பேனா யார் கையில் இருக்கிறது என்பதைப் பொருத்தே, எழுத்தின் தரம் அமைகிறது. பொத்தாம் பொதுவான நலனும் இல்லை, பொத்தாம் பொதுவான கண்ணோட்டமும் இல்லை என்பது போலவே பொத்தாம் பொதுவான இலக்கியமும் இல்லை. அதனால் இலக்கியத்தை தரம் பிரித்தே அணுக முடியுமென்று நம்புகிறேன்.

சமூகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களைப் பற்றி எழுதும்போது அவர்களின் சமூகப் பின்னணியைக் குறித்த தெளிவோடே எழுத வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் அவர்களின் சொந்த வர்க்க நலன் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டே, சமூகம் குறித்த படைப்புகளை உருவாக்க வேண்டும். அதுபோலவே ஆண் மற்றும் பெண்ணுக்கிடையிலான வாழ்நிலை வேறுபாடு; ஆதிக்கப் பிரிவினர் மற்றும் அடிமை சமூகப் பின்னணி உள்ளவர்களுக்கு இடையேயான வேறுபட்ட சமூக செயல்பாடு எனப் பிரித்து அணுக வேண்டும்.

Lakshmi Saravanakumar's 'Uppu Naigal'இவ்வாறில்லாமல், எழுதப்படுபவை எல்லாம் இலக்கியம் என்றால், பொதுக் கழிப்பிட சுவர்களில் எழுதப்படுபவையும் இலக்கியமா என்று கேள்வி வருகிறது. ஆனால், அப்படி ஒரு தரத்தில் எழுதப்பட்ட நாவலாகத்தான் லஷ்மி சரவணகுமாரின் ‘உப்பு நாய்கள்’ இருக்கிறது.

வெகு நாட்களுக்கு முன்பு படித்த ஒரு சிறுகதை. எழுதியது ஜெயகாந்தன் என்று நினைவு. சென்னையில் நடைபாதையில் வசிக்கும் ஒரு அம்மா, மகள். அவர்களுக்கு அருகில் வசிக்கும் இன்னொரு இளைஞன். ஒரு நாள் அந்த அம்மா இறந்து விடுகிறார். ஆதரவற்று இருக்கும் அப்பெண்ணை அந்த இளைஞன் திருமணம் செய்து கொள்கிறான். இருவருக்கும் சொந்த வீடு இல்லை. முதலிரவுக்காக பல இடங்களைத் தேடி, கடைசியில் பூட்டியிருந்த ஒரு பூங்காவிற்குள் சுவர் ஏறிக் குதிக்கிறார்கள். அப்போது, போலீஸ் வந்து அவர்கள் இருவரையும் சந்தேகப்பட்டு பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறது. அவ்வளவுதான் கதை.

அந்த சிறுகதை எனக்குள் எழுப்பிய அதிர்வலைகள் அடங்குவதற்கு பல நாட்கள் பிடித்தது. முதலிரவுக்கு இடம் தேடி ஒரு புதுமணத் தம்பதி அலைவதுதான் கதையின் one line. ஆனால், அக்கதை காமத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசவேயில்லை. அதேபோல், காமம் மட்டுமே அக்கதையும் இல்லை. நடைபாதைவாசிகளின் வாழ்க்கைச் சூழல், அவர்களது அன்றாட பாடு, ஒருவருக்கொருவர் ஆதரவாக அவர்கள் நிற்பது என அவர்களது உலகம் நம்முன் அவ்வளவு அழகாக விரியும். நமக்கு எல்லாம் பெரிய சிக்கலாக, செலவாக இருக்கும் திருமணம் அவர்களுக்கு எளிமையாக முடிவதும், நமக்கு எல்லாம் எளிதாக நடக்கும் முதலிரவு அவர்களுக்கு அவ்வளவு பெரிய சிக்கலாக இருப்பதும் எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். அவர்கள் இருவருக்கும் ஒரு மறைவான இடம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற பதற்றம் வாசகர்களுக்கும் தொற்றிவிடும். இறுதியில் முதலிரவு நடக்காமலே அவர்கள் போலீசால் பிடித்துச் செல்லப்படும்போது, நமக்குள் ஏற்படும் ஆற்றாமைதான் அந்த எழுத்தாளரின் வெற்றி. அச்சிறுகதையைப் படித்த யார் ஒருவருக்கும், நடைபாதைவாசிகள் மீதான அக்கறையும், கரிசனையும் கூடியிருக்கும். 

