kanmani rajamohmed book 450அண்மையில் வெளிவந்த கண்மணி ராஜா முகமதுவினுடைய ‘நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை’ - சிறுகதைத் தொகுப்பு, மக்கள் சார்பாக நின்று பேசும் தொகுப்பு. இத்தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் அடங்கியுள்ளன. அவை, அனைத்தும் மக்கள் பிரச்சனையை எடுத்துக்காட்டி, மக்களுக்காக வேண்டி குரல் கொடுக்கின்றன. புதுக்கதைகள் என்று சொல்லிக் கொண்டு, சிறுகதை வடிவத்தில் உப்பு சப்பற்ற ‘மாஜிக் கதைகள்’ தமிழ் இலக்கிய உலகில் ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கும் காலம், இது.

மக்கள் வாழ்க்கைக்கும், அம்மாதிரி கதைகளுக்கும் இடையே எந்தவித சம்பந்தமும் காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவை, சுய திருப்திக்காகவும், சுய ஆற்றலைக் கலை இலக்கிய உலகிற்குத் தெரியப்படுத்துவதற்காகவும் தான் எழுதப்படுகின்றன. அவர்களின் எழுத்துக்கள் தலித் மக்களைப் பற்றி பேசினாலும் சரி, ஏழை - எளிய உழைக்கும் மக்களைப் பற்றி பேசினாலும் சரி, பெண்களைப் பற்றி பேசினாலும் சரிதான்; அவர்கள் பக்கம் நின்று, அவர்களுக்குச் சார்பாக உரக்க குரல் கொடுக்கும் படைப்புகள் இன்று மிகவும் குறைவு. இதை, அழுத்திச் சொல்ல முடியும். இந்த வெளியை, சமீபத்தில் வெளிவந்த கண்மணி ராஜா முகமது அவர்களின் ‘நீங்கள், அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை’ சிறுகதைத் தொகுப்பு நிரப்பி உள்ளதாகத் தோன்றுகிறது.

சாதாரண ஒரு இளைஞனின் காதலுணர் வினையும், அவன் போக்கினையும் சித்தரிக்கும் கதை - ‘ரப்பர் மரத்துப்பால் (அல்லது) முப்பது நாளில் ஆங்கிலப் பாஷை’.

ஒரு ஆங்கிலோ - இண்டியன் இளம்பெண்ணின் மீது மோகம் கொண்டு, அப்பெண்ணை அடை வதற்காக வேண்டி (அதாவது, அதை புத்திசாலித் தனமாக பிக் - அப் பண்ணத் துடிக்கிறான்) கடும் பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். கிடார் வாசிக்க ஓடி நடக்கிறான். 30 நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். என்றாலும், அந்த ஏழை இளைஞனுக்கு தான் விரும்பும் பெண்ணை அடைவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது - என்பதை சில சுவையான அனுபவங்களின் வாயிலாக கதை, நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சாதாரணமாக ‘எல்லாப் பயலும் ஒரு தடவை தடவிப்பாத்துட்டு ஓடிப் போவாங்கன்னு தெரியும்!’ ஆனா, அவள் விரும்புகிற நோஞ்சப் பய, ஒரு பொட்டச்சிக் கிட்ட கூட ஒண்டாம, அண்டாம... தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு நோஞ்ச இருக்கிறதைப் பார்த்தப்போ... அப்பெண்ணுக்கு ஆம்பளைங்கற வார்த்தைக்கு அர்த்தமா தெரிஞ்சான். அந்த மண்டுப் பயலை... பேசி புரிய வச்சதேர அப்பெண்ணின் சாதனை தான்.

அதுக்கப்புறம் பயலுக்குள்ள ஒறங்கிக் கிடந்த சமாச்சாரம் வெளிப்பட்டப்போ... சிணுங்கினாள் பூமணி...

நோஞ்சான் - பூமணி உறவு, அவளுடைய சாதிக்காரர்களுக்கு வேம்பாய் கசக்கிறது. பூமணி அதன் பெயரில் துன்புறுத்தப்படுகிறாள். அவனோ, அடித்து நொறுக்கி ஊரை விட்டுத் துரத்தப்படு கிறான். தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கதை முடிவடைகிறது. என்ன ஆனாலுஞ்சரி, நாங்கள் புதிய சிந்தனைக்கும் (சாதி மறுப்புத் திருமணங்களுக்கு), காலம் ஏற்படுத்தி வரும் மாற்றங்களுக்கும் வழிவிடமாட்டோம் என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கைப் பாதையில் வந்து வழிமறிச்சான்களாக நின்று கொண்டிருக்கும் தீண்டாமை + சாதியுணர்வை கிராமத்துப் பின்னணியில் கலை நயத்தோடு படம்பிடித்துக் காட்டுகிறார், கண்மணி ராஜா முகமது. தீண்டாமை உணர்வுடன் திரியும் சாதி வெறியர்களின் மீது ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது, இச்சிறுகதை.

