என்னவென்றே தெரியவில்லை பர்வீனுக்கு சுபுஹ் தொழ எழுந்ததிலிருந்தே குமட்டிக் கொண்டே வந்தது. இரவு அப்படியென்ன சாப்பிட்டுவிட்டோம்? வெறும் ரசமும் அப்பளமும்தான்! அதற்காகவே இப்படி பண்ணும்?! ஒருவேளை இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பொரித்த எண்ணெயிலேயே அப்பளம் பொரித்ததாலா?!

ருசியாக இருக்குமென்று அதே எண்ணெயை உபயோகித்தது தப்பா போச்சே என்று தன்னைத்தானேப் பேசிக் கொண்டிருந்தாள். அனுங்கி கொண்டு வருகிறதே..! வீணாகிவிடுமேயென்று மல்லுக்கட்டி மிச்சமிருந்த இரண்டு மூன்று ரஸ்தாளிப் பழங்களை சாப்பிட்டதும் காரணமாக இருக்கலாம் எனவும் காரணங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரம், தின்பார்கள் என்று இவர்களை நம்பி எதுவும் வாங்கி வைக்க முடிகிறதா! எல்லாம் தனது தப்புதான் என்று பிள்ளைகளை ஆற்றாமையில் கடிந்து கொண்டுமிருந்தாள்.

நல்ல வேளை அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என தன்னைத்தானேத் தேற்றிக் கொண்டவளாய், இஞ்சியைத் தட்டிப் போட்டு வெறும் தேத்தண்ணியாவது குடிச்சிப் பாப்போம் என்று அதையும் செய்து பார்த்தாள், மீண்டும் குமட்டிக் கொண்டுதான் வந்ததே தவிர எதுவும் சீராகவில்லை. வாந்தியும் வருவேனாங்குது என்று சலித்துக் கொண்டாள்.

இரண்டு வீடு தள்ளிதான் தாய் வீடு என்பதால், விறுவிறுவென அங்கு சென்று தான் ஆஸ்பத்திரிக்கு செல்லவிருக்கும் விபரங்களைச் சொன்னாள். பிள்ளைகள் மதரஸாவிலிருந்து வந்ததும் குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்து தயார் செய்து அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்படி உரிமையோடு கட்டளைகளைப் பிறப்பித்தவளாய் தனது வீட்டிற்கு வந்து பரபரவென புறப்படலானாள். இப்பவே இப்படி பிரட்டிக் கொண்டு வருகிறதே, ஆஸ்பத்திரி செல்லும் வரை தாக்குப் பிடிக்குமா என்ற கவலைகள் வேறு அவளை மேற்கொண்டு பயமுறுத்தின.

சட்டென்று இப்படி அவள் ஆஸ்பத்திரி கிளம்புவதற்கும் ஒரு வரலாறுண்டு. இதே போல் முன்பொரு நாளும் நிகழ்ந்திருக்கிறது. கை வைத்தியமெல்லாம் கேட்கவில்லை. ஆனால் காய்ச்சு, வடிக்கட்டிய நீரைக் குடித்தவுடன் கொஞ்சம் நேரம் கேட்டது ஞாபகம் வரவே, செய்து பார்த்தாள்

அதைக் குடித்த பிறகு பலமான ஏப்பமொன்று வெளியேறியது. அந்த ஏப்பமே ஓங்கிக்கொண்டு வாந்தி வருவது போலிருந்தாலும், வெளியேறியும் கூட ஏதோ அடைத்த மாதிரி தொண்டையை உறுத்திக் கொண்டு நின்றது. சுடு தண்ணீர் குடித்தும் உடனே சரியாகுற மாதிரி தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் மேலும் ஒரு சிறிய ஏப்பம் வந்து சீராக்கியதும்தான் ஒரு நிம்மதி பெருமூச்சுப் பிறந்தது. ‘அல்ஹம்துலில்லாஹ்!’ என்று இறைவனுக்கு நன்றி செலுத்தினாள். மீண்டும் குமட்டத் தொடங்குமுன் பாதி தூரமாவது சென்றுவிட வேண்டும் என எண்ணினாள்.

ஆஸ்பத்திரி என்றால் அறந்தாங்கிக்கோ பட்டுக்கோட்டைக்கோதான் செல்ல வேண்டும். காலையில் வெள்ள வெடுக்கென்று சென்றால்தான் முடிந்தவரை டோக்கன் மதியத்திற்கு முன் டாக்டரைப் பார்க்கக் கிடைக்கும். பொழுது சாய்வதற்குள் வீடு வந்து சேரவும் சரியாக இருக்கும் என்று மனக்கண்ணில் எல்லாவற்றையும் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டாள்.

