(98 ஆம் அகவையில் முடிவெய்திய திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் பெரியார் குறித்து எழுதிய கட்டுரை.)

எந்த ஒரு மதத்தின் கருத்துகளும் மற்றொரு மதத்திற்கு முற்றும் உடன்பாடல்ல. அடிப்படை யிலேயே மாறுபடும் முரண்பட்ட கருத்தும் பல. ஒரு வகையில் நெருக்கமுள்ளது போன்று தோற்றமளிக்கும் மதங்களான -

சைவமும் - வைணவமும்

சமணமும் - பவுத்தமும்

இஸ்லாமும் - கிறிஸ்தவமும்

கூடத் தம்முள்ளே பல வகையில் வேறுபடுவன. சில கால கட்டத்தில் அவை ஒன்றுடன் ஒன்று போரிட்டு நின்றவை.

ஒரு மதத்திற்குள்ளேயே முரண்பாடுகள்!

தென்னகத்தில் தோன்றிய ஆச்சாரியார்கள் எனப்படும் ஆதி சங்கராச்சாரியார், இராமனுச்சாரியார், மத்துவாச்சாரியார் ஆகிய மூவருமே - வேதாந்த விசாரத்திலும், விளக்கத்திலும் ஈடுபட்டவர்கள் என்றாலும், அவர்கள் விளக்கிய ‘தத்துவம்’ மூன்றும், ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. ஒன்றை ஒன்று மறுப்பவை, எதிர்ப்பவை. நடைமுறை வழிகளிலும் வேறு வேறானவை. சைவமும், வைணவமும், இன்றும் பலப்பல பிரிவுகட்கு ஆட்பட் டுள்ளன. எனவே, சமய ஞானிகள் எனப்பட்டவர்களில் எவருடைய ஞானத் தெளிவையும் அல்லது கடவுள் தத்துவ விளக்கத்தையும் - இன்னொரு சமய ஞானி உடன்பட்டு ஏற்றுக் கொண்டதாக வரலாறில்லை. அப்படிப்பட்ட இறை அருள் பெற்றவர்களாகக் கூறப்படும் மத வழி காட்டிகளே ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துடையவராவதைக் கூட அறிந்து கொண்டு, சிந்திக்க முன் வராத அளவில்தான் - மனிதன் குறிப்பாகத் தமிழன் சுய சிந்தனையற்றவனாக, அந்தத் துணிவும் தெளிவும் அற்றவனாக உள்ளான்.

‘வேறுபட்ட சமயங்கள் யாவரும் போற்றும் இறைவா’ எனவும், ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனவும், சைவர்கள் சிவனைப் போற்றுவதை ஒப்ப - அவரவரும் - தமது மத வழியில் வழிபடும் தெய்வத்தை அனைத்து மதத்தவரும் உலகோரும் போற்றும் இறைவன் எனக் கூறிக் கொள்வர். எனினும், அந்த மதவாதிகள் அனைவரும் ஒப்பியதொரு கடவுளை - கடவுள் தத்துவத்தை இன்று வரை உலகம் அறியவில்லை. எனவே அவரவர் உள்ளத்தில் பதிந்து உரம் பெற்ற நினைவொன்றே அப்படிப்பட்ட ‘தெய்வ’ சிந்தனை யாவதை யாரும் மறுத்தொணாது அது குறித்து உண்மை காண, தாமே பகுத்தறிந்து தெளிவதற்கு மக்கள் முன்வரவில்லை. தமது மனத்தில் பதிக்கப்பட்டு விட்ட எண்ணத்திற்கு ஆட்பட்டு விட்ட மக்கள், தமது அறிவைப் பயன்படுத்தவே அஞ்சுகின்றார்கள். ஆண்டவனை மலைபோல நம்பி இருக்கிறார்கள் என்பதினும், அவரது பழமை வழி வந்து நிலைத்து விட்ட நம்பிக்கை மலை போன்று - கருங்கற் பாறையாய் உயர்ந்து நிற்கிறது. தந்தை பெரியாரோ - இரும்புக் கடப்பாறை கொண்டு, தகர்க்கவியலாத கற்பாறையையும் சிற்றுளி கொண்டு சிறுசிறு கல்லாக உடைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அது ஒரு நீண்டகாலப் பணி என்றும் அறிவித்து, தமது வாழ்நாளையே அதற்கு ஒப்படைத்து ஓயாது பாடுபட்டார்கள். மக்கள் சிந்தித்து அடையும் தெளிவு எதுவாயினும் மனிதனைச் சிந்திப்ப தற்குத் தூண்டி, ஒவ்வோரளவிலேனும் மனிதனாக உணரச் செய்த ஒப்பற்ற பெருமை பெரியாருக்கு உண்டு.

