இந்தியப் பிரதமர் மோடியும் சீனத் தலைவர் ஜின்பிங்கும் அண்மையில் மாமல்லபுரத்தில் சந்தித்ததை அச்சு, ஒளி ஊடகங்கள் பெரிய அளவில் முதன்மைப்படுத்தின. இந்தச் சந்திப்புக் குறித்து இந்தியாவினுடைய சீனத் தூதர் ஆங்கில இந்து நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் இந்தச் சந்திப்பு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இன்றுள்ள வர்த்தக உறவில் பெரிய அளவிற்கு மாற்றங்களை உருவாக்க வேண்டும். இரண்டு நாடுகளின் பொருளாதார அமைப்புகளும் ஒன்றுக்கொன்று எதிர்காலத்தில் உதவியாக இருந்திட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும் இந்தியாவில் தற்போது காணப்படுகின்ற பொருளாதாரத் தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது சீன அரசு பல இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்யும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது சீனாவின் ஏற்றுமதி அளவு அதிகமாகவும் இந்தியாவின் ஏற்றுமதி அளவு குறைவாகவும் உள்ளது. 15 விழுக்காட்டளவில் சீனாவின் வர்த்தகத்தில் இந்தியா விற்குத் துண்டு விழுந்துள்ளது. இந்தியாவிற்கு உதவிடும் எண்ணத்தில் இந்த வர்த்தகத்தில் காணப்படும் பற்றாக் குறையை 1.5 விழுக்காடு அளவிற்குக் குறைக்கச் சீனா முயற்சிகளை மேற்கோள்ளும் என்றும் கூறியுள்ளார். இந்தப் புள்ளிவிவரங்கள்தான் பல செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளன. இதைத் தவிர வேறு எவ்வித நன்மையும் இந்தியாவிற்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

modi with Xiமாவோ-சீனா டெங்-சீனா ஜின்பிங்-சீனா என மூன்று வகை அரசியல் பொருளாதார நிலைகள் இந்தியா-சீனா வர்த்தக உறவிலும் நட்புறவிலும் உள்ளன.

மாவோ-சீனப் பொருளாதாரம் முழுக்க முழுக்க தற்சார்புச் சோசலிசக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1978ஆம் ஆண்டில் டெங் தலைமையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பல பொருளாதாரக் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன. மாவோவின் கம்யூன் முறையை மாற்றுவதாகக் கூறிப் பல கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. இன்றும் சீனாவில் தனியார் நிலவுடைமை முற்றிலும் கிடையாது. 1971 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் சீனா ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இணைந்தது. 1972 ஆம் ஆண்டு மாவோ-நிக்சன் சந்திப்பிற்குப் பிறகுதான் சீன-அமெரிக்க வர்த்தக உறவுகள் பெருகின. வெளிநாட்டிலிருந்து சீனப் பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில் நுட்பமும் அந்நிய முதலீடுகளும் பெறப்பட்டன. இதன் காரணமாக சீனப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் கொள்கை ஊடுருவியது.

உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலிமையாக்கிக் கொண்டு சீனாவிற்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டவுடன் 1994 ஆம் ஆண்டில்தான் சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைந்தது. இன்றளவிற்குக்கூட சீனாவினுடைய நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் வேளாண் தொழிலின் பங்கு 7.2 விழுக்காடாக உள்ளது. தொழில் துறையின் பங்கு 40.7 விழுக்காடாகவும் பணித்துறையின் பங்கு 52.1 விழுக்காடாகவும் உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் சீனா வின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் வேளாண் துறையின் பங்கு இந்தியாவைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதே போன்று தொழில் துறையிலும் இந்தியாவினுடைய பங்கைவிட அதிக விழுக்காட்டு அளவில் சீனா உள்ளது. வேளாண் தொழில் துறைகளின் உற்பத்தியில் 100 விழுக்காடு சீன மக்களே ஈடுபடுகின்றனர். பணித் துறையிலும் 90 விழுக்காட்டிற்கு மேல் சீன மக்களே பணி யாற்றுகின்றனர். சீனாவில் நகர்ப்புற நிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

இந்தியாவைவிட அதிக அந்நிய முதலீடுகளைப் பன்னாட்டு வணிகக் கழகங்கள் வழியாகப் பெற்றாலும் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவின் நிலத்தை வாங்க இயலாது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகை அளித்துத்தான் நிலங்களைப் பெற முடியும். அது போன்றே தொழில் துறையில் பங்கு பெறுகிற வெளிநாட்டு நிறுவனங்கள் சீனா தொழிலாளர் களுக்கு அளிக்கும் கூலி, ஊதியம் ஆகியன சீன அரசால்தான் உறுதி செய்யப்படுகின்றன.