இந்துக்களும், இசுலாமியர்களும் சகோதரர்களே! எங்களுக்கு இடையே மதவேற்றுமை என்பது ஒரு விஷயமே இல்லை. தயவு செய்து மதவெறியைத் தூண்டிவிட்டு, எங்களுக்குள்ளே பகைமை உணர்வைக் கிளப்பிவிடாதீர்கள். மதம் வேறாக இருந்தாலும், நாங்கள் சகோதரர்களைப் போல் அன்புடன் கூடி வாழ்பவர்கள் - என்ற சேதியை ‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ கதை நமக்குச் சொல்லுகிறது... இதற்கு கிராமத்திலிருந்து சில உதாரணங்களையும் கண்மணி ராஜா முகமது நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

புது ப்ராடக்ட்’டைக் கொண்டு விற்பதற்காக வீடு தேடிவரும் சேல்ஸ் கேர்லை திருமணமான இளைஞன் ஒருவன் காமவெறியினால் கையைப் பிடித்து இழுத்துவிட, அது கையைத் தட்டிக் கொண்டு ஓடி விடுவது தான் ‘ரொம்ப நல்ல பையன்’ சிறுகதையின் மையக் கரு. உடம்பு காய்ச்சலால் நெருப்பாக் கொதிச்சாலும்கூட தம்பிராஜ் டாக்டர், உடம்பைத் தொட்டு ஊசி போடுவதை விரும்பாத தன் மனைவி இருக்க நாம் இப்படி நடந்து விட்டோமே என இளம் கணவன் ஒருவன் செய்த தவறுக்காக மனம் வருந்துவதாக இக்கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு கோணத்தில் நின்று அணுகும் போது, இப்போதுகூட பெண்களை நம் சக மனுஷியாக, உயிராகப் பார்க்கத் தயாரல்லாத என்ற ஆணாதிக்க மனோபாவத்தை இக்கதை சுட்டிச் செல்வதையும் காண முடிகிறது. விருப்பம் இல்லாமல் இருந்தால் கூட அவர்களை அடை வதற்கு (பாலியல் வன்முறையில் ஈடுபட) ஆண்கள் மிருகத்தனமாக நடந்துகொள்வதையும் இக்கதை நமக்கு சுட்டிச் செல்கிறது. காலம் காலமாக ஆண்மனங்களில் வேர்விட்டுப் போன இந்த காம விஷச் செடிகள், கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதையும் இக்கதை நமக்கு உணர்த்துகிறது.

இன்று, வேளாண்மை செய்ய இயலாமல் பல இடையூறுகளுக்கு ஆளாகி, கடன்பட்டு, திண்டாடி, அறையச் சொல்லிக் கொடுப்பதற்கு மூன்றாவது கன்னம் இல்லாமல் கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு இளம் ஏழை விவசாயியின் சோகமான வாழ்க்கைச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது ‘நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை’ - சிறுகதை. பஞ்சாயத் தாரிடம் போய்க் கெஞ்சுகிறான், ஏழை விவசாயி களை தங்கராஜ்; பயிருக்கு தண்ணீர் விடச் சொல்லி கவுன்சிலரிடம் போய்க் கெஞ்ச, அவர் மறுக்கிறார். கண்மாயில் மீன்குஞ்சி வாங்கி வளர்த்து, பஞ்சாயத்து நிதி வருமானத்தைக் கூட்ட திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி தண்ணீர் திறந்துவிட முடியாது என்கிறார்கள். ஒரு முறை தண்ணீர் திறந்து விட்டால் நெற்கதிர் விளைந்து விடும். விடமாட்டோம் என்கிறார்கள். தங்கராஜ் கோபத்தில் கவுன்சிலரைத் திட்டிவிடவே, கவுன்சிலரின் புகாரைத் தொடர்ந்து, தங்கராஜ் கைது பண்ணப்பட்டு, காவல் நிலையத்துக்குக் கொண்டு போகப்படுகிறான்.

தங்கராஜுக்குத் தெரிந்த ஒரு அண்ணனிடம் (கதை சொல்லி) போய், தனக்காக கவுன்சிலரிடம் சிபாரிசு பண்ணச் சொல்கிறான், அவன்.

