சுயநல முடிவுகளை பெண்களால் எவ்வித தயக்கமும் இல்லாமல் எடுக்க முடியும். ஆனால் அதில் இன்னொருவருக்கும் நலன் இருப்பதாக அவர்களே சமாதானமும் செய்து கொள்வார்கள். அப்படி ஒரு முடிவைத்தான் ராஃபியா எடுத்தார். அதில் ஹாஜிராவுக்கு நல்லது இருப்பதாக சொல்லிக்கொண்டார்.

ராஃபியாவின் மகள் சல்மா சலீமுக்கு வாக்கப்பட்டு வருடம் பத்திருக்கும்.சலீமுக்கு சொத்துபத்துக்கு மட்டுமில்லை அண்ணன்கள் அக்காமார் என்று சொந்தபந்தத்துக்கும் குறைவில்லை.

வீட்டு கடைக்குட்டிக்கு மனைவியாக வருபவர்கள் ஒரு விதத்தில் நல்ல மகராசி கள் என்று தான் சொல்ல வேண்டும். மூத்த மருமகள்களிடம் காட்டும் கறாரையும் ஜம்பத்தையும் மாமியார் நாத்தனார்கள் காலப்போக்கில் குறைத்து அல்லது விடுத்து ஆடி ஓய்ந்து சாதுவான பெட்டிப்பாம்பாகி விடுவார்கள். ஆகையால் கடைசி மகன் மட்டுமில்லை கடைசி மருமகளும் செல்ல மருமகள் தான் பல குடும்பங்களில்

அதில் ஒருத்தி தான் சல்மா. மாமியார் முன்னேயே போய் சேர்ந்துவிட மச்சான் பொண்டாட்டிகள் நாத்தனார்களிடம் தன் வாய் சமத்தைக்கொண்டு நல் உறவு தான் பேணி வந்தாள்.

கடைக்குட்டி சலீம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பத்து வருடங்களில் மூன்று பிள்ளைகள். ரெண்டு மகள்கள் கடைசியாக ஒரு மகன். ஆம் கடைசியாக தான். மகன் பிறந்து நாற்பத்தி ஐந்தே நாட்களில் நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா சென்றவன். வீடு வந்து சேரவில்லை.

மவுத்துக்கு காரணம் ஏதாவது வேண்டுமல்லவா அவனின் சிதைந்து போன இன்னோவோ கிரஸ்டாவில் உடைந்து போன காலி பாட்டிலின் மூடிகள் சொல்லின காரணம் என்னவென்று. போன உயிர் போனது தான்.

சல்மா நிலைகுலைந்து போனாள். பேச்சுமூச்சில்லை கட்டையாக கிடைந்தாள் பச்சை உடம்புக்காரி. மூட்டையாக கட்டிக் கொண்டு வரப்பட்ட சலீமின் ஜனாசா குளியாட்டலின்றி வெறும் அத்தரும் சந்தனமும் தெளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பிள்ளைகளை மச்சான் பொண்டாட்டிகள் நாத்தனார்கள் பார்த்துக்கொள்ள கணவனின் இல்லாமையை சல்மா மெளனத்தில் கடக்க நினைத்து பேச்சற்றுப்போனாள். பெண் பிள்ளைகளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை பிறந்து ஐம்பது நாட்களே ஆன ஜைது இது எவுமே தெரியாமல் தாய் முகம் பார்த்து சிரிக்கத்தொடங்கினான். காண்பவர்களின் ஈரக்குலையை உலுக்கிய காட்சி அது.

நடு மருமகளான ஹாஜரா ஜைதின் முழு பொறுப்பினை தனதாக்கி கொண்டாள். நபி இபுராஹிமிற்கு தொண்ணூறு வயதில் ஒரு குழந்தையை ஈன்று கொடுத்தார் அன்னை ஹாஜிரா.

ஆனால் இந்த ஹாஜிராவுக்கு தன்னுடைய

கணவன் இபுவுக்கு வருடங்கள் பதிமூன்றாகியும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க அல்லாஹ்வின் நாட்டத்தில் இதுவரை இல்லை.

இபுவின் அண்ணன் தம்பிக்கு குறையாத குழந்தை செல்வம் கிடைக்கப் பெற்றதால் ஹாஜிரா இங்கே குறை உள்ளவளானாள்.

ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்ற கணக்கு தானே எல்லாம்.