1994 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல நாடுகளுக்குச் சீனா தனது பொருள்களை ஏற்றுமதி செய்தாலும் அமெரிக்காவிற்குப் பெருமளவில் தனது ஏற்றுமதியை உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பிறகு பெருக்கியது. உலகளவில் ஏற்படுகின்ற வர்த்தக வளர்ச்சி இன்றைக்கு 3 விழுக்காடாக சரிந்துள்ளது. ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 2 முதல் 3 விழுக்காடாக உள்ள சூழலில் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து சரிவினைச் சந்தித்து வருகின்றது. அமெரிக்காவின் கடன் பெருகி நிதிநெருக்கடியையும் சந்தித்து வருகின்றது. சீனப் பொருள்களின் ஏற்றுமதியால் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவு நிலையை நோக்கிச் செல்வதால் தற்போது இரு நாடுகளுக்கிடையே வர்த்தகப் போர் உருவாகி யுள்ளது. இருப்பினும் சீன உள்நாட்டுப் பொருளாதாரம் இந்தியாவைப் போன்று கவலை கொள்ளும் வகையில் சரியவில்லை. இந்தியாவின் புள்ளிவிவரங்களைச் சீனாவின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவின் உள்நாட்டுக் கட்டமைப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை உணரலாம். சான்றாக பட்டேல் சிலையையே சீனாதான் வடிவமைத்தது.

இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகளானாலும் நிலம் தனியார் கைகளில்தான் உள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் நிலங்களையும் சுரங்கங்களையும் கைப்பற்றிப் பன்மடங்கு லாபத்தினை அடைகின்றன. சீனாவின் வேளாண் தொழில் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. குறிப்பாக ஊரக வேலைவாய்ப்பு சீனாவில் முழு அளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் துறையிலும் சீன உற்பத்தியாளர்கள் உலகளவில் வளர்ந்து வருகின்றனர். கணினி வன்பொருள் உற்பத்தியில் சீனா முதலாவது இடத்தில் தொடர்ந்து உள்ளது. ஆனால் இந்தியாவைப் போன்று அமெரிக்காவினுடைய மிரட்டலுக்கு அடி பணிந்து போகின்ற நிலை சீனாவிற்கு இல்லை. 2019 மே மாதம் முதல் ஈரானிட மிருந்து பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதிச் செய்யக் கூடாது என்ற அமெரிக்கக் கட்டளையை ஏற்று இந்தியா இறக்குமதியை நிறுத்திவிட்டது. இதனால் டாலர் மதிப்பில் அதிக விலையில் அமெரிக்க உட்பட பல நாடுகளிலிலிருந்து பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியா தனது அரசுரிமையை இழந்து அமெரிக்கவின் அடிமையாக உள்ளது.

காங்-பாசக ஆட்சிகள் உலகமயமாதல் திட்டத்தின் கீழ் நாட்டின் வளங்களைச் சுரண்டுபவர்களுக்குத் துணை நிற்கின்றன. அண்மைப் புள்ளி விவரங்களும் இதை உறுதிச் செய்கின்றன. இந்தியாவில் 1 விழுக்காடே உள்ள பெரும் பணக் காரர்கள் 58 விழுக்காடு அளவு நாட்டின் செல்வத்தை வைத் துள்ளனர். இது உலக சராசரி 50 விழுக்காட்டைவிட அதிகமாக உள்ளது. இந்த 1 விழுக்காட்டுச் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் 21 இலட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 50 விழுக்காடு அளவு உள்ள 67 கோடி இந்திய மக்களின் செல்வம் ஒரு விழுக்காடே உயர்ந்துள்ளது. ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற ஊர்ப்புற வேலையின்மை சராசரியாக 10 விழுக்காடு உயர்ந்துள்ளது.

