டெல்லி பாராளுமன்றத்தின் மீது 2001ல் ஆயுதங்களுடன் ஐவர் தாக்குதல் நடத்திய 22 ஆண்டுகளுக்கு பின் அதே தேதியில் புதிய பாராளுமன்றத்தின் ஐந்து கட்ட பாதுகாப்பையும் கடந்து பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இரு இளைஞர்கள் புகை கக்கும் குப்பிகளை வீசியும் மேசைகளில் தாவிக் குதித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடியதும் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பெண்ணுடன் இன்னொரு இளைஞர் கட்டிடத்தின் வெளியே இதே போன்ற புகைக் குப்பியை வீசி, சர்வாதிகாரத்தை எதிர்ப்போம், மணிப்பூருக்கு நியாயம் வேண்டும்,

பாரதி மாதக் கீ ஜே, ஜெய் பீம், வந்தே மாதரம் என பல முழக்கமிட்டதாக செய்திகள் வந்தன. அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். மறுநாளே மேலும் இருவர் கைதாயினர். ஐந்தாவதாக கைதான லலித் ஜா என்பவர் தான் இந்நிகழ்வைத் திட்டமிட்டார் என செய்திகள் வருகின்றன.bomb in parliamentபுகைக் குண்டு வீச்சு ஏன் எதற்காக நடைபெற்றது, இதன் நோக்கம்,பின்னணி என்ன என்பது குறித்து பல விதமாக பார்க்கப்படுகிறது.

  • பாதுகாப்பு குறைபாடுதான் காரணம், பாராளுமன்றத்தையே ஆளும் பாஜக அரசால் பாதுகாக்க முடியவில்லை இவர்கள் எவ்வாறு இந்தியாவை காப்பார்கள்?
  • இதற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் கோருகின்றனர்.
  • இந்தியாவில் படித்த வேலையில்லாத இளைஞர்களின் கோபத்தின் வெளிப்பாடு இது. வேறு வகையான ஜனநாயக போராட்டங்களை நடத்த அனுமதிக்காததால் நாட்டையே திரும்பி பார்க்க வைக்க இதுதான் வழி. இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. பயன்படுத்தியதும் வண்ண புகை கக்கும் குப்பிகள் தான் என்றும் பார்க்கப்படுகிறது.
  • பொருளாதார வளர்ச்சி, விலைவாசி, வேலைவாய்ப்பு இன்மை என எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து வரும் பாஜக அரசு 2024 தேர்தலுக்காக நடத்த இருக்கிற நாடகத்தின் முதல் காட்சி புகைக் குண்டு வீசிய நிகழ்ச்சி என மூன்றாவது கருத்தும் நிலவுகிறது.
  • பொதுவாக இத்தாக்குதல் 2001 தாக்குதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல் இல்லை எனவும் கருதப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு என்ற முதல் பார்வை மிக எளிதானது. பாதுகாப்பைப் பலப்படுத்தி விட்டால் இது போன்ற அத்துமீறல்களைத் தடுத்து விடலாம். மேலும் பார்வையாளர்களை தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கலாம். அல்லது பார்வையாளர்களை அனுமதிக்கவே வேண்டாம் எனக் கூறுபவர்களும் உள்ளனர். அடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த, இந்தியாவை நேசிக்கின்ற, வேலையற்ற இளைஞர்கள் பகத்சிங் ஃபேன் கிளப் என்ற சமூக ஊடகத்தின் மூலம் இணைந்து பகத்சிங்கைப் போலவே நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள் இவர்கள் என ஊடகங்கள் கூறுகின்றன. நாட்டின் படித்த வேலையில்லாத கோடிக்கணக்கான இளைஞர்களின் அடையாளமாக அவர்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இச்செயலைச் செய்திருந்தால் ஏற்கக் கூடியதே.

ஆனால் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இனம் சார்ந்த மற்றும் மொழி பேசுபவர்கள் வகுப்பைச் சேர்ந்த குறிப்பான கொள்கைப் பிடிப்பும் அற்றவர்கள் இதன் விளைவுகளைப் பற்றி எந்த தெளிவும் இருப்பதாக இன்று வரை தெரியவில்லை. வரும் பாதிப்புகளைப் பற்றி கவலைப் படாமல் ஆறு பேர் இத்தகைய செயலைச் செய்தார்கள் என்பதை நம்ப முடிய வில்லை. இச்செயலில் வேறு சிலரது பங்கும் இருக்கலாம். அவர்களது ஆதரவும் உள் நோக்கமும் இதற்கு காரணமாக இருக்கலாம். காலம்தான் இதற்கு விடை சொல்லும்.

இறுதியாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 2024 தேர்தலுக்காக இச்செயலை அரங்கேற்றி உள்ளதா என்றால் அதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. இதற்கு எண்ணற்ற முன் உதாரணங்கள் உள்ளன. ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கபரிவார்கள் கடந்த 60 ஆண்டுகளாக எவரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு சதிவேலைகளை நிகழ்த்தி இந்த நாட்டையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் அரசின் உயர்மட்டத்தில் எங்கும் நிறைந்துள்ள உள்ள ஆதரவாளர்களின் உதவியுடன் அனைத்து பயங்கரவாதச் செயல்களைச் செய்து விட்டு தாங்கள் தான் தேசப் பக்தர்கள் என பறைசாற்றும் வல்லமை கொண்டவர்கள் இவர்கள் தேசத்தந்தை எனப்படும் காந்தியையே விடுலையடைந்த ஆறு மாதங்களுக்கு உள்ளேயே படுகொலை செய்து விட்டு பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்த இஸ்மாயில் என கையில் பச்சை குத்துதியிருந்தான் பார்ப்பன கோட்சே.