சல்மாவின் தற்போதைய நிலை ஹாஜராவை திடீர் அம்மாவாக்கியது. இதுவரை தங்களுக்கு குழந்தை இல்லை எனும் ஏச்சுப் பேச்சுகளை கடந்து செயற்கை கருத்தரிப்பும் தோல்வியில் முடிந்தது. இனி எல்லாம் அல்லாஹ் விட்ட வழி என்று மனதை தேற்றிக் கொண்ட தம்பதிகளுக்கு பாலையில் விழுந்த மழைத்துளியாக ஜைது வந்தான்.

தாய்ப்பாலை மட்டும் தாயிடம் பெற்றுக்கொண்டவனுக்கு பாசம் பரிவு கெஞ்சல் கொஞ்சல் அத்தனையையும் ஹாஜிரா வாரி வாரி வழங்கினாள்.

எத்தனையோ பேருக்கு குழந்தை செல்வத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் தங்களுக்கு மட்டும் ஏன் மறுத்தான் என்று பல நாட்கள் தவித்த இபுராஹிமின் பக்கத்தில் தான் ஜைது அமைதியாக தூங்கி கொண்டிருந்தான். குழந்தைகள் தூங்கும் போது கொஞ்சக் கூடாது என்பார்கள் ஆனால் குழந்தைகள் செய்யும் அனைத்து சாகசங்களை காட்டிலும் அவர்கள் உலகை மறந்து துயில் கொள்ளும் இந்த பாவம் இருக்கிறதே அதனை காண அத்தனை கண்கள் வேண்டும்.

இதுநாள் வரை தங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது என்று முடிவுக்கு வந்திருந்த இபுவுக்கும் ஹாஜராவுக்கும் இது எவ்வளவு பெரிய வரம். அவன் தூங்கும் அழகினை இவர்கள் தூங்காமல் பார்த்த இரவுகள் தான் எத்தனை?

ஹாஜிராவுக்கு ஒரு எண்ணம் வருகிறது ஜைதை நாம் தத்து எடுத்துக்கொண்டால் என்ன? உண்மையில் இஸ்லாத்தில் “தத்து” என்ற ஒன்று கிடையாது. தத்து எடுத்துக்கொண்டாலும் அந்த மகன் அந்த தாய்க்கு மஹ்ரமான ஆணாக மாட்டான்.உரிய வயது வந்த பிறகு அந்த மகனிடம் தாய் கோஷா பேண வேண்டும்.

இதே கோஷாவை மகள் வளர்ப்புத் தந்தையிடம் பேண வேண்டும்.

மறுமணத்தை ஆதரித்த இஸ்லாம். தத்தை ஆதரிக்கவில்லை. தான் நாடியவர்களுக்கு ஆண் மக்களையும் தான் நாடியவர்களுக்கு பெண் மக்களையும் சிலருக்கு இரண்டும் கலந்தும் நான் அளிப்பேன். சிலருக்கு அறவே இல்லை.

இவையனைத்தும் எனது செயல் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.

குழந்தையை எடுத்து வளர்த்தால் கூட உரிய வயது வந்தவுடன் நாங்கள் உனது பெற்றோர்கள் இல்லை என்பதை அந்தக் குழந்தையிடம் தெரிவிக்க வேண்டும். அந்தக் குழந்தை சட்டப்படி எவ்வித உரிமையும் கோர முடியாது.

ஆனால் இந்த மனித மனது இல்லாத ஒன்றுக்கு தானே ஏங்கித் தவிக்கும்.

சல்மா தனது துக்கத்தினை விழுங்கி நட மாடத்தொடங்கினாள். நடக்கும் அனைத்தையும் மகளின் வீட்டில் இருந்து கொண்டே ராஃபியா கவனிக்க தொடங்கினார்.பக்கத்து வீட்டில் இருக்கும் மகளின் கொழுந்தன் பொண்டாட்டி ஹாஜரா தன் மகளை தேற்ற முயல்வதையும் குழந்தைகளை பரிவுடன் கவனித்துகொள்வதையும் மெளனமாக அங்கீகரித்தார்.

அது ஹாஜராவுக்கு சாதகமானதாக தோன்ற இந்த தத்து விஷயத்தை முதன்முறையாக முன்வைக்கிறாள். சல்மா தனக்கு இனி என்ன இருக்கு தன் மகன் கொழுந்தன் ,கொழுந்தன் மனைவியிடம் தானே வளரப்போகிறான். சொத்துக்கு சொத்தும் ஆச்சு என்று கணக்கு செய்து இதற்கு ஒத்துக்கொள்கிறாள். ஆனால் தனது தாயிடம் இருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க அதை பொய்யாக்கும் வகையில் ராஃபியாவும் சரி என்றார்.

