இந்நூல் விவாதக் களத்தின் முக்கியமான இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது அம்சம், இந்தியப் பொதுவுடைமை இயக்கம் என்பது இந்தக் கட்சி, அந்தக் கட்சி மட்டுமில்லை. ஒட்டுமொத்தமாக எல்லோரையும் உள்ளடக்கி விவாதிக்கும் முறை. அவ்வாறு விவாதிக்கும்போது இன்னவர் நம்மவர் - நம் கட்சி, இன்னார் பிறர் - பிற கட்சி என்ற பிரிவினையோ, பொதுவுடைமை கோஷ்டிப் பிரிவினைகளையோ கருத்தில் கொள்ளாமல், அடிப்படையான தத்துவார்த்த கேள்விகளின் மீது கவனம் குவிக்கின்றார் என்பது இவ்விவாதத்தின் இரண்டாவது அம்சம்.

- பதிப்புரை

pandiyan 450மத அடிப்படைவாதமும் ஒற்றைப் பண்பாட்டு வாதமும் மட்டுமின்றி இவற்றின் துணையுடன் மிகப் பச்சையான முதலாளித்துவப் பொருளாதாரம் இன்று இந்தியாவில், அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகளுடனான நெருக்கமான துணையுடன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. ஜெர்மனியில் ஹிட்லரின் தொடக்க கால அரசியலை நினைவூட்டும் வகையில் நிகழ்வுகள் நிகழத் தொடங்கிவிட்டன. சாதி, மதத்தின் மீது கொண்டுள்ள மட்டுமீறிய பற்றின் காரணமாக மக்களில் பலர் இவற்றைப் பிரித்தறியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

இத்தகைய சூழலில் ஜனநாயக உணர்வு கொண்டோர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது உரிமையுடன் கூடிய தம் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர். முகநூல், கட்செவி அஞ்சல், பத்திரிகைகள், இவற்றின் வாயிலாகத் தம் விமர்சனங் களை வெளிப்படுத்துகின்றனர். மற்றொரு பக்கம், நூல் களும்கூட வெளிவரத் தொடங்கிவிட்டன. இவற்றில் வெளிப்படுவது அவர்களது ஆற்றாமை உணர்வும் எதிர்பார்ப்பும்தான். இச்சூழலில்தான் இந்நூல் வெளியாகியுள்ளது.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் தோழர் தா.பாண்டியன் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வழக்கறிஞரும் கூட. எழுத்தாளர், இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், மேடைப் பேச்சாளர் எனப் பல துறைகளில் தடம் பதித்தவர். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். தமிழக அளவிலும், இந்திய அளவிலும் கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளில் இருந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். ஓர் இயக்கவாதியாகவும் பொது மக்களில் ஒருவராகவும் நின்று இந்நூலை எழுதியுள்ளார். இந்நூலின் தொடக்க இயலின் தலைப்பே “கேள்விகள்” என்பதாகும். இந்த இயலில் மட்டுமின்றி, நூலெங்கும் பல கேள்விகளை எழுப்பி விடை கூறிச் செல்கிறார். இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள பேராசிரியர்

ந.முத்துமோகனின் மொழியில் கூறுவதானால் “அடுக்கடுக்காக அலைஅலையாக கொத்துக் கொத்தாகப் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.”

நூல்

இந்நூலை ஒரு நூலாக மட்டுமின்றி ஓர் ஆவண மாகவும் கொள்ள இடமுண்டு. விவாதத்திற்கான கருத்துகளை எழுத்து வடிவில் கட்சி உறுப்பினர் களிடையே சுற்றுக்கு விடுவது உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடைமுறைகளில் ஒன்று. ஆங்கிலத்தில் இவ்வெழுத்துப் படியை, “டாக்குமெண்ட்” என்பர். கடந்த காலத்தில் “தஸ்தாவேஜு” என்று குறிப்பிட்டனர். தற்போது ஆவணம் என்ற சொல்லால் குறிப்பிடலாம்.

ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. இந்த ஆவணம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டும் உரியதல்ல. கட்சி என்ற எல்லையைக் கடந்து நின்று, இந்திய நாடானது முற்போக்கான திசையில் பயணிக்க வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் உரியது. சில முக்கிய அரசியல், தத்துவார்த்த பிரச்சினைகள் எழும்போது இதுபோன்று பொது வெளியில் விவாதத் திற்காக ஆவணங்களை முன்வைக்கும் மரபும் உண்டு.

1962இல் சீனாவையும் சோவியத் யூனியனையும் மையமாகக் கொண்டு உலக கம்யூனிஸ்ட் கட்சி களிடையே விவாதங்கள் எழுந்தபோது, இதுபோன்ற ஆவணங்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டன. இதில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் டோக்கிளியாட்டி முன்வைத்த ஆவணம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அப்போது விளங்கியது. இவை உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லாதவர்களாலும் படித்து விவாதிக்கப்பட்டன. தமிழிலும் இவை மொழி பெயர்க்கப்பட்டன [உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவும் தத்துவார்த்த பிரச்சினைகள் (9 புத்தகங்கள்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு, 1963]. இருபதாம் நூற்றாண்டின் பின் நவீனத்துவம் புதிய கோட்பாடுகள் உருவான போது அக்கோட்பாட்டியலாளர்களுடன் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய விவாதங்கள் ஆவணமாகச் சுற்றுக்கு வந்தன.