தாகத்திற்கு மட்டும் ஒரு சிறிய போத்தலில் தண்ணீரை எடுத்துச் சென்றதுதான் மற்றபடி ஆகாரம் என்று பெரிதாக கவனத்திலேதும் கொள்ளவில்லை. பெரும்பாலும் வெளியிடங்களுக்குச் செல்லும் இஸ்லாமியப் பெண்களுக்கு அதுவும் தன்னந்தனியாக என்றால் புறம் மற்றும் உளவியல் சார்ந்து எதிர்கொள்ளும் சவால்கள் நிறைய உண்டு.

அதனால் பசி, தாகத்திற்கு எந்தக் கடையிலும் தனியொருத்தியாக ஒதுங்க முடியாது. அதற்கு ஊர் மற்றும் சமூக வழக்கங்கள் இடம் கொடுக்காது. முடியாத பட்சத்தில் எப்போதேனும் வெளியிடங்களில் உண்ணவோ, அருந்தவோ நேர்ந்தால், அதை உறவினரோ அல்லது ஊரைச் சார்ந்த சக சமயத்தவரோ கண்டுவிட நேர்ந்தால் அதற்குத் தகுந்த காரணங்களை சொல்ல வேண்டும். அப்படியே சொன்னாலும் அது அவர்களை எந்த அளவிற்கு திருப்திப் படுத்துமெனத் தெரியாது.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியேற இரண்டாகி விட்டது! பேருந்து நிலையத்தில் பிள்ளைகளுக்காக வடைகளை வாங்கிவள், ஊருக்குச் செல்லும் பஸ் வந்துவிட்டதை உணர்ந்தவளாய் அதை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

மாலை நேரம் நேரங்கள் போலில்லாமல், அமர இருக்கைகள் இருந்ததையறிந்து கொஞ்சம் ஆசுவாசம் கொண்டாள். அதே நேரம் அங்கே தென்பட்ட உறவு குறிப்பிட்ட பெண்களைப் பார்த்து நிறைய அச்சமும் கொண்டாள். இவளைப் பார்த்தவர்கள் ஆரவாரத்தோடு தங்கள் பக்கம் வந்தமருமாறு குரல் கொடுத்தார்கள்.

மனதை ஒருநிலைப்படுத்தியவளாய் குறிப்பிட்ட இருக்கைகள் நோக்கி நகர்ந்தாள். பரஸ்பர விசாரிப்புகள், வந்த நோக்கங்கள் எல்லாம் பகிரப்பட்டன. பேருந்து பெருங்காட்டைத் தாண்டிவிட்டது. இவளுக்கு நன்றாகப் பசிப்பது போலிருந்தது.

வடைப் பொட்டலத்திலிருந்து இரண்டு மூன்றை எடுத்து, அருகிலிருந்தவர்களிடம் நீட்டினாள். தாங்கள் சாப்பிட்டுத்தான் வந்தோம் என்று சொன்னாலும் ஹிஹி என்று பல்லிளித்தபடி கொடுத்ததை வாங்கிக் கொண்டனர்.

ஃபேஸ் கவரை அப்போதுதான் விலக்கி, ஒரு வடையைப் பிய்த்து வாயில் வைக்க, ஒருத்தி "இரு இரு உம் மாப்பிள்ளைக்கிட்ட சொல்றேன்!" என்று கலகலவென கிண்டலடித்துச் சிரித்தாள். ஏனென்றால் அவர்கள் யாரும் முகத்திரை அணியும் பழக்கம் இல்லாதவர்கள்.

இவள் முகத்திரை அணிந்து கொள்வதெல்லாம் அவர்களுக்கு ஏதோ தான்தான் மிகவும் தக்வா (இறையச்சம்) கொண்டவள் போல வெளியுலகத்திற்கு தன்னைக் காட்டிக் கொள்கிறாள் என்ற மலினமான எண்ணம்.

அவள் உண்மையான பேணுதலோடுதான் அணிந்து வருகிறாள் என்று இவளால் எப்படி நிரூபிக்க முடியும்? கூடவே கணவனுக்கு இவள் மிகவும் பயந்தவள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனாலும் அப்படி சீண்டிப் பார்த்தார்கள்.