ஹாஜராவுக்கு தலைகால் புரியவில்லை. பிள்ளையை தாங்கள் இனி வளர்க்கப்போவதை உலகுக்கு அறிவிக்கும் வகையில் தாய்வழி புருஷன்வழி ஜனங்களை அழைத்து பெரிய விருந்து வைக்கிறாள்.ஆண்குழந்தைக்கு தங்கம் ஹராமாச்சே அத்தனையையும் பிளாட்டினத்தில் வாங்கினாள்.

குழந்தை சாமான்கள் அவள் அறையை நிறைத்தன.

சல்மாவுக்கு ஏக்கம் வராமல் இருக்க குழந்தைகளை பிரிக்காமல் ஒரே இடத்தில் விளையாட விடுவது எது வாங்கினாலும் மூன்று குழந்தைகளுக்கும் வாங்குவது என்று தன்னால் ஆன வகையில் நன்றிக்கடனை ஹாஜரா செய்து கொண்டே இருந்தாள்.

சல்மா வும் கணவனின் இறப்பை ஏற்றுக்கொள்ள பழகினாள்.தாய் மற்றும் கொழுந்தன் குடும்பங்களின் உதவியுடன் குடும்பத்தை நடத்த தொடங்கினாள். இன்னோவா கிரஸ்டா விற்கப்பட்டு கியா ஷெல்டாஸ் வீட்டின் முன் நின்றது. அதே நம்பிக்கையான வீட்டு டிரைவர். தம்பிக்கு வர வேண்டிய தொழில் வரவுகள் முறையாக சல்மா விடம் மாதம் மாதம் ஒப்படைக்கப் படுகிறது. குழந்தைகளுக்கு இமுக்கென்றால் பெரியப்பன்மார்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்குகிறார்கள். சலீம் இல்லாத குறை குறையத் தொடங்கியது. காலப்போக்கில் மறையத்தொடங்கும் அது தானே மனித வாழ்க்கை.

ஜைது க்கு வயது ஒன்றாகிறது. ராஃபியா மெதுவாக ஆரம்பிக்கிறார்

“என் மகளை நீங்க எல்லோரும் நல்ல விதமாக தான் பார்த்துக்கிறீங்க. காசு பணத்துக்கு அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு குறைவில்லை. ஆனால் எம் மகளுக்கு சின்ன வயசு. அவளுக்கும் ஆசா பாசம்இருக்கும்ல… . காசு பணம் எல்லாம் புருசன்கிறவனோட இடத்தை நிரப்பாது.. உங்களுக்கு தெரியாததில்ல” என்று மகளின் மூத்த கொழுந்தனான கரீம்மிடம் இந்த பேச்சுவார்த்தையை ராஃபியா தொடங்கினார்.

“சல்மா சின்ன புள்ள தான் மாமி. என் தம்பிக்கு ஆயுசு அவ்வளவு தான். போய் சேர்ந்திட்டான். மாப்பிள்ளை ஏதும் வருதா … அந்த பச்சப் பிள்ளைகளை தாய் கிட்ட இருந்து பிரிக்காதவனா இருந்தா போதும் என் தம்பியோடது எல்லாம் அவன் பெத்த பிள்ளைகளுக்கு தான்” என்றார் பெரிய மனிதனாக….

“நான் ஒரு யோசனை சொல்றேன். என்னைய வேற்றுமையா நினைக்காதீகத்தா… . வெளியிலிருந்து வர்றவன் சொத்துக்கு ஆசப்படுறவனா இருந்தா என்ன செய்ய நீங்க வசதி வாய்ப்பா என் மக பேரன் பேத்திகளை வச்சிருக்கீங்க … . உங்க அளவுக்கு வர்றவன் செல்வாக்கா வச்சிருப்பானா ? அவனுக்கு இதுக அரும பெரும தெரியுமா?

ஹாஜராவுக்கு புள்ளை இல்ல இபு ஹாஜராவுக்காக என் மக புள்ளையை தூக்கி கொடுத்தா… அவள இபுராஹிமுக்கே கட்டிக்கோங்க எல்லோரும் ஓன்னடி பின்னடியா இருந்துக்குவாக ஹாஜராவுக்கும் இதுல நல்லது இருக்கு. உங்க சொத்தும் வெளியே போகாது” எனும் அஸ்திரத்தை இறக்கினார்.