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்”

- என்றும், சாதி, மத, புராண இதிகாச மூடத்தன மெல்லாம் ஒழித்து மக்கள் - சன்மார்க்க நெறியினர் ஆக வேண்டும் என்றும், வடலூர் வள்ளலார் பலவாறு உரைத்தவை, ஏற்கப்பட வேண்டியன எனினும், அவை மக்களின் நம்பிக்கை வழிப்பட்டு வளர்ந்த பழக்கச் சிந்தனையை மாற்றும் ஆற்றலைப் பெற முடியவில்லை.

வள்ளலாரே தமது வாழ்நாளில் பெரும் பகுதியைப் பழக்கப்பட்ட சிந்தனையின் பக்தி வழியிலேதான் செலுத்தினார். இறுதிக்கட்டத்தில்தான் - பழகிய வழிச் சிந்தனையில் கற்பனையான - பொய்யான எண்ணங்கள் மேலிட்டு, உண்மை ஒளி காணத் தடையாகின்றன என்று உரைக்கலானார். எனவே அவரது பாடல்களில் ஒரு பகுதி மட்டுமே புதிய சிந்தனைக்கு வழி செய்கின்றன. அவையுங்கூடப் பக்தி நிலைப்பட்ட வழியில் அமைந்திருத்தலின் - ஒரு புதிய சிந்திக்கும் ஆற்றலை மக்களிடம் உருவாக்க இயலவில்லை. ஒரு சில புதிய பொதுநல நோக்குடைய நியாயங்கள் மட்டுமே வழங்குகின்றன. அவையும் ஒரு இயக்கமாக மக்களிடம் பரவவில்லை.

பெரியாரின் அருமை புரியும் இடம்

இந்த உண்மையை எண்ணிப் பார்ப்பவர்களே, தந்தை பெரியாரின் சிந்தனையில் பிறந்த, பகுத்தறிவு - தன்மான இயக்கம் எப்படிப்பட்டதொரு எதிர்நீச்சல் பணியில் ஈடுபட்டது என்று உணரலாவர்.

பல நூறு தலைமுறையாக வழி வழி வளர்ந்த நம்பிக்கைகளைக் கொண்டு, சமுதாய (இன) வழக்கமாக இடம் பெற்று, மக்கள் பழக்கத்தில் நிலைத்து, பக்தி உணர்வால் உரம் பெற்று, பரம்பரைப் பெருமை எண்ணத்தால் வலிவு பெற்று, இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நிலவுதலால் அவர் தம் வலிமையைத் துணைக் கொண்டு, பொருளாதார முறையையே காக்கும் வாயிலாகி, ஏற்றத் தாழ்வுகளான இன்றைய சமூக நிலையை நிலை பொறுத்தும் கருவியாகி கற்றறிந்தார் எனப்படும் கூட்டத்திற்கு அவர்தம் வாழ்வுக்கு வாய்ப்பாகி, மற்ற மக்கட்கோ அது தவிர வேறு வழிச் சிந்தனை ஏற்பட இடமளிக்காத அரணாகி உள்ள வைதீக வருணாசிரம தருமக் கோட்டையைத் தகர்ப்பது என்னும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு வாதம் எப்படிப்பட்ட எதிர்ப்பைச் சந்தித்தது - சந்திக்கிறது என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் தான் அதன் அருமை விளங்கும்.

இமயப் பனிமலையின் உயர்முடியான எவரெஸ்டில் ஏறும் முயற்சியிலும் கடுமையான ஒரு முயற்சியில், புயல் வீசிட அலை கொந்தளிக்கும் கடலில் மரக்கலம் செலுத்துவதினும் துன்பமான ஒரு முயற்சி யில், நன்றி கூறவோ, பாராட்டவோ வரவேற்கவோ செல்வாக்கு மிக்கவர் எவரும் முன் வராத சூழ்நிலையின் காலகட்டத்தில் -

  • அறிவு வழிச் சிந்தனையை அரும்ப வைக்கும் பெரும் போரில்,
  • மனிதத்தன்மையை நிலைநாட்டும் புதிய சமுதாயம் காணும் போர்க்களத்தில்,
  • தமிழனின் பிறவி இழிவுப் பொய்மையைப் பொசுக்கும் பெரும் பணியில் ஈடுபட்டவர் தந்தை பெரியார்.