ஒரு சிறுகதையில் சாத்தியப்பட்டிருந்த அந்த விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையும், அவர்கள் மீதான கவனக்குவிப்பும், லஷ்மி சரவணகுமாரின் 280 பக்க நாவலில் சாத்தியப்படவில்லை. நாவல் முழுக்கவே வடசென்னையில் வாழும் விளிம்புநிலை மக்களை பின்புலமாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் அனைவரும் பிக்பாக்கெட் திருடர்கள், கஞ்சா விற்பவர்கள், நாய்க்கறி விற்பவர்கள், குழந்தைகளைக் கடத்துபவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், விபச்சாரம் செய்பவர்கள் என்றே உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். விதிவிலக்காக ஒன்றிரண்டு கட்டடத் தொழிலாளர் பாத்திரங்களும் உண்டு.

விளிம்புநிலை மக்களை நாவலாசிரியர் எப்படி அணுகுகிறார், அவர்களது வாழ்க்கையை எப்படி முன்வைக்கிறார் என்பதுதான் இந்த நாவலின் மிகப்பெரும் பிரச்சினை. அந்த மனிதர்களின் வாழ்க்கையை மிக மேலோட்டமாக அணுகுகிறார். ஒரு தாதா பற்றிய வித்தியாசமான கதை கிடைத்ததும், கமெர்ஷியலாக அதைப் படம் எடுக்கத் தயாராகும் ஒரு மசாலாப் பட இயக்குனரின் பார்வையிலிருந்து கொஞ்சமும் மாற்றமில்லாமல், அடித்தட்டு மக்களை அணுகுகிறார் லஷ்மி சரவணகுமார்.

அந்த மனிதர்கள் எப்படி சட்டப்புறம்பான தொழில்களைச் செய்கிறார்கள் என்பது பற்றிய விவரணையிலேயே நாவல் முழுமை அடைந்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார். அதோடு, நான்கு பக்கங்களுக்கு ஒரு முறை வரைமுறையற்ற பாலியல் புணர்ச்சியை எழுதிவிட்டால், நாவல் கிளாஸிக் தன்மையை அடைந்துவிடும் என்ற தட்டையான புரிதலைத் தாண்டி லஷ்மி சரவணகுமார் மேலேறி வரவே இல்லை. வடசென்னை மனிதர்களைப் பற்றி இதுவரை மேட்டுக்குடியினர் உருவாக்கி வைத்திருந்த கருத்தியலைத் தாண்டி ஒரு இன்ச் நகர்வதற்குக் கூட அவர் முயற்சிக்கவில்லை.

முறைகேடான தொழில் செய்பவர்கள் எல்லாம் முறைகேடான பாலியலில் ஈடுபடுவார்கள் என்ற சித்திரத்தை வலிந்து எழுதி இருக்கிறார். நண்பனுடன் படுக்கும் அம்மாவை நடுவீதியில் அம்மணமாக்கும் மகன், அந்த நண்பனின் ஆணுறுப்பை வெட்டி எடுத்துச் செல்கிறான். ஒரு குடிகார கட்டடத் தொழிலாளி தனது மகள் அருகில் இருக்க, தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுமாறு நண்பனைத் தூண்டுகிறான். அந்த மனைவி, மகளின் முன்னிலையில், அந்த நண்பனின் ஆணுறுப்பை கடித்துத் துப்புகிறாள்.

வடசென்னையில் இருக்கும் கன்னியாஸ்திரிகள் அந்த ஏரியா ரவுடிகளை தங்களது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கை நிறைய காசு வைத்திருக்கும், பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கஞ்சா வியாபாரி எந்தவித தர்க்க நியாயமுமின்றி ஓரினச் சேர்க்கை தூண்டலுக்கு ஒத்துழைக்கிறான்.

