலருக்கு ஆட்டிறைச்சி பிடிக்கும், சிலருக்குக் கோழி இறைச்சி பிடிக்கும். தனிப்பட்ட உணவு விருப்பங்களுக்கு ஏற்ப, வயிறும் அவ்வகை உணவுகளுக்குப் பழகிவிடும். சமீபத்தில் தொலைக் காட்சிகளில் ஒரு காட்சி பார்த்திருப்பீர்கள். சென்னை பொது மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றிலிருந்து ஏராளமான ஆணிகள், கத்தரி, இரும்புச் சாமான்களை எடுத்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். உணவுப் பழக்கம் என்பது நாம் எந்த உணவுகளை வயிற்றிற்குக் கொடுத்துப் பழகுகிறோமோ, அதைப் பொருத்தே வயிற்றின் தாங்கும், செரிக்கும் சக்தியும் உண்டாகும்.
“ஒருவேளை உணவை ஒழியென்றால் ஒழியாய்,
இருவேளை உணவை ஏளென்றால் ஏளாய்,
இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”
- மரு.இரா.கவுதமன் எம்.டி.எஸ்.,
முக அறுவை மருத்துவர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- திமுக அரசு செய்தாக வேண்டிய மூன்று பெரும் பணிகள்
- இராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவி இழப்பு எழுப்பும் கேள்விகள்
- கேரளத்தில் ஏழு நாட்கள்!
- சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
- கப்பலோட்டிய தமிழன் - திரைப்படம் சொன்ன செய்தியும், சொல்லாத சேதியும்
- அரசியல் சீர்திருத்தம்
- இந்தியப் பொருளாதார வீழ்ச்சி - முந்திரா ஊழல் முதல் அதானி ஊழல் வரை
- திராவிடம்... திராவிடர்...
- ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை வெற்றியோடு நடத்துவது எப்படி?
- குலவு பிள்ளைச் சிதம்பரம்
- விவரங்கள்
- மரு.இரா.கவுதமன்
- பிரிவு: உடல் கட்டுப்பாடு
RSS feed for comments to this post