முகநூலில் அனைவரும் தங்களது தந்தை மற்றும் தந்தையுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதுதான் சித்தீக்கிற்கு தெரிய வந்தது அன்று தந்தையர் தினமென்று. சிலரை போல் தனது தந்தையைப் பற்றி நீண்ட பதிவுகள் எதுவும் போட முடியாவிட்டாலும், பகிர அவருடன் இருக்கும் படங்கள் ஏதும் இருக்கிறதா என்று ஒரு முறை மூளையைக் கசக்கிப் பார்த்தான். வாய்ப்பில்லை ராஜா என்ற பதில்தான் கிடைத்தது.

 சரி தனிப்புகைப்படங்கள் ஏதும் இருக்கிறதா.. அதைப் போட்டாவது அன்றைய ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம் என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக தனது மொபைலிருந்த படங்களை மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்து ஓடவிட்டுப் பார்த்தான். எதற்கோ எப்போதோ சுமாராக படமெடுத்து அவரால் பகிரப்பட்டிருந்த ஆதார் அட்டைதான் கண்ணில்பட்டது.

 அதையா பகிர? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர் நினைவாக ஒரு படமும் இல்லையா? அவருடைய மகன் என்று சொல்லிக்கொள்ளவே அவனுக்கு வெட்கமாக இருந்தது. எவ்வளவு அந்நியமாக இருந்திருக்கிறோம் என்று வருந்தினான்.

 ஆனால் அவர் அப்படியில்லை. இறப்பதற்கு கொஞ்ச நாள் முன்பு கூட ஒரு நாள் பிள்ளைகள் அனைவரையும் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொடுக்குமாறு இவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். அப்படி அவ்வப்போது கேட்பதும் அவரது வழக்கமாக இருக்கவே, சலிப்புடன்தான் எடுத்துக் கொடுத்தான்.

 ஆனால் உங்களை நான் எடுக்கிறேன், சிரியுங்கள் வாப்பா என்று ஒரு நாளாவது கேட்டிருப்பானா? ஆசைப்பட்டிருப்பானா? ஃபோட்டோ எடுப்பது இருக்கட்டும் அவன் இயல்பாகப் பேசித்தான் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! கடைசி நேரங்களில் கூட வெளிநாட்டிலிருந்து பேருக்குதான் பேசினானேத் தவிர, அதில் பிரியும் வலியிருந்ததா? தவிப்பிருந்ததா? பாசமென்று ஒன்று இருந்திருந்தால்தானே உணர்வுகள் பொங்கியிருக்கும்!

 அவரும்தான் வெளிநாட்டிலிருந்தார். சாதாரண வேலையிலிருந்ததால் போன் பேசவெல்லாம் காசிருக்காது; ஏஜெண்டு மூலமாக போனதால் வாங்கிய கடனை அடைப்பதற்கே முக்கால்வாசி பணம் போய்விடும்! ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் விதமாக கடிதத்தில் அத்தனை பாசத்தையும் கொட்டி கொட்டி எழுதியிருப்பார். பேருக்காவது ஒரு நாளும் இவன் அவரின் உடல்நிலையைப் பற்றி விசாரித்திருப்பானா? எழுதும் கடிதங்களில் இதை அனுப்பு அதை அனுப்பு என்ற கட்டளைகள் மட்டும் பாதி வரிகளை நிறைத்திருக்கும்.

 ஏதோ இப்போதுதான் ஞானம் வந்தது போல வருந்தினான். கண்ணீர் துளிர்த்தது. தன்னுடைய சிறுமையான குணத்தை உணர்ந்து ஒரு கணம் மனம் கூசினான். அவனுடைய வருத்தங்கள் இறைவனை எட்டியிருக்குமோ என்னவோ சட்டென்று அவனது தந்தை சவுதியிலிருந்த போது எடுத்து அனுப்பியிருந்த ஃபோட்டோ ஒன்று சட்டென்று நினைவுக்கு வந்தது.

***

 "அம்மா போஸ்ட்!" வாசலில் தபால்காரரின் சத்தம் கேட்கவே, உங்க வாப்பாவிடமிருந்துதான் கடுதாசி ஏதும் வந்திருக்கும் போய் வாங்குடா என்று மகன் சித்தீக்கிற்கு அடுப்படியிலிருந்து குரல் கொடுத்தாள் ஃபிர்தவ்ஸ்.

 அவளது நஃப்ஸ் சொன்னது போலவே, பெருநாள் செலவிற்கு டிடிதான் வந்திருந்தது. ரிஜிஸ்டர் தபால் என்று தெரிந்து கொண்டவுடன் அவளே வந்து கையெழுத்திட்டப்படிப் பெற்றுக்கொண்டாள்.

 போன தபாலில் அடுத்த முறை செலவிற்கு சற்றுக் கூடுதலாக அனுப்பும்படி தனது கணவனிடம் கோரிக்கை வைத்திருந்தாள். அதன் பிரம்மையோ என்னவோ வாங்கிய கவர் வழக்கத்திற்கு மீறி கையில் கனப்பதுப் போலிருந்தது.