சீனாவின் புள்ளிவிவரங்களின்படி மாவோவிற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவக் கொள்கைகள் சீனாவில் ஏற்றத்தாழ்வுகளை அதகரித்திருந்தாலும் மக்களின் அடிப்படை வாழ்வு பாதிப்புக்குள்ளாகவில்லை. 2015ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி 50 விழுக்காடு மக்கள் தொகை யினர் 15 விழுக்காடு நாட்டு வருமானத்தைப் பெறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் 12 விழுக்காட்டு அளவிலும் பிரான்சில் 22 விழுக்காட்டு அளவிலும் பெறுகின்றனர். தனி மனிதர் வருமானம் நகர்ப்புறங்களிலும் ஊர்ப்புறங்களிலும் சீனாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பொதுத் துறை நிறுவனங் களை வலிமைப்படுத்துவதற்கும் சீரமைப்பதற்கும் பலப் பல புதிய திட்டங்களைச் சீன அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. சீனாவில் சமத்துவப் பொருளாதாரம் நடைமுறையில் இருப்பதால் ஏற்றத்தாழ்வுகள் பெருகினாலும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பெருமளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படவில்லை என்றே பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகளவில் தற்போது ஒரு நாட்டினுடைய மக்களின் வளர்ச்சியை ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிடும் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படை யிலேயே கணக்கிடுகின்றனர். அதன்படி 189 நாடுகள் உலகத் தர வரிசைப் பட்டியலில் சீனா 86ஆம் இடத்திலும் இந்தியா 130ஆம் இடத்திலும் 2018ஆம் ஆண்டில் உள்ளன. அதே வறுமை ஒழிப்பில் சீனா உலகத்தின் முதல் இடத்தில் உள்ளது. 1981இல் 88 விழுக்காடு இருந்த வறுமையின் அளவு 2015இல் 0.7 விழுக்காடு என்று குறைந்துள்ளது. 2019ஆண்டு பசியால் வாடும் மக்களின் 118 நாடுகளின் வரிசைப் பட்டியலில் சீனா 25ஆவது இடத்திலும் இந்தியா 102ஆவது இடத்திலும் உள்ளன. வங்காள தேசம் 88 இடத்திலும் பாகிஸ்தான் 94 இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

2018 புள்ளிவிவரப்படி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இந்தியா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. 4.6 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டி னால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளன. 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் 42 விழுக்காடு இந்தி பேசும் வட மாநிலங்களி லேயே உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு 2 விழுக்காடு அளவில்தான் காணப்படுகிறது. இத்தகைய ஊட்டச்சத்துக் குறைபாட்டை நோபல் பரிசுப் பெற்ற அமெர்தியா சென் குழந்தைகள் மீது ஏவப்பட்ட பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு எல்லா நிலைகளிலும் இந்தியா வினுடைய வளர்ச்சிக் குறியீடுகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்தியாவின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி ஒன்றிய அரசு 6 விழுக்காடு என்று அறிவித்தாலும் உண்மையில் 2015க்குப் பிறகு படிப்படியாகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ந்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 3.5 விழுகாடுதான் உள்ளது என்று பல பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் பொதுத் துறை வங்கிகளின் வராக்கடன் அளவும் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. 2019ஆம் ஆண்டில் இந்த வராகடன்களும் தனியார் செய்யும் வங்கி மோசடிகளும் பெருமளவிற்குப் பெருகி வருகின்றன. மோட்டார் வாகனத் தொழில்கள் சிறுகுறு தொழில்களும் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன. பல தொழில்கூடங்கள் மூடப்பட்டுத் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சீன இந்தியத் தலைவர்கள் சந்திப்பு எந்தளவிற்கு வெற்றி பெற்றது என்பதை யாரும் குறிப்பிட முடியாது. காரணம் எந்தவிதத் திட்டங்களும் இல்லாமல் நட்புறவு அடிப்படையில்தான் இதுவரை இந்த இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். உலகப் பொருளாதாரச் சரிவால் சீனாவின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்தாலும் இந்தியா போன்று பெரிய பொருளாதாரச் சிக்கலில் மாட்டவில்லை.

இந்தியாவின் ஆட்சியியலில் மதவாதம் பெருகியுள்ளது. வடமாநிலங்களில் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மையினரையும் தலித் மக்களையும் தாக்கிக் கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. மக்கள் பிரச்சி னைகளில் கவனம் செலுத்தாமல் பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பைத் திசைத் திருப்புவதற்காகக் காசுமீர் பிரச்சினையை இந்தியாவின் பெரும் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு 370வது பரிவினை நீக்கியுள்ளனர். காசுமீர் மக்களின் சனநாயக உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்திய-சீன நாடுகளுக்கிடையே காணப்படும் எல்லைப் பிரச்சினையை அணுகுவதில் இந்தியா கடைப் பிடிக்கும் பொறுமையைக் காசுமீர் பிரச்சினையில் ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று பல ஆய்வாளர்கள் வினா எழுப்பியுள்ளனர். எனவே இந்தியா சீனத் தலைவர்களின் மாமல்லபுரத்துச் சந்திப்பும் ஒருவித திசை திருப்பும் நாடகமா? என்று மக்கள் ஐயுறுகின்றனர்.

- குட்டுவன்

Pin It