கணவனை நினைத்தாலே இவளுக்கு அடிவயிற்றைக் கலக்கும். இவர்களுக்கு இப்படி மற்றவர்களை குத்தலும் கேலியுமாக கஷ்டப்படுத்திப் பார்ப்பதெல்லாம் என்ன ஆனந்தமோ என்று அவர்களின் இயல்புகளை நினைத்து வேதனைப்பட்டாள். மென்மையான உள்ளம் கொண்ட அவளால் எதையும் எளிதில் கடந்து வர முடியவில்லை.

அவர்களைப் போல இவள் வெளியுலகத்தில் வாழவில்லை. முகத்திரை அணிந்து கொள்ளும் பழக்கம் மதரஸாவில் ஓதி வந்த காலம் தொட்டே உள்ளது. ஏதோ இன்றுதான் அணிந்து வருவதுபோல் கணவன் வரை நாவு கூசாமல் இழுத்ததால், பிய்த்த வடையை அவளால் மெல்ல முடியவில்லை, விழுங்கத்தான் முடிந்தது.

ஃபேஸ் கவரை மீண்டும் தொங்க விட்டாள். இந்த கண்ணுக்கும் ஒரு திரையிருந்திருந்தால் நிச்சயம் அழுதிருப்பாள். இவர்களது சுபாவம் அறிந்தேதான் கண்டதும் அவ்வளவு அச்சப்பட்டாள்; பக்கத்தில் அமர யோசிக்கவும் செய்தாள்.

அலைமேடுகள் போல நெஞ்சம் ஏறி ஏறி இறங்கியது. சீக்கிரம் ஊர் வந்துவிடாதா என நகுடியிலிருந்து வழி நெடுக மரங்களை எல்லாம் சீக்கிரம் நகரச் சொல்லி பிரார்த்தனை செய்தாள். கேள்விகளும், பகடிகளும் கிண்டல்களும் ஓய்வதாக இல்லை. காசுள்ள வீட்டில் பிறந்துவிட்டால் அல்லது வாக்கப்பட்டு விட்டால் வாய்க்கு வந்ததெல்லாம் பேசத் தோணுமா? ஒரு நாகரீகம் வேண்டாம்? மனசுக்குள் வெதும்பினாள்.

தன்னை சிறுமைப் படுத்தும் இவர்களெல்லாம் யாரென கொஞ்சம் அவர்கள் கதைகளை அசைப்போட்டுப் பார்த்தாள்.

ஒருத்தி, குறிப்பிட்ட இயக்கத்தில் இருக்கும் குடும்பமென தாங்கள்தான் நேர் வழியில் நடப்பவர்கள் என மற்றவர்களை விமர்சித்து, தாழ்த்தி எப்போதும் தங்களைத் தாங்களே தூக்கிப் பிடித்து திரிபவர்கள். ஆனால் அவளுடைய தம்பியின் திருமணத்தின் போது கைக்கூலி அதாவது வரதட்சணை என்று ஏதும் வாங்கா விட்டாலும் அதற்கு ஈடாக நீங்கள் போடுவதைப் போடுங்கள், சீராக கொடுப்பதைக் கொடுங்கள் என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பெண் வீட்டாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது மட்டுமல்லாமல், எதுவும் திருமண பதிவேட்டில் வராதது போல மகருக்குதான் முடித்தோமென மார்தட்டிக் கொண்டவர்கள். மாலையில்லாமல், மைக் செட் இல்லாமல் மார்க்க வழியில் எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு மணம் முடித்தோம் என்று பொய்ப்பெருமை பேசியவர்கள்.

இன்னொருத்தி, மாமியாரை வீட்டை விட்டே துரத்தியவள் அல்லது அவளே மகள் வீட்டியிலேயே இருந்து கொள்கிறேன் என்று முடிவெடுக்கும் வகையில் ஒரு வேளை உணவு கொடுக்க அவ்வளவு அதிகாரம் செய்து தினம் தினம் நெருக்கடிகளைக் கொடுத்து வந்தவள்.

