இன்று புதன் கிழமை என்பதால் ராமு வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராமுவிற்கு அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை.

சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின் வீட்டில் இருந்தே பணி புரிகிறார். வயது ஐம்பத்தைந்தை எட்டினாலும் இளமையாகவே தோற்றமளிப்பார்.

ராமு மெயின் ரோட்டை அடைந்தார். திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதி இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருவோரக் கடைகள் களைக் கட்டி இருந்தன.

கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியதை பார்த்துக் கொண்டே மீன் மார்க்கெட்டிற்குள் நுழைந்தார். அவர் எப்பொழுதும் காமாட்சி அக்காவிடம் தான் மீன் வாங்குவார்.

இருந்தாலும் எல்லா கடைகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு கடைசியாக காமாட்சி அக்கா கடைக்கு வருவார். இன்றும் அதே போல் எல்லா கடைகளையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வந்தார்.

அவரை பார்த்ததும், “வாங்க தம்பி கடையெல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்களா ?” என்று கிண்டலாக கேட்டார் காமாட்சி.

“அதவிடுங்கக்கா, என்ன இப்பவே கடையெல்லாம் போட்டுருக்காங்க, ரம்சானுக்கு இன்னும் பத்து நாள் இருக்கே, வழக்கமா ரெண்டு மூனு நாளைக்கு முன்னாடி தானே போடுவாங்க?” என்று கேட்டார்.

“என்ன தம்பி வெவரம் தெரியாத ஆளா இருக்கீங்க, என்னத்த பெரிய ஆபீஸ்ல வேல செய்றீங்க ஊர் நடப்பு எதுவும் தெரியாம...”

“இன்னும் ஒரு வாரத்துல திரும்பவும் முழு ஊரடங்கு போடப் போறாங்கலாம். ஆட்சி மாறுனதுமே முடிவு செஞ்சிட்டாங்களாம். ரெண்டு நாள்ல டிவில சொல்லுவாங்க. அதான் இப்பவே கடை போட்டுட்டாங்க.” என்று காமாட்சி கூறியதை கேட்டுக் கொண்டே மீன் வாங்கினார்.

ஒவ்வொரு வருடமும் ரம்சானுக்கு ஒரு சில நாட்கள் இருக்கும் போது கடைகள் போடுவது வழக்கம். உடைகள், ஃபேன்சி பொருட்கள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள், பொம்மைகள், விளையாட்டு சாமான்கள், சென்ட், செருப்புகள், பாத்திரங்கள் என திருவிழாவில் விற்கும் அனைத்து பொருட்களும் கிடைக்கும். ஏழை மக்களுக்கு ஏற்றவாறு மலிவு விலை துணிகளும் கூவி கூவி விற்பார்கள்.

ராமு ஒவ்வொரு வருடமும் தன் மனைவியுடன் கடைத்தெருவிற்கு வந்து விடுவார். இரவு முழுவதும் கடைகள் இருக்கும். எப்பொழுது மூடுவார்கள் என்றே தெரியாது.

விலை உயர்ந்த பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும். ராமுவின் மனைவிக்கு கடைகளைப் பார்ப்பது மிகவும் அலாதியான ஒன்று. தனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொள்வார்.

ராமு மீனுடன் வீட்டிற்குள் நுழைந்ததும் தன் மனைவியிடம் கடை போட்டிருப்பது பற்றி கூறினார். அதை கேட்டதும் அவர் மனைவிக்கு இருப்பு கொள்ளவில்லை. “அப்போ இன்னிக்கு சாய்ந்தரம் போலாமாங்க?” என்று உற்சாகத்துடன் கேட்டதை பார்த்து,

“நீ கேப்பனு தெரியும். போலாம்” என்று பதிலலித்தார்,,

ராமுவுக்கு தன் மனைவி சுதா மீது அளவிட முடியாத அன்பு. திருமணம் ஆன நாளில் இருந்து இதுவரை தன் மனைவியை எதற்காகவும் கோபித்துக் கொண்டதில்லை. சுதாவும் ராமு மேல் அதே அன்புடன் இருப்பார். இருவரும் ஆதர்ச தம்பதிகள்.

சுதா சமையலில் மூழ்கி இருந்தார். அழைப்பு மணி அடித்ததும் ராமு கதவை திறந்தார். அப்துல் நிற்பதை பார்த்ததும் “வாப்பா அப்துல், என்ன இந்தப் பக்கம்...பாத்து ரொம்ப நாள் ஆகுது எப்பிடி இருக்க?” என்று கேட்டார்.

“எங்க சார் நல்லா இருக்கறது, கொரோனா வந்தாலும் வந்துது எங்கள மாதிரி வியாபாரிங்க பாடுதான் திண்டாட்டமா இருக்கு. நான் ஒரு உதவியா உங்கள தேடி வந்திருக்கேன். நீங்கதான் பெரிய மனசுப் பண்ணனும்” என்று அப்துல் கேட்க,

“என்ன வேணும் சொல்லு” என்றார் ராமு.