நாவல் முழுக்க கதை மாந்தர்கள் மாறி, மாறி பாலியல் வன்புணர்வில் அல்லது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு புணர்ச்சியும் நீண்ட நேரம் நீடிக்கிறது என்பதை விலாவாரியாக விவரித்து, திருப்தி அடைகிறார் லஷ்மி சரவணகுமார். ஒரு எழுத்தாளர், சிவராஜ் சித்த வைத்தியசாலையின் விளம்பரங்களை நம்பும் அளவிற்கா இருப்பது?

'மார்வாடி ஆண் என்றால் எந்நேரமும் பணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பான், மனைவியின் அருகில் கூட செல்ல மாட்டான்' என்பதெல்லாம் எவ்வளவு தட்டையான புரிதல். 'பணக்கார வீட்டுப் பெண்கள் எல்லாம் டிரைவருடன் தொடர்பு வைத்திருப்பார்கள்' என்று பேசும் டீக்கடை ஆண்கள் மனநிலையிலேவா ஒரு இலக்கியவாதியும் இருப்பது?

நாவலில் கொஞ்சம் ஆசுவாசம் அளிப்பது கட்டடத் தொழிலாளியின் மகள் ஆதம்மாவிற்கும், ஒரு ஐ.டி. நிறுவன ஊழியர் ஆர்த்திக்கும் இடையேயான அன்பு. ஆனால், அதுகூட இயல்புத் தன்மையில்லாமல், படுசெயற்கையாக தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் காட்சிகளைத் தாண்டிச் செல்லாமல் நின்றுவிடுகிறது. கட்டடத் தொழிலாளிகளின் பிள்ளைகள், தமிழ் சினிமா ஹீரோக்கள் போல், ‘நாங்கள் கட்டிய கட்டடம்; இதற்குள் நுழைய எங்களுக்கு அனுமதியில்லையா?’ என்று ஆவேசக் குரல் எழுப்பி ஐ.டி. நிறுவனத்திற்குள் நுழைவது எல்லாம் பெரிய காமெடி. விக்கிரமன் சினிமாக்களைத் தாண்டிய செண்டிமெண்ட் காட்சி நாவலின் இறுதியில் நிகழ்கிறது. போக்கிடம் இன்றி சொந்த ஊருக்குத் திரும்ப எத்தனிக்கும் ஆதம்மாவையும், அவளது அம்மாவையும் ஆர்த்தி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். ஆதம்மாவை பதினோரு வயதில் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் சேர்க்கிறாள். ஆதம்மாவைத் தன்னுடன் விளையாட விடுவதில்லை என தம்பியுடன் ஆர்த்தி சண்டை போடுகிறாள். நாவலாசிரியர் எழுதாமலேயே, பின்னணியில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ‘லாலா லல்ல லாலா’ ஹம்மிங் நமக்குக் கேட்கிறது.

இன்னொரு பெரிய கொடுமை, நாவலின் முடிவு. தென்கொரியாவின் புகழ்பெற்ற இயக்குனர் கிம் கி டுக் (Kim Ki-duk ) எடுத்த ‘3 IRON’ படத்திலிருந்து அப்பட்டமாக சுட்டுப் போட்டிருக்கிறார். அவ்வளவு கற்பனை வறட்சி!