அவர் இறக்கிய அஸ்திரம் ஆங்காங்கே தீப்பொறியை கிளப்பியது. சல்மா தன் அம்மாவை பேசக்கூடாத வார்த்தைகளை பேச ஹாஜ்ரா பிள்ளையை கொடுத்து என் புருசனை இழுக்கப்பார்கிறீயா என்று கேட்டு வைத்தாள். இபு மெளனியானான்

ஆனால் ஒவ்வொரு மனிதனையும் கரைக்கும் வஸ்து வெவ்வேறானதாக இருக்கும். பணம், புகழ்,கண்ணீர் என்று பல உள்ளது. சல்மாவை இப்படியே உன்னால ஆண் துணை இல்லாமல் இருந்திட முடியுமா என்று எதிர் காலம் பற்றிய பயமாவும், இபுவுக்கு சல்மாவை கட்டிக்கிட்டா உனக்கே உனக்கென்று ஒரு புள்ளை கிடைக்கும் உன்னுடைய இரத்தம் “உன்னுடையது”எனும் ஆசை வார்த்தையாக இருந்தது.

ஹாஜ்ரா எவ்வளவோ போராடி பார்த்தாள். எல்லோருடைய போராட்டமும் வெற்றியடைவதில்லை.

உன்னால் அவனுக்கு ஒரு குழந்தையை கொடுக்க முடியாதது உன்னுடைய தோல்விதான் என்று மீண்டும் மீண்டும் அவளுக்கு வேறு வேறு தோணியில் சொல்லப்பட்டு அவனின் இரண்டாம் திருமணம் நியாயப் படுத்தப்பட்டது. வேறு யாரோ ஒருத்தி உனக்கு சக்களத்தியாக வருவதை விட உன் கொழுந்தன் பொண்டாட்டியே வருவது நல்லது தானே என்ற போலிச்சமாதானங்கள் ஒரு பக்கம்

உன் புருசனுக்கு பிறக்கும் குழந்தை உனக்கும் தான் சொந்தம் போன்ற கழுத்தறுக்கும் ஆறுதல்கள் ஒரு பக்கம் அனைத்தும் அவளை மீறி நடந்தேறின.

“நீ தான் உயிரு….உன்னை என்னால் விடவே முடியாது… அதே போல் நீ எனக்கு மனசோட சம்மதம் சொல்லு ஹாஜி….உனக்காக தான் இந்த திருமணம் … உன்னுடைய ஏக்கம் தீர ஒரு வழி அல்லாஹ் விட்றுக்கான்” என்று இபு பேசும் போது ஒரு விரக்தி சிரிப்போடு நிறுத்திக்கொண்டாள். ஒன்றை காட்டி அந்த ஒன்றையே அவளை தேர்வு செய்யச்சொல்லி நிர்பந்திப்பதன் மூலம்

அவளின் சம்மதத்தில் செய்து கொள்வதாகவும் இஸ்லாத்தில் இடம் உள்ளதால் மார்க்கத்தின் படி நடப்பதாகவும் குறைந்தபட்ச குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்தான். நிக்காஹ் முடிந்தது.

இபு இரண்டு வீட்டிலும் பொழங்கத்தொடங்கினான். இதுநாள் வரை ஹாஜ்ரா இபுவுக்கு வழங்கிவந்த அனைத்தையும் நிறுத்திக்கொண்டாள்.ஆனால் அவை அனைத்தையும் சல்மா வழங்கினாள்.அந்த சந்தர்ப்பங்களில் ஹாஜ்ராவின் நினைவு புத்திக்குள் வரும் ஆனாலும் கட்டிக்கொண்ட சல்மாவுக்கும் நியாயம் செய்ய வேண்டுமே.ஏன் இந்த சிக்கலுக்கு ள் மாட்டிக்கொண்டோம் என்று சில நேரங்களில் தவித்திருக்கிறான்.

ஹாஜிராவை எப்படி சமாதானம் செய்வது. தங்களுக்கு குழந்தை இல்லை என்ற குறை ஆமாம் குறைதான் அதையும் மீறி மகிழ்வோடு தானே இருந்தோம். ஹாஜ்ரா இயல்பிலேயே நல்ல அழகி புத்திசாலியும் கூட.மச்சான் பொண்டாட்டிகளோடு புடவை நகை கார் என்று போட்டிபோடுபவள் கிடையாது. அசட்டுத்தனம் அவளிடம் அறவே இருக்காது. கையும் பெரிய கை அவளுக்கு .எது ஒன்றை செய்வதாக இருந்தாலும் கணக்கு பார்க்காமல் சிறப்பாக செய்வாள். அவளின் பழக்கவழக்கங்களில் ஒரு நாசூக்கு இருக்கும்.