“சார் இன்னும் ஒரு வாரத்துல ஊரடங்கு போடப் போறாங்கலாம். நான் எப்பவும் ரம்சானுக்கு கடப் போடுவேன். உங்களுக்கு தான் தெரியுமே, இந்த வாட்டி சீக்கிரமே எல்லாரும் கடப் போட்டுட்டாங்க.

சரக்கு வாங்கக் காசு இல்ல. அடுத்த வாரத்துக்குள்ள அண்ணாச்சிக் கிட்ட வாங்கிக்கலாம்னு நெனச்சேன். அண்ணாச்சி ஊர்ல இல்லயாம். எனக்கு வேற யாரயும் தெரியாது. நீங்க ஏதாவது குடுத்து உதவினீங்கனா நல்லா இருக்கும்.” என்று தயக்கத்துடன் கேட்டான்.

“சரி எவ்வளவு வேணும்?”

“ஒரு பத்தாயிரம் இருந்தா நல்லா இருக்கும் சார். ஒருவாரத்துக்குள்ள லாபம் பாத்துருவேன் திருப்பி தந்துடறேன்.”

பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்ற ராமு பத்தாயிரம் ரூபாயுடன் வந்தார்.

“இந்தா அப்துல் நீ கேட்ட பணம் இதுல இருக்கு. நீ போய் உன் வியாபாரத்த பாரு”. என்று கூறி அப்துலிடம் பணத்தை கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட அப்துல், “ரொம்ப நன்றி சார்” என்று கூறி பணத்தை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

ராமுவிற்கு அப்துலை பல வருடங்களாகத் தெரியும். மிகவும் துடிப்பானவன். அந்தந்த நேரத்துக்கு ஏற்றாற்போல் ஏதாவது ஒரு வேலை செய்து வருகிறான். இதுவரை நியாயமான முறையில் நடந்துக் கொள்பவன். கடன் வாங்கினாலும் உடனே திருப்பிக் கொடுத்து விடுவான். அதனால் நம்பிக்கையுடன் அவனுக்கு பணம் அளித்தார்.

அப்துல் பணத்துடன் சென்று தனக்கு தெரிந்த மொத்த வியாபாரி மார்ட்டினிடம் ஒரு வாரத்துக்கு தேவையான உடைகளை வாங்கிக் கொண்டு முன்பணமாக எட்டாயிரம் கொடுத்தான்.

அன்று வெள்ளிக்கிழமை. அடுத்த வெள்ளி ரம்சான்.

ஊரடங்கு போட்டாலும் ரம்சான் முடிந்துதான் போடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் கடை பிடித்து துணிகளை அடுக்கி வியாபாரத்தை தொடங்கினான். பெரிதாக விற்பனை ஆகவில்லை. இருந்தாலும் இன்னும் நாட்கள் இருப்பதால் எப்படியும் சரக்குகளை விற்று விடலாம் என்று நினைத்தான்.

சனிக்கிழமை காலையில் எழுந்து தொழுகையை முடித்துக் கொண்டு இன்றைக்கு கடையில் வைக்க வேண்டிய ஆடைகளை ரகம் வாரியாக அடுக்கிக் கொண்டிருந்தான்.

பக்கத்து வீட்டு மணி ஓடிவந்து,

“அண்ணே நியூஸ் பாத்தீங்களா, வரப் பத்தாம் தேதியில இருந்தே லாக்டவுன் போடப் போறாங்களாம். வாங்குன சரக்கெல்லாம் ரெண்டுநாள்ல எப்பிடி விக்கப் போறேன்னு தெரியல.”

என்று பதட்டத்துடன் கூறியதைக் கேட்டதும் ஒரு நிமிடம் மனது கணமானதை போன்ற ஒரு உணர்வு அப்துலுக்கு ஏற்பட்டது. இன்னும் ரெண்டு நாள் இருக்கு பாத்துக்கலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு கடைக்கு சென்றான்.

மக்கள் கூட்டம் காலை முதலே அலை மோதியது. அப்துலுக்கு ஓரளவு வியாபாரம் நடந்தது. சனிக்கிழமை நடந்த விற்பனையை விட ஞாயிற்றுக் கிழமை சற்று கூடுதலாகவே விற்பனையானது.

அன்று இரவு வீட்டிற்கு வந்த அப்துல் அடுக்கி வைக்கப்பட்ட மீத சரக்கை பார்த்ததும்,வாங்கிய சரக்கில் பாதி கூட விற்காததை உணர்ந்தான்.

வியாபாரத்துல வந்த பணத்துல மார்ட்டினுக்கு சேர வேண்டிய பாக்கி மட்டுமே கொடுக்க முடியும்.

மார்ட்டின் சொன்னது நினைவுக்கு வந்தது “அப்துல், இந்த முற விக்காத சரக்கு எதுவும் நான் திருப்பி எடுக்க மாட்டேன். நெலம சரி இல்ல. மனசுல வெச்சிக்கோ”

ஒருபுறம் ரமுவுக்குதரவேண்டிய பணமும், மறுபுறம் ஊரில் தன் அம்மாவும் தங்கையும் பண்டிகையை கொண்டாட அப்துலுக்காக காத்திருப்பதும் நினைவில் வந்தது.

செய்வதறியாது திகைத்து நின்றான் அப்துல்..

- பிரியா ஜெயகாந்த்

Pin It