வடசென்னை மக்களைப் பற்றி தமிழ் சினிமாவில்கூட ஆரோக்கியமான சித்தரிப்புகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால், தமிழ் இலக்கியவாதிகளின் எண்ணவோட்டம் வன்முறை, வக்கிரமான பாலியல் சித்தரிப்புகளைத் தாண்டி முன்னேறவே இல்லை என்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. இந்நாவலை ‘உலகத் தரமான ஒரு படைப்பு’ என்கிறார் சாரு நிவேதிதா. பாலியல் வக்கிரங்களை எழுதுவதில் தனக்கு ஒரு வாரிசு கிடைத்துவிட்ட சந்தோஷம் அவருக்கு இருக்கலாம். ஆனால், பாலியலை எழுதுவதில், வெகுஜன எழுத்தாளர்களான புஷ்பா தங்கதுரை, விக்கிரமனைக் கூட இவர்களால் தாண்டிச் செல்ல முடியவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. அதற்கும் கீழேதான் இவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட, இந்த மாதிரியான குப்பைகளிலேயே ஊறித் திளைத்து, ‘நாவல் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட பக்கங்களில் ஓளியைப் பாய்ச்சுகிறது; வாதையையும், வன்மத்தையும், காமத்தையும் அம்பாரமாகக் குமித்துச் செல்கிறது’ என்று எழுதும் இலக்கிய வியாக்கியானங்களைத்தான் தாங்க முடியவில்லை. இத்தகு வியாக்கியானங்களை நம்பித்தான், இந்த மாதிரியான நாவல்களை வாங்கி, நமது பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறோம்.

இலட்சக்கணக்கான மக்களுக்கிடையில் ஒரு சில பிக்பாக்கெட், விபச்சாரம், நாய்க்கறி விற்பவர்கள், போதை மருந்து விற்பவர்கள் போன்றோரின் அறிமுகம் கிடைத்தவுடன், வித்தியாசமான கதைக்களன் அமைந்துவிட்டதாகக் கருதி, அதை நாவலாக எழுதும் அவசரக்குடுக்கைத்தனம்தான் லஷ்மி சரவணகுமாரிடம் இருந்திருக்கிறது. அது ஒரு இலக்கியமாக எங்கேயும் பரிணமிக்கவில்லை; அந்த விளிம்புநிலை மக்கள்மீது எந்தவொரு கரிசனத்தையும், பரிவையும் நாவல் உருவாக்கவில்லை. மாறாக, 'வடசென்னை மக்கள் என்றால் ரவுடிகள், காசுக்காக எதையும் செய்வார்கள், எந்நேரமும் காமவெறி பிடித்து அலைவார்கள்' என்ற மேட்டுக்குடிப் புத்தியை மேலும் உரக்கச் சொல்கிறது.

அடித்தட்டுப் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எழுத வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதை எப்படி எழுதுகிறோம் என்பதில்தான் எழுத்தாளரின் வர்க்கக் கண்ணோட்டமும், சாதியக் கண்ணோட்டமும் வெளிப்படுகிறது. ‘சோளகர் தொட்டி’ நாவலில் பழங்குடிப் பெண்கள் மீதான காவல் துறையினரின் வன்புணர்வை தோழர் ச.பாலமுருகன் சித்தரித்திருப்பார். அது, அதிகார வர்க்கத்திற்கு எதிரான குரலாக ஒலிக்கும். ஆனால், சுந்தரராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதை, அடித்தட்டுப் பெண்கள் மீதான மற்றுமொரு வன்கொடுமையாக எழுதப்பட்டு இருக்கும். அதன் உச்சமாகத்தான் ‘உப்பு நாய்கள்’ நாவலும் அமைந்திருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பாலியல் வன்புணர்வுக் காட்சி இருந்தாலே, அந்தத் திரைப்பட இயக்குநரைக் காறித் துப்புகிறோம். ஆனால், ஒரு திரைப்படம் முழுக்க பாலியல் வன்புணர்வுக் காட்சிகளை அமைத்துவிட்டு, ‘பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் பதிவு செய்திருக்கிறேன்’ என்று ஒரு இயக்குநர் நியாயம் பேசினால், ‘எடு செருப்பை’ என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால், அதையே ஒரு நாவலாக எழுதியிருக்கிறார் லஷ்மி சரவணகுமார். அதை உலகின் சிறந்த படைப்பு என்கிறார் சா.நி.

லஷ்மி சரவணகுமார் திரைத்துறையில் இருப்பதாக அறிகிறேன். அவர் முயற்சித்தால், நடிகர் விஜயை வைத்து மிகச் சிறந்த வெற்றிப்படம் எடுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். அதற்கான திறமையும், உழைப்பும், சமூக அக்கறையும், நான் படித்த இந்த ஒரு நாவலிலேயே பளிச்செனத் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

- கீற்று நந்தன்

Pin It