 சித்திக்கிற்கும் விசயம் தெரிந்திருந்தாலும் "உங்க வாப்பாட்டேர்ந்து செலவுக்கு வந்திருக்குடா!" என்று பணம் வந்த மகிழ்ச்சியில் செடியில் வெடித்த பஞ்சை போல் பூரித்தவளாய் தன் பங்கிற்கு ஒரு முறை மகனைப் பார்த்து பெருமிதமாகச் சொல்லிக் கொண்டாள்.

 அதற்குமுன்னரே அவன் இன்னொரு பக்கம் பெருநாளைக்கு உடுத்த எத்தனை வேட்டி எடுக்கலாம், சட்டைகள் எடுக்கலாம், பெருநாளன்று கூட்டாளிகளோடு படம் பார்க்க, எத்தனை பேர் எந்த ஊருக்கு செல்லலாம் அதற்கு எவ்வளவு உம்மாவிடமிருந்துக் கறப்பது, வேறு ஏதாவது பொய் சொல்லி எவ்வளவு கேட்பது என வேறொரு தனி மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

 அவளுக்கும் வந்த தொகையைத் தெரிந்துகொள்ளும் அவசரத்தில், ஆர்வத்தில் கோழி றெக்கைகளை அடித்துக் கொள்வது போல மனசு அடித்துக்கொண்டு கையும் காலும் அவளுக்கு கையும் காலும் ஒரு நிலையில் இல்லை!

 கவரைப் பிரித்தாள். டிடியும் ஒரு ஃபோட்டோவும் உள்ளே வைக்கப்பட்டு சுட்டப்பட்டாற்போல் போல வந்த கடிதம் படிகளின் முனைகள் மாதிரி மடிந்துக் காட்சியளித்தன.

 ஆனால் அவர்களின் தேடல்கள் எல்லாம் எழுதியனுப்பியிருந்த கடிதத்தை வாசிப்பதிலோ, ஆசை ஆசையாய் எடுத்து அனுப்பட்ட புகைப்படத்தைப் பார்ப்பதிலோ இல்லை. பேயைப் போல விரைந்து நோக்கிய கண்கள் வந்த தொகை எவ்வளவு என்றுக் கண்டு ஏமாற்றம் கொண்டன. சோர்ந்துப் போனாள்.

 "பெருநாளைக்கு கூட உங்கப்பன் ஊர் உலகத்தைப் போல பணம் அனுப்புறானா பார்! இப்ப நான் என்ன செய்யுவேன்!" என்று சட்டென பாம்பாய் மாறியவள் போல படமெடுத்து சீறத் தொடங்கினாள். இரு தாடைகளையும் அழுத்தியபடி பற்கள் நொறுங்கும் வண்ணம் தனது கோபத்தையும் ஆற்றாமையையும் வெளிக்காட்டினாள்.

 சித்தீக்கும் தான் நினைத்தது போல எதுவும் நடக்கப் போவதில்லை என்றுயுணர்ந்து ஏமாற்றங்களை தந்தையின் மீதான கோபமாக மாற்றினான். ஆசை ஆசையாய் போட்டிருந்தத் திட்டங்கள் யாவும் இப்படி பாழாய் போய்விட்டனவே என்று தகப்பனை அவனும் ஒருமையில் மனதிற்குள் திட்டினான். தாயும் மகனும் வெளிநாட்டு சம்பாத்தியத்திலிருக்கும் மற்றவர்களை தங்களோடு ஒப்பீட்டு உள்ளுக்குள் நமுந்தனர்.

 "நல்ல நாள் பெரிய நாளைக்கு கூட நகையை வச்சுதான் நாலு பேர போல வாழணும்னா, நம்ம விதியை யாரால மாத்த முடியும்!" என்று புலம்பியபடி தன்னிரக்கம் கொண்டவளாக அந்த நொடியிலேயே தனது வெண்ணிற மேல்துப்பட்டியை மேலேச் சுற்றிக்கொண்டு பேங்கிற்கு செல்ல அரை நொடி மின்னல் போல அக்கணமே ஆயத்தமானாள். தனது விதியை நொந்துக்கொண்ட அவளது ஏச்சுப்பேச்சுக்கள் காக்கைகள் கரைவது போல் அவள் வாசலைக் கடந்து செல்லும் வரை சித்தீக்கின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

 அன்று வேண்டா வெறுப்பாக அந்த ஃபோட்டோவைப் பார்த்தான். அதில் அவனது வாப்பா உலகிலேயே தான்தான் சிறந்த அழகன் போல, கைகளை தொடைகளில் 'ட' வடிவில் தாங்கி வைத்தபடி, கம்பீரமாக அமர்ந்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

 அவர் மட்டும் அங்கே சந்தோசமாக இருப்பது போல அவனது கண்கள் மனதிலே ஒரு பிம்பத்தை பதிய வைத்துக் கொண்டது. எதிர்பார்த்தபடி நிறைய பணம் அனுப்பியிருந்தால் அவரை அன்றுக் கொண்டாடியிருப்பான்தான். எல்லாம் பொய்த்துப் போனதில் அவர் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் கோபமாக அந்த கவரிலேயே அந்த ஃபோட்டோவை வைத்துத் திணித்து அலமாரியை சத்தம் வரும் அளவிற்கு சாத்திப் பூட்டினான். கடைசி வரை அந்த கடிதத்தை யாரும் படிக்கவில்லை!