அவள் தேர்வுகள், இரசனைகள் வித்தியாசமானவை.

 கை நிறைய வளையலையும் பல வண்ண கற்கள் பதித்த புர்க்காக்கள் ஹை ஹீல்சுகள் தலைவலியை உண்டாக்கும் வாசனை திரவியங்களாக நிறைந்து கிடக்கும் கல்யாண மண்டபத்தில் மெல்லிய மணத்துடன்

 கற்கள் இல்லாத புர்கா, வித்தியாசமான வண்ணங்களில் தலை துப்பட்டா பெரிய டையல் வைத்த கைக்கடிகாரம் அதைச்சுற்றி ஒரு மெல்லிய கை செயின் அரபி பெண்கள் போல பூட்ஸ் அணிந்த கால்கள் வேக நடை என்று அனைத்திலும் இபுராஹீமை கவர்ந்தவளாக தான் இருந்திருக்கிறாள்.அந்தரங்கப் பொழுதுகளில்

 “என் டயானா டால் டி நீயி” என்று கொஞ்சியிருக்கிறான்.

ஹம்..என்ன இருந்து என்ன. கணவன் இன்னொருத்திக்கும் கணவனாகி போனான். தனக்கு மட்டும் ஒரு குழந்தை இருந்திருந்தால்….ஒருவேளை தன் கணவனுக்கு ஏதேனும் குறை இருந்தால்…மனித மனம் எத்தனைக்கு எத்தனை மென்மையானதோ அத்தனைக்கு அத்தனை வன்மம் நிறைந்தது.

சல்மா மூலம் இவனுக்கு குழந்தை மட்டும் பிறந்திடக்கூடாது என்று மனதோடு கருவிக்கொண்டாள். நாம் நினைக்கும் அனைத்தும் நடந்து விடுவதில்லை. பாவம் ஹாஜரா,அவள் நினைத்தது என்றுமே நடந்ததில்லை.

சல்மா மூன்றே மாதத்தில் கர்ப்பமானாள். இபுராஹிமின் மனசுக்குள் இரகசிய சந்தோஷம் கரை புரண்டோடியது. தன்னை புதுமாப்பிள்ளையாக நினைத்துக் கொண்டது போலவும், நடந்து கொண்டது போல தான் ஹாஜ்ராவுக்கு தோன்றியது.தன்னுடையது எனும் பெருமிதம் அவன் செயல்கள் அனைத்திலும் வெளிப்பட்டது.

ஹாஜிரா ஒரு பெருவலியோடு தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டிய தருணம் அது.

ஆனால் அவனை விட்டுச் செல்ல வேண்டும் என்ற முட்டாள் தனமான முடிவினை மட்டும் அவள் எடுக்கவே இல்லை. தன்னை பார்க்கும் போதெல்லாம் இவள் இனி நமக்கு இல்லை எனும் சிறுவலி அவன் கண்களில் அப்பட்டமாக தெரியும். மேலும் குழந்தை வரப்போகும் சந்தோஷத்தை அவனால் முழு மனதோடு அனுபவிக்கவும் முடியவில்லை. கொஞ்ச நாட்கள் தான் தன்னை பிரிந்த வலியும் அவனின் இந்த தடுமாற்றமும் இருக்கப்போகிறது. அதைக் குரூரமாக இரசிப்போமே எனும் எண்ணம் தான் அவளை அங்கே இருக்க வைத்தது.

சல்மாவுக்கு ஒன்பது ஆரம்பிக்கும் போதே மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.

எத்தனையோ இரவுகளில் ஹாஜ்ரா எந்த காதின் பின்புறந்திலிருந்த மச்சத்தின் மீது முத்தமிட்டு “இது என்னைத்தவிர வேற யார் கண்ணுக்கும் அவ்வளவு சீக்கிரம் தெரியாது” என்று சொல்லி சிரித்திருக்கிறாளோ அதே போல் ஓர் மச்சத்துடன் சிறிய உயிர் ஒன்று கையை காலை அசைத்து படுத்திருந்தது.

- சபிதா காதர்

Pin It