‘நெல்லுப் பயிறு குரவளக் கருதா இருக் குண்ணே... இந்த ஒரு தண்ணி எறைச்சா வெளைஞ் சிடும். இல்லாட்டி அம்புட்டும் கருகி செத்துடும்ணே...!’ என, கண்ணீர் சிந்திப் பார்க்கிறான். கருதறுப்பு முடிஞ்சதும், எடுத்தக் கடனைத் திருப்பி கட்டி விடலாம் என்று இருக்க அது நடைபெறாமல் போகவே, பாங்கிலிருந்து நோட்டீஸ் வருகிறது,

‘15 நாளைக்குள்ள வட்டியோட சேர்த்துக் கட்டப் பாரு; இல்லேன்னா நிலத்தை பேங்க் ஏலம் விட்டுடும்...’ என, அறிவித்துவிட்டுச் செல்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் ஜீவநாடியாக விளங்கும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அந்த ஏழை தங்கராஜ், மனம் உடைந்து கடைசியில் பூச்சு மருந்தை வாங்கிக் குடித்து வாயில் நுரை பொங்க, வயல் வரப்பில் செத்துக் கிடக்கிறான்.

ஆம், இந்த மண்ணில் இயற்கை, விவசாயியின் முதல் கன்னத்தில் அறைகிறது. சக மனிதர்கள் (இந்த இடத்தில் மனப்பாடம் பண்ணி, பரீட்சை எழுதி வெற்றிபெற்று இதையே அவர்களுடைய நிர்வாகத் திறமைக்குரிய அளவுகோலாகக் கொண்டு, (உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் மனித உணர்வற்ற) பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்தப் பட்டிருக்கும் பெரிய பெரிய அதிகாரிகள், குட்டி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், காவல் நிலைய அதிகாரிகள் போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்!) அவனுடைய இரண்டாவது கன்னத்தில் அறைகிறார்கள். அரசாங்கம் அவனது மூன்றாவது கன்னத்தில் அறைய விரட்டுகிறது.’

அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை. எனவே, தற்கொலை செய்து கொள்வதாக கதை முடிவடைகிறது.

இக்கதையை அண்மையில் தமிழில் வெளி வந்த மிகச் சிறந்த கதை என்று கூடச் சொல்லலாம்! சாதாரண தமிழ் வாசகர்கள் மட்டுமின்றி மனித நேயவாதிகள், மார்க்சீயவாதிகள், கம்யூனிஸ்டுகள், முற்போக்கு இலக்கியவாதிகள் என, எல்லாரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கதையும்கூட!

இந்தியச் சமூகத்தில், சாதியின் பெயராலும், மண்ணைத் தொட்டு செய்யும் வேலையின் பெயராலும், எப்போதோ ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் இன்னும் கூட தலை நிமிர இயலாமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்து ‘நெரிந்து’ கொண் டிருப்பதைக் காண முடியும். அப்படிப்பட்டப் பிரிவைச் சேர்ந்த சூதுவாது ஏதுமறியாத ஒரு ஏழை துப்புறவுத் தொழிலாளிப் பெண்ணொருத்தி, வெறும் ஒரு முட்டை புரோட்டாவுக்காக  வேண்டி தன் உடலை ஒரு காமவெறியனுக்கு விட்டுக் கொடுப்பதாகக் கட்டமைக்கப்பட்ட கதை ‘முட்டைப் புரோட்டா ஒரு பண்டமாற்றம் என்ற சிறுகதை. ‘நாம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறோம்’ - என்று தெரியாமலேயே, ஆதிக்க மனம் படைத்த மேல்சாதியினருக்கும், ஆண்களுக்கும் சுயமாகத் தங்கள் உடம்பை விட்டுக் கொடுக்கும் நம் நாட்டு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களில் ஒருத்தியாகவே - இந்த துப்புறவுத் தொழிலாளிப் பெண்ணான சொக்கியும் வார்த்தெடுக்கப்பட்டுள்ளாள் - இக்கதையில்.

‘இந்த அளவுக்கு, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் கற்பு, தெருவில் தூக்கி எறியப் பட்டிருக்கிறதே’ - என்ற மனவலியை வாசகர்களின் மனத்தில் ஏற்படுத்திவிடுகிறார், இக்கதையின் வாயிலாக கண்மணி ராஜா முகமது. பெண்ணியல் நோக்கில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இக்கதை திகழ்கிறது.

கண்மணி ராஜா முகமதினுடைய சித்தரிப்பு முறை, கதையை நகர்த்தும் பாணி, உரையாடல்கள், அவர் பயன்படுத்தும் கவிதை மொழி, வார்த் தெடுக்கும் வகை மாதிரி பாத்திரங்கள், அவற்றின் கிராமத்துப் பாணியிலான உரையாடல்கள் போன்றவை வெகு அற்புதமாகக் கட்டமைக்கப் பட்டிருப்பதை அவருடைய ஒவ்வொரு கதை யிலும் பார்க்க முடிகிறது.