***

"ம்மா.. ம்மா!" எதோ கைவேலையாக இருந்தவள், சித்தீக்கின் சத்தம் கேட்டு ஹால் பக்கம் வந்தாள்.

"என்ன வாப்பா தேத்தண்ணி ஏதும் குடிக்கிறியா? போடவா?" வாஞ்சையுடன் கேட்டாள்.

 தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்ததற்கு மகன் கைநிறைய சம்பாரிக்கிறான். ஊர் உலகத்தில் காணும் மற்ற மற்றப் பிள்ளைகளை போலில்லாமல் பெற்றவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறான் என்ற பெருமிதம் இப்போதெல்லாம் அவளுக்கு. எப்போதும் மகனை கண்ணில் வைத்துப் பார்ப்பவள்தான் என்றாலும், அவன் ஊருக்கு வரும் நேரங்களில் அவளது அக்கறையும் உபசரிப்புகளும் இன்னும் பல மடங்கு கூடிவிடும்.

 ஒரு நிலையில் நிற்க விடாமல் ஃபிர்தவ்ஸை பேரன் பேத்திகள் வேறு அவளுடைய மேல்துண்டையும் கைலியையும் இழுத்து இழுத்து விளையாடியபடி அலங்க மலங்கச் செய்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளை இழுத்துச் செல்லும்படி மருமகளுக்குக் குரல் கொடுத்தாள்.

"அதெல்லாம் வேணாம்மா.. வாப்பாவோட அந்த போட்டோ வச்சிருக்கியாம்மா?"

எதைப் பற்றி கேட்கிறான் என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

"எந்த போட்டாவ கேக்குறா?" உள்ளுக்குள் என்றைக்குமில்லாமல் தகப்பனுடைய ஃபோட்டோவைத் தேடுவது அவளுக்கு வேடிக்கையாக இருந்தாலும், பிள்ளையின் மாற்றம் கண்டு அவளுக்கு கொஞ்சம் சிரிப்பும் துளிர்த்தது.

எதைக் கேட்கிறான் என்று அவனுக்கு உதவப் பரபரத்தாள்.

"சவுதில வாப்பா இருந்த போது, ஒரு போட்டோ அனுப்பி வச்சிருந்தாங்களே..! சிரிச்ச மொகமா.. ரொம்ப அழகா தெரிவாங்களே..!" சட்டென எழுந்துவிட்ட குறிப்பிட்ட புகைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பில், எல்லோரையும் இவர்தானா உங்க அப்பா என்று ஆச்சர்யப்பட வைப்பது ஒன்றுதான் அச்சமயம் அவனது ஏக குறிக்கோளாக இருந்தது. அவரது சாயலில் தான் இருந்ததும் இன்னொரு பெருமை பீத்தல். அதை வைத்தும் கம்மெண்ட்கள் வரக்கூடும் என்பது கூடுதல் நப்பாசை.

 தனது கணவனின் தோற்றத்தை பெற்றப் பிள்ளை அப்படி குறிப்பிட்டு சொன்னதைக் கேட்டதும், அந்த வயதிலும் ஃபிர்தவ்ஸிற்கு புது வெட்கம் முகமெங்கும் பரவியது.

 எந்த புகைப்படத்தைப் பற்றிக் கேட்கிறான் என்று இப்போது அவளுக்கு நன்றாகவே விளங்கியது. ஏனென்றால் வேறு எந்த ஃபோட்டோவும் அதற்கு பிறகு அனுப்பியது போல் நினைவுமில்லை. அவர் ஊருக்கு வந்துவிட்ட பிறகும் கூட ஃபோட்டோ என்று எதுவும் தனியாகவோ, எல்லோருடன் சேர்ந்த மாதிரியோ எடுத்துக் கொண்டது போலும் அவளுக்கு ஞாபகமில்லை.

 மனுசன் இருந்த வரை நியாபகார்த்தமா ஒரு படம் கூட எடுத்து வச்சிக்க முடியலையே.. என அவளும் வருந்தத் தொடங்கினாள்.

 உம்மாவும் மகனும் எங்கெல்லாமோ தேடினார்கள். ஆதார் கார்டு, வோட்டர் ஐடி, பாஸ்போர்ட் போன்ற அவருடைய அடையாள அட்டைகள்தான் ஆங்காங்கே தென்பட்டன. கடைசி வரை அந்த ஃபோட்டோ மட்டுமில்லை அவர் சார்ந்து எந்த ஃபோட்டோவும் கிடைக்கவேயில்லை!

- இத்ரீஸ் யாக்கூப்

Pin It