2000-2010 நிகழ்ந்த பல குண்டு வெடிப்புகளில் ஒன்றான சம்ஜோதா இரயில் குண்டுவெடிப்பில் 70 பேர் இறந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்றன ஊடகங்கள், ஆனால் குண்டு வைத்தவனோ சங்கபரிவாரைச் சேர்ந்த சுவாமி அசீமானந்தா என்பவன். மராட்டியத்தி நடந்த பூனா ஜெர்மன் பேக்கரி, மலேகான் மசூதி, வாஷி,தானே, அஜ்மீர் தர்கா ஆகிய பல இடங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வழக்கம்போல இஸ்லாமியர் குற்றம் சாட்டப்பட்டனர் மும்பை மாநகர கிஜிஷி என்ற பயங்கரவாதத்திற்கு எதிரான படையின் தலைமையில் இருந்த ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புடைய சுவாமி அசீமானந்தா சாத்வி பிரக்ஞ்யா இன்னும் சிலருடன் இராணுவ அதிகாரியான புரோகித் என்பவனும் கைது செய்யப்பட்ட பின்தான் குண்டு வெடிப்புகள் அனைத்துமே இவர்களின் சதிவேலைதான் என்ற உண்மை தெரிந்தது. இராணுவத்தின் ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் பயன்படுத்த பட்டதும் தெரிய வந்தது.

ஆனால் இதை வெளியே கொண்டுவந்த கர்கரே 9/11 மும்பைத் தாக்குதல் என்றழைக்கப்படும் சம்பவத்தின் போது சந்தேகத்துக்கு இடமான முறையில் கொல்லப்பட்டார். சனாதன இந்துத்துவ சக்திகள் அந்த அளவிற்கு அரசு இயந்திரத்தில் ஊடுருவி உள்ளனர்.

கர்கரே யின் மரணத்திற்கு பிறகு வழக்கின் திசையே மாறியது. பிணையில் வந்த பெண் பயங்கரவாதி சாத்வி பிரக்ஞ்யா 2014 பாராளுமண்றத் தேர்தலில் போபால் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக நின்று -இந்துக்களை காக்க சிறை சென்றவர் எனப் பாராட்டப் பட்டார். பெரும் வெற்றியும் பெற்றார். பயங்கரவாதியை தேச பக்தன் ஆக்கும் மாயவித்தை அறிந்தவர்கள் இவர்கள். 2019ல் குற்றமற்றவர்கள் என விடுதலையும் அடைந்தார்கள்.

தேர்தலில் வெற்றி பெற எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை புல்வாமா தாக்குதல் நமக்கு தெளிவாகக் காட்டியுள்ளது. அன்றே பலரும் சதி வேலை எனச் சந்தேகப் பட்டதை அண்மையில் அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கும் இச்சம்பவத்திற்கும் ஆன தொடர்பைப் பற்றிய தனது ஐயத்தின் மூலம் உறுதிப்படுத்திள்ளார்.

40 இந்திய ராணுவ வீரர்கள் அநியாயமாகப் பலியிடப் பட்டனர் என்பதை நாம் அறிவோம். இதை எவரும் கேள்வி கேட்க இயலாது ஏனெனில் தேசத்திற்கு எதிரானது இம்மாதிரியான கேள்வி.

இன்றைய பாராளுமன்ற புகைக் குண்டு வீச்சும் மேற்கூறியதைப் போலவே அப்பாவி இளைஞர்களின் உண்மையான கோபத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் சங்கபரிவார் கூட்டத்தினர் நிகழ்த்திய சதிவேலையாக இருக்க வாய்ப்புள்ளது. கருத்துக் கணிப்புகளை தலைகீழாக்கிய சமீபத்திய தேர்தல் முடிவுகள் வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலுக்கு பின் பெருத்த சந்தேகங்கள் வட மாநிலங்களிலேயே பரவி வருகிறது. இதை மடை மாற்றவும், 370 சட்டப் பிரிவு நீக்கம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை சரிகட்டவும் இதைப் போன்ற சித்து விளையாட்டுக்களை சங்கப் பரிவார கும்பல்கள் நிச்சயமாக செய்திருக்கக் கூடும். எதிர்பார்த்தது போல மூன்று நான்கு நாட்கள் இதைப் பற்றிய செய்திகளே ஊடகங்களில் நிறைந்திருந்தன.

இத்தகைய சதிகாரர்கள் கூட்டத்திடம் இருந்து இந்திய மக்களைக் காக்க தேசிய இனங்களின் உரிமைகளைக் காக்க, உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காக்க, மொழி- இனச் சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் காக்க பார்ப்பன- குஜராத்தி பனியாக்களுக்கு ஆதரவான ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியினை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயக சக்திகள் முன் உள்ள ஒரே வழியாகும்.

- மாரியப்பன்

Pin It