ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “படித்த செல்வாக்குள்ள குடும்பங்களில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. அவர்களின் படிப்பும் செல்வாக்கும் தான் இதற்குக் காரணம். இதுவே ஆணவமாகி விவகாரத்து வரை போய் விடுகிறது” என்று அண்மையில் பேசியுள்ளார். கல்வியும் ஆணவமும் ‘கணவன்-மனைவி’ சேர்ந்து வாழும் ‘கலாச்சாரத்தை’ சீர்குலைக்கிறது என்ற நோக்கத்தில் இப்படிப் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் ஒருவர் மறுப்பு எழுதியுள்ளார். எழுதியவர் வாரந்தோறும் கட்டுரைகள் எழுதும் சுவாமிநாதன் எஸ். ஆங்கிலேசாரியா அய்யர் என்ற பத்திரிகையாளர். இவரும் ஒரு பார்ப்பனர். மோகன் பகவத்துக்கு எழுதியுள்ள மறுப்புக் கட்டுரையின் சுருக்கமான கருத்து:

மோகன் பகவத் மீண்டும் பழைய காலத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார். கடந்தகால இந்தியாவில் கல்வியும் செல்வாக்கும் உள்ளவர்களாக ஆண்கள் மட்டுமே இருந்தனர். அந்த இரண்டு ‘பெருமை’களும் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பரம்பரை சொத்து உரிமையும் கல்வியும் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. ஆண் எஜமானர்களின் ‘கருணை’க்கு அடிமைப்பட்டவர் களாகவே பெண்கள் இருந்தார்கள். பெண்கள் சுதந்திரமானவர்களாக வாழ்வதற்கு சமூகமும் கலாச்சாரமும் தடை போட்டன. சொந்தக்கால்களிலேயே நிற்க முடியாத பெண்கள், குடும்பத்தின் அடிமையாக வாழ வேண்டியிருந்ததால் விவாகரத்து குறித்து கற்பனையே செய்ய முடியாது.

கல்வி உரிமை கிடைத்த பிறகுதான் பெண்களுக்கு விழிப்புணர்வு உருவாகி தங்களின் உரிமைகளைக் கேட்கத் தொடங்கினர். இதனால் ஏற்கனவே அதிகாரம் செலுத்தி வந்தவர்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டனர். அமெரிக்காவில் அடிமை முறை இருந்த காலத்தில் அடிமைகளுக்கு திட்டமிட்டு கல்வி மறுக்கப் பட்டது. கல்வி பெற்று விட்டால், சுதந்திர உணர்வு வந்துவிடும் என்ற அச்சமே அதற்குக் காரணம். இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே மற்றும் லண்டனில் இந்தியாவின் நிர்வாகத்தைக் கண் காணித்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்களிடம் கல்வியைப் பரப்ப விரும்பினர். தங்களின் நிர்வாகத்துக்கு கல்வி கற்ற இந்தியர்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

புராண வேத காலங்களில் விவகாரத்துக்கான நடைமுறை கள் ஏதும் இல்லை. ஆண்கள் விரும்பாவிட்டால் அற்பக் காரணங்களுக்காகக்கூட பெண்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். மனைவி யைப் பற்றி ஏதேனும் வதந்தி உலவினாலும் வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள். இராமா யணத்தில் இராமன் தனது மனைவி சீதையை அப்படித் தான் நடத்தினான். மோகன் பகவத் வேண்டுமானால் இத் தகைய பெண்களுக்கு எதிரான கொடூரமானப் போக்கைக் கொண்டாடி மகிழலாம். ஆனால் அரசியல் சட்டம் அத்தகைய பாகுபாடுகளை மறுக்கிறது. இந்து மதம் உட்பட அனைத்து மதங்களுமே பெண் களுக்கு எதிரான பாகுபாடுகளையே வலியுறுத்துகின்றன.