பெரியார், திராவிட முன்னேற்ற இயக்கம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்து ஆவணம் ஒன்றைத் தயாரித்து, விவாதங்கள் நடத்திய அனுபவங்களும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு. 1968இல் கீழவெண்மணி கொடூரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அமைத்த கணபதியாபிள்ளை விசாரணை ஆணையத்தின் முன்பும், தென்மாவட்ட சாதிக் கலவரங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதியரசர் மோகன் விசாரணை ஆணையத்திலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்வைத்த ஆவணங்கள், அபிடவுட் வெறும் நீதிமன்ற ஆவணமாக மட்டுமில்லாமல், சமூகவியல் ஆவண மாகவும் அமைந்துள்ளன.

ஆவணப் பகிர்வு என்பது கட்சி சார்ந்த ஒரு சடங்கு அல்ல. ஒரு பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளவும் விவாதித்து முடிவெடுக்கவும் ஆவணப் பகிர்வு துணைநிற்கும். கடந்த காலத் தவறுகளைப் புரிந்து திருத்திக் கொள்ளவும் எதிர்காலச் செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் துணைநிற்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட ஆவணம் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் சரியானது என்ற முடிவுக்கோ, அவை முன்வைக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானவை என்ற முடிவுக்கோ வராது, விவாதத்தினூடாகக் கொள்வன கொண்டு, தள்ளுவனவற்றைத் தள்ளி ஒரு முடிவுக்கு வரமுடியும். ஆனால் இதற்கு அடிப்படைத் தேவையானது திறந்த மனதுடன் ஒரு ஆவணத்தின் கருத்துகளைப் படித்தறிவதுதான். இத்தகைய அணுகுமுறையிலேயே தோழர் தா.பா.வின் இந்நூலை அணுக வேண்டும்.

ஆசிரியர் எழுப்பும் கேள்விகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை நோக்கி, குதர்க்கமாக இன்றி, உண்மையான அன்புடனோ, அனுதாபத்துடனோ பலரும் எழுப்பும், “கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருவது ஏன்?” என்ற வினாவுடன் தொடங்குகின்றது. மொத்தம் 41 கேள்விகளை ஆசிரியர் எழுப்பியுள்ளார். இதில் 41வது கேள்வி 6 உப கேள்விகளை உள்ளடக்கியது. இக்கேள்விகள் அனைத் தையும் இக்கட்டுரையில் பதிவு செய்ய இயலாது என்பதால் முக்கியமான 13 கேள்விகள் மட்டும் இங்குக் குறிப்பிடப்படுகின்றன.

· 1917இல் ரஷ்யாவில் புரட்சியின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்து 1990 வரையில் நீடித்து, பல சாதனைகளைப் புரிந்தபிறகும், நிலைகுலைந்து கலைந்து போனது ஏன்? (2)

·                            மீண்டும் முதலாளித்துவமும், ஆன்மீகமும் புது பலம் பெற்றது ஏன்? (3)

· சோவியத் ஆட்சி அமைப்போடு, ஐரோப்பா விலும் பல நாடுகளில் அமைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிகளும் நிலை குலைந்தது ஏன்? (4)

· உலகம் முழுமையிலும் ஒரே கொள்கை, ஒரே லட்சியம், கட்சிக் கட்டுப்பாடு, புரட்சி முழக்கம், போர்க்குணம் என இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அதன் சர்வதேச கட்டுக் கோப்பை இழந்தது ஏன்? (4)

· உலக முதலாளிகளும், சகலவகை சுரண்டும் சக்திகளும், பிற்போக்குச் சிந்தனையாளர்களும் தேச எல்லைகளைத் தாண்டி உலகமயம் என ஒன்றுபட்டிருப்பது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் அல்லவா? இதனால் கம்யூனிச தத்துவம் காலாவதி ஆகி விட்டது எனக் கூறலாமா? (14)

· இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் முறைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் (Organised Sector) பணிபுரியும் தொழிலாளர் களில் பெரும்பான்மையினர் சாதி, மத தொழிற் சங்கங்களைத் தொடங்கியிருப்பதும், அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தொழிற்சங்கத்தில் மிக அதிகமான தொழிலாளர்கள் சேர்ந்திருப்பதும், தொழிலாளர்களே கம்யூனிஸ்டுகளை நிராகரித்து விட்டார்கள் எனக் கருதலாமா? (15)

· தனியார் முதலாளிகள் நடத்தும் எண்ணற்ற நிறுவனங்களில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட தொழிற்சங்கங்கள் ஓரங்கட்டப் பட்டிருப்பது ஏன்? தொழிலாளிகள் முற் போக்கு தொழிற்சங்கவாதிகளின் தலைமையி லிருந்து விலகுவது ஏன்? (16)

