நேற்று முன்தினம் (9-6-2020) இணைய வழியில் கூடிய பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நடுவக்குழு எடுத்த முடிவுகள்:

1

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்னெடுத்து நடத்துவதாக இருந்த குறள் விழா, மநுநூல் எரிப்புப் போராட்டம் ஆகியவை கொரானா கால நெருக்கடியால் திட்டமிட்டபடி அறிவிக்கப்பட்ட நாள்களில் நடத்த இயலாமல் போனது. அந் நிகழ்வுகள் 2021 சனவரிக்குப் பிறகு வாய்ப்பான நாள்களில் நடத்தப் பெறும்.

2

இந்துமத வருணாசிரம அமைப்பில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைச் சூத்திரர்களாக்கி ஒதுக்கி வைத்தாலும், மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேலாக உள்ளதும், உயர் வருணத்தாருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்களுக்குப் போட்டியாளர்களாக, அச்சுறுத்தலாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை ஒடுக்க, அடக்க, கல்வி வேலை வாய்ப்புகளில் உள்ள அரசியல் சட்ட வழியிலும் - உச்சநீதிமன்ற அரசியல் அமைப்பு ஆயத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய ஆயம் வழங்கிய இட ஒதுக்கீட்டு ஆதரவுத் தீர்ப்புக்கு எதிராகவும் அவர்களுடைய வாய்ப்புகளைப் பறித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி அனுமதியில், இந்திய அரசின் ஒதுக்கீட்டு இடங்களாக மாநிலங்களிலிருந்து இளநிலை மருத்துவக் கல்விக்குத் தரப்பட்ட 15 விழுக்காட்டு இடங்களையும், முதுநிலை மருத்துவக் கல்வியில் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட 50 விழுக்காட்டு இடங்களையும், உயர் ஆய்வு மருத்துவக் கல்வி இடங்களில் அனைத்து இடங்களையும் பெற்று வைத்துள்ள இந்திய நடுவண் அரசு, அந்த இடங்களில் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கும் இடம் ஒதுக்கவில்லை என்பதும், அதே வேளை உயர்சாதி ஏழைகளுக்குப் புதிதாக வழங்கியுள்ள 10 விழுக்காட்டு இடங்களை முழுமையாக வழங்கியிருக்கிறது என்பதும் பார்ப்பனிய அதிகார வெறியின் பெரும் கொடுமையாகும்.

எனவே, இந்திய அரசின் இத்தகைய பார்ப்பனிய ஆதிக்கப் வெறிப் போக்கைக் கண்டித்து, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி, வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டின் படி நிறைவு செய்ய வலியுறுத்தியும் வருகிற சூன் 13 - ஆம் நாள் மாலை 5 மணிக்கு தமிழகமெங்கும் இணையவழி ஆர்ப்பாட்டத்தை மிகப்பெருமளவில் நடத்துவது எனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கிறது..

அதே முழக்கத்தை சுட்டுரை முன்னிலைச் சொல்லாக ( 'ட்விட்டர் ஆஷ்டாக்கில்') - பதிய வைப்பது என முடிவு செய்யப்பட்டது..

3

உலகெங்கும் மக்களுக்குப் பேரச்சத்தை விளைவிக்கும், பேராபத்தாய் வந்துள்ள கொரோனா பெருந்தொற்றால், மக்கள் தொல்லைப்படும் இந்த வேளையில் இந்திய அரசு இதுவே தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு என்ற மகிழ்வோடு, மோடியின் பார்ப்பனிய இந்தியப் பாசிச அரசு தனது தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸின் கொள்கையான மாநிலங்கள் இல்லாத ஒற்றை நாடாக இந்தியாவை உருவாக்கும் திட்டத்தின் முதல் பகுதியாக மாநிலங்களை, அதிகாரமே இல்லாத அமைப்பாக மாற்றும் பணிகளைப் பெரும் வேகத்தில் செய்து வருகிறது.

கல்வி,

வரிவிதிப்பு,

ஒன்றிய அரசுப்பணிகளில் பணியாளர் தேர்வு,

உணவு பங்கீட்டு முறை என்பவற்றைத் தொடர்ந்து,

மின்சாரம்,

வேளாண்மை,

ஆற்று நீர்ப் பயன்பாடு

- போன்ற எல்லா துறைகளிலும் தனது அதிகாரத்தை விரிவாக்கி உள்ளது..

படிப்படியாக மாநில உரிமைகளை எல்லாம் பறித்துக் கொண்டு மோடி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய பாசிச ஒற்றை அதிகார வெறிப் போக்கின் இன்றைய நிலையை, விடுதலை பெற்ற இந்தியாவை குடியரசாக மாற்றியமைக்க, ஓர் அரசியல் சட்டம் எழுதப் படுவதற்கான அரசியல் அமைப்பு அவை அமைக்கப்பட்ட அன்றைய நிலையோடு சிறிது ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையானது..

அன்றைக்கு, அது தனது பணியை 1946 - ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் தொடங்கியது.

ஐந்தாவது நாளான திசம்பர் 13ஆம் நாள் அரசியலமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள் தீர்மானத்தைத் திரு ஜவகர்லால் நேரு அவர்கள் அரசியல் அமைப்பு அவையில் முன்மொழிந்தார்.