மூன்றாமானவள் வெளிநாட்டிற்குச் சென்ற கணவனை ஊருக்கு கிளம்பி வரும் நேரங்களில்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி இன்னும் கொஞ்ச நாள், இன்னும் கொஞ்ச நாள் என்று தனது பணத்தாசைக்கு அவன் வயதை காவு வாங்கிக் கொண்டிருக்கிறாள். கழுத்தை நெரிக்கும் அளவிற்கு நகைகள் சேர்த்தும் கணவனின் மூச்சுக்காற்று ஊர்ப்பக்கமே வந்து விடாதபடி இன்று வரை வீட்டின் கதவுகளை அடைத்துக் கொண்டு அவன் நுழைந்திராதபடி அல்லி ராணியாய் காவல் காத்துக் கொண்டிருக்கிறாள்.

யார் யாரை பயமுறுத்துவது? கிண்டல் செய்வது? தன்னை விமர்சிக்கவோ வேதனைப்படுத்தவோ இவர்களுக்கு அதிகாரங்களையும் உரிமைகளையும் கொடுத்தது யார்? சகோதரத்தைப் பேணி எல்லோரையும் சக மனிதராகப் பாவித்து, அரவணைத்துச் செல்லத்தானே மார்க்கம் சொல்கிறது? அப்படியென்றால் இவர்கள் கடைபிடிக்கும் மார்க்கம்தான் என்ன? இதில் யார் போலி? என உள்ளுக்குள்ளேயே ஒவ்வொருவரையும் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அதுவும் சலித்துப் போனது.

புர்காவை போர்வை போல் அழுத்தி இரண்டு கைகளையும் இறுக்க கட்டி பேருந்திலிருந்த அந்த குறளை பார்வையால் படித்தாள். அதில் சொல்லியிருந்தது போல் பேச, கேட்க நல்லவை எத்தனையோ இருக்க, சிலர் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என ஆற்றாமை எழுந்தது.

இப்போது சிந்தனைகள் யாவும் சட்டென்று அவளது பள்ளிக்காலம் நோக்கிச் சென்றன. ஒப்பித்தல் போட்டிக்காக பரிசாகப் பெற்ற அந்த திருக்குறள் தொகுப்பின் நினைவு வந்தது. கையெழுத்தும் நன்றாக இருக்குமென்பதால் வகுப்பாசிரியர்கள் இவளைத்தான் தினமும் வெளியிலிருக்கும் கரும்பலகையில் ஏதாவது குறள் எழுதும்படிச் சொல்வார்கள். அதனால் பல குறள்கள் இன்றும் கூட மனப்பாடமாகவே தங்கிவிட்டன. அவ்வப்போது ஏதேனும் குறள் இவள் ஞாபகத்திற்கு வருவதுமுண்டு.

ஒரு வழியாக பேருந்திலிருந்து இறங்கி, நெடுந்தூரத்திலிருக்கும் வீட்டை நோக்கி நடக்கலானாள்.

பருவமடைந்த பின் நிறுத்தப்பட்ட கல்வி நினைத்துப் பார்க்க ஒரு வித வலியைத் தந்தது.

இந்த ஊரில் எப்படியாவது படிக்கச் சென்றிருந்தாலும் கூட நிம்மதியாக விட்டிருப்பார்களா? அதுதான் இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் இவர்களின் கற்பிதங்களைத்தான் பார்க்கிறோமே என்று பெருமூச்சு விட்டாள்.

ஆமாம் இஸ்லாம் எப்போது பெண் கல்வியைத் தடுத்தது? அதைக் கொடுக்க இவர்களை எது தடுக்கிறது என வேறு மனஓட்டங்களுக்குத் தாவலானாள். தனது மகள் காலத்திலாவது எல்லாம் மாறினால் சரி என்று நினைத்துக் கொண்டாள்.

எல்லா ஊரிலும் தனியாக நடக்கும் எந்தப் பெண்ணையும் பார்ப்பவர்கள் தம் மனம் சார்ந்த கணக்கீடோடு எடை போட்டாலும் அதில் சொந்த ஊர், வாக்கப்பட்ட ஊர் என்ற பேதமெல்லாம் இல்லை.

குறிப்பாக சொந்த ஊர்தான் எல்லாற்றிற்கும் சகல ஒழுக்க நெறிகளோடு ஆரம்பக் கதைகள் எழுத தொடங்கிக் கொடுக்கும்.

வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டபோதுதான் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

பைகளை தொப்பென வைத்துவிட்டு, கைகளை ஏந்தியபடி

‘அல்லாஹ்வே எனக்கு மென்மேலும் பொறுமையைத் தா!’ என வேண்டினாள்.

இத்ரீஸ் யாக்கூப்

Pin It