இந்து மத மரபு - சொத்து மற்றும் திருமணம், தொழில் வழியாக ஆண்களுக்கு அதிகாரங்களை வழங்கியது. குடும்பப் பிரச்சினைகளிலும் ஆண்களே அதிகாரம் படைத்த வர்கள். வரதட்சணைக்கான பணப் பேரங்கள் வழியாகவே பெற்றோர்கள் திருமணங்களை உறுதி செய்கிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே இந்து மதத்தில் திருமணங்கள் நடத்தி வைக்கப் பட்டன. மேயோ என்ற வெளி நாட்டு சுற்றுலாப் பயணி இந்தியாவை சுற்றிப் பார்த்து எழுதிய ‘இந்தியத் தாய்’ (மதர் இந்தியா) எனும் நூலில் குழந்தைத் திருமணங்களின் கொடுமைகளைப் பதிவு செய் துள்ளார். 6 வயது சிறுமிகள் வயதான கணவர்களின் கட்டாய உடல் உறவினால் பெண் உறுப்புகள் பாதிக்கப் பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார். இறந்த கணவன் எரிக்கப்பட்ட நெருப்பில் மனைவியரும் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

பெண்கள் கல்வி உரிமை கிடைத்ததினால் தான் இந்தக் கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடிந்தது. பெண்கள் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் முடிகிறது. கொடுமைக்கார கணவர்களிடம் சிக்கி கண்ணீர் சிந்தாமல், விவாகரத்து கேட்டு தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். விவகாரத்து அதிகரித்து வருகிறது என்றால் அதன் உண்மையான அர்த்தம் என்ன? ஆண்களின் அடக்குமுறைகளை பெண்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான். ஆண்களைத் தண்டிக்கத் தயாராகி விட்டார்கள் என்பதுதான். இது நீதியின் செயல்பாடு. மோகன் பகவத் கூறுவதுபோல் ஆணவத்தின் அடையாளம் அல்ல.

குடும்ப சுகாதாரக் கணக் கெடுப்பு அறிக்கை ஒன்று 15 வயதுக்கு மேற்பட்ட பெண் களில் மூன்றில் ஒரு சதவீதத் தினர் குடும்ப வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று குறிப் பிடுகிறது. இந்த வன்முறையி லிருந்து தங்களை விடுவித்துக் கொள்வோர் 14 சதவீதம் பெண்கள் மட்டுமே என்றும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது. தங்கள் மீதான வன்முறைகளை அந்தக் காலத்தைப்போல் பெண்கள் சகித்துக் கொண்டு போக விரும்புவதில்லை. அதை வெளிப்படுத்தவே விரும்பு கிறார்கள். பெண்களின் இந்த விழிப்புணர்வை மோகன் பகவத் போன்றவர்களால் அங்கீகரிக்க முடியாமல் போகலாம்.

இந்து மதம் மட்டுமல்ல, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களும் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதில்லை. அவர்கள் பாகுபாடுகளுடன் நடத்தப்படு வது குறித்து பல அறிக்கைகள் வெளி வந்து கொண்டிருக் கின்றன. ஆணவக் கொலைகள், பெண்கள் மீதான சித்திர வதைகள் இஸ்லாம், கிறிஸ்தவ மதத்திலும் நடக்கவே செய்திருக் கின்றன. இப்போது அய்ரோப் பிய சமூகமே கல்வி பெற்ற சமூகமாகவும் விழிப்புணர் வுள்ள சமூகமாகவும் மாறி நிற்பதை மோகன் பகவத்தால் ஏற்க முடியாத நிலையில் ‘விவாகரத்து’களை கலாச் சாரத்துக்கு எதிரான ஆணவ நடவடிக்கையாக கருதுகிறார் போலும். மதங்களால் பழக்க வழக்கங்களாக மாற்றப்பட்ட பெண்களுக்கு எதிரான பாகு பாடுகளை கடும் குற்றங்களாக அய்ரோப்பிய சமூகம் கருதுகிறது. இதைப் பார்த்தாவது கலாச்சாரம், சம்பிரதாயம் என்ற பெயரில் பேசப்படும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை கைவிட முன் வர வேண்டும்.        

Pin It