அந்தத் தீர்மானத்தின் எட்டுக் கூறுகளில் முதல் கூறு,

இந்திய நாடு விடுதலை பெற்ற முழு இறையாண்மையுள்ள குடியரசு என்று அறிவிக்கிறது.

இரண்டாம் கூறு, இந்திய நாடு மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று முன்மொழிகிறது..

மூன்றாம் கூறு, தற்போதுள்ள எல்லைகளுடனோ அல்லது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட முறையில் அமையவிருக்கிற மாநிலங்கள், ஒன்றியத்திற்கு என அளித்து ஒதுக்கப்பட்ட அதிகாரங்களையும் பணிகளையும் தவிர, எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தையும் கொண்ட தன்னாட்சி உரிமையுடைய (Autonomous) அலகுகளாக மாநிலங்கள் இருக்கும் என்பவை போன்ற கூறுகளைக் கொண்ட தீர்மானத்தைத்தான் முன்மொழிந்தார்..

விவாதத்திற்குப் பின், 22-1- 1947 அன்று அத்தீர்மானம் அரசியலமைப்பு அவையில் நிறைவேறியது

(இந்திய ஒன்றியம், அரசியல் அலகுகள், அரசாங்க அமைப்புகள் அனைத்துக்குமான இறையாண்மை மக்களிடம் இருந்து பெறப்படுகிறது என்பதும்,

எல்லா மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி -

சட்டத்தின் வழியாகச் சமநிலை, சமவாய்ப்பு -

கருத்து வெளிப்படுத்தல்,

நம்பிக்கை, வழிபாடு,

அமைப்பாதல், செயல்பாடுகள், சட்டத்திற்கும் பொது ஒழுங்குக்கும் உட்பட்ட உரிமை - உண்டு என்பதும்,

சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாக்கப்படும் என்பதும்,

நாகரீகம் வளர்ந்த நாடுகள் போலவே சட்ட விதிகளின்படி நாட்டின் ஒருமைப்பாடு, எல்லை, நிலம், கடல், வான்வெளி ஆகியவை பேணப்படும் என்பதும்,

மானுட குலத்தின் அமைதிக்கும், நலன்களுக்கும், தன்விருப்போடு முழுமையான பங்களிப்பை வழங்கி, பண்டைய நாடான இந் நாடு உலகில் மதிக்கப்படும் மரியாதைக்குரிய சரியான இடத்தில் நிலைநாட்டப்படும் என்பதும் தீர்மானத்தின் பிற கூறுகளாக இருந்தன...)

இது வெறும் தீர்மானம் மட்டுமல்ல; அதற்கும் மேலாக இது ஒரு பிரகடனம்; தீர்க்கமான வாக்குறுதி; நம்பிக்கை மற்றும் பொறுப்பேற்பு, என்றெல்லாம் அந்த முன்மொழிவு உரையில் நேரு அழுத்தமாகக் கூறினார்...

ஆனால், இன்றைய நிலை அதற்கு நேரெதிராகப் பார்ப்பனியத்தின் ஒற்றை அதிகாரப் போக்கை வெறித்தனமாக நடைமுறைப்படுத்தும் தன்மையோடு இருப்பதை அனைத்து மொழித் தேச மக்களும் - அதாவது மாநில மக்களும் நொந்த உள்ளத்தோடு அறிந்து வருகிறார்கள்..

இழந்து கொண்டிருக்கிற தங்கள் மாநில உரிமைகளை எப்படி மீட்பது என்ற வேட்கையோடு மாநில உரிமைகளில் அக்கறையுள்ள கட்சிகள், இயக்கங்கள், தொழிலாளர்கள், வேளாண் பெருங்குடி மக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கலை இலக்கியத்துறையினர் எனப் பல்தரப்பினரும் அக்கறையோடு கருத்து அறிவித்தும், போராடியும் வருகின்றனர்..

இந்த நிலை, ஒவ்வொரு மாநிலத்தையும் அம்மாநிலத்தின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தை நோக்கி அந்தந்த மாநில மக்களைத் தள்ளி விடுகிற சூழலைச் சமூக ஆய்வாளர்கள் அறிவார்கள்..

மோடியின் இத்தகையப் பார்ப்பனிய பாசிச ஒற்றை அதிகாரப் போக்கு, எல்லா மாநிலங்களுக்கும் தன்னாட்சி அதிகாரத்தை நோக்கிச் சிந்திக்க, செயல்பட, போராட வேண்டிய தேவையைக் கொடுத்திருப்பதுபோல் தமிழகத்திற்கும் தன்னாட்சி அதிகாரத்தை நோக்கிக் குரலெழுப்பிப் போராடுகிற உணர்வை, சூழலைத் தொழிலாளர்களுக்கு, வேளாண் மக்களுக்கு, கட்சிகளுக்கு, இயக்கங்களுக்கு, அறிஞர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு எனச் சமூக அரங்கில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது..

அத்தகைய சூழல் நெருக்கடியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மாநில உரிமைகளை முழுமையாகப் பறித்திடும் மோடியின் பார்ப்பனிய பாசிச ஒற்றை அதிகார ஆட்சிக்கு எதிராகத் 'தன்னாட்சி அதிகாரத் தமிழக'த்தின் தேவையை முன்வைத்துக் கருத்துப் பரப்பும் முயற்சியை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என அறிவிக்கிறது.