‘நச்சரவம்’ கதையில், தூக்கம் வராத ஒரு இரவில் அம்மாவிடம் துபாய்க்குப் போய்விட்டு வந்தவனின் தங்கை ஜமீலா சொல்கிறாள்: ‘ஒரு கக்கூஸ் கட்டுங்கம்மா. இருட்டானதும் காட்டுப் பக்கம் வெளிக்குப் போகும் போது, யாரோ கல்லை விட்டு எறியுறானுக... சந்திராவும் செல்வியும் எத்தனை நாளைக்கிடி இப்படினு அழுகுறாளுக...” என்று சொல்லும் போது, அவர்களுடன் வாசகனையும் சேர்ந்து துக்கப்படும்படி செய்துவிடுகிறார் கதாசிரியர், கண்மணி ராஜா முகமது.

சாதிக்கட்டை மீறிப்போன தன் மகளை இறந்த தற்குச் சமமாய் எண்ணும் சுத்த பிராமணனான பஞ்சண்ணாவின் மூளைக்குள்ளும், ரத்தத்திலும் கலந்து ஓடிக்கொண்டிருக்கும் சாதியுணர்வைப் பார்க்கையில், சாதி - மதங்களைப் பாராத இந்தியா உருவாக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ என்று வாசகர்களை நினைக்கும்படி செய்கிறது ‘பஞ்சண்ணா’ சிறுகதை.

இன்று, தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் சிறுகதைகளை எடுத்துப் பரி சோதித்துப் பார்த்தோமானால், அவற்றுள் பெரும் பாலான கதைகள், நம் இலக்கிய ஜாம்பவான்கள் எப்போதோ எழுதி வைத்து விட்டுப் போனவை களை அப்படியே நகல் எடுத்துத் தருவதாக அமைந் திருப்பதைக் காண முடியும். அல்லது அவர்கள் கடந்து சென்ற தூரத்துக்கப்பால் போகத் தெரி யாமல் நின்ற இடத்திலேயே நின்று சக்கர வட்ட மடிப்பதைப் பார்க்கலாம். ஒரு வேளை புதிய படைப்பாளிகள் பழைய படைப்புகளைப் புரட்டிப் பார்த்ததினால் ஏற்படும் குறைபாடாக இருக்கலாம், இது. இன்னுஞ்சில கதைகளுக்கு மக்கள் சார்பே கிடையாது! அண்மையில் தமிழ் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்திருக்கும் மேலாதிக்கச் சாதியினரின் வாரிசுகளான இலக்கியவாதிகளின் படைப்புகளை எடுத்துப் பார்த்தோமானால் அவை சாதியைப் பற்றியோ, இன்னும் பழைய ஆசாரங்களுக்குள் பிடித்து மனிதனை அமுக்கி வைத்திருக்கும் மதம், மதவழிபாடு போன்ற விஷயங் களைப் பற்றியோ, முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல், பொருளாதாரம், பண்பாடு சம்பந்தப்பட்ட போராட்டங்களைப் பற்றியோ ஒரு சிறு குறிப்பைக் கூட காணமுடிவதில்லை. நடுத்தரக் குடும்பத்திற் குள்ளிருந்து வரும் - குறிப்பாக இடைநிலைச் சாதியைச் சார்ந்த இளம் இலக்கியவாதிகளின் கதைகளோ, நாவல்களோ தமிழ்நாட்டிலுள்ள ஏழை - எளிய உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள், தொழிலாளர்கள் பிரச்சனை - பற்றிப் பேசவோ அல்லது அவர் களுக்குச் சார்பாக நின்று குரல் கொடுப்பதோ கிடையாது.

இன்றைய முற்போக்குச் சிந்தனையுடைவர்கள் படைக்கும் கலை - இலக்கியங்களில் கூட மேற்கண்ட அம்சங்கள் அரிதாகக் காணப்படும் இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் சார்புடன் எழுதப்பட்ட ‘நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை’ சிறுகதைத் தொகுதியை நாம் இரு கரம் நீட்டி வரவேற்கலாம்!

நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை

கண்மணி ராஜாமுகமது

வெளியீடு : கண்மணி பதிப்பகம்,

6நீ, அம்மன் கோயில் வீதி (புதிய பள்ளி வாசல் எதிரில்),

பொன்னமராவதி - 622407

புதுக்கோட்டை மாவட்டம்

விலை - 150/-

Pin It