· சோஷலிச நாடுகளின் உதவியோடு கட்டப் பட்ட பொதுத்துறை நிறுவனங்களில்கூட (NLC, BHEL, பிலாய், ONGC, ரயில்வே போன்றவற்றிலும்) கம்யூனிஸ்டுகளின் தலை மையிலான சங்கங்கள் வலுவிழந்திருப்பது ஏன்? சாதிவழிச் சங்கங்கள் தோன்றியது ஏன்? (17)

· 1917 முதல் 1945 வரையிலும், அதற்குப் பின்னர் 1962 வரையிலும் கூட எல்லா நாடுகளிலும் இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எனப் புகழ்பெற்ற பலர் இருந்து மறைந்து, அவர் களில் பெரும்பான்மையோர் இக்கட்சிகளை விட்டு வெளியில் சென்றிருப்பது ஏன்? (18)

· இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரப் பங்காற்றி தியாகமும் செய்த கம்யூனிஸ்ட் கட்சி, தேசபக்தியுள்ள கட்சியாகக் கருதப்படாமல் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது ஏன்? (20)

· இந்தியாவில் சாதிப் படிவரிசை காரணமாக, மிகவும் அநியாயமாக ஒடுக்கப்பட்ட மக்கள் உடைமையும் மறுக்கப்பட்டு, மனித உரிமை களும் பறிக்கப்பட்டு, கோவில்களுக்கு உள்ளே மட்டுமல்லாமல் கல்விக் கூடங்களுக்குள் நுழைந்து படிக்கவும் அனுமதிக்கப்பட வில்லை.  தொழிற்சாலைகளிலும் ஒடுக்கப் பட்டோர் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை. ஆகவே, அவர்கள் இந்தியாவில் மனிதர்களாகவே அங்கீகரிக்கப்படாதபோது, எப்போது தொழிலாளி ஆவார்கள்? எப்போது வர்க்க உணர்வைப் பெறுவார்கள்? எப்போது புரட்சியில் பங்கேற்க முடியும்? இந்த சமுதாயக் கொடுமையை கண்டித்தும், எதிர்த்தும், மாற்ற வேண்டுமென்றும் போராடிய ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார் போன்றோருடன் வைத்திருந்த உறவு எத்தகையது? (23)

· டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த காலம் முழுமை யிலும் அவர் எழுதியும் வந்தார், இயக்கங்கள் நடத்தியும் வந்தார்.  உச்ச சாதனையாக மதச் சார்பற்ற ஒரு அரசியல் சட்டத்தை இந்த நாட்டிற்காக எழுதி நிறைவேற்றவும் முக்கியப் பங்காற்றினார்.  அதற்குப் பிறகும் அவர் சில ஆண்டுகள் வாழ்ந்தார்.  இருப்பினும், அப் போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேடையில் அவர் பெயர் குறிப்பிடப்படாதது ஏன்? தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது அலுவலகங்களிலும், தொழிற்சங்க அலுவலகங்களிலும், இளைஞர் மாணவர் அமைப்புக்களிலும் அம்பேத்கர், பெரியார் போன்றோரின் படங்களும் வைக்கப் படுகின்றன.  அவர்களது சிலைகளுக்கு மாலைகளும் சூட்டப்படுகின்றன.  இத்தகைய அணுகுமுறையை அவர்கள் போராடிய காலத்தில் கடைப்பிடிக்காதது ஏன்? சேர்ந்து போராடாதது ஏன்? (24)

· சீன நாடு தற்போது கடைப்பிடித்துவரும் கலப்புப் பொருளாதாரக் கொள்கையை எவ்வாறு மதிப்பிடுவது? (30) (அடைப்புக்குறிக்குள் கேள்வி வரிசை எண் இடம் பெற்றுள்ளது)

இக்கேள்விகளை எழுப்பி, கேள்வி-பதில் வடிவில் இந்நூலை நூலாசிரியர் அமைத்துக்கொள்ளவில்லை. கேள்விகளை மையமாகக் கொண்டு, தமது இயக்க அனுபவம் நூலறிவு இவற்றின் துணையுடன் விவாதித்துச் செல்கிறார். இவ்விவாதத்தின்போது உலக அரங்கின் நிகழ்வுகளையும் இந்திய, தமிழ்நாட்டு நிகழ்வுகளையும் உரிய இடத்தில் தமக்கே உரிய ஆற்றலான நடையில் முன்வைத்து விவாதிக்கிறார்.  அவர் விவாதிக்கும் கருத்துகளை அடுத்த இதழில் காண்போம்.

பொதுவுடைமையரின் வருங்காலம்?
ஆசிரியர்: தா.பாண்டியன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,
அம்பத்தூர், சென்னை - 600 098
தொடர்புக்கு : 044 - 26251968
விலை: ` 250/-

(தொடரும்...)

 

Pin It