அவர் எடுத்து வைத்த பகுத்தறிவு வாதங்களை, உண்மை விளக்கத்தை இந்தச் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தியோர் ஏற்றிட இசையாது, எதிர்ப்புக் கிளப்பி, அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ‘நாத்திகர்’ என்று பறைசாற்றி, மக்களின் வெறுப்புக்கு ஆளாக்கி விடலாம் என்று அவர்கள் முனைந்ததாலேயே, ‘நாத்திகம் என்றால் என்ன? அதில் என்ன தவறு? அதனால் யாருக்கு என்ன கேடு? என்னும் கேள்விகளை எழுப்பி, ‘கடவுள்’ பெயராலும், நினைவாலும் வளர்க்கப்பட்ட மூட நம்பிக்கைகளையும், பொய்மைப் புரட்டுகளையும், பயனற்ற கற்பனையையும் விளக்கிக் கடிந்துரைக்கலானார்.

கடவுள் பெயரால் - சாதி - மதச் சடங்கு ஆதரவும், வைதீகப் புரோகிதம் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழியும் செய்யப்படாதிருக்குமாயின், அப்படிப்பட்ட ‘கடவுள்’ என்னும் கடந்த பொருள் பற்றிய சிந்தனை குறித்துப் பெரியார் கவலைப்பட்டிருக்க மாட்டார்.

பெரியார் அவர்களே ஒரு முறை பேசும்போது, “உங்கள் கடவுள் இருக்குமாயின் நான் இல்லை என்பதாலா அவ்வளவு சக்தி வாய்ந்த கடவுள் இல்லாமற் போய்விடும்? பின் ஏன் பயப்படுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி, “இருப்பது எதுவும் ஒருவன் இல்லை என்பதால் மறைந்து விடாது. இல்லாதது எதுவும் ஒருவன் உண்டு என்பதால் முளைத்து விடாது” என்று விளக்கங் கூறி, “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்கிறீர்கள் - அப்படியானால் நான் இப்படிப் பேசுவதைக் கடவுள் தடுத்திருக்கலாமே! எனவே சிந்தித்துப் பாருங்கள் - எது எது உங்கள் பகுத்தறிவுக்குச் சரி என்று படுகிறதோ - அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உரையாற்றினார்.

எனவே, பழமைப் பிடிப்பிலிருந்து மக்களை மீட்டு மனிதனாகச் சிந்திக்க வைப்பது - பகுத்தறிவு வழியிலான புதிய சமுதாயத்திற்கு ஏற்றவனாக ஆக்குவது - சமத்துவ சமதர்ம வாழ்வுக்கு அவனைக் கொண்டு வழி வகுப்பது என்னும் இலட்சியத்தோடு நமது மக்களின் அறிவுக் கண் திறந்த பெரியாரின் பணி, தொண்டு, தியாகம், துணிச்சல், இடைவிடாத சிந்தனை, அத்தனையும் காலத்தால் மதிப்பு மிகும் அருஞ்செயலாகும்.

‘செயற்கரிய செய்வார் பெரியர் - சிறியர்

செயற்கரிய செய்க லாதார்’

என்னும் குறள் காட்டும் பெரியாராய்த் திகழ்பவர் - நமது தந்தை பெரியாரே!

தந்தை பெரியார் பிறந்ததால் - அவரது புதிய சிந்தனை பிறந்ததால் - தன்மான இயக்கம் பிறந்ததால் பகுத்தறிவைப் பயன்படுத்தி, புத்துணர்வு பெற்ற மனிதராகத் தலைநிமிர்ந்தவர்கள் நாம். தமிழினமும் அவ்வழியில் தலைநிமிரும் நாளை எதிர்நோக்கி நமது பணியை நாளும் தொடர்வதே தந்தை பெரியாரின் பிறந்த நாளைப் போற்றுவோர் ஆற்ற வேண்டிய நன்றிக் கடனாகும்.

வாழ்க தந்தை பெரியாரின் சிந்தனை!

வளர்க மனித சுய சிந்தனை ஆற்றல்!

(‘விடுதலை’ 50 ஆம் ஆண்டு சிறப்பு மலருக்கு எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி)

Pin It